Aran Sei

அமெரிக்காவிலும் தொடரும் சாதிவெறி – ஆட்டுடை தரித்த ஓநாய்கள்

சிஸ்க்கோ (Cisco) சாதிப்பாகுபாடு வழக்கில் இந்து அமெரிக்கன் பவுண்டேஷனின் சட்டத்தை வளைக்கும் முயற்சி.  தமிழில்: அருள்மொழி

“ஆட்டுமந்தையில் புகுந்த ஓநாயை மேய்ப்பன் விரட்டுகிறான். அதனால் ஆடு அவனை தான் சுந்தந்திரத்தைப் பேணுபவனாக எண்ணுகிறது. அதேவேளையில் ஓநாயோ அதே மேய்ப்பனைத் தன்னுடைய சுதந்திரத்தைப் பறித்தவன் என்று குற்றஞ்சாட்டுகிறது – அதே காரணத்துக்காக. அதிலும் கருகருவென்று இருந்த அந்த கருப்பு ஆட்டுக்குட்டிக்காகவா? இங்கே ஆட்டுக்கும் ஓநாய்க்கு எது சுதந்திரம் என்கிற வரையறையில் முரண்பாடு காணப்படுகிறது” – இது 1864இல் பால்டிமோரில் நடைபெற்ற கூட்டத்தில் அன்றைய அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் சொன்னது.

மார்ச் 9 அன்று கலிபோர்னியா மாகாணத்தின் நியாய வேலைவாய்ப்பு மற்றும் வீட்டுவசதித் துறை (Department of Fair Employment and Housing),  சிஸ்க்கோ, சிஸ்க்கோ நிறுவனத்தைச் சேர்ந்த சுந்தர் ஐயர் & ரமணா கொம்பல்ல மீது தொடுத்திருக்கும் பணியிடத்தில் சக ஊழியரிடம் சாதிப்பாகுபாடு காண்பித்ததற்கான வழக்கு மாகாண நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. DFEH சென்ற ஜூன் மாதம் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமாகிய சிஸ்க்கோ – தனது நிறுவனத்தில் வேலைபார்த்த பொறியாளராகிய  ஜான் டோ (மாற்றப்பட்ட பெயர்) மீது காண்பிக்கப்பட்ட சாதிப் ரீதியான பாகுபாடு மற்றும் துன்புறுத்தலைத்  தீர்க்கவில்லை என்று இந்த வழக்கை  கூட்டாட்சி (Federal) நீதிமன்றத்தில் பதிவுசெய்தது.  பார்ப்பன வகுப்பைச்சேர்ந்த சுந்தர் அய்யர் மற்றும் ரமணா கொம்பேல்ல ஆகியோர் பட்டியல் வகுப்பைச்சேர்ந்த தன்மீது சாதி அடிப்படையிலான முன்முடிவுகளுடன் கூடிய  பாரபட்சத்திற்கும் துன்புறுத்தலுக்கும்  ஆளாக்கியதாக ஜான் டோ குறிப்பிட்டுள்ளார். DFEH பின்னர் இந்த வழக்கை ஃபெடரல் நீதிமன்றத்திலிருந்து திரும்பப்பெற்று கலிபோர்னியாவின் மாநில நீதிமன்றத்தில் பதிவு செய்தது. (பொதுவாக பாகுபாடுகளை எதிர்ப்பதில் கலிபோர்னியாவின் மாநிலச் சட்டங்கள்  வலிமையானதாகக் கருதப்படுகிறது.)

அமெரிக்காவில் ஆசிய அமெரிக்கர்கள் மீதான வெறுப்பு நிலவி வருகிறது – மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா

