Aran Sei

‘அக்‌ஷய பாத்ரா’ நேர்மையான அமைப்பா? – கேள்வியை எழுப்பும் கடிதங்கள்

க்‌ஷய பாத்ரா அறக்கட்டளையின் அறங்காவலர்கள் பதவி விலகப் போவதாக ஒரு மாதத்திற்கு முன் இருந்தே பேசப்பட்ட வந்த நிலையில், தீபாவளி சமயத்தில் இந்த செய்தி பொது வெளிக்கு வந்தது. இந்த செய்தியை உறுதிபடுத்த ஏன் இரு தரப்பினரும் (அறங்காவலர்களும் , நிறுவனமும்) இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டார்கள் என்பதற்கு பிறகு வருவோம். முதலில்,அறங்காவலர்கள் பதவி விலகும் வரை எந்த வகையான சர்ச்சை அக்‌ஷய பாத்ராவை சூழ்ந்து இருந்தது; அக்‌ஷய பாத்ராவை நடத்துபவர்களின் அறம் குறித்த கேள்விகள் வர ஏன் அது காரணமாக இருந்தது என்பதை பார்ப்போம்.

அக்‌ஷய பாத்ரா அளிக்கும் உணவில் வெங்காயமும் பூண்டும் சேர்க்காதது தான் சில மாதங்களுக்கு முன்பு வரை, சர்ச்சையாக இருந்தது. குழந்தைகளுக்கு அவர்கள் முட்டைகள் கொடுக்க மறுத்தது ஊட்டச்சத்து அறிவியலுக்கு முரணாக இருந்தது. இந்த ‘மேல்’ சாதி உணவு வழக்கத்தை பின்பற்றும் போக்கு, பெங்களூர் இஸ்கானின் ஊடுருவலால் தான் நடப்பதாக பார்க்கப்பட்டது.

பெங்களூர் இஸ்கான், ஒரு தனி அமைப்பாக, அதன் மத வழக்கங்களை பின்பற்றலாம். ஆனால், அதன் கிளை அமைப்பான அக்‌ஷய பாத்ராவோ, இஸ்கானோடு தொடர்பில்லாத ஒரு நிறுவனமாகவே 2000ம் ஆண்டு முதலே காண்பிக்கப்பட்டு வருகிறது. இந்த ஒரு பிம்பத்தோடு, அரசிடம் இருந்தும் தனியாரிடம் இருந்து நிதிகளை வாங்கிக் கொண்டது. குறிப்பாக, பல மாநில அரசுகளின் மதிய உணவு திட்டத்தை எடுத்து நடத்தும் ஏஜென்சியாகவும் இயங்கியது. இப்போது, 14 மாநில அரசுகளும், இந்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகமும் அக்‌ஷய பாத்ராவோடு இணைந்து நாடு முழுவதும் 19,000 பள்ளிகளுக்கு உணவளிக்கிறார்கள்.

அக்‌ஷய பாத்ராவின் அறங்காவலர்கள், ஆலோசனையாளர்கள், நன்கொடையாளர்கள் பெயர்களை எல்லாம் கவனித்துப் பார்த்தால், கடந்த இருபது வருடங்களில் மதபோதகர்கள் கார்ப்பரேட்களை சந்தித்து, அதிகாரத்துவத்தினரிடமும், அரசியல்வாதிகளிடமும் பேச்சுவார்த்தைகள் நடத்தி, அரசின் மதிய உணவு திட்டத்தை கைப்பற்ற ஒரு இடமாக அக்‌ஷய பாத்ரா இருந்தது புரியும். இஸ்கான் – கார்ப்பரேட் கைகோர்ப்பிற்கு முன்பு வரை மதிய உணவு திட்டத்திற்கென ஒரு தன்னாட்சியான சமூக வடிவம் இருந்தது. இப்போதும், அக்‌ஷய பாத்ரா போகாத இடங்களில் எல்லாம் இந்த வடிவம் இருக்கிறது.

