இஸ்லாமியர்களின் மீதான வெறுப்பு பேச்சு மற்றும் தாக்குதல்கள் குறித்து பிரதமர் மௌனம் காப்பதுதான் இத்தகைய வெறுப்பு பேச்சுக்களைத் தூண்டுகிறது என்று பிரதமர் அலுவலகத்திற்குப் பெங்களூரு மற்றும் அகமதாபாத்தில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்களின் (ஐஐஎம்) மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நேற்று(ஜனவரி 7) கடிதம் எழுதியுள்ளனர்.
பெங்களூரு மற்றும் அகமதாபாத்தில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 16 ஆசிரியர்கள் மற்றும் 167 மாணவர்களும் சேர்த்து மொத்தமாக 183 பேர் பேர் கையெழுத்திட்டுள்ள இந்த கடிதத்தில்,
“மாண்புமிகு இந்தியப் பிரதமர் மோடி அவர்களே, இந்தியாவில் அதிகரித்து வரும் சகிப்புத்தன்மையின்மை குறித்த உங்கள் மௌனம், நம் நாட்டின் பன்முக பண்பாட்டிற்கு மதிப்பளிக்கும் நம் அனைவருக்கும் வருத்தமளிக்கிறது. உங்களது இந்த மௌனம், வெறுப்பு நிறைந்த குரல்களுக்குத் தைரியம் கொடுத்துள்ளது. இது நமது நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் இந்து மதத்திற்கு மாற்ற வேண்டும் என்று பெங்களூரு தெற்கு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான பாஜகவைச் சேர்ந்த தேஜஸ்வி சூர்யாவின் கருத்துக்கள் சர்ச்சையைக் கிளப்பின. ஹரித்வாரில் நடந்த தர்ம சன்சத் நிகழ்ச்சியானது, இந்தியாவில் பல இடங்களில் தேவாலயங்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் நடத்தத் தூண்டுதலாக அமைந்தன.
“இந்திய நாட்டிலுள்ள எவரொருவரும் தனது மதத்தை எவ்வித அச்சமும் அவமானமும் இன்றி கண்ணியத்துடன் பின்பற்றும் உரிமையை நமது அரசியலமைப்பு சட்டம் வழங்குகிறது. ஆனால், நம் நாட்டில் இப்போது ஒரு அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. சமீப நாட்களில் தேவாலயங்கள் உட்பட சிறுபான்மை மத வழிபாட்டுத் தலங்கள் சேதப்படுத்தப்படுகின்றன. நமது இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்குக் கொள்வதற்கு ஆயுதம் ஏந்த அழைப்பு விடுக்கப்படுகிறது. இந்திய மக்களைப் பிளவுபடுத்த முயலும் இத்தகைய சக்திகளுக்கு எதிராகப் பிரதமர் உறுதியாக நிற்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என்று அந்த கடித்ததில் பெங்களூரு மற்றும் அகமதாபாத்தில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Source : Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.