Aran Sei

சிஏஏ எதிர்ப்பு போராட்டம் – 11 மாதங்களுக்குப் பின் சிறையிலிருந்து மீண்ட சிறுவன்

தினோரு மாதங்கள் கழிந்து ஹுசைன் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) நவம்பர் மாதத்தில் ஒரு நாள் வீட்டு சாப்பாட்டை சாப்பிடுகிறான். 16 வயதான அவன் சாப்பிட அமர்ந்திருக்கையில், அவனைச் சுற்றி அவன் பெற்றோரும், இரண்டு சகோதரர்களும், மூன்று சகோதரிகளும் உற்சாகமாக உட்கார்ந்து கொண்டு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

“நிறைய மாதங்கள் கழித்து என் மகன் வீட்டிற்கு வந்திருக்கிறான்” என்கிறார் அவனுடைய தாய். அவனுடைய வயதில் இருக்கும் பிறரின் கதைகளை போல அல்லாமல், ஹுசைனின் வருகைக்கு பின் இருக்கும் கதை வித்தியாசமான ஒன்றாக இருக்கிறது.

ஹுசைன் கடந்த டிசம்பர் 25 அன்று ஒரு நண்பனின் வீட்டில் கைது செய்யப்பட்டான். கடந்த பத்து மாதங்கள் சிறுவர் சீர்திருத்த மையத்தில் இருந்தான். குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டங்களில் பங்கேற்றதற்காக அவன் கைது செய்யப்படுவதாக சொல்லப்பட்டது. ஆனால், ஹுசைன் அப்படி எந்த போராட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை என்கிறான்.

“எங்களுக்கு என்று பெரிய வருமானம் எதுவும் இல்லாத ஏழைக் குடும்பம் எங்களுடையது. அப்பா ப்ளம்பர், எப்படியோ எங்கள் பள்ளிக் கட்டணத்தையும் கட்டி, புத்தகங்களும் வாங்கித் தருகிறார்” என்கிறான்.

உத்திர பிரதேசத்தின் பல மாவட்டங்களையும் சேர்ந்த மக்கள் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக இருந்தார்கள்; அதற்கெதிராகவும், தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராகவும் தேசிய அளவில் போராட்டங்கள் நடந்த போது பங்கேற்றார்கள். இந்த போராட்டங்கள் வன்முறையானதாக மாறியபோதெல்லாம், காவல்துறையினர் சிலரை காவலில் வைத்தார்கள், சிலரை கைது செய்தார்கள். பெரும்பாலான நேரங்களில், கைது செய்யப்பட்டவர்களும், அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களும் தங்களுக்கு ஏற்பட்ட கொடூரமான அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள்.

அதற்கு ஹுசைனும் விதிவிலக்காக இருக்கவில்லை. டிசம்பர் 19, 2019 அன்று பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் (947/2019) கீழ், ஹுசைன் மதியம் கைது செய்யப்பட்டு, தாகூர்கஞ்ச் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, சில மணி நேரங்களிலேயே சிறுவர் சீர்திருத்த மையத்திற்கு அனுப்பப்பட்டான்.

“அம்மா அப்பாவை ஃபோனில் அழைக்கக் கூட அவர்கள் அனுமதி தரவில்லை. நான் கைது செய்யப்பட்ட விஷயத்தை அவர்களிடம் சொல்லக் கூட இல்லை” என்கிறான்.

தாகூர்கஞ்ச் காவல்நிலையத்தில் துணை ஆய்வாளர் கைலாஷ் நாராயண் த்ரிவேதியால் பதிவு செய்யப்பட்ட அந்த முதல் தகவல் அறிக்கையில் ஹூசைன் மீது, போராட்டம் தொடங்கி, அரசு அதிகாரியை தாக்கியது, க்ரிமினல் சதித்திட்டம் என 14 குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. 1932 ஆம் ஆண்டின் க்ரிமினல் சட்டத் திருத்தத்தின் ஏழாம் பிரிவிற்கு கீழும் அவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இப்போது, நவம்பர் 13 ஆம் தேதி நீதிமன்றம் அவனுக்கு ஜாமீன் வழங்கியிருக்கிறது.