இந்த புது ஏற்பாட்டில், தொண்டோடு சேர்ந்து மதம் இருப்பது பார்ப்போருக்கு எல்லாம் வெளிப்படையாகவே தெரியும். பின் தங்கிய குழந்தைகளுக்கு உணவளிக்கப்படுகிறது என்பதனாலும், எங்கள் சமையலறைகள் சுத்தமாக இருக்கின்றன, இங்கே ஊழல் இல்லை, எந்த குளறுபடிகளும் இல்லாமல் விநியோகம் நடக்கிறது என அக்‌ஷ்ய பாத்ரா சிரிக்கும் குழந்தைகளின் முகங்களை வைத்து தீவிரமாக விளம்பரப்படுத்தியதனாலும், அரசின் நிதியோடு இயங்கிய இந்த மதம் கலந்த தொண்டை யாரும் பெரிதாக கேள்விகள் கேட்கவில்லை.

சில நாட்களுக்கு முன்பு வரை, இந்திய கார்ப்பரேட்களிலேயே மிகச் சிறப்பானவற்றில் இருந்து வந்த தொழிற்படையை வைத்து சீராக நடத்தப்படும் ஒரு அமைப்புதான் அக்‌ஷய பாத்ரா அறக்கட்டளை எனும் எண்ணத்தை அது தோற்றுவித்து இருந்தது. வருடங்கள் போகப் போக, அக்‌ஷய பாத்ராவின் பிராண்டிங், அது ஒரு பெங்களூர் இஸ்கான் திட்டம் தான், அரசின் மானியத்தால் நடக்கும் ஒன்றல்ல என்பதாக மாறியது. இதை சரி செய்ய அரசு அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ முயற்சிக்கவே இல்லை.

என்.ஆர்.நாராயண மூர்த்தி, குருராஜ் தேஷ் தேஷ்பாண்டே, டாக்டர் தேவி ஷேட்டி, தீபக் சோப்ரா போன்ற ஆளுமைகள் இருந்ததனால் , ஊடகமும் இந்த குழுவை கேள்விகள் கேட்கவில்லை. அதையும் தாண்டி கேள்விகள் கேட்கப்பட்டால், அந்த கருத்தை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும், அல்லது தொடர்ந்து கேள்விகள் கேட்கக் கூடாது என அழுத்தம் கொடுக்கப்படும். கடந்த இருபது வருடங்களாக கவனமாக ஒரு உருவத்தை கட்டமைத்ததற்கு எல்லாம் முரணாக, டி.வி.மோகன்தாஸ் பை, ராஜ் பி கொண்டூர், வி.பாலகிருஷ்ணன், அபய் ஜெயின், ஆகியோர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் அக்‌ஷய பாத்ராவில் நிர்வாக பிரச்சினைகள் இருக்கின்றன, அவர்கள் குற்றச்சாட்டுகளுக்கு எதிராகவும், அம்பலப்படுத்துபவர்களுக்கு எதிராகவும் போராட வேண்டியிருந்தது என்று சொல்லியிருக்கிறார்கள்.

