Aran Sei

ப்ரேக் – அப் நல்லது – பொன் விமலா

இந்தக் காதல் காரணத்தினாலேயே ஒரு புருஷன் ஒரே மனைவியுடனும் ஒரு மனைவி ஒரே புருஷனுடனும் மாத்திரம் இருக்க வேண்டியது என்றும் கற்பித்து அந்தப்படி கட்டாயப்படுத்தியும் வரப்படுகின்றது. ஆனால் இந்தப்படி சொல்லுகின்றவர்களை எல்லாம் உலக அனுபோகமும் மக்களின் அனுபவ ஞானமும் இல்லாதவர்கள் என்றோ அல்லது இயற்கையையும் உண்மையையும் அறியாதவர்கள் என்றோ அல்லது உண்மையை அறிந்தும் வேறு ஏதோ ஒரு காரியத்திற்காக வேண்டி வேண்டுமென்றே மறைக்கின்றவர்கள் என்றே தான் கருத வேண்டி இருக்கின்றது. – பெரியார்

காதல் இனிக்கும்; புளிக்கும்; அதன் பின் கசக்கும் என்றெல்லாம் விளையாட்டாகச் சொன்னாலும் காதல் என்கிற உணர்வோடு ஊறிக் கிடக்கும்போது கிடைக்கிற மகிழ்ச்சிக்கு ஈடு இணை எதுவுமில்லை. உடல் தன் துணையைத் தேடத் துவங்கும் வயதில் எதிர்பாலினத்தின் மீது இயல்பாக ஏற்படுகிற ஈர்ப்பு தான் காதலின் அடிப்படை.மனிதனிடம் ஏற்படும் இந்த இயல்பான உணர்வுக்கு இலக்கியம், சினிமா உள்ளிட்ட கலைகள் அதிக முக்கியத்துவம் கொடுத்தன. மனிதனின் மற்ற எல்லா உணர்வுகளைக் காட்டிலும் காதல் என்பது ஒருபடி மேலே என்பதாகவே மனித மனம் தன்னைத் தானே கட்டமைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தான் உறவினர்களை, நண்பர்களை வாழ்க்கை ஓட்டத்தின் ஏதோ ஒரு சூழலில் பிரியத் துணிந்தாலும் காதலித்தவர்களைப் பிரிவதற்கு அத்தனை சீக்கிரத்தில் மனதை தயார்படுத்திக் கொள்ள முடிவதில்லை.

காதலில் தோற்பது என்பது பெரிய வலி போலவும் அதனால் வாழ்க்கையே முடிந்துவிட்டதாகவும் தாடியோடு சுற்றிய தேவதாஸ்களை திரைப்படங்கள் பலவற்றில் பார்த்திருக்கிறோம். திரைப்படங்கள் தாண்டி நிதர்சன உலகிலும் தற்கொலைகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டால் அதில் காதலின் பங்கு ஏராளம் என்கின்றன சில ஆய்வுகள். காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் திருமணம் செய்து கொண்டு காதலித்தாலும் எல்லா தம்பதிகளும் காலத்துக்கும் நல்ல புரிதலுடன் வாழ்ந்துவிடுவதில்லை. ஒருவரிடம் `ஐ லவ் யூ’ என்கிற வாக்கியத்தை சொல்லிவிட்டாலோ அல்லது எதிர்தரப்பு சொன்ன அந்த காதல் ஒப்பந்த வாக்கியத்துக்கு `சரி’ என சம்மதம் தெரிவித்திருந்தாலோ அந்த காதல் உறவிலிருந்து விடுபடவே கூடாது அல்லது விடுபட முயன்று வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டால் ஒழுக்க ரீதியாக அவச்சொல் ஏற்பட்டுவிடுமோ என்கிற உளவியல் சிக்கல்தான் இங்கு பலபேர் மத்தியில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஒரு முறை இருமுறை பழக்கத்திலேயே அவசரத்தில் காதலைப் பகிர்ந்துகொண்டு பின்பு அதை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் பிரியவும் முடியாமல் மனச்சிக்கலோடு பல ஆண்டுகள் தாம்பத்திய வாழ்க்கையில் தொட்டும் தொடாமலும் வாழ்ந்து வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்கிறார்கள் பலர்.

