Aran Sei

அரசியல்சாசன அடிப்படைக் கோட்பாடும், நீதி வழங்குவதில் ஊசலாட்டமும் – வி.வெங்கடேசன்

னுதாரர்கள் அரசியல் அமைப்புச் சட்டத்தின் 32 வது பிரிவை நாடுவதை  ஊக்கப்படுத்துவதைக் குறைக்க கவனம்கொள்ள வேண்டும் என்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டேவின் கருத்து, அந்தப் பிரிவு அரசியல் அமைப்பின் அடிப்படைக் கூறு என்ற வகையில், அறிஞர்களிடமிருந்தும் வழக்கறிஞர்களிடமிருந்தும் கடுமையான விமர்சனங்களை எதிர் கொண்டுள்ளது.

எல்.சந்திரகுமாருக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான(1997) வழக்கில், ஏழு நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஒன்று,  தீர்ப்பு மேலாய்வு (judicial review) செய்யும் அதிகாரம், உயர்நீதிமன்றங்களில் 226 ம் பிரிவின்படியும், உச்ச நீதிமன்றத்தில் 32 ம் பிரிவின் படியும் அரசியல் அமைப்பின் ஒருங்கிணைந்த முக்கியத்துவம் வாய்ந்த அரசியலமைப்பை உருவாக்கும் அடிப்படை அமைப்பின் ஒரு பகுதியாகும் எனக் கூறியுள்ளது. அந்தத் தீர்ப்பின் பத்தி 81ல்,  பிரிவு 32 அரசியல் அமைப்பின் “இதயமும்”, “ஆன்மாவும்” ஆகும் என்ற அம்பேத்கரின் கூற்றை மேற்கோள் காட்டி அதனை வலியுறுத்தி உள்ளது.

அருண் திருவாசகம் தனது ‘இந்திய அரசியல் அமைப்பு: ஒரு முழு ஆய்வு’ என்ற நூலில் கூறியுள்ளபடி அடிப்படை அமைப்புக் கோட்பாடு, இந்திய நீதித்துறையின் மிக முக்கியத்துவமான கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும். ஆனால் நீதிபதி போப்டேவின் குறிப்புரை, அதனை மேலும் கூர்மையாக்குவதில் நீதித்துறையின் தயக்கத்தையும்,  விருப்பமின்மையையும் காட்டுகிறது. முந்தைய காலங்களில், அடிப்படைக் கோட்பாட்டு அமைப்பு இந்திய நீதிபதிகள், தொடர் நிறுத்தி வைப்பு ஆணைகள் (mandamus), பொதுநல வழக்குகளைத் தொடருவதற்கான முன்னெடுப்புகளுக்கான தீவிர முயற்சிகள் எடுக்க அனுமதித்தனர். இனி இது நடக்காது.

இந்த அடிப்படை அமைப்பு கோட்பாடு, இந்திய மக்களாட்சி பாதுகாப்பின் தாரகையாக விளங்குகிறது என்ற பொதுவான நம்பிக்கைக்கு மாறாக, அரசியலமைப்பு தோன்றியதிலிருந்து இதுவரை ஏழு முறை மட்டுமே அரசியலமைப்புத் திருத்தங்களை ரத்து செய்து தலைமை நீதிமன்றம் அதன் மீதான தனது நம்பகத்தன்மையை வெளிப்படுத்தி உள்ளது.