இதுவரை ஐக்கிய அமெரிக்காவின் பாகுபாடு சார்ந்த சட்டங்களில் சாதி அங்கீகரிக்கப்படவில்லை. எனவே சாதிப்பாகுபாடுகள் சார்ந்த விஷயங்களுக்கு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவோ தண்டிக்கவோ வழிமுறைகள் இல்லாமலிருக்கிறது.  எனவே, சிஸ்க்கோவிற்கு எதிரான இந்த வழக்கு, சாதியப் பாகுபாடுகளுக்கு எதிரான ஒரு மைல்க்கல்லாக கருதப்படுவதால், அமெரிக்காவில் இது மிக உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது. இது மக்களைப் பிளவுபடுத்தும் சித்தாந்தத்தை அடிப்படியாய்க்கொண்ட RSS இயக்கத்தின் சர்வதேசத் துணை நிறுவனமாகிய ஹிந்து அமெரிக்கன் பவுண்டேஷனின் (HAF) கவனத்தையும் கவர்ந்துள்ளது. பிப்ரவரியில் HAF இந்த வழக்கில் தலையீடு செய்வதற்கான மனுவைத் தாக்கல் செய்துள்ளது. “இந்திய வம்சாவளியைச்சேர்ந்த இந்துக்களின் மத நம்பிக்கை”யில் அரசு தலையிடுவதாகவும் அது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்றும், மத உரிமைகளைப் பாதுகாக்க தான் தலையிட விரும்புவதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் DEFH “சாதிப் பாகுபாடு மதரீதியானது, ஏனெனில் இந்து மதத்தில் சாதிபடிநிலை மிகக் கடுமையான அடிப்படை சமூகக் கட்டமைப்பாக இருக்கிறது. எனவே இது மதத்தின் ஒருங்கிணைந்த போதனைகள் மற்றும் செயல்பாடுகளில் நடைமுறைப்படுத்தப்படுகிறது” என்று கோருகின்றது. HAF தன்னுடைய வலைத்தளத்தில், “கலிபோர்னியாவின் செயல்பாடுகள் மத உரிமைகளின் மீதான அத்துமீறலாகவும் அமெரிக்க இந்துக்களின் உரிமைகளை மீறுவதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும் அமெரிக்க அரசியலமைப்பு சட்டமானது அரசு மதக் கோட்பாடுகளில் தலையிடுவதைத் தடை செயதிருப்பதால், தனது மத சுதந்திரத்தில் தலையிட அரசுக்கு சட்டரீதியான அதிகாரம் இல்லை என்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்து, கிறிஸ்தவம், முஸ்லீம், யூதம் என எந்த மாதமாக இருப்பினும் மத விஷயங்களில் அரசுக்குப் பங்கு இல்லை எனவும், அரசியலமைப்புச்சட்டம் அதை நேரடியாகத் தடை செய்கிறது.”

இந்த அமெரிக்க இந்து அமைப்பின் நிலைப்பாடு மிகவும் புண்படுத்தும் விதமாகவும் பல இடங்களில் குழப்பமானதாகவும் இருக்கிறது. குறிப்பாக  யார் (அமெரிக்க) இந்து என்பது முடிவுசெய்யப்பட்ட முன் தகுதிப்பாடுடன் வருவது போலத் தோன்றுகிறது. இதில் சுவாரசியம் என்னவென்றால், சுந்தர் ஐயர் தான் ஒரு மதநம்பிக்கையுடைய இந்துவோ பார்ப்பனரோ அல்ல என்று தனது தாக்கலில் குறிப்பிடுகிறார். ஆனால் பாதிக்கப்பட்ட ஜான் டோ, தான் வழிபாடு செய்யும், மத நம்பிக்கை கொண்ட, கோவிலுக்குச் செல்லும் வழக்கம் கொண்ட இந்துவாக  அடையாளப்படுத்திக்கொள்கிறார். ஆனாலும்கூட இந்து அமெரிக்கன் பவுண்டேஷன் இந்துக்களை காப்பாற்றுகிற போர்வையில் இந்த வழக்கை எதிர்க்கக் கிளம்பியுள்ளது. இதிலிருந்து, இந்த அமைப்பு ஜான் டோவை இந்துவாகக் கருதவில்லை என்பது தெளிவாகிறது.