எனக்கெதிராக ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கமிட்ட என் சகோதரர்கள் நல்வழிபடுவார்கள் – முஸ்கான் கான்

ஓர் ஆணும் பெண்ணும் திருமணத்துக்கு முன்னும் பின்னும் காதலிப்பதை எப்படி ஒரு அழகான நிகழ்வாக ஏற்றுக் கொள்கிறோமோ அதேபோல் இருவருக்குள் ஒத்து வராமல் போனால் அந்த இருவரும் பிரிவையும் மனதார ஏற்றுக் கொள்வதே அறிவுத்தனம். காதலின் நோக்கமே தானும் தான் நேசிக்கும் தன் இணையும் மகிழ்வோடு இருக்க வேண்டும் என்பதுதான். அப்படி எனில் இருவருக்குள் யாரோ ஒருவருக்கு கருத்து வேறுபாடு நிகழும் பட்சத்தில் முதலில் அதை மனம்விட்டுப் பேசி சரி செய்யப் பார்க்கலாம். ஒரு மனப்பிளவு நிகழ்ந்தபின்னர் இனி சமாதானமே ஆகாது என்று தெரிந்துவிட்டால் ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்துக்குப் பிறகு மனம்விட்டு பேசி பிரிவது காதலித்த இருவரையும் எதிரிகளாக்காது. `நான் உன்னை நேசித்துவிட்டேன். நீயும் ஒருகாலத்தில் நேசித்துவிட்டாய்’ என்பதை சொல்லிச் சொல்லி விருப்பம் இல்லாமல் இருக்கும் தன் இணையை கட்டி இழுப்பதில் ஒரு பயனும் இல்லை. காதலில் அன்பு எப்படி பிரதானமோ அப்படித்தான் சுயமரியாதையும் அவசியம். நேசித்த காரணத்துக்காகவே அவர்களைப் பிரிந்து போக விடாமல் கட்டி இழுத்துக் கொண்டு தொந்தரவு செய்வது காதலுக்குச் செய்யும் அயோக்கியத்தனம்.

ஊருக்காகவோ உலகத்துக்காகவோ வறட்டு கௌரவத்துக்காவோ ஒட்டாத உறவோடு வாழ்ந்து நிம்மதியைத் தொலைப்பதைவிட தள்ளி இருந்தவாறு நட்பு பாராட்டலாம். நட்புக்கான சூழல் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. எட்ட இருந்து வாழ்த்திவிட்டுப் போகலாம்.காதல் என்பது இதோடு முடிந்துவிடுவதில்லை. பிரிந்த இருவருக்குமே மனம் பொருந்திப் போகக்கூடிய இன்னொரு காதல் இணை நிச்சயமாகக் கிடைக்கலாம். அதற்கு அந்தப் பிரிவும் சரியான காலத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும். `பார்க்கலாம், பார்க்கலாம் ..’ எனப் பலகாலம் சகித்துக் கொண்டே வாழப் பழகிவிட்டால் நாம் திரும்பிப் பார்க்கும்போது கசப்பான வாழ்க்கையே காலத்துக்கும் எஞ்சியிருக்கும். அல்லது நீண்ட கால மனஸ்தாபத்துக்குப் பின் பிரிய நேருகிறபோது ஒருவருக்கொருவர் பழிவாங்கிக் கொண்டு அல்லது முகம் பார்த்துக் கூட பேச முடியாத எதிரிகளாக மாறிப் போயிருப்பார்கள்.

ஒரே ரேஷன், ஒரே தேர்தல் கொண்டு வந்தால் மாநில உரிமை பறிக்கப்படும் – எம்.எச்.ஜவாஹிருல்லா

இதையெல்லாம் சொல்வதால் ப்ரேக் அப் தான் சரியான தீர்வென்று அர்த்தமில்லை. அது தனிமனித சூழல் மற்றும் விருப்பத்தைப் பொறுத்தது. அதே நேரத்தில் விருப்பமற்ற இருவர் பிரிய வேண்டும் என்கிற முடிவை எடுத்துவிட்டால் ப்ரேக்-அப் நல்லது!

பூவொன்று உதிர்வதால் மரங்கள் மரிப்பதில்லை. நீங்கள் வேருக்கு நீர் பாய்ச்சுங்கள்.

காதலர் தின வாழ்த்துகள்!

 

ப்ரேக் – அப் நல்லது – பொன் விமலா

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்