2002 கலவரத்தின் போது 21 வயது மற்றும் ஐந்து மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானோவை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, அவரது மூன்று வயது குழந்தை உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரைக் கொன்ற குற்றச்சாட்டின் கீழ் சிறையிலிருந்த 11 பேரை குஜராத் அரசு இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தன்று விடுவித்தது.
விடுதலை செய்யப்பட்ட குற்றவாளிகள் மாலை, இனிப்புகளுடன் வரவேற்கப்பட்டனர். இரண்டு நாட்களுக்குப் பிறகு, திருமதி பானோ “கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்ட அதிர்ச்சி என்னை மீண்டும் மூழ்கடித்தது.” என ஒர் அறிக்கையை வெளியிட்டார். அதன்பிறகு, தெலுங்கானாவைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி மூத்த அதிகாரி ஸ்மிதா சபர்வால், திருமதி பானோவுக்கு ஆதரவாக தனது தனிப்பட்ட கணக்கிலிருந்து ட்வீட் செய்து, குஜராத் அரசின் முடிவைக் கேள்விக்குள்ளாக்கினார். அது, அவர் 1964 ஆம் ஆண்டு மத்திய சிவில் சர்வீசஸ் (நடத்தை) சட்டம் விதிகளை மீறியுள்ளாரா என்பது பற்றியும் என்ற சர்ச்சையைத் தூண்டியுள்ளதுடன், சட்டம் மற்றும் ஆளுகை குறித்த தங்கள் தனிப்பட்ட கருத்துக்களை வெளிப்படுத்த அரசு ஊழியர்களுக்குள்ள சுதந்திரம் பற்றிய விவாதத்தை புதுப்பித்துள்ளது ஒரு நேர்காணலில், நீதிபதி பி.என். ஸ்ரீகிருஷ்ணா மற்றும் கே. சுஜாதா ராவ் ஆகியோர் இப்பிரச்சினை பற்றி விவாதிக்கின்றனர். (திருத்தப்பட்ட பகுதிகள்)
சுஜாதா ராவ்: ஆகஸ்ட் 17 அன்று, திருமதி சபர்வால் திருமதி பானோவின் அறிக்கையை மேற்கோள் காட்டி ட்வீட் செய்தார், “ஒரு பெண் மற்றும் ஓர் அரசு ஊழியராக நான் #BilkisBanoCase பற்றிய செய்திகளைப் படித்து நம்பிக்கையின்றி அமர்ந்திருக்கிறேன். அச்சமின்றி சுதந்திரமாக சுவாசிக்கும் அவளது உரிமையை நாம் பறிக்க முடியாது. மீண்டும் நம்மை சுதந்திர தேசம் என்று அழைத்துக் கொள்ள முடியாது. #JusticeForBilkisBano”, என அதில் கூறியுள்ளார். ஒரு அதிகாரியாக, அவர் இதை ட்வீட் செய்தது தவறா?
பி.என். ஸ்ரீகிருஷ்ணா: நாட்டின் இறையாண்மை, பன்னாட்டு உறவுகள், சுகாதாரம், ஒழுக்கம் போன்றவற்றைப் பாதுகாப்பதற்காக நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, இந்த நாட்டின் குடிமக்களுக்கு அரசியல் சாசனத்தின் கீழ் அவர்களுக்குப் பேச்சுரிமை என்ற அடிப்படை உரிமை உள்ளது. ஆனால் நீங்கள் ஒரு அரசாங்கப் பணியை மேற்கொள்ளும்போது, சில ஒழுங்கு விதிகளுக்கு உட்பட்டு இருக்கிறீர்கள். ஒரு அரசாங்க ஊழியர் ஓர் அரசியல் அமைப்பில் அல்லது அத்தகைய இயல்புடைய எந்தவொரு அமைப்பிலும் உறுப்பினராவதை அல்லது நாட்டின் ஆட்சியுடன் தொடர்புடைய எதையும் பற்றி சுதந்திரமாக கருத்து வெளிப்படுத்துவதைத் தடுக்கிறது.
