Aran Sei

பாலஸ்தீனத்தின் தெற்கு ஹெப்ரான் – இஸ்ரேல் ஆக்கிரமிப்புப் படைகளால் மீண்டும் மீண்டும் இடிக்கப்படும் வீடுகள்

image credit : thewire.in

-ராகிஸ் தெற்கு ஹெப்ரான் மலைகளில் ஒரு உயரமான பாறை நிலத்தின கூர்மையான உச்சியில் இருக்கும் ஒரு சிறிய கிராமம். கிராமத்தில் சிதறிக் கிடக்கும் வீடுகளின் இடிபாடுகளும், இருபுறமும் அவிகெயில், சாட் மாவோன் என்ற இரு சட்டவிரோத குடியிருப்புகளும் இல்லையென்றால் , முரட்டுத்தனமானது என்றாலும் அழகான வாழிடமாக அதுஇருந்திருக்கும். அ-ராகிஸ் கிராமத்தில் வீடுகள் இடிக்கப்படும் வரலாறு சில ஆண்டுகளாகவே நிகழ்ந்து வருகிறது.

2020, நவம்பர் 25 அன்று இராணுவம் இன்னும் 5 வீடுகளை இடித்தது. ஹாரூனின் பெற்றோரின் வீடு, ராஸ்மியின் வீடு, ஃபார்சியின் வீடு மற்றும் ஹாரூனுக்கும் அவருடைய வருங்கால மனைவிக்கும் ராஸ்மி கட்டிய வீடு ஆகியவை அதில் அடங்கும். அன்றிலிருந்து அந்தக் குடும்பம் கிராமத்தில் இன்னும் இடிபடாமல் இருக்கும் ஒரு குகையில் வாழ்ந்து வருகிறார்கள். இந்த குளிர்கால மாதங்களில் குகைக்குள் மிகவும் குளிராக இருக்கும். நான் சென்ற வாரம் சில மணி நேரம் அந்தப் பெற்றோர்களுடன் அதனுள் அமர்ந்து பார்த்திருந்ததால் அது எனக்குத் தெரியும்.

image credit : thewire.in
அஷ்ரஃப் – image credit : thewire.in

ஹாரூனின் அண்டை வீட்டுக்காரரான அஷ்ரஃப் சாலைக்கு மறுபக்கம் ஒரு தனித்த மலைக்குன்றில், ஒரு வறண்ட நீர் பாதைக்கு அருகில் உள்ள குடிசைகளும் ஆட்டுக் கிடைகளும் கொண்ட சுற்றுச் சுவருக்குள் வசிக்கிறார். புத்தாண்டு நாளில் அஷ்ரஃப் தனது ஆட்டுக்கிடை ஒன்றின் கூரையை பழுது பார்த்துக் கொண்டிருந்தார். கூரைக்கு தேவையான உலோகக் கம்பிகளையும் கம்பி வலைகளையும் அறுப்பதற்காக அவர் ஒரு ஜெனரேட்டரை வாடகைக்கு எடுத்து வந்திருந்தார். ஜனவரி 1-ம் தேதி வெள்ளிக்கிழமை. படைவீரர்கள் வழக்கமாக அவர்களது ஓய்வு நாளுக்கு (யூதர்களின்) முன்பு, வெள்ளிக்கிழமைகளில் அ-ராகிசிற்குள் வருவதில்லை. அதனால் அந்த வறண்ட குளிர் நாளில் தொந்தரவில்லாமல் வேலை செய்யலாம் என அஷ்ரஃப் நினைத்தார். அது தனது வீட்டின் மேல் ‘ட்ரோன்’ பறப்பதை பார்ப்பது வரைதான். அது குடியேறிகளுடையது என்று அவருக்குத் தெரியும். அது பிரச்சினையை கொண்டு வர வாய்ப்புள்ளது என்றும் அவருக்குத் தெரியும்.