அடிப்படைக் கோட்பாட்டு அமைப்பும் சாதாரண சட்டங்களும்

2015ல் ‘நான்காவது நீதிபதிகள் வழக்கில்’ அரசியலமைப்பு அமர்வு 99 சட்டத்திருத்தத்தை அடிப்படைக் கோட்பாட்டு அமைப்பைக் காட்டி செல்லாததாக்கியது. அதேசமயம் அந்த 99வது திருத்தச் சட்டம் உயர் நிலை நீதிபதிகள் நியமனத்தில் “கொலீஜியத்திற்கு”  பதில் தேசிய நீதித்துறை நியமனக் குழுவை (NJAC) அமைக்கக் கூறியதில்,  இதே கோட்பாட்டுத் தேவையை அறியவில்லை. எனினும் இதில் நீதிபதிகள் எவ்வாறு மறுத்துள்ளனர் என்பதைக் கவனமாகப் பார்க்க வேண்டும். நீதிபதி ஜே.எஸ்.கேஹார் தனது தீர்ப்பில், இந்தச் சட்டத்தை எதிர்ப்பதில் தவறில்லை. ஏனெனில் அவை அரசியல் சாசனத்தை மீறுவதாக உள்ள,  அரசியலமைப்புச் சட்டத்தின் சில பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டுள்ளன எனக் கூறியுள்ளார். ஆனால் நீதிபதி லோக்கூர் இதற்கு மாறான கருத்தை வெளியிட்டுள்ளார். அமர்வில் இருந்த பிற நீதிபதிகள் இதனை தேவையற்ற ஒன்றாகக் கருதி ஒதுக்கி விட்டனர்.

நீதிபதி லோக்கூர் சென்னை வழக்கறிஞர்களின் மத்திய அரசுக்கு எதிரான வழக்கில், சாதாரண சட்டங்களை எதிர்த்து அடிப்படைக் கோட்பாட்டு அமைப்பைப் பயன்படுத்தலாம் எனப் பார்த்துள்ளார். ஆனால் அவர் ஏழு நீதிபதிகள் அமர்வின் முடிவான அவ்வாறு செய்ய முடியாது என்பதில் நம்பிக்கை உடையவராக இருந்தார்.

எனினும் தமிழ்நாடு அரசுக்கும் கேரள அரசுக்குமிடையிலான முல்லைப் பெரியாறு அணை குறித்த வழக்கில், கேரள நீர்ப்பாசன மற்றும் நீர்ப் பாதுகாப்புச் சட்டத்தை அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது எனத் தீர்ப்பளித்தது. ஏனெனில் இது அணைக்குப் பாதகமில்லை என்ற நிலையிலும் அதன் உயரத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்துவதற்கு ஒப்புதல் அளித்த நீதிமன்ற தீர்ப்பை மீறுவதாக உள்ளதாகவும், அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கூறாக உள்ள அதிகாரப் பகிர்வு கோட்பாட்டையும், சட்டத்தின் ஆட்சியையும் மீறுவதாகவும் உள்ளது என அவர் கருதினார். ஓராண்டிற்குள் இவரது இந்தத் தடுமாற்றம் இந்தப் பிரச்சினையில் அடிப்படை அமைப்புக் கோட்பாடுகளை சாதாரண சட்டங்களின் ஏற்புடைமையைச் சோதனை செய்யப் பயன்படுத்தலாமா என்பதில் உள்ள தெளிவின்மையைக் காட்டுகின்றது.

நீதித்துறையின் சுதந்திரமே உச்சநீதிமன்றத்தின் ஒரே கவலை

அடிப்படை அமைப்புக் கோட்பாடுகளை மீறுவதாகும் எனக் கூறி, உச்சநீதிமன்றம் ஏழு அரசியல் அமைப்புச் சட்டத் திருத்தங்களை நீக்கியதற்குக் அடிப்படைக் காரணம்,  அவையாவும் நீதித்துறை சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலை தருவதாக இருப்பதாகக் கருதியதே ஆகும். இதன்மூலம் சட்டத்துறை மற்றும் நிர்வாகத்துறையிலிருந்து தனது சுதந்திரத்திற்கு ஆபத்து வரும் நேரங்களில் மட்டுமே இந்த அடிப்படை அமைப்புக் கோட்பாடுகளை உச்சநீதிமன்றம் சார்ந்துள்ளது எனக் காணலாம்.