இந்த சட்டம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் போடப்பட்டது. ஆங்கிலேயர்கள் மிக மிகக் கண்டிப்பானவர்கள் என்பதில் ஐயமில்லை. அவர்களுடைய ஆட்சி எவ்வளவு மோசமாக இருந்தது என்பதைப் பற்றி அவர்களது அதிகாரிகள் பேசுவதை ஆங்கிலேயர்கள் விரும்பவில்லை. ஆனால் ஜனநாயகத்தில், அரசாங்கத்தை விமர்சிக்கும் உரிமை என்பது ஓர் அடிப்படை உரிமை. அதற்கு மாறாக யாரையும் வாய்மூடி இருக்கச் செய்ய முடியாது. கெடுவாய்ப்பாக, பம்பாயிலோ அல்லது கேரளாவிலோ அல்லது உச்ச நீதிமன்றத்திலோ உட்கார்ந்து என்னை வெளிப்படுத்த எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அவ்வாறு கிடைத்திருந்தால் நான் இதை மிகவும் சத்தமாகவும், எவ்வித தயக்கமின்றியும் கூறியிருப்பேன்.நான் கண்ட சிறந்த நீதிபதிகளில் ஒருவரான, வெளிப்படையான காரணங்களால் போதுமான அளவு மரியாதை கிடைக்காத அப்போதைய திரிபுரா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அகில் குரேஷியின் அண்மைத் தீர்ப்பு ஒன்று உள்ளது. திரிபுரா மாநிலத்திற்கு எதிராக லிபிகா பால் என்பவர் தொடுத்த வழக்கில் 2020ம் ஆண்டு அவர் வழங்கிய தீர்ப்பில், மிகவும் ஆர்வமூட்டும் ஒன்றைக் கூறினார். “அரசு ஊழியராக இருப்பதாலேயே மனுதாரர் தனது பேச்சுரிமையை இழப்பதில்லை. இது செல்லுபடியாகும் சட்டத்தால் மட்டுமே குறைக்கப்பட முடியும். திரிபுராவில் நடைமுறையில் இருக்கும் நடத்தை விதிகளில் வகுக்கப்பட்ட எல்லைகளை மீறாமல் , அவர் (மனுதாரர்) தனது சொந்த நம்பிக்கைகளை வைத்திருக்கவும், அவர் விரும்பிய விதத்தில் அவற்றை வெளிப்படுத்தவும் உரிமை பெற்றவர். ஒரு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தால் அன்றி வேறு எதன் மூலமும் அடிப்படை உரிமையைக் குறைக்க முடியாது,” என கூறியிருக்கிறார். 2018 இல், “ஒரு ஊழியர் என்பதால் மட்டுமே அவர் தனது கருத்தை வெளிப்படுத்துவதைத் தடுக்க முடியாது. ஒரு ஜனநாயக சமூகத்தில், ஒவ்வொரு நிறுவனமும் ஜனநாயக விதிமுறைகளால் நிர்வகிக்கப்படுகிறது. ஒரு பொது நிறுவனத்தை நிர்வகிக்க ஆரோக்கியமான விமர்சனம் ஒரு சிறந்த வழியாகும்,” என கேரள உயர் நீதிமன்றம் கூறியது. இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளுக்கு நியாயமான மற்றும் கண்ணியமான முறையில் தங்களை வெளிப்படுத்த உரிமை உண்டு என்று நீதிபதிகள் கருதுவதாக நான் நினைக்கிறேன். இன்று, நிலைமைகள் மிகவும் மோசமாக உள்ளன. நான் ஒரு பொது சதுக்கத்தில் நின்று பிரதமரின் முகம் எனக்குப் பிடிக்கவில்லை என்று சொன்னால், யாரேனும் என்னைத் தாக்கக்கூடும், என்னைக் கைது செய்யலாம், எந்த காரணமும் சொல்லாமல் சிறையில் தள்ளலாம். என்பதை நான் ஒப்புக்கொள்ள வேண்டும். இது இப்போது குடிமக்களாகிய நாம் அனைவரும் எதிர்க்க வேண்டிய ஒன்று
சுஜாதா ராவ்: இது குறித்து இரண்டு கருத்துகள் நிலவுகின்றன. இ.ஆ.ப. அதிகாரிகள் பொது மேடைகளில் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கோ, அரசின் கொள்கைகளுக்கோ எதிராகப் பேசக்கூடாது என்பது பொதுவான நம்பிக்கையாக இருப்பதால், பெரும்பாலான சகாக்கள், குறிப்பாக அரசாங்கத்தில் பணிபுரிபவர்கள் இதை சாக்காக வைத்துக் கொண்டு, மிகவும் ஆதரவானவர்களாக இருக்கமாட்டார்கள். மேலும், ஏதாவது செய்யப்படுவது அல்லது செயல்படுவது பற்றி நாம் மிகவும் உறுத்தலாக உணர்ந்தால், அது மிகவும் தீவிரமான சூழ்நிலையாக இருந்தால், அவர்களுடைய சங்கங்களை வேண்டுமானால் அணுகலாம்.