சாதிய ஒடுக்குமுறை – சிஸ்கோ நிறுவனத்திற்கு எதிரான வழக்கு திரும்ப பெறப்பட்டது

HAF தனது மனுவில் சாதியப் படிநிலை இந்துமதத்தின் அடிப்படை பண்பு என்பதையும்,  சாதி அடுக்கும் சாதி சார்ந்த நம்பிக்கைகளும் பல இந்து மத புத்தகங்களில் புனிதமானதாக கருதப்படுகிறது என்பதை வெளிப்பார்வைக்கு மறுப்பதுபோல கூறியிருக்கிறது. ஆனால் சரியாக கவனித்தால், சாதி உயர்நிலை மனப்பான்மை கொண்டவர்கள், பாகுபாடுகளை நிலைநிறுத்தும் சடங்குகளை வழிபாட்டுத்தலங்களில் செய்வதை அது கண்டுகொள்ளாமல் கள்ள மவுனம் காக்கிறது என்பதையும் காணலாம். உதாரணமாக வாஷிங்டன் டிசியில் உள்ள சத்தியநாராயணா கோவில் மற்றும் டல்லாசை அடுத்துள்ள விநாயகர் கோவில் போன்ற இந்து கோவில்கள் “உபநயனம்” எனப்படும் நூல் மாற்றும் சடங்கு பார்ப்பன, சத்திரிய வைசிய சாதிகளை சேர்ந்தவர்களுக்கு மட்டும் செய்யப்படும் என்று வெளிப்படையாக தனது வலைத்தளத்தில் அறிவிப்பு வெளியிடுகிறது. இவை சாதியப்படிநிலையில் முதல் மூன்று வர்ணங்கள் ஆகும். அந்த சாதிகளைச் சேர்ந்த ஆண் குழந்தைகளுக்கு மட்டும் செய்யப்படும் இந்த பூணூல் சடங்கானது மிக இளம் வயதிலேயே அவர்களுடைய மனதில் சாதிய வன்மத்தை விதைக்கிறது. இது “சாதிப்படிநிலை இந்து மதத்தில் எந்தவிதத்திலும் முறையாக அங்கீகரிக்கப்பட்டதல்ல”, “HAF எல்லாவிதமான சாதிய பாகுபாடுகளையும் கடுமையாக எதிர்க்கிறது” என்கிற வாதத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது.

HAF இன் “சாதிப்பாகுபாடுகள் மத சுதந்திரம் சார்ந்தது, அதில் அரசு தலையிடக்கூடாது” என்பது முதல் பத்தியில் சொன்ன சுதந்திரம் பற்றிய ஓநாயின் வாதத்துக்கு ஒப்பானதாகும். இந்த அமைப்பின் மனு, நீதிமன்றத்தை சாதிப்பாகுபாடுகளை சட்டப்பூர்வமானதாக ஆக்கக் கோரும் முயற்சியாகும். இந்த அமைப்பு மத சுதந்திரம் என்கிற பெயரில் சுற்றிவளைத்துச் செய்ய முனைவது நமக்கொன்றும் புதிதல்ல.

`நான் முதல் பெண்தான்; கடைசிப் பெண்ணல்ல’ – வெற்றிக்குப் பின் கமலா ஹாரிஸ்

காலனியாதிக்கத்தின்போது, பட்டியல் சாதியினர் குடிநீர்க்குளம், கோவில் போன்ற பொது இடங்களைப் பயன்படுத்தும் உரிமை கோரியபோது சாதி இந்துக்கள் பிரிட்டிஷ் அரசு மதம் சார்ந்த விஷயங்களில் தலையிடக்கூடாது என்கிற வாதத்தையே முன்வைத்தனர். சாதியம் அமெரிக்காவில் இந்தியாவைப்போல வெளிப்படையாக இல்லையென்றாலும் அமெரிக்க இந்தியர்களின் வாழ்வின் எல்லா நிலைகளிலும் ஒரு தீய செல்வாக்கை செலுத்திவருவதை யாராலும் மறுக்க முடியாது. இங்கு அதை மறைப்பது மிகவும் எளிது. ஏனெனில் தெற்காசியாவின் வாழ்வனுபவம் இல்லாதவர்கள், சாதிய பழக்கங்களையும் அது எவ்வாறு வெளிப்படுகிறது என்பதையும் இனம்கண்டுகொள்வது கடினம். நாங்கள் நடத்திவரும் அம்பேத்கர்-கிங் படிப்புவட்டம் அமெரிக்க இந்தியர்களின் பல்வேறு விதமான சாதிய பாகுபாடுகளை, சுய அனுபவக்கூறுகளாக பதிவு செயதுள்ளது. ஹூஸ்டனைச் சேர்ந்த அ. மாரிமுத்துவின் அனுபவம் அவருடைய வார்த்தைகளில்: “நானும் எனது இணையரும் பல்வேறு இடங்களில் இந்த சாதிப்பாகுபாட்டை அனுபவித்துள்ளோம். ஒருமுறை ஒரு பொது நிகழ்வில் சமீபத்தில் நண்பராகிய ஒரு குடும்பத்தை சந்திக்க நேரிட்டது. பேசிக்கொண்டிருந்தபோது திடீரென்று அவருடைய மனைவி “நீங்கள் என்ன சாதி” என்று கேட்டார். வேறு வழியின்றி சொல்ல நேரிட்டது. அதற்கு பின்னர் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக எங்களுடனான தொடர்பை துண்டித்துக்கொண்டனர். இதுபோல தனிமைப்படுதலை எதிர்கொள்வது மிகவும் வலிமிகுந்தது” என்று குறிப்பிடுகிறார். சிகாகோவைச் சேர்ந்த அலெக்ஸ், தன்னுடைய சாதி தெரியவந்தபோது அருகில் வசித்த இந்தியக் குடும்பங்கள் தங்களை விலக்கத் துவங்கியதாகக் குறிப்பிடுகிறார்.