கிருஷ்ணசாமி கருதுவது போலவே உச்ச நீதிமன்றம் அதீத பொறாமைக் குணம் கொண்டதாகவே உள்ளது. கடந்த இருபதாண்டுகளாக மாவட்ட நீதிபதிகளின் தேர்வு, அவர்களுடைய ஊதியம் உள்ளிட்ட பணி நிலைகள், தீர்ப்பாயத்தின் மற்றும் ஒழுங்கு படுத்தும் அமைப்புகளின் தேர்வு மற்றும் செயல்பாடுகள் ஆகியவற்றில் மட்டுமே தலையிட்டு வருகிறது.

“கெடுவாய்ப்பாக, தேசிய நீதித்துறை நியமனக் குழுவின் (NJAC) வழக்குத் தீர்ப்பைக் கண்டபின், “சட்ட அமைப்பு சீர்படுத்த இயலாத அளவிற்கு மோசமான நிலையில் உள்ளது. அதனால் இந்தத் தளத்தில் நீதித்துறைத் தலையீடு என்பது அதற்குச் சாதகமானது.” என்கிறார் கிருஷ்ணமூர்த்தி.

அடிப்படைக் கூறுகளென, கேசவானந்தா தீர்ப்புகள் பட்டியலிட்டிருப்பதில் நீதித்துறை சுதந்திரம் அல்லது முதன்மைத்துவம் குறிப்பிடப்படவே இல்லை என்பது கவனிக்கத்தக்கது.

பிரிவு 129ன் படி, உச்ச நீதிமன்றத்தின் கீழமை நீதிமன்றங்களைத் தண்டிக்கும் அல்லது கண்டிக்கும் அதிகாரம் பற்றிய வழக்கில் உச்சநீதிமன்றம், “அரசியல் அமைப்புச் சட்ட செயல்திட்டத்தின்படி,  அடிப்படை அமைப்புக் கோட்பாட்டு வடிவத்தின் ஒரு பகுதியாக உள்ள பிரிவு 32,136,141,142 ஆகியவை கொடுத்துள்ள அதிகாரங்களின் படி, நீதித்துறையை நிர்வாகம் செய்வதில் ஒரு சிறப்பான பங்கு இந்த நீதிமன்றத்திற்கு உள்ளது.” என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

மேற்கண்ட பகுதியைச் சுட்டிக்காட்டி, ராஜு ராமச்சந்திரன் “முழுமையான நீதி” தருவதற்காக எந்த உத்தரவையும் நிறைவேற்றலாம் எனப் பிரிவு 142 கூறுவதும் அல்லது பிரிவு 136ன் படி, சிறப்பு நிவாரணத்தைத் தருவதும் எப்படி அடிப்படை அமைப்புக் கோட்பாட்டின் பகுதியாக இருக்க முடியும்? எனக் கேட்கிறார்.

சில வழக்குகளில் அரசியலமைப்பு சட்டத் திருத்தங்களுக்கு எதிர்ப்புகள் இல்லாத போதும் உச்ச நீதிமன்றம் மிகத் தாராளமாக அதற்கு அடிப்படை அமைப்புக் கோட்பாடுகளைப் பயன்படுத்திக் கொள்கின்றது.

ஆயினும்,  ஜபல்பூர் மற்றும் சிவ்காந்த்சுக்லா வழக்கில் (1976) உச்சநீதிமன்றம், பிரிவு 21ஐ குடியரசுத் தலைவர் நிறுத்தி வைத்தது,  தனது சுதந்திரத்தை பாதுகாத்துக்கொள்ளும் உரிமையிலிருந்து குடிமகனை விடுவிக்கவில்லை என்று தீர்ப்பளித்ததன் மூலம் ஏற்பட்ட காயத்தை மறக்க முடியாது. அடிப்படை அமைப்பு பரிசோதனைக்கான ஒரு உரிமை. அதனை அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தினாலும் கூட எடுத்து விட முடியாது என்ற நிலையில்,  ஒரு நிர்வாக ஆணை அதை எடுத்து விடலாம் என்பதையே இந்த முடிவு காட்டியது. அடுத்தடுத்த ஆண்டுகளில் இதனை ஒரு முன்மாதிரியாகக் கொள்ள முடியாது எனக் கூறிய நீதிமன்றம் 2017 ல் அதை நீக்கிவிட்டது‌.