பில்கிஸ் வழக்கு நீதியின் கேலிக்கூத்தாக இருந்தது. அது நேர்மை மற்றும் மனிதநேயத்தின் அனைத்து எல்லைகளையும் மீறிவிட்டது. கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் கொடூரமானது. இருந்த போதிலும், குற்றவாளிகள் வாழ்நாள் முழுவதும் சிறையில் கூட இல்லை. மிகவும் சாதாரணமாக ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவில் ஆளும் கட்சியைச் சேர்ந்த ஐந்து பேர் இருந்தனர். பிற புதிய சட்டங்கள் இருந்தபோதிலும், 1992 ம் ஆண்டின் [மன்னிப்பு] கொள்கை செயல்படுத்தப்பட்டது. மேலும் அவர்கள் இப்போது அவர்களை விடுவித்துள்ளனர். அத்துடன் அதனைக் கொண்டாடவும் செய்தனர். இது [நீதியின்] கேலிக்கூத்து. இந்நிலையில் ஸ்மிதா ஒரு பெண்ணாக ட்வீட் செய்துள்ளார். கோபத்தின் வெளிப்பாடு அது. ‘அரசு ஊழியர்’ என்ற வார்த்தைகளை அவர் ஏன் சேர்த்தார் என்றால், அரசியலமைப்பு கொள்கைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியை எழுத்திலும், உள்ளுணர்விலும், நிலைநிறுத்துவது அரச ஊழியரின் நெறிமுறை ஆகும். இந்த வழக்கில், அரசியலமைப்பின் உள்ளுணர்வு மற்றும் சட்டத்தின் ஆட்சி இரண்டும் தகர்க்கப்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தான எடுத்துக்காட்டாக இருக்கலாம். அண்மையில் ஆந்திரப் பிரதேச அரசு எட்டு கொலைக் குற்றவாளிகளை விடுவித்ததைக் கண்டோம். கொலையாளிகள் நிர்வாக நடவடிக்கை மூலம் விடுவிக்கப்படுவார்கள் என்றால், நீதிமன்றங்கள் இருந்து என்ன பயன்? நீதிமன்றத்தை முடக்கி, யார் சிறையில் இருக்க வேண்டும், யார் சிறையில் இருக்கக்கூடாது என்பதை ஆளும் கட்சியும், மாவட்ட ஆட்சியரும் மட்டுமே முடிவு செய்யட்டும். சில செயல்களுக்கு, ஓய்வு பெற்ற அல்லது பணியில் இருக்கும் அரசு ஊழியர்கள் பேசினால், அது அதிகாரவர்க்கம் தனது அதிகாரத்தை தன்னிச்சையாக, தவறாக செயல்படுத்துவதற்கு ஒருவித தடையை ஏற்படுத்தும்.
சுஜாதா ராவ்: “எந்தவொரு அரசு ஊழியரும்… எந்த ஒரு உண்மை அல்லது கருத்தை தெரிவிக்கக்கூடாது… இது மத்திய அல்லது ஒரு மாநில அரசின் தற்போதைய அல்லது அண்மைக்கால கொள்கை அல்லது செயலை எதிர்மறையாக விமர்சிப்பதன் விளைவைக் கொண்டுள்ளது, ” என்று மத்திய சிவில் சர்வீசஸ் (நடத்தை) விதிகளின் விதி 9 கூறுகிறது. இது அரசியலமைப்பின் 19வது பிரிவினை (பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம்) மீறுவதகாதா?
பி.என். ஸ்ரீகிருஷ்ணா: இந்த விதி மிகவும் கடுமையானது. இதைப் பயன்படுத்த முடியாது என்ற பார்வையை நோக்கி இப்போது நீதிமன்றங்கள் வருகின்றன. நீங்கள் அரசுப் பணியில் சேர்ந்தவுடன், சரணடைந்து, உங்கள் அடிப்படை உரிமைகளில் சில கட்டுப்பாடுகளை அனுமதிக்கிறீர்கள் என்பதை ஒப்புக்கொள்கிறேன். நீங்கள் எல்லைக்குள் செயல்பட வேண்டும். கொள்கை முடிவுகளை நீங்கள் விமர்சிக்க முடியாது என்று விதி கூறுகிறது. இது மிகவும் தெளிவற்ற வெளிப்பாடு மற்றும் கவனமாக ஆராயப்பட வேண்டும். கொடூரமான குற்றங்களைச் செய்த குற்றவாளிகளை முன்கூட்டியே, மனம் தளராமல் விடுதலை செய்வது….ஒரு கொள்கையா? என்றாவது ஒருநாள் உச்சநீதிமன்றம் அமர்ந்து இந்தப் பிரச்னைகளை கவனமாகத் தீர்த்து வைக்கும் என்று நம்புகிறேன்.
