Aran Sei

காலநிலை மாற்றம்; அறிவுசார் உரையாடலுக்கான தேடல் (பாகம் 2):- மு.அப்துல்லா

பில் கேட்ஸின் மற்றொரு அர்த்தமற்ற வாதம் அரசுகளிடம் கோரிக்கை வைப்பதோடு நிறுத்திக்கொள்வது. கடந்த ஐம்பதாண்டுகளாக பொருளியலைக் கைப்பற்றிய நவதாராளவாதம் சந்தையைச் சார்ந்தே அரசியல் நகர்வுகளை நடத்துகிறது. உலகமய நவதாராளவாதத்திற்கு பிறகான அரசின் நடவடிக்கைகளும் திட்டங்களும் சந்தையின் நலனிற்குக் கட்டுப்பட்டதாகவே இருந்து வந்துள்ளது. உதாரணம், உலகமயத்திற்குப் பிறகு வளரும் நாடுகளின்  குடிசை மாற்று வாரிய திட்டங்கள் சந்தை தேவை (Demand) அதிகம் இருக்கும் நகரங்களுக்குள்ளேயே இருக்கக் கூடாது என்று உலகவங்கி கூறியது.

ஜனநாயகம் ஓரங்கட்டப்படும் சந்தையினால் ஏற்படும் தோல்விகளுக்கு மட்டும் அரசைக் கைகாட்டிவிட்டு நகரும் நழுவலை பெருந்தொற்று வரையிலும் காணவே செய்கிறோம். தேவையும் பரிவர்த்தனையும் சந்தையின் தவிர்க்க முடியாதவை என அறுதியிடும் பில் கேட்ஸ், ஆண்டிற்கு 5 ட்ரில்லியன் டாலருக்கு பரிவர்த்தனை நிகழும் புதைபடிம எரிபொருள் துறையில் கவனம் செலுத்தாமல் இல்லை. பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்திற்கு பிறகு 20 தேசிய அரசுகளை ஒருங்கிணைத்து நீடித்த ஆற்றல் குறித்த ஆய்விற்கு அவர்களின் பங்களிப்பை இரட்டிப்பாக்கியதையெல்லாம் தனது சாதனையாகக் கருதுகிறார். ‘ஆற்றல் ஆராய்ச்சியில் அமெரிக்காவின் முதலீடு மருத்துவம், பாதுகாப்பு போன்ற அத்தியாவசியமான துறைகளுக்கு ஒதுக்கும் நிதியை விடக் குறைவு’ என்று வருந்தவும் செய்கிறார்[1]. (சூழல் கேட்டின் முக்கிய வினைகளில் ஒன்றான பாதுகாப்புத் துறைகள் நிகழ்த்தும் வன்முறை போர்களை அத்தியாவசியம் என்ற பெயரில் மருத்துவத்தோடு ஒப்பிடுபவரின்  சூழலியல் பார்வையை என்னவென்று கூறுவது..)

புதைபடிம எரிசக்தித் துறையின் அபாயத்தை உணர்ந்தும் அரசிடம் மட்டும்  அழுத்தத்தை அதிகரிப்பது தனது வர்க்க மேலாதிக்கத்திற்கு (Capitalist Hegemony) அச்சுறுத்தல் என பில் கேட்ஸ் போன்ற பெருமுதலாளிகள் பயப்படுகிறார்கள். அந்த பயமே பல எதேச்சதிகார நிறுவனங்கள் COP26 போன்ற மாநாடுகளை ஆதரிக்கவும், காலநிலை அறிவியலின் தூதுவர்களாக அவதாரமெடுக்கவும் தள்ளுகிறது. இதனை புரிந்துகொள்ள பில் கேட்ஸ் உறுதியாக பேசும் ‘கார்பன் வெளியேற்றத்தை பூஜ்யமாக்குதல்'(Net Zero) லட்சியத்தை எடுத்துக்கொள்வோம்.

