Aran Sei

“லவ் ஜிகாத்” சட்டங்களும் வன்முறை வெறுப்புப் பிரச்சாரமும் – ஒரு விரிவான பார்வை

யதி நரசிங்கானந்த் சரஸ்வதி - Image Credit : thewire.in

“கண்டிப்பாக 2029-ல் இந்தியா ஒரு முஸ்லீமைத்தான் பிரதமராக அடையப் போகிறது. முஸ்லீம்களை எதிர்த்து வாய் திறக்காத இந்த அரசியல்வாதிகள் உங்களைக் காப்பாற்றுவார்கள் என நினைக்கிறீர்களா?”

இப்படிக் கேட்பவர், காசியாபாத், தாஸ்னா தேவி கோவில் பூசாரியும், அகில இந்திய துறவிகள் சங்கத்தின் தலைவருமான யதி நரசிங்கானந்த் சரஸ்வதி. 1966-ல் நடந்த பசுவதைக்கு எதிரான போராட்டத்தின் நினைவாக ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்புக் கூட்டத்தில் அவர் இப்படி பேசி இருக்கிறார். எனினும் பேச்சு விரைவிலேயே ‘ஜிகாதிகளின் அச்சுறுத்தல்’, மக்கள் தொகை கட்டுப்பாடு, காதல் ஜிகாத் என தடம் மாறியது.

நரசிங்கானந்த் தொடர்ந்து, “நீங்கள் இப்போது பசுப் பாதுகாப்பு பற்றி பேசுகிறீர்கள். பிறகு பசுக்கள் அவர்களது உணவாக மட்டுமே ஆகும், ஆனால் உங்கள் பெண்கள் சந்தைகளில் விற்கப்படுவார்கள். எழுபது ஆண்டுகள் கூட இந்த (இந்து) சமுதாயம் தன்னை சுதந்திரமாக வைத்துக் கொள்ள முடியவில்லை. நீங்களோ பசுக்களை பாதுகாக்க வேண்டும் என்கிறீர்கள். பசுக்கள் உங்களுக்குப் புனிதமானால் பிறகு எதற்கு சட்டத்திற்காக காத்திருக்கிறீர்கள்?

உங்கள் மகளை பாதுகாப்பதற்கு ஒரு சட்டத்திற்காக எதற்கு காத்திருக்கிறீர்கள்? யார் நமது பெண்களுக்கு இடையூறு செய்கிறார்களோ, அவர்களைப் பிடியுங்கள். கொலை செய்ய ஆரம்பியுங்கள். உடனே அவர்கள் ஒரு சட்டத்தைக் கோருவார்கள். உங்கள் மக்கள் தொகையை அதிகமாக்குங்கள்! உடனே அவர்கள் மக்கள் தொகை கட்டுப்பாடு மசோதாவை கோருவார்கள் .

பசு நமக்கு தாய் அப்படியானால் சட்டம் எதற்கு? அவர்களை தண்டிக்க வேண்டும்? நாம் என்ன அலிகளா? பசு உங்கள் தாய். எனவே பழி வாங்குங்கள். பசுவை உண்பவர்களை நீங்கள் சாப்பிடுங்கள். நம்மை பாதுகாத்துக் கொள்ள ஒரே வழி நிறைய குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதுதான். அந்த குழந்தைகளுக்கு ஆயுதப் பயிற்சியும் தரப்பட வேண்டும்!” என்று பேசி இருக்கிறார்.

இந்த இந்துத்துவா செயல்பாட்டாளர் , முஸ்லீம்களுக்கு எதிராக வசைமாரி பொழிந்துள்ள 12 நிமிட காணொளி தற்போது முகநூலில் அதிவேகமாக பரவி வருகிறது. இதுவரை 27 லட்சம் பார்வையையும், 94,000 விருப்புகளையும், 41,000 பகிர்வுகளையும், 18,000 கருத்துக்களையும் பெற்றுள்ளது.