சுஜாதா ராவ்: இல்லை, விதிகள் பிரிவு 19 ஐ மீறுவதாக நான் நினைக்கவில்லை. இது ஒரு விதி. இது சட்டம் அல்ல. அது அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லை. அரசியலமைப்பில் பேச்சு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இவை நடத்தை விதிகள் மற்றும் அந்த அமைப்பு செயல்படுவதற்கு ஒரு அமைப்பில் சில ஒழுக்கம் இருக்க வேண்டும் என்பதால் அவை விதிக்கப்படுகின்றன. முடிவெடுக்கும் செயல்முறை உள்ளது. கருத்து கீழே இருந்து ஆராயப்பட்டு, சாதக பாதகங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டு, நிர்வாகத்துறை அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்து, அவர்களின் மறுப்பு அல்லது ஆதரவைக் குறிப்புகளை எழுதுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இறுதியாக அது அரசியல் நிர்வாகத்தை சென்றடைகிறது. ஒரு கொள்கை முடிவு செய்யப்படும் போது, அதற்கு அதிகாரவர்க்கம் கீழ்ப்படிய வேண்டும் மற்றும் இணங்க வேண்டும்.
நீதியின் மௌனம்: உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி என்.வி. ரமணாவின் செயல்பாடு ஒரு பார்வை
எனவே, அதிகாரி தனது கருத்தைப் பகிர்ந்து கொண்ட முறையில் சிக்கல் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா? மறைமுகமாக அவர் அதைச் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்குமா?
பி.என். ஸ்ரீகிருஷ்ணா: அவர் தி இந்துவில் ஒரு பதிவை எழுதியிருந்தாலும் சரி, அதைப் பற்றி ட்வீட் செய்திருந்தாலும் சரி, அல்லது முகநூலில் பதிவிட்டிருந்தாலும் சரி வரம்புகள் ஒன்றுதான். வரம்புகள் விளையாட்டை மாற்றாது, விளையாட்டின் விதிகள் அப்படியே இருக்கும். இறுதியில், இது உங்கள் அடிப்படை உரிமையாகும். இது நியாயமான முறையில் கட்டுப்படுத்தப்பட வேண்டும். கட்டுப்பாட்டின் நியாயத்தன்மை ஊடகத்தில் இல்லை, அது நீங்கள் கட்டுப்படுத்தப்படும் விதத்திலும், உங்கள் உரிமை கட்டுப்படுத்தப்பட்டதன் நோக்கத்திலும், அது கட்டுப்படுத்தப்படும் முறை யிலும், அதாவது, தரவுப் பாதுகாப்புச் சட்டம் தொடர்பாக புட்டசாமி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பிற்கேற்ப (அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் தனியுரிமைக்கான உரிமை ஒரு அடிப்படை உரிமையாகப் பாதுகாக்கப்படுவதாகக் கூறுகிறது) செய்யப்பட்ட சட்டத்தின் படியும் இருக்க வேண்டும். இந்த நாடு தனது ஜனநாயகக் கொள்கைகளை ஊக்குவிக்க வேண்டிய நேரம் இது என்று நான் நினைக்கிறேன்.
சுஜாதா ராவ்: இல்லை, தனது கருத்தை மறைமுகமாக வெளிப்படுத்த அவருக்கு (திருமதி சபர்வாலுக்கு) அதிகாரம் இல்லை. அவருக்கு என்ன அதிகாரம் உள்ளது? இது குஜராத்தில் நடக்கிறது. முடிவெடுக்கும் செயல்முறைகளில் அவர் பங்கு எதுவும் இல்லை. இந்த விதிகள் ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்டது. இன்று காட்சி மாறிவிட்டது. நம்மிடம் சமூக ஊடகங்கள் உள்ளன. நான் அரசாங்கத்தில் வேலை செய்வதால், நான் ட்விட்டரைப் பயன்படுத்த முடியாது என்று கூறும் சட்டங்கள் எதுவும் இல்லை. எனது விடுமுறை நாட்களைப் பற்றி நான் ட்வீட் செய்ய முடிந்தால், ‘இன்று நடந்தவற்றால் நான் மிகவும் வேதனைப்படுகிறேன்’ என்று என்னைப் பின்தொடர்பவர்களுடன் எனது கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளலாம். அவர் அதைப் பற்றி பேசவில்லை. இது ட்விட்டரில் ஒரு தனிப்பட்ட தொடர்பு மட்டுமே. அவர் தனது சொந்த வேதனையை வெளிப்படுத்த அதைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
இப்போதெல்லாம், பல அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் சமூக ஊடகங்கள் மூலம் பொது மக்களுக்கு அரசாங்க கொள்கைகளை தெரிவிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். எனவே, இதுபோன்ற முடிவுகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போது அரசு ஊழியர்களை ‘பாதுகாக்க’ (UN-COG) வேண்டிய நேரம் இது இல்லையா?பி.என்.