பெங்களூரு இஸ்கான் எதுவும் அறியாத குழந்தைகளின் உணவுத் திட்டத்தில் கை வைத்த போது ஒன்றும் பேசாமல் இருந்த இந்த அறங்காவலர்கள், தற்போது, அக்‌ஷய பாத்ரா ஒரு தனி அமைப்பாக, சுயாதீன அறங்காவலர்களுக்கு அதிக அதிகாரத்தை தர வேண்டும் என பேசியிருக்கிறார்கள். அக்‌ஷய பாத்ரா அரசு நிதியில் இயங்கிக் கொண்டிருக்கிறது, அங்கே மேலும் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் எனக் கேட்பதற்கு ஏன் இவ்வளவு காலம் ஆனது? ஏறத்தாழ இருபது வருடங்களாக பெங்களூரு இஸ்கானும், அக்‌ஷய பாத்ராவும் ஒரு அமைப்பை வைத்து இன்னொரு அமைப்பு வளர்ந்து கொண்டிருந்த போது எல்லாம், மாறி மாறி பரிவர்த்தனைகள் குறித்து எந்த பேச்சும் வரவில்லை. கணக்கு வழக்கு கோப்புகள் எல்லாம் சுத்தமாக தனியே வைக்கப்பட்டிருக்கலாம். ஆனால், அறங்காவலர்கள், நன்கொடையாளர்கள் மற்றும் அரசுகளுக்கு மேலே, உணவு விஷயம் வரும் போது அற வேடம் தரிக்கப்பட்டது உண்மை. மதகுருக்களுக்கும், சுயாதீன அறங்காவலர்களுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் இருந்தது என்றால், அது இப்போது உடைக்கப்பட என்ன காரணம்? எதனால் இந்த முறிவு ஏற்பட்டது?

அக்‌ஷய பாத்ரா தணிக்கை குழுவின் உறுப்பினர் ஒருவர் அறங்காவலர்களுக்கு சில வாரங்கள் முன் எழுதிக் கொண்ட , 3500-க்கு மேல் வார்த்தைகள் கொண்ட கடிதத்தின் சில பகுதிகள், அதிர்ச்சியூட்டுபவையாக இருக்கின்றன. (உறுப்பினரின் பெயர் தி வயருக்கு தகவல் அளித்தவர் கேட்டுக்கொண்டதனால் வெளியிடப்படவில்லை).

கடிதத்தின் சில பகுதிகள்:

“அக்‌ஷய பாத்ராவில் தரமான நிர்வாகம் நடந்துக் கொண்டிருந்ததாக ஒரு வெளியாளாக நான் நம்பினாலும், நான் தணிக்கை குழுவில் பொறுப்பேற்ற பிறகு, நிறைய பிழைகளையும், இடைவெளிகளையும் கவனித்தேன். என் பார்வையில், இவை அறக்கட்டளையின் உருவத்தை பாதிக்கும் அளவு தீவிரமானவையாகவே இருக்கின்றன”

“தலைவர் மற்றும் துணை தலைவர் (மது பண்டிட் தாஸ் மற்றும் சஞ்சலாபதி தாசா) தங்களுடைய உறுப்பினர் பதவிகளால் ஆலய அறக்கட்டளைகளான ஹரே கிருஷ்ணா அறக்கட்டளை, பெங்களூர் இஸ்கான், டச்ஸ்டோன் அறக்கட்டளைகளோடு எல்லாம் இயங்குவதனால், இவை அக்‌ஷய பாத்ராவோடு தொடர்புடையதாக இருப்பது பதிவு செய்யப்பட்டதே. மறு பக்கம், ஆலய அறக்கட்டளைகளின் மத போதகர்கள் அக்‌ஷய பாத்ராவில் பிரிவு தலைவர்களாக இருக்கிறார்கள். மேலும் பல மதபோதகர்கள் அக்‌ஷய பாத்ராவில் முக்கியமான பதவிகளில் இருக்கிறார்கள். இந்த தொடர்பின் காரணமாக, அக்‌ஷய பாத்ரா மற்றும் ஆலய அறக்கட்டளைகள் இணையும் செயல்பாடுகள் எல்லாம் நேர்மையாக, முறையே ஆவணப்படுத்தப்பட்டு நடத்தப்பட வேண்டும்…”