2002 ல் குடியரசுத் தலைவரின், குஜராத்தில் கோத்ரா படுகொலைகளுக்குப் பின் தேர்தலை நடத்துவது பற்றிய கேள்விக்கு கருத்து தெரிவித்த போது உச்சநீதிமன்றம் சுதந்திரமான நேர்மையான தேர்தலை நடத்த வேண்டியது அடிப்படை அமைப்புக் கோட்பாடு என்றும், ஆகவே தேர்தல் ஆணையம் சட்டமன்றம் கலைக்கப்பட்ட ஆறுமாதத்திற்குள் தேர்தலை நடத்த வேண்டும் எனக் கூறியது. அப்போது உண்மையில் தேர்தல் ஆணையம் பதற்ற  நிலையைக் காரணம் காட்டி (பாஜக வுக்கு ஆதரவாக) அரசியலமைப்பு விதிகளை மீறி தேர்தலைத் தள்ளிப்போட முயன்றது.

தற்போது, இந்த அடிப்படை அமைப்புக் கோட்பாடு பெரும்பாலும் ஒரு சட்டத்தின் ஏற்புடைமை அல்லது நிர்வாகத்தின் செயல் அல்லது ஒரு அரசியலமைப்புச் சட்ட ஏற்பாடுகளின் பொருளைத் தீர்மானிக்க உதவும் பரிசோதனைக் கருவியாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அடிப்படை அமைப்புக் கோட்பாடுகளும் சமீபகாலத் தீர்ப்புகளும்.

கே.எஸ் பட்டுசுவாமி மத்திய அரசுக்கு எதிராகத் தொடுத்த வழக்கில், ஒன்பது நீதிபதிகள் அமர்வு, சமத்துவ உரிமை அல்லது உயிர் வாழ்வதற்கான உரிமை போன்ற அடிப்படை அமைப்புக் கோட்பாடுகளின் பகுதியாக உள்ள உரிமைகள், அரசியலமைப்பு சட்டத் திருத்தங்களால் கூட மறுக்க முடியாத நிலைத்த தன்மை பெற்றவை‌. ஒரு உரிமையை  அரசியலமைப்புச் சட்ட கூறுடன் இணைப்பதன் நோக்கம், அதனைப் பொதுக்கருத்திலிருந்தும், அதன் பிரதிபலிப்பாகக் கொண்டுவரப்படும் சட்டமன்ற சட்டங்களிலிருந்தும் பாதுகாப்பதே ஆகும்.

அரசியலமைப்புச் சட்டப்படி பாதுகாக்கப்பட்டுள்ள உரிமைகள், சாதாரண சட்டங்களினால் மறுக்ககூடிய நிலையிலிருந்து எட்டாத, முற்றிலும் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டிய, மீற இயலாத தனிமனிதர்களின் சொந்த உரிமைகள் என்ற பொதுவான நம்பிக்கையை உருவகப்படுத்துகின்றது. இத்தகைய பாதுகாக்கப்பட்ட அரசியலமைப்பு உரிமைகள் சாதாரண சட்டங்களின் ஏற்புடைமையைத் தரமிடுகின்றன” என்று அந்த அமர்வு கூறியுள்ளது. இந்தக் கண்ணோட்டங்கள் அடிப்படை அமைப்புக் கோட்பாடுகளை, முன்பு எந்த முடிவுகள் எடுக்கப்பட்டிருந்தாலும் சாதாரண சட்டங்களை மதிப்பீடு செய்யப் பயன்படுத்தலாம் என்பதை வலியுறுத்துகின்றன.