இந்த நிலையில், ஜான் டோ ஏன் தனது அடையாளத்தைப் பாதுகாக்க முனைகிறார் என்பது புரிந்துகொள்ளக்கூடியதே. நீதிமன்றத்தில் தனது உண்மையான பெயரை வெளியிட விரும்பவில்லை என்று வேண்டுகோள் வைத்திருக்கும் அவர் நீதிமன்றத்தில் “எனது அடையாளம் வெளிப்படுத்தப்பட்டால், நாங்கள் – முக்கியமாக எங்கள் குழந்தைகள் சமூக ரீதியாக ஒதுக்கப்படுவார்கள் என்கிற அச்சம் எனக்கும் எனது மனைவிக்கும் உள்ளது. எங்கள் சமூக பழக்கவழக்கங்கள், மத வழிபாடுகள் போன்றவை 80% இந்திய வம்சாவளியினரை உள்ளடக்கிய நிகழ்வுகளாகவே உள்ளது. எனவே மனுதாரர் நான் தான் என்று தெரியவந்தால் பெரும்பாலான நண்பர்கள் எங்களுடன் பழகுவதைத் தவிர்ப்பார்கள் என்று அஞ்சுகிறோம். எங்கள் குழந்தைகள் சிறுவயதுமுதல் பழகிவந்த, உடன் விளையாடிய நண்பர்களை இதனால் இழக்க நேரிடும் என்பதையோ அவர்கள்  தனிமைப்படுத்தப்படுவார்கள் என்கிற எண்ணமே வேதனைக்குரியதாய் இருக்கிறது” என்று கூறியுள்ளார். சுந்தர் அய்யரும் ரமணா கொம்பல்லாவும் ஜான் டோவின் பெயரை நீதிமன்றம் வெளியிடவேண்டும் என்றும் போராடி வருகின்றனர்.

வரலாறு படைத்த கமலா ஹாரிஸ் – கருப்பினப் பெண்ணின் வேர்களைத் தேடி

இந்தியாவில் சாதி இந்துக்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தபோதிலும் அமெரிக்காவில் அது அப்படியே தலைகீழாக இருக்கிறது. பெனிசில்வேனியா பல்கலைக்கழகத்தின் 2003 கணக்கின்படி அமெரிக்க இந்தியர்களில் 2% பேர் மட்டுமே பட்டியல் சாதியினராக இருந்தனர். 90% க்கும் மேற்பட்டோர் சாதி இந்துக்களாகவே இருந்தனர். இந்தியர்கள் ஆதிக்கம் செலுத்தும் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிசெய்ய நேரிட்டால் சாதி இந்துக்களின் பிடியிலிருந்து தப்புவது முடியாத காரியமாகும். புலம்பெயர்ந்த இந்தியர்களில் அமெரிக்காவின் வாய்ப்புகளை திறந்தது இந்தியாவில் அவர்களுக்கு கிடைத்த கல்வியே ஆகும். ஆனால் அது இதுகாறும் தலித் மக்களுக்கு மறுக்கப்பட்ட வந்திருக்கிறது. சாதி இந்துக்களின் சமூக-பொருளாதார வெற்றிக்கு உண்மையான காரணம் அவர்களின் சாதி அனுகூலம் மட்டுமே ஆகும். ஆனால் “தகுதி-திறமை” என்பது போன்ற ஒரு பிம்பத்தையே நிறுவி வருகின்றனர். அதுவே அமைப்புரீதியாக கல்வி மறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட மக்கள் திறமைக்குறைபாடு உடையவர்கள் என்று மறைமுகமாக நிறுவ உதவுகிறது. சமூகநீதியை முன்னெடுக்க அரசின் முயற்சியாக கொண்டுவரப்பட்ட இட ஒதுக்கீட்டில் படித்த ஒடுக்கப்பட்ட சாதியைச்சேர்ந்த இந்தியர்கள் சமீபகாலமாகவே அமேரிக்கா வரத்துவங்கியுள்ளனர். அவர்கள் வேலையில் சேரும்போது அங்கே ஆட்களை நியமனம் செய்யவோ, வேலையை விட்டு வெளியேற்றவோ அதிகாரமுள்ள உயர்பதவிகளில் இருப்போர் பலர் சாதி இந்துக்களாகவே இருக்கின்றனர். இந்த வழக்கை தொடுத்திருக்கும் ஜான் டோ இந்த நிலையையே எதிர்கொண்டிருக்கிறார்.