“அக்‌ஷய பாத்ரா எனும் நிறுவனத்தின் செயல்திறன், அமைப்புகள், கட்டுப்பாடுகள் மற்றும் கீழ்படிதலுக்கு எந்த பொறுப்புகளையும் ஏற்காமல், மத போதகர்கள் முழுக்கட்டுப்பாட்டையும் எடுத்துக் கொண்டதை பெரும்பாலும் பார்க்க முடிகிறது. அறக்கட்டளையின் சி.இ.ஓ/சி.எஃப்.ஓ மற்ற பொறுப்பில் இருப்பவர்களிடம் எல்லாம் முறையே தொழில்முறை தகவல்கள் சொல்லப்படுவதில்லை. இது ஒரு ஆபத்தான சூழ்நிலையாக இருக்கிறது. கட்டுப்பாடுகள் முழுக்க மத போதகர்களிடம், அறங்காவலர்களின் பொறுப்புகள் முடக்கப்படுகின்றன”

“அறக்கட்டளையும், ஆலய அறக்கட்டளைகளும் ஒரு பிரிவை நடத்துவதற்காகவும், நன்கொடைகள் திரட்டுவதற்காகவும், வாகனங்களுக்காகவும், நிதி திரட்டுவதற்காகவும், வாடகைக்கு எடுக்கப்பட்ட இடங்களை பகிர்ந்து கொள்வதற்காகவும் ஆகும் செலவுகளுக்கு என இருக்கும் வரையறை அழிக்கப்பட்டிருக்கிறது. எந்த ஒப்பந்தங்களும் தெளிவாக எழுதப்படவில்லை. மேலும் பல சமயங்களில், பரிவர்த்தனைகள் முறையே நடத்தப்பட்டன, வெளிப்படைத் தன்மையோடு நடத்தப்பட்டன, வளங்கள் முறையே பயன்படுத்தப்பட்டன என்பதை நிரூபிக்கவும், சிக்கல்கள் தவிர்க்கவும் கூட தணிக்கைகள் செய்யப்படவில்லை. இப்படி ஒழுங்கில்லாமல் பதிவுகள் செய்யப்பட்டிருப்பது பல இடங்களில் பார்க்கக் கிடைக்கின்றன”

“கடந்த இரண்டு வருடங்களில் அறக்கட்டளையின் பிரிவுகள்/பிரிவுத் தலைவர்களின் செயல்பாடுகள் குறித்து அம்பலப்படுத்துபவர்களின் புகார்கள் சில வந்துள்ளன. அனைத்து விசாரணைகளிலும், பிரிவுத் தலைவர்களும், பிற மத போதகர்களும் குற்றங்கள் செய்தது தெரிய வந்திருக்கிறது”

“ மதபோதகர்கள், முறையே தரவுகள் சேகரிக்கப்படவும், விசாரணை நியாயமாக நடத்தப்படவும், விவரங்களை எல்லாம் குறித்து வைக்காமல், தணிக்கை அதிகாரிகளுக்கு ஒழுங்காக ஒத்துழைக்காமல், தங்கள் கருத்துக்களை அவர்களுக்கு புகுத்த முயற்சித்ததும் நடந்தது. இது நல்ல நிர்வாகத்துக்கு அடையாளம் அல்ல. அக்டோபர் 2020 தொடக்கத்திலேயே எர்ன்ஸ்ட் அண்ட் யங்-கால் நடத்தப்பட்ட சிறப்பு தணிக்கை முடிவு பெற வேண்டியதாக இருந்தது. ஆனால், ஒத்துழையாமை , தகவல் இல்லாத காரணத்தால் குறிப்பிட்ட நேரத்திற்குள் தணிக்கை நடந்து முடியவில்லை. ஒரு சிக்கலான தலைமையால் பாதுகாக்கப்பட்டிருக்கும் தலைவரின் நிலைப்பாட்டை வைத்துப் பார்க்கும் போது, இந்த தணிக்கை முடிவுக்கு வருமா என்பதே சந்தேகமாகத் தான் இருக்கிறது”

