Aran Sei

வடக்கு டெல்லி வெறுப்பு கலவரம் – தம் வாழ்வையும் பிறர் வாழ்வையும் மீட்ட பாதிக்கப்பட்ட பெண்கள்

Image Credit : thewire.in

பிப்ரவரி 26 அன்று வடகிழக்கு தில்லியில் மதக் கலவரம் தொடங்கி ஆயுதமேந்திய கும்பல்கள் முஸ்லீம்களின் கடைகளையும் வீடுகளையும் தாக்கி அழித்ததற்கு பிந்தைய நாட்களை நினைவு கூர்ந்த 26 வயதான சைபுனிசா, அப்போது “ஒரு கையில் குழந்தையை வைத்துக் கொண்டே மறு கையில் வேலை செய்து கொண்டிருந்தேன்,” என்கிறார்.

வன்முறையின் விளைவாக எத்தனை முஸ்லீம் குடும்பத்தினர் வீடிழந்து, வேலையிழந்து, பொருளாதார ரீதியாக மிக மோசமான நிலையில் இருக்கின்றனர் என்பதைக் கண்டு அதிர்ந்து போன சைபுனிசா தன் குடும்பத்தின் வாழ்வாதாரத்துக்காக செய்து வந்த பல வேலைகளையும் விட்டுவிட்டு நாள் முழுவதும் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு சமைப்பதில் ஈடுபட்டார்.

“பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவளிப்பதற்காக நான் விடிகாலையிலிருந்து பின்னிரவு வரை சமைக்கிறேன். இதை விட திருப்தி தரும் கடமை வேறொன்றுமில்லை,” என்கிறார் அவர்.

“எனது வேலையை விட்டு விடுவது அவ்வளவு சுலபமானது இல்லை. ஏனெனில் என் குடும்பமும் சாப்பிட வேண்டுமே. ஆனால், நாங்கள் செய்யா விட்டால் வேறு யார் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியிருப்பார்கள்?” என்று கேட்கிறார் அவர்.

கலவரத்திற்குப் பின் வடகிழக்கு தில்லியில் வாழும் பல முஸ்லீம் பெண்கள் தாங்களே கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்த நிலையில், தாங்கள் பார்த்து வந்த வழக்கமான வேலையை விட்டுவிட்டு, அருகில் உள்ள வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்காக வேலை செய்ய ஆரம்பித்தனர்.

பார்த்ததிலிருந்தும் அனுபவித்ததிலிருந்தும் மனதாலும், உடலாலும் பாதிக்கப்பட்டுள்ள அவர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் அவர்களது முயற்சியானது, ஒரு மாதத்துக்குள் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக மீண்டும் முழுமுடக்கம் அறிவிக்கப்பட்டு விட்டதால் கடுமையாக பாதிக்கப்பட்டு விட்டதாகக் கூறுகின்றனர்.

காலையில் மீட்புப் பணிகளையும், மாலையில் காய்கறி விற்பனையும் செய்து வரும் 38 வயதான சுதா, கடந்த பிப்ரவரி மாதம் முதல் அன்றாடம் 500 வீடுகளை மேற்பார்வையிட்டு வந்ததாகக் கூறுகிறார். “நான் உதவி செய்தே தீர வேண்டும்,” என்று கூறும் அந்த இந்த பெண், “ஒருவர் மனிதராக பிறந்து, நல்ல காரியங்களில் ஈடுபடவில்லை என்றால் மனிதராக பிறந்ததில் பயனில்லை. நிவாரண ஊழியராக இருப்பதை விட நான் எனது வாழ்க்கையில் வேறு எதிலும் எப்போதும் தெளிவாக இருந்ததில்லை,” என்கிறார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் உணவுப் பொருட்களை வீடு வீடாகச் சென்று விநியோகிக்க ஆரம்பித்த சுதா ஒவ்வொரு குடும்பமும் இழந்தவற்றையும், அவர்களது உடனடித் தேவைகளையும் குறித்து வந்திருக்கிறார். ஆனால் முழு அடைப்பு காலத்தில் ஒரு நாளைக்கு ஐந்து வீடுளுக்கு மட்டுமே அவரால் செல்ல முடிந்தது.

தொடர்பை தவிர்ப்பதற்காக, அவர்களுக்கான உணவுப் பொருட்களை வாசலிலேயே வைத்து விட்டு வர வேண்டியிருந்தது‌.