2015இல் ஜான் டோ சிஸ்க்கோவில் சேர்ந்தார். அவரும் அவருடைய நேரடி உயரதிகாரியாக இருந்த சுந்தர் அய்யரும் இந்தியாவில் ஒரே பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள். அவர் சேர்ந்த ஒரு வருடத்தில் உடன் வேலை செய்த இருவரிடம் ஜான் டோ இடஒதுக்கீட்டின் வழியாக அவருடைய மேற்படிப்பை படித்ததாகவும், அவருடன் படித்ததால் இது தெரியும் என்றும் சுந்தர் அய்யர் கூறியிருக்கிறார். இதை அய்யர் மறுத்திருக்கிறார். அதனை ஜான் டோ அலுவலகத்தில் புகாராக அளித்துள்ளார். அதன்பின்னர் ஜான்டோவுக்கு தரப்பட்ட பொறுப்புகள் சிலவற்றிலிருந்து அவர் விலக்கப்பட்டார். பின்னர் கொம்பல்லா மற்றும் மேலும் இருவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. சிஸ்க்கோவின் உள் விசாரணையில் ஜான் டோ எந்தவிதமான பாகுபாட்டுக்கும் ஆளாக்கப்படவில்லை என்று முடிவு செய்யப்பட்டது. அதற்கு காரணமாக அந்த நிறுவனம் சொன்னதாவது:  “ஜான் டோவுக்கு நேர்ந்த சாதிப்பாகுபாடு பாகுபாடே இல்லை. ஏனென்றால் அமெரிக்க சட்டம் சாதிப்பாகுபாட்டை பாகுபாடாக வரையறுக்கவில்லை.  அதனால் ஜான் டோ சட்ட ரீதியாக எவ்வித பாகுபாட்டுக்கும் ஆளாக்கப்படவில்லை”. இதிலிருந்து அமேரிக்கா சாதியை வரையறுக்கவில்லை என்பதன் காரணமாக அதே நிலையை சிஸ்க்கோ எடுத்திருப்பதும் தெரிகிறது. சாதி இந்துக்களுக்கு இடஒதுக்கீட்டின் மீதான வெறுப்பை, அம்பேத்கர்-கிங் படிப்புவட்டம் தொகுத்திருக்கும் தனிப்பட்ட அனுபவ சான்றுகள், மிகத்தெளிவாகப் பதிவு செய்துள்ளது. சாண்டாகிளாரா பகுதியைச்சேர்ந்த ஜி சித்தார்த் பார்ப்பன சாதியைச்சேர்ந்த ஒரு பெண்மணியுடனான உரையாடலின்போது தனது அனுபவத்தை இவ்வாறு விளக்குகிறார்: உரையாடல் “Black Lives Matter” போராட்டத்தை ஒட்டி துவங்கியது. அந்தப் பெண்மணி “சமூகநீதி போராட்டங்கள் மற்றும் இட உறுதிப்பாடு (affirmative action) போன்றவை சமூகத்தில் எவ்வாறு சமநிலையை நிலைநாட்டுகிறது என்பதுபற்றி கூறினார். (அமெரிக்காவின் “affirmative action” இந்தியாவின் இடஒதுக்கீட்டுக்கு இணையானது) உடனே தென்னிந்தியாவில் சமூகநீதிக்காக உழைத்த திராவிட இயக்கங்களைப்பற்றியும் அவர்கள் போராட்டத்தின் விளைவாக கிடைத்த இடஒதுக்கீட்டில் பயனாக ஒடுக்கப்பட்டோர் பலர் தொழிற்கல்வி படிக்க முடிந்தது பற்றியும் உயர்வாகக் கூறினேன். உடனே அவர் மிகவும் கோபமடைந்து நான் இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்டேன், மதிப்பெண் இருந்தும் விரும்பிய படிப்பு படிக்க முடியாமல் போனதற்கு இடஒதுக்கீட்டில் குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் படிக்க வந்ததே காரணம் என்றும் கூறினார். மேலும் அவர் மிகுந்த கோபமுடன் “இடஒதுக்கீட்டை ஆதரிப்பவர்கள் ‘கோட்டா’வில்  படித்துவந்த மருத்துவர்களிடமே வைத்தியம் செய்த்துக்கொள்ளவேண்டும்” என்று கூறினார். இது பொதுவாக இடஒதுக்கீட்டை இழிவுபடுத்த சொல்லப்படுவதே. இதன்மூலமாக கோட்டாவில் படித்தவர்கள் தகுதிக்குறைவானவர்கள் என்பதை நிலைநிறுத்த முனைகிறார்கள்.

