உலகின் மிக வலிமையான ஜனநாயக நாடான அமெரிக்காவில் இன்று தேர்தல் நடைபெற உள்ளது. அமேரிக்காவின் அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை பார்ப்போம்.
அமெரிக்க தேர்தல் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், ஒவ்வொரு முறையும் எந்த தேதியில் வாக்குப் பதிவு நடைபெறும்? எந்த தேதியில் புதிய அதிபர் பதவியேற்பார் என்பதும் அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
தேர்தல் நடைபெறும் தேதி : நவம்பர் மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை வாக்குப் பதிவு நடைபெறும். ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நவம்பர் மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தேர்தல் நடத்தப்படும் என்பது மாற்றம் இல்லாதது.
பதவிக் கால வரம்பு : அமெரிக்க அரசியல் சாசனத்தின் 24 வது திருத்தத்தின்படி, ஒருவர் இரண்டு முறை மட்டுமே அதிபராக பதவி வகிக்க முடியும்.
அரசியல் கட்சிகள் : அமெரிக்க அரசியல் அமைப்பின்படி அமெரிக்காவில் இரண்டு கட்சிகள் மட்டுமே உள்ளன. அவை குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகும்.
2020 வேட்பாளர்கள் : குடியரசு கட்சி வேட்பாளர் – டொனல்ட் ட்ரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் – ஜோ பைடன்
அதிபராக நிற்க தேவையான அடிப்படை தகுதி :
- அமெரிக்க குடிமகனாக இருக்க வேண்டும்.
- குறைந்தது 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
- 14 ஆண்டுகளாவது அமேரிக்காவில் குடியிருக்க வேண்டும்.
அமெரிக்க நாடாளுமன்றம் :
அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரு அவைகள் உள்ளன. ஒன்று செனட் (மேலவை) மற்றொன்று பிரதிநிதிகள் சபை (House of Representatives). செனட் என்பது மேலவை. (ராஜ்ய சபா) பிரதிநிதிகள் சபை என்பது கீழ் அவை (மக்களவை). அமெரிக்காவில் செனட் உறுப்பினர்களை அந்நாட்டு மக்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கின்றனர்.
பிரதிநிதிகள் சபை:
ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பிரதிநிதிகளின் எண்ணிக்கை ஒரு மாநிலத்தின் மக்கள் தொகையால் தீர்மானிக்கப்படுகிறது. தற்போது பிரதிநிதிகள் சபையில் 435 வாக்குரிமையுள்ள, 6 வாக்குரிமையற்ற உறுப்பினர்கள் உள்ளனர். பிரதிநிதிகள் சபையின் பதவிக்காலம் 2 ஆண்டுகள். பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர்கள் தங்கள் மாவட்டங்களின் பிரச்சனைகளை முன்வைப்பர்.
செனட் சபை:
அமெரிக்காவில் 50 மாநிலங்கள் உள்ளன. ஒரு மாநிலத்துக்கு 2 பிரதிநிதிகள் வீதம் மொத்தம் 100 செனட் சபை உறுப்பினர்கள் உள்ளனர். செனட் சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பு:
பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை ஆகிய இரண்டு அவைகளிலும் உள்ள உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை ஆகியவற்றிற்கான தேர்தல்களும் அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலும் வெவ்வேறானவை.
அதிபர் தேர்தல் :
அமெரிக்க மக்கள், அவர்களது அதிபர்களை நேரடியாகத் தேர்ந்தெடுக்க முடியாது. அந்நாட்டின் மக்கள் வாக்காளர் குழுவுக்கு (electoral college) வாக்களிப்பார்கள். அமெரிக்க காங்கிரஸ் என்று அழைக்கப்படும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் (பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை) எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்களோ அதே எண்ணிக்கையிலான உறுப்பினர்களை வாக்காளர் குழுவும் கொண்டிருக்கும்.
அமேரிக்க அதிபர் தேர்தல் முறையை நான்காக பிரிக்கலாம் :
- பிரைமரி (மறைமுக தேர்வு) & காகாசஸ் (நேரடி தேர்வு)
- தேசிய மாநாடுகள்
- பொதுத் தேர்தல்
- வாக்காளர் குழு.
பிரைமரி & காகசஸ் :
ஒரு கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இந்தத் தேர்தலில் ஒவ்வொரு மாநிலமாகப் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆதரவை திரட்டுவார்கள். ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு மாநிலத்துக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பிரதிநிதிகள் வாக்கை ஒதுக்கி இருக்கின்றன. இது மக்கள்தொகையின் அடிப்படையில் மாநிலங்களுக்கு மாநிலம் மாறுப்படும்.
ஜனநாயகக் கட்சிக்கு ஒட்டுமொத்தம் 4,766 பிரதிநிதிகள் வாக்கு உள்ளது. வேட்பாளர் தேர்தலில் வெற்றிபெற்று அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டுமானால் ஒருவர் 2,384 பிரதிநிதிகளின் ஆதரவைப் பெற்றாக வேண்டும்.