“அக்‌ஷய பாத்ராவிற்கு ஒரு வேளை உணவிற்கான விலை என்பது எப்போதுமே பிரச்சினையாகவே இருந்திருக்கிறது. இதைப் போன்ற மற்ற நிறுவனங்களோடு ஒப்பிடும் போது, ஒரு வேளை உணவிற்கான விலை மிக அதிகமாகவே இருக்கிறது. எப்படி விசாரணை செய்தாலும் இதற்கான பதில்கள் கிடைப்பதில்லை. ஏனென்றால், தங்கள் கடமைகளை அறக்கட்டளையிடம் பதிவு செய்யாத மத போதக பிரிவுத் தலைவர்கள் தான் சமையலறைகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்”

ஒரு முழுமையான தடயவியல் விசாரணை தேவைப்படலாம் என்று சொல்லி தணிக்கைக்குழு உறுப்பினர் கடிதத்தை முடிக்கிறார். இந்த கடிதத்தில் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை தி வயர் சரி பார்க்கவில்லை. தணிக்கைக்குழு இப்படி ஒரு கருத்தை தெரிவித்ததும், மதபோதகர்கள் சுரேஷ் சேனாபதி எனும் தணிக்கை குழு உறுப்பினர் ஒருவரின் பிற குழு தொடர்புகள் குறித்து ஒரு ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியிடம் கருத்துக் கேட்டிருக்கின்றனர். இவை எல்லாம் அக்‌ஷய பாத்ராவோடு தொடர்பில்லாதவைகள். இப்படி செய்தது, அவரை தணிக்கை குழுவைவிட்டு விலகச் செய்யவே என்று சொல்லப்படுகிறது. சுயாதீன அறங்காவலர்கள் தங்களுடைய சக கார்ப்பரேட் ஊழியர்களுக்கு ஆதரவு தர இதுவும் ஒரு காரணம்.

மதபோதக அறங்காவலர்கள் நவம்பர் 14, 2020 அன்று அக்‌ஷய பாத்ரா அறக்கட்டளையை மாற்றியமைத்த பிறகு, பதவி விலகிய அறங்காவலர் ஒருவர் (பெயர் வெளியிடப்படவில்லை) மதபோதக அறங்காவலர்களுக்கு ஒரு மெயிலை எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தில் இருந்து சில பகுதிகள் :

“அபயோடு இணைந்து அக்‌ஷய பாத்ராவை தொடங்கியவராக, நீங்களும் ஸ்வாமி மது பண்டிட் தாசாவும் செய்தது எனக்கு ஏமாற்றமாகவும், வேதனையாகவும் இருக்கிறது. தணிக்கை குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்ட உங்கள் கமிஷன் , ஒமிஷன்களை எல்லாம் மூடி மறைக்க…”

“ஸ்வாமி எம்.பி.டி இதை விட மோசமான குற்றங்களை செய்திருப்பதாக மும்பை இஸ்கானால் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்; அவை உயர் நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்டவை; உச்ச நீதிமன்றத்தில் தடுப்பாணை பெறப்பட்டிருக்கிறது. உங்கள் கையில் இருக்கும் அதிகாரத்தை நம்பாமல், பெங்களூரு ஆலயத்தை மேற்பார்வை செய்ய நீதிபதி ரவீந்திரன் தலைமையிலான ஒரு ஆணையத்தை உச்சநீதிமன்றம் அமைத்திருக்கிறது. இதை விட மோசமானது எதாவது இருக்க முடியுமா? இதைப் பற்றி எங்களுக்கு தெரிந்திருந்தது. ஆனாலும் உங்களையோ எம்பிடியையோ எந்த சந்திப்புகளிலும், அக்‌ஷய பாத்ரா அறக்கட்டளையிலும் அனுமதிக்க எடுத்த முடிவை மறுபரிசீலனை செய்யவில்லை. இருந்தாலும் எம்.பி.டி மிக அற்பமாக ஒன்றை செய்யத் தொடங்கினார்..”