மனித உரிமைகள் மீறப்படும்போது ஒலிக்கும் அறத்தின் குரல் – இசைக்கலைஞர் ரிஹன்னா

சன்னிவேலை சேர்ந்த டி. கார்த்திகேயன் தனது அனுபவத்தை இவ்வாறு கூறுகிறார்: என்னுடைய சக ஊழியர்களும் குழு உறுப்பினர்களும் பொதுவான உரையாடல்களினூடே இடஒதுக்கீட்டை ஏளனமாக பேசியிருக்கின்றனர். அது மிகவும் அபத்தமானது, கேலிக்குரியது என்றும் அதனை கொண்டுவந்த சமூகப் போராளியான டாக்டர் அம்பேத்கரை பழித்தும் பேசியுள்ளனர். மேலும் பட்ட மேற்படிப்பு மற்றும் தொழிற்படிப்புகளில் இடஒதுக்கீட்டை ரத்து செய்யவேண்டும் என்றும் பேசுவது வாடிக்கையாக நடக்கக்கூடியது. மேலும் அவருடைய சக ஊழியர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் தூய்மைக்குறைவானவர்கள் என்றும் அவர்களுடன் பழகுவதையோ உடன் அமர்ந்து உணவு உண்பதையோ தான் விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டதை பதிவுசெய்கிறார்.

AKSC இந்த சிஸ்க்கோ விவகாரத்தை ஆரம்பம் முதலே சீரிய முறையில் பரிசீலித்துவருகிறது. அமெரிக்காவில் ஒடுக்கப்பட்டவர்கள் சந்திக்க நேரும் சாதிப்பாகுபாடுகள் குறித்த அனுபவத் தொகுப்பினை தொகுத்து வருகிறோம். இதன்மூலமாக இங்கே சாதிப்பாகுபாடுகள் எவ்வளவு பரவலாக இருந்துவருகிறது என்பதும் இதனையொட்டி தொடர் கலந்துரையாடல்களையும் ஏற்பாடு செய்து நடத்திவருகிறது. தகவல் தொழில்நுட்பத்தின் புகலிடமான சிலிக்கான் பள்ளத்தாக்கில் நடைபெற்றுவரும் சாதிப்பாகுபாடுகளை எதிர்த்து கையொப்ப பிரச்சாரத்தை பிற சாதி எதிர்ப்பு அமைப்புகளுடன் சேர்ந்து முன்னெடுத்து நடத்தியுள்ளோம். கூகிள், பேஸ்புக், அமேசான் உள்ளிட்ட பல பெருநிறுவனங்களுக்கு சாதிப்பாகுபாடுகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்குமாறு இந்த கையெழுத்துப்பிரச்சாரத்தின் வழியாக கடிதம் எழுதி வலியுறுத்தியுள்ளோம். ஆனால் அவர்களில் எந்த நிறுவனத்திடம் இருந்தும் பதில் வரவில்லை.