“குழந்தைகள் எவ்வளவு பயந்து போய் இருக்கிறார்கள் என்பதைக் கண்டு நான் மிகவும் வருத்தமடைந்தேன். அவர்களுடைய பெரியவர்கள் பகைமையை வளர்த்து விட்டார்கள். ஆனால் குழந்தைகள் ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்,” என்கிறார் சுதா.

வன்முறையான நினைவுகள்

சுதாவும், சைபுனிசாவும் கடந்த பிப்ரவரியில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளை பற்றிய தெளிவான நினைவுகளைக் கொண்டிருக்கின்றனர். சிவ் விகார் பகுதியில் டெம்போவில் ஆயுதங்களுடன் கும்பல் வந்திறங்கியதையும், எதிரில் வரும் எல்லோரையும் தாக்கத் தயாராக இருந்ததையும், பார்த்ததை நினைவூகூரும் போது இன்றும் நடுங்குகிறார் தையற்காரர் ஃபர்ஹானா. பயந்து போன தனது 21 வயது மகன் இம்ரான், “அம்மி, சிவ் நகர் நஹி பச்சேகா (அம்மா, சிவ் நகர் தப்பிக்காது)” என்று கூறியதை இன்னும் நினைவில் வைத்துள்ளார்.

இறுதியில் வன்முறை முடிவுக்கு வந்த போது, தன் வீட்டை கலவரக்காரர்கள் தாக்கி, சூறையாடி, கொள்ளையடித்து விட்டுச் சென்றதால் மிகப் பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்த ஃபர்ஹானா, உடனடியாக பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்காக அரசுசாரா தன்னார்வ அமைப்புகள் மூலம் ஆதரவு திரட்டும் பணியைத் துவக்கினார்.

“கலவரத்தின் போது, முஸ்லீம் பெயர்ப்பலகைகள் கொண்ட கடைகளையும், நிறுவனங்களையும், முஸ்லீம்கள் அதிகமாக வசிக்கும் வீடுகள் உள்ள தெருக்களையும் குறி வைத்துத் தாக்கியதை நான் நேரில் கண்டேன்,” என்று ஃபர்ஹானா நினைவு கூர்ந்தார். “எனது அண்டை வீட்டுக்காரர் ஒருவருடைய முகம் அமிலம் வீசித் தாக்கி எரிந்து போனது. அதிலிருந்து இந்த இடம் வீடு போலவே இல்லை. தாங்கள் உயிரோடு விடப்பட்டிருப்பது ஏதோ நல்ல காரியம் செய்ததால்தானோ என்னவோ என்றூதான் பெரும்பாலான முஸ்லீம்கள் உணர்கின்றனர்,” என்கிறார் ஃபர்ஹானா.

சேவா பாரத் அமைப்புடன் தொடர்புடைய நிவாரணப் பணியாளரான, தனியாக வாழும் சாந்த் பீ என்ற தனியாக வாழும் தாய் தன்னைச் சுற்றி பார்த்த வன்முறை திகிலூட்டுவதாக இருந்ததாகக் கூறுகிறார்.

“காவிக் கொடிகள் பறந்தன. வாட்கள் வீசப்பட்டன. எல்லா பக்கங்களிலிருந்தும் பெட்ரோல் குண்டுகளும், கற்களும் வீசப்பட்டன. அது மிகவும் பயங்கரமாக இருந்தது. இறைவன் அத்தகைய காட்சிகளை எவருக்கும் மீண்டும் காட்டாமல் இருக்கட்டும்,” என்கிறார் சாந்த் பீ.

வன்முறை ஓய்ந்ததும், சாந்த் பீ பாதிக்கப்பட்டவர்களுக்கு கம்பளிகளையும், உணவுப் பொருட்களையும் விநியோகித்ததுடன், இழப்பீட்டுக்கான விபரங்களை கணக்கெடுக்க ஆரம்பித்தார். முழு அடைப்பு காலத்தில் முகக்கவசங்களை வழங்குவதிலும், குடும்பங்களிடையே நோய்க்கிருமி பற்றிய உணர்வூட்டலையும் தீவிரமாக செய்தார். “குழந்தைகளுக்கு பால் வழங்குவதும், பெண்களுக்கு சுகாதாரத் தேவைகளை வழங்குவதுமே என் முக்கிய பணியாக இருந்தது. ஏனெனில் எந்தக் கலவரத்திலும் அதிகமாக பாதிக்கப்படுவது குழந்தைகளும், பெண்களும் தான்,” என்கிறார் அவர்.