image credit : thewire.in
ஹாரூன் – image credit : thewire.in

24 வயதான ஹாரூனுக்கு விரைவில் திருமணம் நடக்க இருந்தது. அவரை வழிபடும் 16 வயதான தம்பியும் ஐந்து சகோதரிகளும் அவருக்கு இருந்தனர். ஐந்து வயதான தோஹாதான் அவர்களில் சின்னப் பெண். ஹாரூன் தனது 12 வயதில் பள்ளிப் படிப்பை விட்டு விட்டு குடும்பத்தின் வெள்ளாடுகளையும், செம்மறி ஆடுகளையும் மேய்க்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். அத்துடன் குப்பைகளில் கிடக்கும் இரும்புத் துண்டுகளை சேகரித்து, விற்று சிறிது பணம் சம்பாதித்து வந்தார். பாலஸ்தீனியர்கள் வைத்திருக்க வேண்டிய அனுமதிச் சீட்டை அவர் பெற இயலா விட்டாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக இஸ்ரேலில் கட்டுமான வேலை செய்து வந்தார். உண்மையில் அதைப் பெறுவது மிகவும் கடினம். அவர்கள் அவரைப் பிடித்து விட்டார்கள். ஜனவரி 4-ம் தேதி அவர் இராணுவ நீதிமன்றத்தின் முன் போக வேண்டும். ஆனால் அது முடியாமல் போய்விட்டது.

ஹாரூனின் அம்மா தாய் உறுதியான மனம் கொண்ட, நன்கு பேசக் கூடிய, பல பேரழிவுகளை பார்த்த பெண். அவர் எனக்கு நடந்த கதையைக் கூறினார். அதன் பெரும் பகுதியை நான் நாளிதழ்கள் மூலமும், இணையம் மூலமூம் ஏற்கனவே அறிந்திருந்தாலும், அவருடைய வார்த்தைகளில் அதைக் கேட்பது வேறு. இடையிடையே அழுவதற்காக சில முறை பேச்சை நிறுத்தினார்.

image credit : thewire.in
image credit : thewire.in

தினமும் போலவே, அன்றும் ஹாரூனின் அப்பா ராஸ்மி ஹருனுடன் இருப்பதற்காக மருத்துவமனைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். ஆனாலும் புராதன விருந்தோம்பல் பாரம்பரியத்தின்படி எங்களை வரவேற்று குகைக்குள் அழைத்துச் சென்று சிறிது நேரம் எங்களோடு அமர்ந்திருந்தார். எல்லோரும் அவர் ஒரு கனிவான மனிதர் என்று கூறுகின்றனர். அவர் கடும் காலநிலைகளால் பண்பட்ட தெற்கு ஹெப்ரான் மலைகளைச் சேர்ந்த ஒரு பாலஸ்தீனிய மனிதரின் தோற்றத்தைக் கொண்டிருந்தார்.

image credit : thewire.in
image credit : thewire.in

நான் ஃபார்சி கூறிய அந்தக் கதையின் சுருக்கத்தை உங்களுக்குக் கூறுகிறேன். உங்களில் பலருக்கும் ஏற்கனவே இது தெரிந்திருக்கும். ஃபார்சி இதை முழுவதுமாக நேரில் கண்டவர். இதுவரை அவர் அதனை பலமுறை கூறியிருப்பார்.

குடியேறிகள் கூரையை பழுது பார்க்கும் அஸ்ரஃபின் குற்றச் செயலை தடுக்க படைவீரர்களை அனுப்பினர். மதியம் 2 மணி அளவில் ஐந்து படைவீரர்கள் அஸ்ரஃபின் வீட்டிற்குள் புகுந்து, அவரது மனைவியையும் மகனையும் அவமானப்படுத்தினர். அங்கு இருந்த ஜெனரேட்டரை கண்டதும் அதனை உடனடியாக பறிமுதல் செய்தனர். ஏன் ஒரு பாலஸ்தீனியர் ஜெனரேட்டரை பயன்படுத்தக் கூடாதா? இந்தக் கேள்வியை ஒரு புறம் ஒதுக்கி வைப்போம்.