“ஒரு சமத்துவமான அறக்கட்டளையில் தான் நாங்கள் இணைந்தோம். ஆனால் அதை பத்து வருடங்களுக்கு முன்னரே எம்பிடி மாற்றி, அதிகாரத்தை கையில் எடுத்தார். உங்களை முழுக்க நம்பியதால் இதை ஏற்றுக் கொண்டோம், இப்போது சுயாதீன அறங்காவலர்களை கட்டுப்படுத்த இப்படி ஒரு வாக்கெடுப்பை உருவாக்கி இந்த அறக்கட்டளையை ஏமாற்றியிருக்கிறீர்கள்”

“இது அறக்கட்டளைக்கு எதிரான ஏமாற்றுவேலை. ஏனென்றால், அறக்கட்டளையின் விதிமுறைகள்படி , சுயாதீன அறங்காவலர்களும் வாக்களிக்கும் உறுப்பினர்களும் சமமாக இருக்க வேண்டும். உள்ளாட்களால் மட்டுமே நிறைந்திருக்கக்கூடாது! மறுபடியும் படித்துப்பாருங்கள்!”

“நீங்கள் இரண்டு பேரும், எங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என ஒப்புக்கொண்ட, எளிதில் வளைந்து போகிற சி.இ.ஓ , சி.எஃப்.ஓ-வை வைத்து அக்‌ஷய பாத்ராவை கட்டுப்படுத்துகிறீர்கள். அக்‌ஷய பாத்ராவின் உடைமைகளை பயன்படுத்தியதற்கு நீங்கள் முறையான விலை கொடுக்கவில்லை. தணிக்கை குழு இதைக் கண்டுபிடித்தது ஒரு தனியார் நிறுவனத்தை வைத்து உண்மையை வெளியே கொண்டு வந்ததும், அவர்களுடைய வேலையை தடுக்க, அவர்களில் ஒரு உறுப்பினரை காலி செய்ய ஒரு வேட்டையை தொடங்குயிருக்கிறீர்கள். அவர் எல்லாவற்றையும் சரி செய்ய நிறைய நேரத்தையும், ஆற்றலையும் கொடுத்தவர். நீங்கள் இருவரும் அக்‌ஷய பாத்ராவின் உடைமைகளை நெறி தவறி பயன்படுத்திவிட்டு, மற்றவர்களுக்கு அறம் என்றால் என்ன என பாடம் நடத்துகிறீர்கள். உங்கள் இரட்டை வேடத்தையும், உங்கள் தந்திர புத்தியையும் நினைத்து நீங்கள் வெட்கப்பட வேண்டும்”

“ஜெய்ப்பூர், மதுராவில் இருக்கும் உங்கள் பக்த தலைவர்களுக்கு எதிரான அம்பலப்படுத்துபவர்களின் புகார்கள், அவர்கள் எப்படி அக்‌ஷய பாத்ராவின் ஊழியர்களை, சி.இ.ஓ-வை, சி.எஃப்.ஓ-வை பலவீனமாக்கி, எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல், நிதிகளை வேறு வழிக்கு மாற்றி, உடைமைகளை தவறாக பயன்படுத்தினார்கள் என்பதை காட்டிவிட்டது. இதை வெளிப்படுத்திய ஊழியர்களை தவிர வேறு எந்த அறங்காவலருக்கும் இது தெரிய வந்திருக்காது. ஜெய்ப்பூரில் முதலமைச்சரின் அலுவலகத்தில் இருக்கும் ஒரு நபர் இது குறித்து எழுதியிருக்கிறார்; அக்‌ஷய பாத்ரா, எங்களிடம் இருந்து மறைக்கப்பட்ட ஆனால் உங்களுக்கு நன்றாகவே தெரிகிற அக்‌ஷய பாத்ராவின் ரசீது புத்தகங்கள் எல்லாம் எப்படி தவறாக பயன்படுத்தப்படுகின்றன என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்”