உடைந்த பிணைப்புகள்

கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக வீட்டிலிருந்து வெளியே வந்தது 35 வயதான செய்னா பானுவுக்கு வாழ்க்கையில் ஒரு இலக்கை கொடுத்தது. வன்முறை தணிந்த போதும், அதற்குப் பிந்தைய மாதங்களிலும் இரண்டு குழந்தைகளுக்குத் தாயான அவர் உணவுப் பொருட்களை விநியோகிக்கத் துவங்கினார். அத்துடன் தையல் இயந்திரங்களையும் கொடுத்து பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பொருளாதார ரீதியாக வலுப்பெற உதவினார். மேலும் அவரே ஒரு சிறிய தையல் நிலையத்தை உருவாக்கி இந்த நோக்கத்துக்காக நிதி சேர்க்க ஆரம்பித்தார்.

“கலவரம் பல்வேறு மதங்களைச் சேர்ந்த பெண்களிடையே இருந்த பாலின பிணைப்பை சேதப்படுத்திவிட்டது. நாங்கள் எங்கள் பகுதியில் உணவுப் பொருட்களை கொடுக்கச் சென்ற போது, எங்கள் பெயரைக் கேட்டு “அவர்களுடைய” மதத்தைச் சேர்ந்தவர்கள் தானா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டார்கள். இழப்பீட்டிற்காக நாங்கள் அவர்களுடைய பெயர்களை பட்டியலிட்ட போது அவர்கள் தங்களுடைய பின்னணி பற்றிக் கூற தயங்கினார்கள்,” என்கிறார் செய்னா பானு.

இதை நினைத்துதான் அழகுக் கலைஞரான தபஸம் என்பவரும் வருந்துகிறார். அவரது பகுதியில் உள்ள பெண்களுடன் மிகவும் நட்பாக பழகி வந்த அவருக்கு தற்போது முஸ்லீம் என்கிற அடையாளமே அடிப்படை பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கி விட்டதாகக் கூறுகிறார் அவர்.

“கலவரம் நடந்து முடிந்து ஓராண்டாகியும், நாங்கள் இடம் பெயர்ந்த பின்னரும் கூட இன்னும் மன அமைதி இல்லை,” என்கிறார் தபஸம்.

கலவரத்தின் போது அவரது வீடு சூறையாடப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டது. அவரது ஆறு வயது பெண் கண்ணீர் புகைக்குண்டுத் தாக்குதலுக்கு ஆளானார். எனினும் நிவாரணப் பணிகளில் அவர் பங்கெடுக்க முடிந்த உடனேயே அவர் அதைச் செய்தார்.

கண்ணீர் புகைக் குண்டால் காயம்பட்ட தன் மகளைச் சேர்க்க மருத்துவமனைக்குச் சென்ற போது, அங்கு கலவரத்தால் பாதிக்கப்பட்ட மற்றவர்கள் காயத்துடன் இடிந்து போய் இருப்பதைப் பார்த்த உடன் அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற விருப்பம் எழுந்ததாக அவர் கூறுகிறார். கொரோனா முழு அடைப்பின் போது கலவரத்தால் விதவையாக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு உதவி செய்வதில் தன்னார்வ குழுவுடன் சேர்ந்து செயல்பட்டார்.

“பெண்ணாக இருப்பது என்பது எப்போதுமே எளிதாக இருந்ததில்லை. தற்போது முஸ்லீம் என்ற அடையாளமும் சேர்ந்து கொண்டதால் சுமை இருமடங்காகி விட்டது. என் மகள் வன்முறையைப் பற்றிக் கேட்கும்போது அவள் மீது கண்ணீர் புகைக் குண்டு வீசியவர்களைப்பற்றி அவளிடம் நான் என்ன சொல்வது? அவள் சிறிதளவே புரிந்து கொண்டிருக்கும் அவளது மதத்தை அவர்கள் வெறுக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? என்கிறார் தபஸம்.

www .thewire.in இணைய தளத்தில் தாருஷி அஸ்வனி எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்

 

வடக்கு டெல்லி வெறுப்பு கலவரம் – தம் வாழ்வையும் பிறர் வாழ்வையும் மீட்ட பாதிக்கப்பட்ட பெண்கள்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்