கார்பன் நீக்கமே காலநிலை மாற்றத்தின் மையப்பிரச்சனை என்ற பிறகு தொழில்நுட்பமும், பெரியளவில் மரம் வளர்ப்பது போன்ற திட்டங்களும் இந்த நூற்றாண்டின் மையத்திற்குள் பலனை எட்டிவிடலாம் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது. இந்த நம்பிக்கையே’ இன்று எரித்துக்கொள்ளலாம், பிறகு சரிசெய்து விடலாம்” என்ற அதீத நம்பிக்கையாக உருவெடுத்தது. 1988ம் ஆண்டு நாசா விஞ்ஞானி  ஜேம்ஸ் ஹான்சன் வளிமண்டலத்தில் அதிகரித்த கார்பன் தடத்தை வைத்து காலநிலை மாற்றத்திற்குக் காரணம் மனித செயற்பாடே  என்று கண்டறிந்தார். பிறகே, கார்பன் வெளியீடும், காடுகள் அழிப்பும் அதிகரிக்கத் தொடங்கியது. ஹான்சனின் கண்டுபிடிப்பை ஒட்டி, அன்றே ஆண்டுக்கு 2% வீதம் கார்பன் வெளியீட்டைக்  குறைத்துக் கொண்டிருந்தால் 1.5 டிகிரி செல்சியலுக்குள்ளான இலக்கு கடினமாகியிருக்காது என்று ஆய்வுகள் கூறுகின்றன[2].

ரியோ  புவி உச்சி மாநாடு (1992), கியோட்டோ பருவநிலை மாநாடு (1997) போன்றவை இந்த சூழலின் பொருட்டே உலக நாடுகளிடம் ஒழுங்கமைவைக் (Regulation) கோரின. இதே காலம்தான் தொழில்நுட்பத்தின் உதவியுடன் உலகமய சந்தையின் வளர்ச்சி விரிவடைந்தது. எரிசக்தித் துறை எப்படி பல்துறை வளர்ச்சிகளில் தாக்கம் செலுத்துகிறது என்று நவீன கணினிகள் கணக்கிடத் தொடங்கின. இந்த பொருளாதார உந்துதல் கார்பனை கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, அளவுக்கு மீறிப் பயன்படுத்தினாலும் அதன் விளைவை மட்டும் மட்டுப்படுத்தத் தூண்டியது. அதிகளவில் மரம் வளர்த்து கார்பனை சேமித்தல், புதிய தொழில்நுட்பத்தின் மூலம் வெளியேறும் கார்பனை சிதைத்தல், நிலத்தடியில் சேமித்தல் எனத் திட்டங்கள் கூறியது மேற்கு. கார்பன் வெளியேற்றத்தை பூஜ்யமாக்குதல் என்ற லட்சியவாதத்திற்குப் பின்னணியில் தேவைக்கு அதிகமான கார்பன் பயன்பாட்டையே குறைக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வு தட்டிக்கழிக்கப்பட்டது. கோபென்ஹெகன் பருவநிலை மாநாடு (2009) கார்பனை தொழில்நுட்பத்தால் சேமிப்பது நடக்காத காரியம் என்று இரண்டு காரணங்களைக் கூறியது. ஒன்று, இன்று அதற்கான தொழில்நுட்பம் இல்லை. ‘Soletair Power’ என்ற நிறுவனம் ‘தனது ஊழியர்கள் வெளியிடும் கார்பனை பிடிப்பதன் மூலம் காலநிலை மாற்றத்தை வெல்கிறோம்’ என்று பரந்த ஊடக விளம்பரத்துடன் விலையுயர்ந்த மின்கோபுர தொழில்நுட்பத்தை அமைத்தது. அந்த கோபுரத்தால் ஒவ்வொரு 8 மணிநேரத்திற்கும் 1 கிலோ கார்பனை கட்டுப்படுத்த  முடிந்தது. எதார்த்தத்தில், அந்த  கால வெளியில் 32 பில்லியன் கிலோ கார்பன் எரிசக்தியால் வெளியிடப்படுகிறது[3]. இரண்டாவது, கார்பனை சேகரிக்கும் தொழில்நுட்பத்திற்கு தேவையான செலவு. சந்தையின் வளர்ச்சியில் அது குறிப்பிட்டளவில் இடையீடு செய்யும்போது அவர்களிடம் அதற்கான பொறுப்புணர்வு இருக்குமா என்பது கேள்விக்குறியே.