“நாராயண மூர்த்தி மற்றும் குரு தேஷ் தேஷ்பாண்டேவின் பெயர்களை தவறாக பயன்படுத்தியிருக்கிறீர்கள். அமெரிக்காவில் இருக்கும் அறங்காவலர்களோடு பேச பயன்படுத்தியிருக்கிறீர்கள். இவர்களிடம் பாதி தகவல்களை மட்டுமே சொல்லிவிட்டு உங்களுடைய நாடகத்தை இவர்கள் ஆசிர்வதித்திருக்கிறார்கள் என தணிக்கை குழுவிடம் சொல்லியிருக்கிறீர்கள்”

“இருபது வருடங்கள் நாங்கள் உங்களை நம்பினோம். உங்களுக்கு தேவையான நேரம் உங்களோடு நின்றோம். உங்கள் பிரிவுகளுக்குள் சண்டை வந்த போது உங்களை காத்தோம். உங்கள் நடவடிக்கைகள் குறித்த பேச்சுக்கள் வந்த போது, உங்களுக்காக பொதுமக்கள் முன் நின்று பேசினோம். இதற்கு பதிலாக, வெளிப்படைத்தன்மை வேண்டுமென கேட்டதற்கு, எங்களை முதுகில் குத்திவிட்டீர்கள்”

“ஸ்ரீகிருஷ்ணனுக்கு உண்மை என்னவென்று தெரியும்; தந்திரங்கள் செய்து மூடி மறைப்பவர்களுக்கு எதிராக அவர் நீதி அளிப்பார்! தர்மமே வெல்லும். நீங்கள் இருவரும் இந்த விஷயத்தில் தர்மத்தின் பக்கம் இல்லை!”

இந்த கடிதத்தில் இருக்கும் குற்றச்சாட்டுக்களின் உண்மைத்தன்மையை தி வயர் சரி பார்க்கவில்லை. பதவி விலகிய மற்றுமொரு அறங்காவலர், உள் தணிக்கை குழுவின் அறிக்கையை ஏற்றுக் கொண்டவர், வேறொரு சுயாதீன அறங்காவலர் நவம்பர் 9 அன்று எழுதிய கடிதத்தை மேற்கோள் காட்டி இப்படி எழுதுகிறார் : “ உங்களுக்கு சீக்கிரமே தண்டனை கிடைக்க வேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன். அதை விட முக்கியமாக, நீங்கள் எந்த மோசடிக்கு தலைமை தாங்கி இருந்தீர்களோ அதன் முழுமையும் நம்பத்தகுந்தவர்களால் விசாரணை செய்யப்பட்டு வெளியே கொண்டுவரப்பட வேண்டும் என விரும்புகிறேன். அக்‌ஷய பாத்ராவின் வேலை உங்கள் பேராசை நிரம்பிய பிடியில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும்” .

சுயாதீன அறங்காவலர்களில், அபய் ஜெய்ன் 2020 ஃபெப்ரவரியில் பதவி விலகினார். ஆனால், அப்போது அவருடைய சக பணியாளர்கள், இருபது வருடங்கள் உடன் பயணித்திருந்தாலும் கூட, யாரும் அவர் பின் நிற்கவில்லை. அதற்கு பிறகு தான் இந்த விஷயம் இவ்வளவு தீவிரமானது. அறங்காவலர்கள் உண்மையில் பதவி விலக நினைக்கவில்லை, அப்படி சொல்லி அச்சுறுத்தத்தொடங்கியது இப்படி மோசமாக முடிந்திருக்கலாம் என்றும் ஒரு சாரார் சொல்கின்றனர். சொல்லப் போனால், இந்த சர்ச்சை தொடங்கிய போது, அக்‌ஷய பாத்ராவின் தலைவர் மது பண்டிட் தாஸா, சுயாதீன அறங்காவலர்களில் ஒருவருக்கு அக்டோபர் 18,2020 அன்று ஒரு மனமார்ந்த பதிலை எழுதியிருந்தார். தாஸாவின் கடிதத்தில் இருந்து சில பகுதிகள் :