அந்தப் படைவீரர்கள் ஜெனரேட்டரை தங்களுடைய வாகனத்திற்குத் தூக்கிச் சென்றனர். அதனை அஸ்ரஃப் எதிர்த்தார். அதனால் அவர்கள் அவரை அடித்து துவைத்தனர். தனது பக்கத்து வீட்டுக்காரருக்கு உதவ ராஸ்மி ஓடினார். ராஸ்மியையும் அவர்கள் அடித்து உதைத்தனர். வெளியில் நடப்பதைப் பார்த்த ஹாரூன் தன் தந்தையைக் காப்பாற்ற முயன்றார். அதனால் அவர்கள் ஹாரூனையும் அடித்தனர். இப்போது அஸ்ரஃப், ஹாரூன் மற்றும் இன்னொரு பக்கத்து வீட்டுக்காரர் முரத் ஆகியோர் படைவீரர்கள் கையிலிருந்த ஜெனரேட்டரை பிடுங்கினர். அந்த ஜெனரேட்டர் மிகவும் அடிப்படையானது, அதிகபட்சம் சில நூறு ஷெக்கெல்கள்(1 ஷெக்கர் சுமார் ரூ 21.97) மதிப்புடையது. அ-ராகிஸ் பற்றி நீங்கள் அறிந்திருந்தால் அந்த ஜெனரேட்டரை இழப்பது எவ்வளவு பெரிய விஷயம் என்பது உங்களுக்குப் புரியும்.

image credit : thewire.inimage credit : thewire.inimage credit : thewire.in

நான்கு படைவீரர்கள் நான்கு பாலஸ்தீனியர்களுக்கு எதிராக களமிறங்கினர். சிவில் நிர்வாகத்திலிருந்து வந்திருந்த ஐந்தாவது படைவீரர் ஓரமாக நின்று இதைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு சமயத்தில் அவர் வானை நோக்கிச் சுட்டார். அங்கே ஒரே கூச்சலும் குழப்பமுமாக இருந்தது. ஜெனரேட்டர் பலமுறை கைமாறிக் கொண்டே இருந்தது. இந்தச் சண்டையில், ஒரு படைவீரர் ஹாரூனை மிக அருகில் நேருக்கு நேர் சுட்டார். குண்டு தொண்டையில் ஊடுருவி முகுளத்தின் கீழ் 6வது 7வது பிரிவில் முதுகெலும்பை துண்டித்துவிட்டது. படைவீரர்கள் குறைந்தது 18 குண்டுகளை சுட்டனர். (கிராமமக்கள் அந்த குண்டுகளின் உறைகளை கண்டெடுத்தனர்). பிறகு அவர்கள் ஜெனரேட்டரை எடுத்துக் கொண்டு கிராமத்தை விட்டுப் போய் விட்டனர். சாலையில் பதுங்கி தாக்குவதற்கான அமைப்பை ஏற்படுத்திக் கொண்டனர்.

கதையின் மிகக் கடினமான பகுதி இனிமேல்தான் வருகிறது. ஹாரூன் கழுத்தில் சுடப்பட்டு, இறக்கும் தறுவாயில் அஸ்ரஃபின் காரில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படுகிறார். அஸ்ரஃப் வண்டியை ஓட்ட ஹாரூனின் அப்பா ராஸ்மி அவர்களுடன் இருந்தார். ஜெனரேட்டரை திருடிய, ஹாரூனை சுட்ட அதே படைவீரர்கள் காரை நிறுத்தினர். அவர்கள் காரின் டயர்களை சுட்டதில் ஒரு டயர் பஞ்சர் ஆனது.

அதிசயமாக, அஸ்ரஃப் மூன்று சக்கரத்திலேயே காரை ட்வானே கிராமம் வரை ஓட்டினார். அங்கு ஹாரூனை வேறு காரில் மாற்றிக் கொண்டு போன போது இராணுவம் ஏற்படுத்தி இருந்த சாலைத் தடுப்பில் மீண்டும் அதே படைவீரர்களால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். ஓட்டுநர் தடையை சமாளித்து வேகமாக ஓட்டி மருத்துவமனையை அடைந்தார். ‘இன்னும் பத்து நிமிடங்கள் தாமதமாக வந்திருந்தாலும் ஹாரூன் உயிர் பிழைத்திருக்க முடியாது’ என்றார்கள் மருத்துவர்கள்.

கழுத்திற்குக் கீழே முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார், ஹாரூன். ஆக்சிஜன் கருவியின் உதவியால்தான் சுவாசிக்கிறார். இறுதியில் சுயமாக சுவாசிக்கும் திறனைப் பெற்று விடவும் செய்யலாம். தற்போது நினைவுடன் இருக்கிறார். ஆனால் ஆக்சிஜன் வடிகுழாய் இருப்பதால் அவரால் பேச இயலவில்லை. அவர் பெரும்பாலும் கண்களாலேயே தகவல் தெரிவிக்கிறார். ஒருவேளை வாழ்நாள் முழுவதும் அவர் முடக்கு வாதத்தால் பாதிக்கப்படலாம். அவர் இஸ்ரேலில் உள்ள புனர்வாழ்வு மருத்துமனைக்கு மாற்றப்பட்டால்- அதுவும் விரைவில் நடக்கலாம் – நிலைமையில் முன்னேற்றம் வரும் என்று சிறிதளவு நம்பிக்கை உள்ளது.