சூழலியல் செயற்பாட்டாளர்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனை சூழலியல் பாதுகாப்புக்கும்  நவீன வளர்ச்சிக்கும் இடையேயான முரண்பாடு. சூழலியலாளர்கள் ஒருவிதத்தில் இன்றைய நவீன தொழில்நுட்பம் அனைத்தையும் எதிர்க்கிறார்கள், உலகைப் பல ஆண்டுகளுக்குப் பின்னோக்கி இழுக்கிறார்கள், பிற்பட்ட கிராமங்களில்  வரிய நிலையில் இருப்பவர்களின் முன்னேற்றத்தில் (இந்தியச் சூழலில்  இதை அதிகம் விவாதிப்போம்) ஒவ்வாமை கொண்டிருக்கிறார்கள், நகரமயத்தின் கலாச்சார முற்போக்குகளுக்கு எதிரான பழமைவாதிகள் போன்ற விமர்சனங்கள் உள்ளது.  இந்த  விமர்சனங்களையெல்லாம் வைப்பது காலநிலை மாற்றத்தை எதிர்க்கும் பழைமைவாதிகள் அல்ல. காலநிலையை நன்கறிந்த நவீன அறிவியலின் முகவர்களான தாராளவாதிகள் (Liberals). நவீன கல்வி கற்ற அவர்களால் சூழலியல் பிரச்சினையை ஏன் புரிந்துகொள்ள முடியவில்லை, அல்லது அவர்களின் சூழலியல் பார்வை என்ன, அவர்கள் குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மை என்ன என்பதையெல்லாம் அறிய, அவர்கள் தங்கள் தர்க்கங்களை எங்கிருந்து யார் சார்பாகப் பெறுகிறார்கள் எனக் காண்பது பொருத்தமாக இருக்கும்.

‘காலநிலையோ பிற அறிவியல் நிலைப்பாடுகளோ, தங்கள் நலனிற்கு அப்பாற்பட்டது எதுவும் அர்த்தமற்றது. தாம் ஏற்பதே சரியானது (The Right is Right)’ என்று வலதுசாரிகளை விமர்சித்தார் சூழலியல் எழுத்தாளர் நயோமி கிளெய்ன். இதற்காக அமெரிக்கா முழுவதும் முன்னணி  ஊடகங்கள் வரை அவர் தாக்கப்பட்டார். அதை மேற்கொண்டவர்கள் வலதுசாரிகள் அல்ல, தாராளவாதிகள். அறிவியலை ஏற்கும் அதற்கு எதிரான வலதுசாரிகளை ஆதரிக்கும் முரணை கிளெய்ன் கண்டித்ததே அதற்கு காரணம். தாராளவாதிகளின் நிலைப்பாடுகளுக்குத் தொழில்நுட்பத்தில் அவர்கள் அடைந்த மத்தியத்தர வர்க்க நிலையையும், அதைத் தாங்கி நிற்கும் முதலாளித்துவ அமைப்பையும் காரணம் எனலாம். அதையும் கடந்து ரகசிய பணப் பரிவர்த்தனையால் (Secret Funding) உருவாக்கப்பட்டவர்களும் உண்டு. எண்ணெய் முதலாளிகள் கோச் சகோதரர்கள் (Koch brothers) உட்படப் பல பில்லியனர்கள் காலநிலை மாற்றத்திற்கு எதிராகப் பேச மில்லியன் டாலர்களில் நூற்றுக்கு  மேற்பட்ட குழுக்களுக்கு  நன்கொடைகள் வழங்கினர். ‘அளவான அரசு நிர்வாகம், தனிநபர்களின் பொறுப்புணர்வை வலியுறுத்தல், திறந்த சந்தையின் பலன்கள்’ என்ற ரீதியில் அவர்கள்  பரப்புரை செய்வார்கள். 2000 க்கு பிறகு பரவிய இந்த இயக்கங்கள் காலநிலை மாற்றத்தை மறுவரையறை செய்தன. Donors Trust மற்றும் Donors Capital Fund என்ற இரண்டு நிறுவனங்கள் பில்லியனர்களிடம் பணம் பெற்று 2010 வரையிலும் 118 மில்லியன் டாலர் வரை 102 கருத்தியல் குழுக்களுக்கு வழங்கினார்கள்[4]. அமெரிக்காவில் சூழலியல் ஒழுங்குக்கு (environmental regulations) எதிரான அடித்தளத்தை நிறுவுவதே இவர்களின் பணி.

