சென்னையில் காவல்நிலைய விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மரணமடைந்த்தற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், காவல்துறை போர்வையில் அப்பாவிகள் மீது கொடூர தாக்குதலை நிகழ்த்தும் காவல்துறையினரை தண்டிக்கும் உறுதியான காவல்துறை சீர்திருத்தம் தேவை என வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை கெல்லீஸ் பகுதியில், கடந்த 18ம் தேதி வாகனச் சோதனையின் போது காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட, கட்டுமான தொழிலாளியான பட்டினம்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் (25) என்ற இளைஞர், காவல்துறையினரின் அத்துமீறிய தாக்குதல் காரணமாக மரணமடைந்துள்ளதாக வெளியான செய்தி அதிர்ச்சி அளிக்கின்றது. இந்த காவல்நிலைய தாக்குதல் மரணமானது சாத்தான்குளத்தில் நிகழ்ந்த காவல் சித்திரவதை தாக்குதல் படுகொலைகளை நினைவுப்படுத்துகின்றது. இந்த சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது.
சென்னை: விசாரணையின் போது வாலிபர் மரணம் – காவல் மரணமென குடும்பத்தினர் குற்றச்சாட்டு
கடந்த ஜனவரி மாதம் தான் சென்னை வியாசர்பாடி புதுநகரை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் வாகனச் சோதனையின் போது காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டது பெரும் விவாதமானது. அதனைத் தொடர்ந்து எழுந்த கண்டனங்கள் காரணமாக சம்மந்தப்பட்ட காவல் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதோடு, காவல்துறையினர் பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும் என தமிழக காவல்துறை தலைவரின் அறிக்கையும் வெளியானது. ஆனாலும் அந்த அறிவுரையை காவல்துறையில் உள்ளவர்கள் காதில் வாங்கியதாக தெரியவில்லை என்பதை நடக்கும் தொடர் நிகழ்வுகள் உணர்த்துகின்றன.
சட்டம் ஒழுங்கை காப்பாற்றவே காவல்துறை அதிகாரிகளுக்கு உரிமை அளிக்கப்பட்டுள்ளதே தவிர அப்பாவிகளின் உயிர்களை பறிப்பதற்கு அல்ல. காவல் சித்திரவதை தாக்குதல் மரணம் என்பது மனித தன்மையற்ற செயலாகும். தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் போலீஸ் காவல் மற்றும் நீதிமன்ற காவலில் 232 பேர் உயிழந்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவிக்கின்றது. காவல்துறையில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் இத்தகைய ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கைகள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
காவல்துறை என்ற போர்வையில் மனிதாபிமானமற்ற செயல்கள் மற்றும் நடைமுறைகளுக்கு இடமில்லை என்பதற்கான உறுதியான சமிக்கையாக, அப்பாவிகள் மீது நிகழ்த்தும் தாக்குதல், சித்திரவதை மற்றும் காவல் மரணத்திற்கு காரணமான காவல்துறையினரை தண்டிக்கும் உத்தரவாதம் தேவைப்படுகிறது. ஆகவே, காவல்துறை சீர்திருத்தங்கள் மற்றும் காவல் மரணங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு ஆலோசிக்க வேண்டிய முக்கிய தருணம் ஏற்பட்டுள்ளது.
மேற்கண்ட இளைஞர் விக்ணேஷ் மரண விவகாரத்தில் சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து அவர்களை பணியிடை நீக்கம் செய்வதோடு, சிபிசிஐடி விசாரணையை விரைவுப்படுத்தி குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட இளைஞரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடும் வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
******************** *********************** *************************
சீமானை இயக்குவது பார்ப்பனியம் தான்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.