இந்த காணொளி, ‘கபர் இந்தியா’ என்ற வலது சாரி வலைவாசலில் பதிவாகி உள்ளது. இந்த காணொளியில், ஜந்தர் மந்தரில் நரசிங்கானந்த் நேரடியாக முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். ஒரு இடத்தில் அவர் இந்துக்களை, அவர்கள் தங்கள் கடவுளரை பின்பற்றாததற்காக கேலி செய்கிறார்.

“முஸ்லீம்கள் முகம்மது நபியை பின்பற்றுவதால் தான் உங்கள் பெண்களை கற்பழிக்கிறார்கள், பசுக்களை சாப்பிடுகிறார்கள். நீங்கள் ராமனைப் பின்பற்றத் தொடங்கினால் இது நின்றுவிடும்.” என்கிறார் அவர்.

இது போன்ற காணொளி அந்த தீவிர மதபோதகருக்கு புதிதல்ல. நரசிங்கானந்த் பல காணொளிகளில், “தான் உயிர் வாழ்வதின் லட்சியமே இந்த பூமியிலிருந்தே முஸ்லீம்களை அழித்தொழிப்பதுதான்.” என்றெல்லாம் பேசி இருக்கிறார். அவரது கூற்றுப்படி, ஜிகாதிகள், மசூதிகள், மதரசாக்கள் இல்லாத ஒரு நாட்டை இந்துக்கள், நிறுவ வேண்டும்.

தீவிர வலது சாரி இந்துத்துவா தீவிரவாதிகளிடையே இவரது இழிபுகழ், குறிப்பாக மேற்கு உத்தர பிரதேசத்தில் மிக பிரபலமானது. இவரை அவர்கள், “இந்தியாவின் விராது” என்று வர்ணிக்கிறார்கள்.

விராது என்பவர் பர்மாவில் ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கு எதிராக ஆத்திரமூட்டும் மற்றும் கொலை வெறியூட்டும், பேச்சுக்களால் தலைப்புச் செய்திகளில் இடம் பிடிக்கும் புத்த மதவாத பிக்கு. .

நரசிங்கானந்த்தின் காணொளிகள், 2.4 லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்ட நரசிங்வாணி என்ற தொலைக்காட்சியில் வெளியாகின்றன. அவர் சுதர்சன் தொலைக்காட்சி மற்றும் நியூஸ் நேஷன் தொலைக்காட்சிகளில் மத சார்பான விவாதங்களில் (‘காதல் ஜிகாத்’, ‘மதமாற்ற ஜிகாத்’ போன்ற தலைப்புகளில்) வல்லுநர் போல் தொடர்ந்து கலந்து கொள்கிறார்

இந்த முறை இதில் புதியது என்னவென்றால், இந்த வன்முறை பேச்சு, ஜந்தர் மந்தரில், டெல்லி காவல்துறை படையின் முன்பே, புதிதாகத் தயாராகி வரும் டெல்லி காவல் நிலைய தலைமையகத்திற்கு சில நூறு மீட்டர் தூரத்திலேயே நடந்துள்ளது.

கடந்த இரு வாரங்களாக, ‘காதல் ஜிகாத்’ பிரச்சனையை ஒட்டி பல போராட்டங்கள் நாடு முழுவதும் நடந்து வருகின்றன. முஸ்லீம் இளைஞர்கள் இந்து பெண்களை மயக்கி, இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற முஸ்லீம்கள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக ஒரு மாயையான ரகசிய சதி கோட்பாட்டை இந்துத்துவா வாதிகள் உருவாக்கி உலா விட்டிருக்கிறார்கள். ஜந்தர் மந்தரிலும் இந்தியா கேட்டிலும் இதுபோன்ற போராட்டங்கள் குறைந்தது மூன்று நடந்துள்ளன. இவை அனைத்திலும் பல பேச்சாளர்கள் முஸ்லீம் எதிர்ப்பு உரைகளை நடத்தி ஆத்திரமூட்டும் முழக்கங்களை எழுப்பினர்.