இந்த பின்புலங்களைக் கடந்து தாராளவாதிகளின் வளர்ச்சி மற்றும் தொழில்நுட்பம் வழி உலகை வெல்லலாம் என்ற வாதம் கவர்ச்சியானது. இன்று, பெருமளவில் தொழில்நுட்பம் வளர்ந்த காலத்திலும் சூழலியல் தீர்வு ஏன் கேள்விக்குறியாக உள்ளது,  காரணம் தொழில்நுட்பங்களின் லாப ஆதாயம். எரிசக்தித் துறையில் மேலும் மேலும் நவீன இயந்திரங்கள் உருவாகும்போது, அதன் மாசை கட்டுப்படுத்த தொழில்நுட்பம் வேண்டுவது சந்தைக்கு  அவசியமற்றது. 2018க்கு பிறகு மட்டும் உலகளவிலான கார்பன் வெளியீடு 2.7 சதவீதமாகவும், அமெரிக்காவில் மட்டும் 3.4 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. இந்நிலை, அப்படியே தொடர்ந்தால் உலகம் மிகப்பெரிய அழிவைச் சந்திக்கும் என்பது அறிவியல் எதார்த்தம். ஆனால், மூலதன திரட்சிக்காக மொத்த உலகும் அழியவும் தயங்கவில்லை முதலாளித்துவம்.

சூழலியலாளர்கள் மக்களைப் பயமுறுத்தும் வேலையைத்தான் செய்கிறார்கள் என்று கூறுபவர்களைக் காணலாம். அது, அழிவிற்கான அறிவிப்பு கிடையாது, செயலுக்கான அழைப்பு என்பார் போஸ்ட்டர். இந்த அமைப்பு தவறாகவே இருந்தாலும் அதை சரி செய்ய  உறுதியான  திட்டங்களை  வைத்திருக்கிறார்களா அவர்கள் என்ற கேள்வி கேட்கப்படுவதுண்டு. இதற்குப் பதிலளிக்கும் முன் தொழில்நுட்பத்தையும் அதிகாரத்தையும் வைத்திருக்கும் முதலாளித்துவத்திடம் என்ன தீர்வு இருக்கிறது எனக் காண்பது சிறப்பாக இருக்கும். என்னதான், அறிவியல் புள்ளி விவரத்துடன் பேசினாலும் மின் வாகனங்களைப் பயன்படுத்துங்கள், சைவ பர்கர் உண்ணுங்கள் என்ற அளவிற்குத்தான் பில் கேட்ஸின் வாதம் வந்து நிற்கிறது. சூழலியல் கேட்டிற்கு அசைவம் உண்பது முக்கிய காரணம் எனும் அவர் தன் நூல் முழுவதும் அந்த உணவின்  மீதான ஒவ்வாமையை வெளிப்படுத்துகிறார்[5]. தனிநபர் பொறுப்புணர்வில் முடிக்கும் அவர் பொறுப்பான தனிநபராக இருக்கிறாரா என்றால் அதுவுமில்லை. கேட்ஸ் பயணம் செய்யும் தனி ஜெட் விமானம் வெளியிடும் கார்பன் மட்டும் 7500 டன். இதை ஒப்புக்கொள்ளும் அவர் அதற்கான தொழில்நுட்பம் உருவாகி அதைச் சரி செய்யும் என்ற மேட்டிமை நம்பிக்கையோடு முடித்துக்கொள்கிறார். (அவர் இறங்கிவர மாட்டாராம்..)