ஹுசைனின் முதல் ஜாமீன் மனு செப்டம்பர் 15 ஆம் தேதி சிறார் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது. ஆனால், ஜாமீன் வழங்கப்பட்டால், ஹுசைன் சமூகத்திற்கு அச்சுறுத்தலாக இருக்க வாய்ப்பிருக்கிறது என ஜாமீன் நிராகரிக்கப்பட்டது. இந்த ஆணை, ஹுசைன் எட்டு மாதங்கள் சிறையில் இருந்த பிறகு வந்தது என்பதை கவனிக்க வேண்டும்.

அந்த ஆணை அவசியமில்லாதது, சிறுவர்கள் சிறையில் இருப்பதைவிட தங்கள் பெற்றோர்களுடன் இருப்பது தான் நல்லது என்கிறார் ஹூசைனுக்கு ஜாமீன் வாங்கிக் கொடுத்த லக்னோவை சேந்த ஆஷ்மா இஸ்ஸத். அடுத்த ஜாமீன் மனு மாவட்ட நீதிமன்றத்தில் செப்டம்பர் 29, 2020 அன்று பதிவு செய்யப்பட்டது. நவம்பர் 13 அன்று ஜாமீன் ஆணை வந்தது.

இஸ்ஸத் இது போன்ற சில வழக்குகளை கட்டணம் இல்லாமல் நடத்திக் கொண்டிருக்கிறார். உத்திர பிரதேச காவல்துறையினர் கடந்த டிசம்பர் மாதம், குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் நடந்த வன்முறைகளுக்கு அநாவசியமாக இஸ்லாமிய இளைஞர்களை குறி வைத்து கைது செய்ததாக இஸ்ஸத் சொல்கிறார்.

“கைதுகள் செய்யப்பட வேண்டும் என காவல்துறையினருக்கு அதீதமான அழுத்தம் கொடுக்கப்பட்டது. மாநில அரசை திருப்திபடுத்த, காவல்துறையினர் சரமாரியாக கைதுகள் செய்யத் தொடங்கினர். ஐந்து நாட்கள் லக்னோவில் தொடர்ந்து இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டனர்” என்கிறார்.

இப்படி காரணமே இல்லாமல் கைது செய்ததால், காவல்துறையினர் அவர்கள் எழுதிய குற்றப்பத்திரிக்கையை நிரூபிக்க திணறினார்கள். ஏனென்றால், ஹுசைனுக்கு எதிரான எந்த சாட்சியங்களும் இல்லை.

“இந்த அரசாங்கம், குழந்தைகளை பாதுகாப்பதற்கு பதிலாக அவர்களுக்கு எதிரியாக இருக்கிறார்கள். அது குழந்தைகளின் மனநலனை பெருமளவு பாதித்திருக்கிறது” என்று கூறும் இஸ்ஸத், ஒரு சிறுவன் நீதிமன்றத்தில் உடைந்து அழுதது குறித்து சொல்கிறார். சில சிறுவர்கள் சட்டத்திற்கு புறம்பாக மாவட்ட சிறைகளுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.

எந்த தவறுமே செய்யாமலேயே சிறைக்கு அனுப்பப்பட்ட பலரில் ஒருவன் தான் ஹுசைன். இதனால், ஒரு கல்வியாண்டை ஹுசைன் இழந்திருக்கிறான். “பதிவு செய்வதற்கான கடைசி நாள் கடந்து விட்டதால், இதற்கு மேல் என்னை சேர்த்துக் கொள்ள மாட்டார்கள் என சொன்னார்கள்” என்கிறான் ஹுசைன். லக்னோவில் இருக்கும் ராஜ்கிய ஹுசைனாபாத் இடைக் கல்லூரியில் மெட்ரிக்குலேஷன் பரீட்சைகள் எழுதி வெற்றி பெற்றிருக்கிறான். அவனுடைய பரீட்சை முடிவுகள் வந்த போது, ஹுசைன் சீர்திருத்த மையத்தில் இருந்தான். ஒரு வருடத்தை இழந்திருந்தாலும் கூட, என்றாவது ஒரு நாள் கடற்படையில் சேர விரும்புவதாக சொல்கிறான்.