மேல் உடலில் சில உணர்ச்சிகளை மீண்டும் பெற முடிவதுடன் சிறிது அசைக்கவும் முடியலாம். அவருடைய கைகளில் சிறிது எஞ்சிய உணர்வுகள் இருப்பதாக ஃபார்ஸி கூறுகிறார். ஆனால் அவர் அவருடைய தம்பி முகம்மதுவை நினைத்து மிகவும் கவலைப்படுகிறார். முகம்மதுவுக்கு முன்மாதிரி, ஆசிரியர், அறிவுரை கூறுபவர், நண்பர்- உலகத்தில் எல்லாமே ஹாரூன் தான். ஹாரூன் உயிர் வாழ்ந்தால் அவர் இன்னும் பல மாதங்கள் மருத்துவமனையில் இருப்பார். அதன் பிறகு என்ன?

image credit : thewire.in
image credit : thewire.in

இப்போது தெற்கு ஹெப்ரானில் வெயில் அடிக்கும் குளிர்கால நாள். அங்கு குளிர் எவ்வளவு மோசமாக இருக்கும் என்பதை நான் மறந்து விட்டிருந்தேன். காற்று கவலையின் அதிர்ச்சியைப் போல உங்களை ஊடுருவிச் செல்கிறது. சூரிய ஒளி உறைந்த படிகமாக உள்ளது.

நவம்பர் 25-ம் தேதி இடித்துத் தள்ளப்பட்ட வீடுகளுக்கு நாங்கள் சென்று பார்த்தோம்‌. அவற்றில் ஃபார்ஸியின் வீடு, ஆட்டுக்கிடைக்கு அருகில் இருந்த ராஸ்மியின் வீடு, அதற்கடுத்து ஹாரூனுக்கும் அவரது வருங்கால மனைவிக்காகவும் ராஸ்மி கட்டிய வீடு ஆகியவை அடங்கும். அழகான மலைகளுக்கும், நீர் போக்கு பாதைகளுக்கும் இடையில் தொங்கிக் கொண்டிருக்கும் அனாதையாக விடப்பட்டுள்ள ஒரு கிராமம்.

image credit : thewire.in
image credit : thewire.in

நவம்பர் 25 அன்று செய்யப்பட்ட இடிப்புகளைப் பற்றி சொல்வதற்கு நிறைய உள்ளது. நிகழ்வுகளின் ஒரு நேர் வரிசை அதிலிருந்து புத்தாண்டு தின நிகழ்வுகளுக்கு இட்டுச் செல்கிறது. கடந்த சில வாரங்களில் சிவில் நிர்வாகம் தெற்கு ஹெப்ரான் மலைகளில் வீடுகளை இடிக்கும் களியாட்டங்களை நடத்தியிருக்கிறது. அ-ராகிஸிற்கு அருகில் உள்ள ஹலட்-அல்- தாப் என்ற கிராமத்தில் ஜாபர் என்பவருடையது போல சில வீடுகளை நான்காவது முறையாக இடிக்கப்பட்டன.

மீண்டும் அவருடைய வீட்டை இடித்துத் தள்ளிய அதே நாளில் ஜாபர் மீண்டும் கட்ட துவங்கியுள்ளார். ஏமியல் கூறுவது போல, “ஜியோனிஸ்டுகள் இந்த மனிதரை வென்று விட முடியும் என நினைக்கிறார்கள்!.”

அமெரிக்காவில் புதிய அரசு பதவியேற்றிருக்கும் நிலையில் இந்தப் பகுதிகளில் அழிவை ஏற்படுத்த இதுவே அவர்களுக்கான கடைசி வாய்ப்பு என இஸ்ரால் அரசு நினைக்கலாம். இது இந்தப் பகுதியை இறுதியாகவும் அதிகாரபூர்வமாகவும் இணைத்துக் கொள்வது பற்றியது, எப்படியானாலும் நடைமுறையில் அது நடந்து விட்டது. இனப்பாகுபாடு, தீவிர குரூரம், நிலைத்த யூத மேலாதிக்கம் ஆகிய மற்ற எல்லாவற்றையும் பற்றியது, இது. ஆனால், அந்த நீடித்த காலம் என்பது எதிர்பார்ப்பதை விட குறுகியதாகவே இருப்பதாக முடிந்து போகலாம்.