இன்று நிலவும் அமைப்பிடம் எந்த தீர்வும் இல்லை என்ற திறந்த மனதுடன் சூழலியலாளர்களை எதிர்கொள்ள வேண்டும். பிறகு, அவர்கள் கோரும் பிரச்சனைக்கு அறிவுசார் உரையாடலை நிகழ்த்த வேண்டும். குறிப்பாக, இந்தியச் சூழல். காலநிலை மாற்றத்திற்குக் கவலைப்படும் அளவிற்கு நாம் மற்ற பிரச்சனைகளிலிருந்து மீண்டுவிடவில்லை என்பதெல்லாம் ஏற்புடைய விஷயம். ஆனால், சூழலியல் வல்லாதிக்கத்தால் அதிகம் பாதிக்கப்படும்  தெற்காசிய நாடுகள் என்ற அடிப்படையிலும், வளர்ந்த மேற்கத்திய நாடுகளின் நிகழ்கால நுகர்வுக்கு நேரடி விலை கொடுப்பவர்கள் என்ற வகையிலும் நமக்கான காலநிலை அரசியலைக் கண்டடைவது அவசியம். காலநிலை மாற்றத்திற்குப் பொறுப்பான வளர்ந்த நாடுகள் அதற்கான பொருள் ரீதியான இழப்பீட்டை (Material Concern) ஈடு செய்வது எப்போது, வளர்ச்சிக்கு எதிரான அறைகூவல் (Degrowth) யாருக்கானது, இன்று  உள்நாட்டில் எதேச்சதிகாரத்தை நிறுவியுள்ள சுதேசிய முதலாளியத்தை எதிர்கொள்வது எவ்வாறு என்ற ரீதியில் நம் தேடல் இருக்க வேண்டும். சாமானியனின் கவலையின்மை என்று மேலே கூறியது நாளை பற்றிய  அறியாமை என்ற அர்த்தத்தில் அல்ல. அவர்களுக்கு இன்று என்பதே மீள முடியாத போராட்டமாக உள்ளது. அத்தகையே போராட்டமே சூழலியல் போரின் முன்னணிப் படையாக வெகுமக்களை நிறுத்தியுள்ளது. இந்திய விவசாயிகளின் போராட்டம் சூழலியல் மேலாதிக்கத்திற்கு எதிரான அறைகூவல் என்பதை ஒப்புக்கொண்டுதான் தீரவேண்டும். அந்தவகையில், இந்திய வெளியில் காலநிலை மாற்ற அரசியலை எதிர்கொள்வது பற்றி அடுத்து கவனம் செலுத்தலாம்.

கட்டுரையாளர் : அப்துல்லா.மு, ஊடகவியலாளர்

Notes

  1. Bill Gates, How to Avoid a Climate Disaster: The Solutions We Have and the Breakthroughs We Need, Penguin Random House LLC, Newyork, p15.
  2. James Dyke, Robert Watson, Wolfgang Knorr, Climate Scientists: ‘Net Zero” is a dangerous trap, April 22, 2021, Climate&Capitalism
  3. See Note 7,
  4. Suzanne Goldenberg, Secret funding helped build vast network of climate denial thinktanks,14 Feb 2013,The Guardian
  5. Bill Gates, How to Avoid a Climate Disaster: The Solutions We Have and the Breakthroughs We Need, Penguin Random House LLC, Newyork, p42, 117, 223
காலநிலை மாற்றம்; அறிவுசார் உரையாடலுக்கான தேடல் (பாகம் 2):- மு.அப்துல்லா

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்