அக்டோபர் 29 அன்று நிகிதா தோமர் என்ற இந்துப் பெண்ணின் கொலையை கண்டித்து ஒரு குழுவினர் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர். ‘இந்து சிங்க பையன்’ என அழைக்கப்படும் தீவிர வலது சாரி யூடியூபர் ஒருவன் அங்கிருந்து அதன் காணொளியை வெளியிட்டான்.

அதில் ராகினி திவாரி உட்பட பல இந்துத்துவா செயல்பாட்டாளர்கள் , “ஜப் முல்லே காட்டே ஜாயேங்கே, தப் ராம் நாம் சில்லாயேங்கே” (நீங்கள் முஸ்லீம்களை தாக்ககினால் அவர்கள் ராமன் பெயரை கூப்பிடுவதை கேட்கலாம்) , “முல்லே கா நா காஜி கா, யே தேஷ் ஹை வீர் சிவாஜி கா” (இது சிவாஜியின் நாடு , முஸ்லீம்களுடையது அல்ல) போன்ற ஆத்திரமூட்டும் முழக்கங்களை எழுப்பியதை காண முடிகிறது. இதே ராகினி திவாரி தான் டெல்லி கலவரத்தின் போது முஸ்லீம் எதிர்ப்பு வன்முறையைத் தூண்டும் காணொளிகளை வெளியிட்டவர்.

இந்தக் காணொளியை ஒளிபரப்பிய யூடியூபர் இந்து பெண்களை அவமரியாதை செய்தவர்களை ஆயுதம் எடுத்து தாக்குங்கள் என இந்துக்களை தூண்டுகிறார்.

இந்தியா கேட் போராட்டம்

நவம்பர் 1-ம் நாள் ‘காதல் ஜிகாத்’ தை எதிர்த்து இன்னொரு போராட்டம் இந்தியா கேட்டில் நடந்தது. இதற்கு சுதர்சன் தொலைக்காட்சியின் ஆசிரியர் சுரேஷ் சாவன்கே நேரடி ஒளிபரப்பில் அழைப்பு விடுத்திருந்தார். இந்தியா கேட்டில் 144 தடை உத்தரவு இருப்பதால், அனுமதிக்கப்பட்ட இடமான ஜந்தர் மந்தரில் போய் போராட்டம் நடத்துமாறு காவலர்கள் கூறினர். ஆனால் அவர்கள் நகராமல் அங்கேயே போராட்டம் நடத்தினர்.

“ஜிகாதி பன்றிகளை சுட்டுத் தள்ளுங்கள், ஜிகாதி நாய்களை சுட்டுத் தள்ளுங்கள், முறைதவறி பிறந்தவர்களை சுட்டுத் தள்ளுங்கள், தேச துரோகிகளை சுட்டுத் தள்ளுங்கள், அவர்களை சுட்டுத் தள்ளுங்கள், அவர்களை சுட்டுத் தள்ளுங்கள்” என்று கும்பல் கத்தியது.

“இந்துஸ்தான் மே ரஹ்னா ஹோகா தோ ஜெய் ஸ்ரீ ராம் கஹ்னா ஹோகா (முஸ்லீம்கள் இங்கே வாழ விரும்பினால் அவர்கள் ஜெய் ஸ்ரீராம் என ஓத வேண்டும்)” ஒரு சமயத்தில் அந்த வழியாக சென்ற ஒரு முஸ்லீமைப் பார்த்து மதவாத வசவுகளை வீசினர்.

கைகலப்பிற்குப் பின் போராட்டம் தொடர்ந்தது

காவலர்கள் அவர்களை காவல் வண்டியில் வலுக்கட்டாயமாக ஏற்ற முயன்றபோது காவலர்களுக்கும் கலவரக் காரர்களுக்கு மிடையே ஒரு சிறு கைகலப்பு நடந்தது.

ஆச்சரியம் ஊட்டும் வகையில், சுரேஷ் சாவன்கே உட்பட அவர்கள் அனைவரும் இந்தியா கேட்டின் இன்னொரு பகுதியிலேயே விடுவிக்கப்பட்டனர். ஆனால் பிறகு சாவன்கே அந்த கைகலப்பின் போது சாதாரண உடையில் இருந்த ஒருவர் தன்னை தாக்கியதாக கதை விட்டார். பின்னர் அவரும், கலவரக்காரர்களும் அவர் ஒரு முஸ்லீம் என்றும் கூறினர். இறுதியாக அவர்கள் கூகுளில் பட தேடல் மூலம் அது சர்ஃப்ராஸ் என்ற முஸ்லீம் என்று கூறினர்.