பட்டுசாமி வழக்கில், நீதிபதி செல்லமேஸ்வர் தனது தனியான தீர்ப்பில்,  “அரசியலமைப்பு செயல்திட்டத்தில் உருவாகும் தாக்கங்கள் “அரசியலமைப்பின் கரும் பொருள் (Dark Matter)” மற்றும் அதன் வரிகளை விளக்கும் நிபந்தனைகளைப் போலவே முக்கியமானதும் ஆகும். இந்த நீதிமன்றத்தால் கேசவானந்தாவில் அமைக்கப்பட்டுள்ள கொள்கைகள் அதாவது அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் ரத்து செய்யப்பட முடியாதவை என்பதுதான் அந்த ‘கரும் பொருளின்’ அறிவார்ந்த வெளிப்பாடாகும். அத்துடன் அவை நமது அரசியலமைப்பின் ஒரு பகுதியாகும். எனினும் இந்தக் கொள்கைகள் அதன் வரிகளில் கிடைக்காது. ….. ரொமேஷ் தாப்பர் மற்றும் சாக்காலின் அறிக்கைகள் இந்த அரசியலமைப்பு கரும்பொருள் இருப்பதை முன்னதாக ஏற்றுக்கொண்டன. அடுத்து, தொடர் வழக்குகளின் மூலம் பிரிவு 21 ல் “வாழ்க்கை அல்லது உயிர்” என்பதற்கான பல்வேறு உரிமைகளின் வெளிப்பாடாகக் கூறியிருப்பதே அதை ஏற்றுக்கொண்டதற்கான உத்தரவாதம் ஆகும்.

அயோத்தியா தீர்ப்பில் 1991 வழிபாட்டுத் தலங்கள் சட்டப்படி, அரசு ஒரு சட்டத்தை இயற்றியதன் மூலம், அரசியலமைப்பின் அடிப்படைக் கூறுகளின் ஒரு பகுதியாக உள்ள அனைத்து மதங்களுக்கும் சம உரிமை மற்றும் சமநீதி என்பதை உயர்த்திப் பிடிக்க அரசியலமைப்பு சட்டப்படி ஏற்றுக்கொண்ட வாக்குறுதியையும் தனது அரசியலமைப்புக்  கடமையை நடைமுறைப்படுத்துவதையும் உறுதி செய்துள்ளது. எஸ்.ஆர் பொம்மை வழக்கில், சமநீதி என்பது நமது கேசவானந்தா மற்றும் இந்தியா நேரு காந்தியால் உறுதியளிக்கப்பட்டபடி அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கூறாகும் எனக் கூறப்பட்டுள்ளது. “இந்த அரசியலமைப்புக் கொள்கைக்குப் பொருந்தாத எதுவும் நேரடியாகக் கூற வேண்டுமெனில் அரசியலமைப்பு விரோதம்.”என்கிறது அந்தத் தீர்ப்பு. அந்தச் சட்டம் சமநீதி அரசை நிறுவுவதற்கான கடமையுடன் இயற்கையாகவே தொடர்புடையது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

அயோத்தியா வழக்கின் முடிவு அடிப்படைப் பண்பான சமநீதி பற்றியே அதிகம் விவாதிக்க வேண்டும் என்பதிலிருந்து விலகி வழிபாட்டுத்தலங்கள் சட்டத்தைப் பற்றியே விவாதித்தின் மூலம் அடிப்படை அமைப்புக் கோட்பாட்டைப் பெயருக்கு முன்னிறுத்தியது. எனவே, பலரும் அந்தத் தீர்ப்பை ஏமாற்றமாகவே பார்க்கின்றனர். இதன்மூலம் இது போன்ற வழக்குகளை எப்படி அணுக வேண்டும் என்பதை எதிர்காலத்தின் கையில் விட்டு விட்டது‌. பட்டுசாமி வழக்கில் கூறியது போல “அரசியலமைப்பின் கரும் பொருளுடன்” மறைமுகமாகத் தொடர்புடைய இந்த வழக்கில் நீதிமன்றம் அதன் வழிகாட்டுதல்களையே கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அது இது குறித்து அமைதியாகவே இருந்துவிட்டது.