இந்த சிஸ்க்கோ வழக்கில் HAF இன் தலையீட்டின் காரணமாக அமெரிக்க அம்பேத்கர் பன்னாட்டு மையம் மற்றும் சில அமெரிக்க இந்திய குழுக்கள் இணைந்து “amicus brief” எனப்படும் மனுவைத் தாக்கல் செயதுள்ளனர். இது இந்த வழக்கில் HAF போன்ற சம்பந்தமில்லாத சக்திகள் தலையிட்டு அதன் போக்கை திசைதிருப்ப முனைவதை தடுக்கும் வகையிலான மனுவாகும். அதில் “சாதிப்பாகுபாடு என்பது ஒரு வகையில் மரபுரீதியிலான பாகுபாடே ஆகும். அது இந்தியா மற்றும் இந்திய வம்சாவளியினரிடம் மிகப்பரவலாகக் காணப்படுகிறது. அமெரிக்காவின் 14வது சட்டத் திருத்தத்தின்படி வம்சாவளி அல்லது மரபு ரீதியிலான பாகுபாடு சட்டப்படி தண்டனைக்குரியது. அதனடிப்படையில் சாதிப்பாகுபாடும் தண்டனைக்குரியதே” என்று குறிப்பிட்டுள்ளனர்.

நீதிமன்றம் அதன் முன்  வைக்கப்பட்டிருக்கும் சர்ச்சைகள் குறித்து தீர்ப்பு சொல்ல வேண்டும். சிஸ்கோ நிறுவனம் சாதியும் சாதிப்பாகுபாடும் அமெரிக்க சட்டப்படி பாதுகாக்கப்பட்ட பிரிவில் வரவில்லை. எனவே சட்டப்படி தண்டனைக்குரியது அல்ல என்று சொல்கிறது. எனவே கலிபோர்னியாவின் நியாய வேலைவாய்ப்பு மற்றும் வீட்டுவசதிச் சட்டம் தன்மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று கூறுகிறது. அதனடிப்படையில் பார்க்கும்போது இனம், மதம் நிறம் போன்ற எந்த அடிப்படையிலான பாகுபாடும் தண்டனைக்குரியது அல்ல என்று இந்த நிறுவனம் வாதிடுகிறது. அம்பேத்கர் பன்னாட்டு மையம் “இந்தியாவின் தீண்டப்படாத வகுப்பில் பிறந்தவர் என்பதற்காக ஒருவரை பாகுபடுத்தலாம் என்று கலிபோர்னியா நீதிமன்றம் கூறப்போகிறதா? இந்த வழக்கின் பிரதிவாதியான சிஸ்க்கோ நிறுவனம் பணியிடத்தில் அத்தகைய பாகுபாடுகளை அனுமதிக்கச்சொல்லி நீதிமன்றத்திடம் கோருகிறது” என்று சொல்லியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த HAF மற்றும் இந்துத்துவ அமைப்புகள் “மத உரிமைகள்” என்கிற போர்வையில் ஆதிக்க சாதியினரின் நலனை மட்டுமே நிலைநிறுத்துவதற்கான வேலைகளைச் செய்து வருகின்றன. அவர்கள் அதிகாரத்தில் பெரும்பான்மையாக இருக்கும் பணியிடங்களில் சிறுபான்மையினரின் அடிப்படை மனித உரிமைகளை நிலைநிறுத்துவதில் சட்டரீதியான பாதுகாப்பைத்தவிர வேறு வழியே இல்லை. கலிபோர்னியா மாகாணத்தின் நீதிமன்றத்தின் முன்பாக அமெரிக்காவில் சாதிய தீய சக்திகளை ஒழிக்க ஒரு வரலாற்று வாய்ப்பு வைக்கப்பட்டிருக்கிறது. சிஸ்க்கோ வழக்கில் நீதி மறுக்கப்பட்டால் அது ஓநாய்களுக்கு இலவச உரிமம் வழங்குவதாகவே அமையும்.

(www.caravanmagazine.in இதழில்  கார்த்திக் சண்முகம் அவர்கள் எழுதிய கட்டுரையின் மொழியாக்கம்)

அமெரிக்காவிலும் தொடரும் சாதிவெறி – ஆட்டுடை தரித்த ஓநாய்கள்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்