இந்த கதை நான் அறிந்ததுதான். ஆனால் நான் அந்தக் குடும்பத்தை சந்தித்து அதனை ஃபார்ஸியிதம் நேரடியாக கேட்க விரும்பினேன். குறைந்தது அவர்களோடு இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதிலிருந்து, மற்ற எது பற்றியும் என்னால் சிந்திக்க முடியவில்லை. ஒருவரது வாழ்க்கை ஒரு படைவீரனின் விருப்பத்தால் சிதைந்து போனது.

ஆனால் இதில் முக்கியமானது என்னவென்றால், இந்த விரைவான ஒரு நிகழ்வு மின்னல் கீற்றைப் போல, ஒரு துப்பாக்கிச் சூட்டைப் போல ஒட்டுமொத்த ஆக்கிரமிப்பின் உள்தர்க்கத்தை வெளிச்சம் போட்டு காட்டி விட்டது. இது எந்த வகையிலும் ஒரு பிறழ்வு இல்லை, விதிவிலக்கு இல்லை, ஒரு அறியாமல் நடந்த தவறு அல்ல.

துப்பாக்கியால் சுட்ட படை வீரன் என்ன நினைத்தான் என்பது யாருக்கும் தெரியாது. ஒருவேளை அவன் பீதியடைந்திருக்கலாம். ஒரு வேளை அவன் அராபியர்களை வெறுக்கலாம். ஆனாலும் அவன் செய்ததின் நினைவுகளோடு அவன் வாழ்நாள் முழுவதும் வாழ வேண்டும். யாருக்குத் தெரியும், ஒருவேளை குற்றவுணர்வு தனது பயங்கரத்தையும், மாயத்தையையும் அவனது இதயத்தில் செயல்படுத்தலாம். கிராமத்துக்கு படைவீரர்கள் தமது அசிங்கமான, அற்பத்தனமான நோக்கத்திற்காக வந்த பிறகு மற்றவை எல்லாம் இயல்பாக நடந்தன, ஒருவேளை தவிர்க்க முடியாமல் நடந்தன. உச்சகட்ட கொடூரம், அல்லது ஒரு முடிவு பின்னர் அதன்பிறகு சாலை தடுப்புகளில் தொடர்ந்தது.

மார்ச் 2-ம் தேதி படைவீரர்கள் மீண்டும் அ-ராகிஸ் வந்து இன்னொரு வீட்டை இடித்துத் தள்ளினர். அது காதிமினுடையது. ஹாரூனுக்கு நடந்தவற்றுக்குப் பிறகு அ-ராகிஸை சில வாரங்கள் தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்று சாதாரண மனிதர் ஒருவர் என நினைக்கலாம். அந்த சாதாரண மனிதர் நினைப்பது தவறு.

இறைவன் ஒருவேளை அதிசயித்தக்க வகையில் ஹாரூனை குணமாக்கலாம். ஃபார்ஸி இந்த வாக்கியத்தை காலையில் பலமுறை உச்சரித்தார்.

எல்லாம் வல்ல கடவுளே, என்று நாம் எல்லோரும் சொல்கிறோம். இறைவன் உனக்கு நல்ல உடல் நலத்தைக் கொடுக்கட்டும்.

நான் இந்த கதையை சொல்வேன் என்று அவருக்கு உறுதி அளிக்கிறேன். அதன் மூலம் வெகு தொலைவிர் இருப்பவர்களும் அவருடைய வலியை அறிந்து உணர்ந்து கொள்வார்கள்

www.thewire.in இணைய தளத்தில் வெளியான டேவிட் ஷூல்மான் எழுதிய கட்டுரையின் மொழியாக்கம்

பாலஸ்தீனத்தின் தெற்கு ஹெப்ரான் – இஸ்ரேல் ஆக்கிரமிப்புப் படைகளால் மீண்டும் மீண்டும் இடிக்கப்படும் வீடுகள்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்