அடிப்படை அமைப்புக் கோட்பாடும் மக்களாட்சியின் எதிர்காலமும்.

இந்தப் பின்னணியில், ஆளும் அரசு தனது நிகழ்ச்சி நிரலை நிறைவேற்ற தீர்மானமாகச் செயல்படும் போது, இந்திய மக்களாட்சியைக் காப்பாற்ற அடிப்படை அமைப்புக் கோட்பாடுகள் வருமா என்பதே நமது கேள்வி.

இது இன்றைய உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்கள் முன் வரும் குறிப்பிட்ட வழக்குகளை அடிப்படைக் கூறுகளைச் சோதனை செய்ய எவ்வாறு எடுத்துக்கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தது என்பதே அந்தக் கேள்விக்கான பதில்.

ஆனால், அடிப்படை அமைப்பு சோதனையை விட வேறு வழி இருந்தால் அதில்தான் நீதிமன்றம் கவனம் செலுத்துகிறது என்பதையே அனுபவம் நமக்குக் கூறுகின்றது.

பல வழக்குகளில், குறிப்பிட்ட,  தவறான வழக்கு/சட்டம்/ நிர்வாகத்துறை செயல் ஆகியவற்றை, அடிப்படை அமைப்புக் கோட்பாடு ரீதியில் சோதனை செய்வது பிரச்சனையாகும் போதெல்லாம் நீதிமன்றங்கள் அவற்றில், அரசியலமைப்பை வளைத்து ஒடித்து, தட்டிச் சரிபார்க்கும் வேலையையே செய்கின்றன. அதன் உண்மை முகத்தை வெளிப்படுத்துவது இல்லை.

எடுத்துக்காட்டாக, தேசிய நீதித்துறை நியமனக் குழு வழக்கில், நீதிமன்ற முதன்மைத்துவத்தையும் நீதிமன்ற சுதந்திரத்தையும் சமமாகப் பார்த்து, அந்தச் சட்டத்தையும் அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தையும் தள்ளுபடி செய்தது சரியா என விமர்சகர்கள் கேட்கிறார்கள். நிர்வாகத் துறையின் பரிந்துரைகள் கொலீஜியத்தின் முடிவுகளுக்கு மாறாக இருந்த போது (பலமுறை வலியுறுத்திய பிறகும்) இந்த நீதிமன்ற முதன்மைத்துவம் தியாகம் செய்யப்படவில்லையா என அவர்கள் கேட்கிறார்கள்.

கொடுக்கப்பட்ட ஒரு வழக்கில், அடிப்படை அமைப்புக் கொள்கையின் சாரம் நீதித்துறை பரிசோதனை செய்ய வாய்ப்பிருக்கும் போது, அந்தச் சட்டம் அல்லது நிர்வாகத்துறைத் செயல்கள், அரசியலமைப்பிற்கே அச்சுறுத்தலாக இருக்கிறதா என்பதைப் பரிசீலிப்பதற்குத் தேவையான நிலையான மறுபரிசீலனை முறை தேவை என்பது வேண்டுமானால், அடிப்படை அமைப்பிற்கு மாறுபட்ட வழிகளைச் சிந்திப்பதற்கான கடினமான முன்நிபந்தனையாக இருக்கலாம்.