ஹெச்.ஏ.க்யூ குழந்தை உரிமைகள் மையம் (HAQ Centre for Child) ‘அப்பாவிகளை கொடூரமாக்குதல் – குடியுரிமைச் சட்ட எதிர்ப்பு போராட்டங்களை அடக்க சிறுவர்களை காவலில் வைத்து, துன்புறுத்தி, க்ரிமினல்களாக்கிய உபி காவல்துறையினர்’ (Brutalising Innocence – Detention, Torture and Criminalization of Minors by UP police to Quell Anti-CAA protests) என்று ஒரு ஆய்வறிக்கையை இந்த வருடம் ஜனவரி 31 ஆம் தேதி வெளியிட்டது. இந்த அறிக்கையில், லக்னோ உட்பட பல இடங்களில் சில சிறுவர்கள் சட்டத்திற்கு புறம்பாக காவலில் வைக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டதாக சொல்லப்பட்டிருக்கிறது. முசாஃபர்நகர், பிஜ்னோர் மற்றும் சம்பல் பகுதிகளும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

இந்த தகவல் காணும் அறிக்கையை அடிப்படையாக வைத்து, ஹெச்.ஏ.க்யூ ஒரு மனுவை பதிவு செய்தது. அதில், “ மனுதாரரின் அறிக்கையை கவனித்துப் பார்க்கும் போது உத்திர பிரதேச காவல்துறையினர் சட்டத்திற்கு புறம்பாக சிறுவர்களை காவலில் வைத்து துன்புறுத்தியது சிறார் நீதிச்சட்டம் 2015; சிறுவர் உரிமை ஐ.நா மாநாடு; துன்புறுத்துதல், பிற கொடூர மனிதத்தன்மையற்ற இழிவுபடுத்துகிற நடத்தை , தண்டனை தொடர்பான ஐ.நா மாநாடு ; பிரிவுகள் 14,15,19 மற்றும் 21-ற்கு கீழ் குழந்தைகளுக்கு வழங்கப்படும் அரசியலமைப்பு உரிமைகள் அனைத்தையும் மீறியிருக்கின்றனர்” என தெரிவித்திருக்கிறார்கள்.

கடந்த நவம்பர் 17 அன்று, குடியுரிமைச் சட்ட எதிர்ப்பு போராட்டங்களின் போது சிறுவர்கள் சட்டத்திற்கு புறம்பாக காவலில் வைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டது குறித்த பொது நல வழக்கை விசாரித்துக் கொண்டிருந்த போது, உத்திர பிரதேச காவல்துறை இதற்கு பதிலளிக்க வேண்டும் என அலகாபாத் உயர் நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. பொது நல வழக்கு பதிவு செய்த அரசு சாரா அமைப்பு சார்பாக வ்ரிந்தா கோவர், சௌதிக் பானர்ஜி மற்றும் தன்மய் சத் ஆகியோர் வழக்கை நடத்தினர்.

நீதிபதி கோவிந்த் மதுர் மற்றும் நீதிபதி சித்தார்த்தா வர்மா, சிறார் நீதிச்சட்டம், 2015-ன் பிரிவுகள் பொருந்தி போவதன்படி, ஒவ்வொரு மாவட்டத்தின் அத்தனை விவரங்களும் பதிவு செய்யப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். இந்த வழக்கு மீண்டும் டிசம்பர் 14 அன்று விசாரணைக்கு வருகிறது.

(www.thewire.in இணையதளத்தில் இஸ்மத் அரா எழுதிய கட்டுரையின் மொழியாக்கம்)

சிஏஏ எதிர்ப்பு போராட்டம் – 11 மாதங்களுக்குப் பின் சிறையிலிருந்து மீண்ட சிறுவன்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்