டெல்லி போலீஸ் அந்த புகார் அடிப்படை அற்றது என்றும், அத்தகைய ஒருவர் அங்கே அனுப்பப்படவே இல்லை என்றும் ட்விட்டரில் பதிவிட்டனர்.

காவல்துறையும் முகநூலும் உடந்தையா?

தி வயர், டெல்லி காவல்துறையைத் தொடர்பு கொண்டு, குறிப்பாக “ஜந்தர் மந்தரில் வெளிப்படையாக வன்முறைக்கு அழைத்தவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதா” எனக் கேட்டது. அதற்கு டெல்லி காவல்துறை செய்தி தொடர்பாளர் (PRO) “யாராவது புகார் கொடுத்துள்ளார்களா?” என பத்திரிகையாளர்களிடம் திருப்பிக் கேட்டார்.

ஆனால், யாராவது இவ்வாறு வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது காவல்துறையின் கடமை இல்லையா? அதற்கு காவல்துறைக்கு அதிகாரம் இல்லையா? என கேட்டதற்கு அவர் பதிலே கூறவில்லை.

நரசிங்கானந்த்தின் காணொளி போலவே, ‘காதல் ஜிகாத்’ பற்றிய மற்றொரு வெறுப்பூட்டும் காணொளியை கபில் குஜ்ஜார் பதிவிட்டுள்ளார். இவர்தான் ஷாஹீன்பாகில் போராளிகளை துப்பாக்கியால் சுட்டவர். இவையாவும் முகநூலின் வெறுப்பூட்டும் பேச்சு (hate speech) குறித்த அதன் கொள்கை மற்றும் வழிமுறைகளை பற்றிய முக்கிய கேள்விகளை எழுப்புகின்றன. முகநூல் இதுவரை அவற்றை நீக்கவே இல்லை.

சமீபத்தில், மார்க்எஸ் லுக்கி என்ற முன்னாள் முகநூல் ஊழியர், தேர்தலுக்குப் பின் நடந்த டெல்லி கலவரத்தின் போது முகநூல் அதற்கு உடந்தையாக இருந்ததை வெளிப்படுத்தினார். பல புகார்கள் வந்தும் முகநூல் வெறுப்பூட்டும் பதிவுகளை நீக்கவில்லை என்கிறார் அவர். மேலும் ஒரு பதிவை கவனிக்கவும் நீக்கவும் முகநூலால் முடிவது மட்டுமல்ல மக்கள் எதைப் பார்க்க வேண்டும் எதைப் பார்க்கக் கூடாது என்பதிலும் முகநூல் தலையிட முடியும் என்று அவர் குறிப்பிடுகிறார். அது தனது நிரலை (algorithm) மாற்றி குறிப்பிட்ட உள்ளடக்கங்களை அனுமதித்து மற்றவர்கள் பார்க்கும் வரை விட்டு வைக்கவோ, அவற்றை நீக்கவோ செய்கிறது.

மற்றொரு முகநூல் ஊழியர் சோஃபி ஜாங், தனது 6,600 சொற்கள் கொண்ட குறிப்பாணையில் (memo) டெல்லி தேர்தலில் தங்கள் செல்வாக்கை பயன்படுத்திய1000 தனிநபர்களின் வலைப்பின்னல் பற்றி எச்சரித்துள்ளார்.“அப்பாவிகளின் இரத்தம்” தன் கையில் படிந்துள்ளது என்ற குற்றவுணர்வால் அவர் தனது வேலையில் இருந்து விலகி விட்டார்.

“நான் உடல் நலமின்றி இருந்த போதும் டெல்லி தேர்தலில் தாக்கம் செலுத்தும் வகையில் செயல்பட்ட அரசியல் ரீதியாக திறன் வாய்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட செயல்பாட்டாளர்களின் வலைப்பின்னலை தடை செய்தேன்.” என தன் குறிப்பாணையில் கூறி உள்ளார்.