கர்நாடக அரசுக்கு எதிரான பிரவீன்பாய் தகோடாவின் வழக்கு (2014) இதற்கு ஒரு சான்றாகும். இதில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, 1994 பொம்மை வழக்குத் தீர்ப்பின் படி சமநீதியே அடிப்படைக் கூறு என்பதைக் கருத்தில் கொண்டு, அடிப்படை அமைப்புக் கோட்பாட்டைக் கருவியாகப் பயன்படுத்தி, தங்களது எரிச்சலூட்டும், தூண்டிவிடும் பேச்சால்,  பரஸ்பர வெறுப்பிற்கான விதையைத் தூவி, ஒற்றுமையின்மைக்கும் சமத்துவத்தைச் சீர்குலைப்பதற்கும் முயலும் தனிநபரையோ அல்லது குழுவையோ தடுப்பது சரியே எனத் தீர்ப்பளித்தது.

அண்மையில் ஃபிரோஸ் இக்பால் கானின் ஒன்றிய அரசுக்கு எதிரான வழக்கில் (சுதர்சன் தொலைக்காட்சி- யுபிஎஸ்சி ஜிகாத் தொடர்) முதலில் உச்சநீதிமன்றம் முஸ்லிம்களைத் தரக்குறைவாகச் சித்திரிக்கும் “பிந்தாஸ் போல்” நிகழ்ச்சியின் ஒலிபரப்புக்கு முன்பே தடை செய்யக் கோரியதை ஏற்க மறுத்தது. தகோடியா வழக்கின் தீர்ப்பை இதில் முழுமையாகச் செயல்படுத்தி அது முதல் பிரச்சினைக்குரிய, வெறுப்பைக் கக்கும் பேச்சுகளைக் கொண்ட,  முதல் நான்கு பகுதிகளை ஒலிபரப்ப வாய்ப்பளிக்காமல் தடை செய்திருக்கலாம்.

ஒலிபரப்பிய முதல் நான்கு பகுதிகளில் உள்ள வெறுப்புப் பேச்சுகளை அதன் பார்வைக்கு வைத்த பிறகே மீதமுள்ள பகுதிகளை மட்டும் ஒலிபரப்ப தடை விதித்தது உச்சநீதிமன்றம். இங்கு அது தொலைக்காட்சியின் பேச்சுரிமைக்கும் சமத்துவத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பிற்கும் இடையே சமநிலைக்கான கொள்கையைத் தேடுவதாகக் காட்டியது. தகோடியா வழக்கைப் போல எளிதாக இதை அடிப்படைக் கோட்பாட்டு அமைப்பிற்கு எதிரானது எனக் காண்பதற்குப் பதில் சிக்கலான ஒன்றாகப் பார்ப்பதாகக் காட்டியது.

இந்த இருபது ஆண்டுகளில் தீர்ப்பளிக்கப்பட்ட இந்த இரண்டு வழக்குகளும், உச்சநீதிமன்றம் அடிப்படை அமைப்புக் கோட்பாட்டின் படி ஒரு பிரச்சனை தீர்ப்பதில் காட்டும் ஊசலாட்டத்தையே முன்வைக்கிறது‌.

அடிப்படை அமைப்புக் கோட்பாட்டின் படி மற்றொரு வழக்கில் அர்னாப் கோஸ்சுவாமி மீது நடவடிக்கை எடுத்த மகாராஷ்டிர சட்டமன்றச் செயலாளரைக் கண்டித்த நிலையில்,  பிரிவு 32  ஐ  நாடுவதை ஊக்குவிப்பதைத் தடுக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி போப்டே முன்யோசனையின்றித் தெரிவித்துள்ள அண்மைக் கருத்து, அடிப்படை அமைப்புக் கோட்பாடுகளைச் செயல்படுத்துவதில் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கிடையே உள்ள தயக்கத்தைத் தெளிவாகக் காட்டுகிறது.

(www.thewire.in இணையதளத்தில் வி. வெங்கடேசன் எழுதிய கட்டுரையின் மொழியாக்கம்)

அரசியல்சாசன அடிப்படைக் கோட்பாடும், நீதி வழங்குவதில் ஊசலாட்டமும் – வி.வெங்கடேசன்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்