“ஹரே கிருஷ்ணா. உங்களுடைய ராஜிநாமா கடிதத்தை பெறுவது மிகவும் வேதனையாக இருக்கிறது. அக்‌ஷய பாத்ராவிற்கு நீங்கள் ஒரு தூணாக பல வருடங்கள் இயங்கியிருக்கிறீர்கள்; உங்களுடைய சேவைகளை இழப்பது வேதனையாக இருக்கப் போகிறது. இந்நாட்டு குழந்தைகளின் நலனுக்கு இதொரு பெரிய இழப்பாக இருக்கப் போகிறது”

“நாம் இருபது வருடங்கள் ஒற்றுமையோடு வேலை செய்திருக்கிறோம். ஒரு விஷயத்தில் கருத்து வேறுபாடு வருவது நம்மை பிரிக்கக்கூடாது. பல்வேறு யூகங்களுக்கு மத்தியில், அம்பலப்படுத்துபவர்களின் பிரச்சினையில் நமக்கிடையே நம்பிக்கை குறைந்துவிட்டது. இறுதியாக, கிருஷ்ணருக்கு உண்மை தெரியும். யூகங்கள் நம்மை தவறாகவே வழி நடத்தும். அதை நான் விதி என்று தான் சொல்வேன். ஒரு விஷயத்தில் மாற்றுக் கருத்து இருப்பதை தவிர வேறு எதுவும் நம்பிக்கை இழக்கும் அளவு நாங்கள் செய்யவில்லை”
“நான் நேற்று தனிப்பட்ட முறையில் மோஹனை கேட்டுக் கொண்டேன். நாங்கள் அம்பலப்படுத்துபவர்களின் விஷயத்தில் எடுத்த நிலைப்பாட்டினால், பதவி விலகப் போவதில் பாலா உறுதியாக இருக்கிறார். மோஹன் மறுபடி யோசிப்பார் என நான் நம்புகிறேன். நீங்களும் யோசித்து, மோஹனை பதவியை தொடரச் சொல்ல வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்..”

“இதைத்தாண்டியும் எங்களோடு வேலை செய்ய முடியாது என்று நினைத்தால், ஒரு புது அறங்காவலர் குழுவை அமைத்துவிட்டு, தணிக்கை குழு முன் இருக்கும் வேலைகளை முடித்துவிட்டு போங்கள். ஒரு அறங்காவலராக இவ்வளவு செய்ய கடமைப்பட்டிருக்கிறீர்கள் இல்லையா? குழுவில் இருந்து விலகுவதற்கு முன் ஒரு கால அவகாசம் கொடுங்கள். இருபது வருடங்கள் இந்த பதவியில் இருந்துவிட்டு, உங்கள் பதவி விலகல்களை சமாளிக்கவேனும் குறைந்தபட்சம் நீங்கள் எங்களுக்கு உதவ வேண்டும்…”

இந்த குற்றச்சாட்டுகளின் இயல்பை வைத்துப் பார்க்கும் போது அரசு நிதிகள் இதில் ஈடுபட்டிருப்பதனால், பல-நிறுவன விசாரணை தான் உண்மையை வெளியே கொண்டு வர முடியும் போல இருக்கிறது. இரு தரப்பினரும் எழுதிக் கொண்ட கடிதங்களில் இருப்பது போல, கடவுள் நீதி வழங்க விசாரணை முடியும் வரை காத்திருக்கலாம். அல்லது, இரண்டும் ஒரே சமயத்தில் நடக்கலாம், யாரும் கட்டுப்படுத்த முடியாதல்லவா?

(www.thewire.in இணையதளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்)

‘அக்‌ஷய பாத்ரா’ நேர்மையான அமைப்பா? – கேள்வியை எழுப்பும் கடிதங்கள்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்