அதேபோல, குடியரசுக் கட்சியைப் பொறுத்தவரை மொத்த பிரதிநிதிகள் வாக்குகள் 2,472. வெற்றி பெறுவதற்கு 1237 வாக்குகள் தேவை.
கட்சியில் பலர் அதிபராக போட்டியிட விரும்புவர், கட்சி உறுப்பினர்களுல் ஒருவரை அதிபர் வேட்பாளாராக தேர்வு செய்ய பிரைமரி மற்றும் காகசஸ் முறை உதவும். அதிபர் வேட்பாளர்களை ”பிரதிநிதிகள்” (டெலிகெட்ஸ்) தேர்வு செய்வர்.
பிரதிநிதிகளை தேர்வு செய்ய இரண்டு நடைமுறைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன .
பிரைமரி : கட்சி உறுப்பினர்கள் பிரதிநிதிகளை ரகசிய வாக்கெடுப்பின் மூலம் தேர்வு செய்வர்.
அல்லது
காகசஸ் : கட்சி உறுப்பினர்கள் கூடிப் பேசி வெளிப்படையாக பிரதிநிதிகளை தேர்வு செய்வர். இந்த தேர்தல் அனைத்து மாநிலங்களிலும் நடக்கும்.
தேசிய மாநாடுகள் :
இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட ”பிரதிநிதிகள்” அவர்களுடைய கட்சி நடத்தும் மாநாட்டில் கலந்துக் கொள்வர். இங்கு அதிபர் வேட்பாளாரக போட்டியிட விரும்பும் நபர்களுக்கு ஆதரவாக தங்கள் வாக்கினை பதிவு செய்வர். இதன் மூலம் அந்தந்த கட்சிகளின் அதிபர் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவர், அதிபர் வேட்பாளர் தன்னுடைய ”ரன்னிங் மேட்” என அழைக்கப்படும் துணை அதிபர் வேட்பாளரை இந்த மாநாட்டில் தேர்ந்தெடுப்பார்.
அதிபர் வேட்பாளரும், துணை அதிபர் வேட்பாளரும் அறிவிக்கப்பட்ட பின்னர் பரப்புரைகள், பேரணிகள் மற்றும் அதிபர் வேட்பாளருக்கான தொலைக்காட்சி நேரலை விவாதங்கள் முதலியன தொடங்கிவிடும்.
பொதுத் தேர்தல் :
இன்று அமெரிக்க மக்கள் வாக்களிக்கச் செல்லும்போது, நேரடியாக அதிபர் வேட்பாளருக்கு வாக்கு செலுத்த மாட்டார்கள்.அதற்கு பதிலாக எலக்டோரல் காலேஜ் (வாக்காளர் குழு) உறுப்பினர்களுக்கு வாக்களிப்பார்கள். அமெரிக்க அதிபரை தேர்ந்தெடுப்பது இந்த வாக்காளர் குழு தான்.
அமெரிக்காவில் இருக்கும் ஒவ்வொரு மாகாணத்திற்கும் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்றவாறு வாக்காளர் குழு உறுப்பினர்கள் இருப்பார்கள்.
இன்று மொத்தம் 538 வாக்காளர் குழு உறுப்பினர் இருக்கிறார்கள்.
இதில் குறைந்தது 270 உறுப்பினர்களின் ஆதரவை கொண்ட வேட்பாளர்தான் அதிபர் தேர்தலில் வெற்றிப்பெற முடியும். பல மாநிலங்களில் எந்த வேட்பாளருக்கு அதிகமான வாக்குகள் கிடைக்கிறதோ அவருக்கு அந்த மாகாணத்தின் மொத்த வாக்காளர் குழுவின் ஆதரவும் கிடைக்கும்.
அங்கு வெற்றி பெரும் வாக்காளருக்கு 99% வாக்குகள் கிடைத்தாலும் சரி அல்லது வெறும் 51% வாக்குகள் கிடைத்தாலும் சரி, அந்த மாகாணத்துக்கான மொத்த 55 வாக்காளர் குழு உறுப்பினர்களின் வாக்குகளும் வெற்றியாளருக்கே போய் சேரும். மேய்ன் மற்றும் நெபஸ்கா மாநிலங்களில் மட்டும் இந்த நடைமுறை செல்லாது.
அதனால்தான் மக்களின் குறைந்த வாக்குகளை பெற்ற வேட்பாளரால் கூட, அதிபராக முடியும். ஏனெனில் அவரிடம் வாக்காளர் குழுவின் வாக்குகள் பெரும்பான்மையாக இருக்கும். கடந்த தேர்தலில் அதிபர் டிரம்ப் வெற்றி பெற்றது இப்படித்தான். 2000-ம் ஆண்டு குடியரசு கட்சி வேட்பாளர் ஜார்ஜ் புஷ்ஷும் மக்களின் வாக்குகள் குறைவாக பெற்று, வாக்காளர் குழு வாக்குகளால்தான் வெற்றி பெற்று அதிபரானார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.