ஸ்ரீகிருஷ்ணா: கெடுவாய்ப்பாக, அரசாங்க அதிகாரிகளுக்கு ஒரே ஒரு வழியில் மட்டுமே ஊக்கமளிக்கப்படுகிறது. ஊடகங்களில் அரசைப் பற்றிய நல்லவற்றை மட்டுமே சொல்ல முடியும். அவர்களுக்கு எது கெட்டது என்று சொல்ல இன்று சுதந்திரம் இருக்கிறதா? நான் பார்க்கும் ஒரே பிரச்சனை என்னவென்றால், நீங்கள் ஒரு கொள்கையை அமல்படுத்தப் போகிறீர்கள் என்றால், ஒன்றைப் புரிந்துகொள்வோம்- ஜனநாயகத்தில், ஒவ்வொருவருக்கும் அவரவர் கருத்தை வெளிப்படுத்த உரிமை, எதிர்க்கும் உரிமை, மாறுபட்ட கருத்தை தெரிவிக்கும் உரிமை உள்ளது. இ.ஆ.ப. அதிகாரிக்கும் இது பொருந்தும். அவர் அல்லது அவளுக்கு கருத்து வேறுபாடு உரிமை இருக்கலாம். ஒரு தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன், அதைச் செயல்படுத்துவது உங்கள் வேலை. நீங்கள் அதை செயல்படுத்தவில்லை என்றால், நீங்கள் உங்களுக்கு உண்மையாக இல்லை. அதுதான் எழும் பிரச்சனை. இது மிக மிக மெல்லிய கோடு. மேலும் இரண்டு நலன்களையும் எவ்வாறு சமநிலைப்படுத்துவது என்பது பற்றிய கேள்வியும் கூட.
சுஜாதா ராவ்: சமூக ஊடகங்கள் மூலம் கொள்கைகள் குறித்து அதிக வெளிப்படைத்தன்மையை உருவாக்குவது ஒரு அரசு அதிகாரியின் கடமை. இது ஒவ்வொரு வழக்கின் அடிப்படையில் எடுக்கப்பட வேண்டும். பில்கிஸ் வழக்கு என்பதால் தான் நான் ஸ்மிதாவை ஆதரித்துள்ளேன். சமூகத்தையும், அரசியலமைப்புச் சட்டத்தையும், சட்டத்தின் ஆட்சியையும் எது புண்படுத்துகிறது என்பதை நாம் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். இது (குற்றவாளிகளை விடுவிக்கும் முடிவு) அரசாங்கக் கொள்கை அல்ல. இது உச்ச நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட, குஜராத் அரசால் நிறைவேற்றப்பட்ட ஒரு நடவடிக்கையாகும், மேலும் அதைச் செய்த விதம் பற்றிய கேள்வி இது. இது ஒரு விதிவிலக்கு.
எதிர்க்கட்சிகளைப் பழிவாங்க அமலாக்கத்துறையைப் பயன்படுத்தும் மோடி அரசு – நடப்பது என்ன?
இந்த விதிகளை நாம் கேள்வி கேட்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
பி.என். ஸ்ரீகிருஷ்ணா: ஆம், அரசியலமைப்பு அடிப்படை உரிமைகளைப் புண்படுத்துவதாக யாராவது வழக்குத் தொடரலாம். அப்போது உச்சநீதிமன்றம் இறங்கி வந்து அது நல்லது, அல்லது கெட்டது என்று சொல்லவும், அதற்கு நல்ல காரணங்களைக் கூறவும் கட்டாயப்படுத்தப்படும்.கே.சுஜாதா ராவ் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி; பி.என். ஸ்ரீகிருஷ்ணா உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர்.
Natchathiram Nagargiradhu and Neelam forum speaks politics against communists |Writer Bharadhinathan
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.