முகநூல் அந்த வலைப்பின்னலை வெளிப்படையாக அறிவிக்காததுடன், அதை நீக்கவும் இல்லை.

அண்மையில் அங்கி தாஸ் எனும் முகநூல் அதிகாரி மிகப்பெரும் பொது பரிசீலனைக்கு ஆளானார். ‘தி வால்ஸ்ட்ரீட் ஜர்னல் ‘அவர், முகநூலின் ‘வெறுப்பு பேச்சு’ குறித்த கொள்கை நடைமுறையில் தலையிட்டு, சர்ச்சைக்குரிய அரசியல்வாதிகளுக்கும், ஆளுங்கட்சியின் கருத்தியலுடன் தொடர்புடைய செல்வாக்கு செலுத்துபவர்களுக்கும் உடந்தையாக இருந்ததை வெளிப்படுத்தியது. அவர்களது விமர்சனங்கள் பொய்யான செய்திகளைப் பரப்பினாலும், வன்முறையை தூண்டுவதாக இருந்தாலும் முகநூல் அவற்றை நீக்கவில்லை. அங்கி தாஸ் சமீபத்தில் முகநூல் நிறுவனத்திலிருந்து விலகிவிட்டார்.

சதிதிட்ட கதைகளும் தவறான தகவல்களும்

நாங்கள் இந்தியா கேட்டில்’காதல் ஜிகாத்’ எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த இந்துத்துவா செயல்பாட்டாளர்கள் பலரிடம் , பிரச்சினை குறித்து மேலும் அறிந்து கொள்வதற்காகப் பேசினோம்.

“எனக்கு பத்து முஸ்லீம் நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பெயர்கள் உள்ளன. அவர்கள் வெளியே வந்து இந்து பெண்களை பார்க்கும் போது, அவர்களை மடக்க, இந்து பெயர்களை பயன்படுத்துவார்கள்.” என்றார் ஒருவர்.

பலரும் மதமாற்றத்தை தடை செய்ய வேண்டும் என்றும், கலப்புமத திருமணத்தை தடை செய்வதுதான் இதற்குத் தீர்வு என்றும் கூறினர். வேறு சிலர் மரண தண்டனையே இதற்கு ஒரே தீர்வு என்றனர்.

“எங்கள் பெண்கள் அப்பாவிகள். அவர்களை தங்கள் காதல் வலையில் விழ வைத்து விடுகிறார்கள். இது போன்ற திருமணங்களைத் தடுக்க சட்டம் வேண்டும்.” என்றனர் சிலர்.

இந்து பெண்கள் தங்களை ஏமாற்றும் முஸ்லீம்களுக்கு எதிராக ஆயுதம் எடுக்க வேண்டும் என்கிறார் இந்து இளைஞர் அமைப்பைச் சேர்ந்த கமலேஷ் ரத்தோர்.

“முஸ்லீம்கள் மட்டும்தான் ஏமாற்றுகிறார்களா? ” என்று நாங்கள் அவரிடம் கேட்டோம்.

“ஆமாம், எங்கள் இந்து பையன்கள் இப்படி செய்ய மாட்டார்கள்.” என்கிறார் சற்று சங்கடமான தயக்கத்துக்குப் பிறகு.

“முஸ்லீம்களும் ஜிகாதிகளும் இந்த நாட்டில் இருக்கும் வரை நமக்கு பாதுகாப்பு இல்லை. நமக்கு இரண்டு வழிகள்தான் உள்ளன. ஆயுதங்களை எடுத்து அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும். அல்லது நமது அழிவை சந்திக்க வேண்டும். முஸ்லீம்களைப் போலவே நம்மை யார் தடுத்தாலும் காவல் துறையே ஆனாலும் அவர்களைத் தாக்க வேண்டும்” என்கிறார் ஒரு இளம் பெண்.

“அவர்கள் எங்கள் பெண்களை எப்படி பிடிக்கிறார்கள் என்று நான் சொல்கிறேன். முஸ்லீம் நாடுகள் அவர்களுக்கு நிதி உதவி செய்கின்றன என்று எல்லோருக்கும் தெரியும். அவர்களுக்கு 12 அல்லது 13 குழந்தைகள் உள்ளன. அதிகக் குழந்தைகள் என்றால் அதிகம் பேர் வேலை செய்யலாம். அதிகம் சம்பாதிக்கலாம். அந்தப் பணத்தை, பெண்களைக் கவர, விலை அதிகமான பரிசு பொருட்களையும், இருசக்கர வாகனங்களையும் வாங்க பயன்படுத்துகின்றனர். எங்கள் பெண்கள் கோவிலுக்குப் போக விரும்புவதில்லை. நமது மதத்தைப் பற்றி அறிந்து கொள்ளவும் விரும்புவதில்லை. அதுதான் பிரச்சினையே” என்கிறார் சாகர் மாலிக் என்பவர்.

முன்அறிகுறிகளை புறக்கணிக்கிறோமா?

கடந்த காலங்களில், இதே போன்ற பரப்புரைகள் அமெரிக்காவில் கருப்பின மக்களுக்கு எதிராக, இனக் கலப்பு (miseceganation) என்ற பெயரில் நடந்தது. அது மிக அதிக அளவிலான வன்முறைக்கும் படுகொலைகளுக்கும் கொண்டு சென்றது.

ஜெர்மனியில் ” இனத் தீட்டு” (Raccenschande) க்கு எதிராக “”யூதர்கள் ஜெர்மானிய பெண்களுக்கு எதிராக சதி செய்கிறார்கள்” என்று பரப்புரை செய்து இருண்ட நியூரம்பர்க் இனச் சட்டங்களைக் கொண்டு வந்து மிகப்பெரிய நாசத்தை உருவாக்கினார்கள்.

‘காதல் ஜிகாத்’ திற்கு எதிரான பரப்புரை நியூரம்பர்கின் ‘இனத்தீட்டு’ பரப்புரைக்கு அல்லது வெள்ளை இன மேலாதிக்கத்தின் அச்சமாகக் காட்டப்பட்ட ‘இனக்கலப்பு’ க்கு சற்றும் குறைந்ததல்ல.”

‘காதல் ஜிகாத்’, முஸ்லீம் ஆண்களை சமூக வாழ்க்கையில் மதிப்பிழக்கச் செய்யும் சதி திட்டமே ” என்கிறார் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி N.C. அஸ்தானா.

இது போன்று, ஒரு சமூதாயத்தின் ஒட்டு மொத்த சிறுபான்மையின ஆண்களையும் சந்தேகித்து கொடூர மிருகங்களாகக் காட்டும் வகையில் மனிதத்துவத்தைத் தொடர்ந்து சீர்குலைப்பது ஒரு மிகப் பெரிய இனப் படுகொலைக்கான ஆபத்தான நிலையையே குறிப்பதாக இனப்படுகொலை பற்றி ஆய்வு செய்து வரும் பேராசிரியர் கிரிகோரி ஸ்டான்டன் எச்சரிக்கிறார்.

இனப்படுகொலை வன்முறைக்கான கூச்சலை, அரசு மற்றும் சட்ட அமலாகத் துறைகள் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருப்பது இந்த தீவிரவாத கும்பல்களுக்கு வலிமையூட்டுவதாகவே உள்ளது. தற்போது நான்கு மாநிலங்கள் ‘காதல் ஜிகாத்’ திற்கு எதிராக சட்டங்களை கொண்டவர எண்ணியிருப்பதாகக் கூறுவது வன்முறைக்கு தயாராக இருப்பவர்களை ஊக்கப்படுத்துவதாகவே இருக்கும்.

— அலிஷான் ஜாஃப்ரி

thewire.in தளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்

“லவ் ஜிகாத்” சட்டங்களும் வன்முறை வெறுப்புப் பிரச்சாரமும் – ஒரு விரிவான பார்வை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்