Aran Sei

யாதும் ஊரே யாவரும் கேளீர்: தென்கொரியாவில் நடைபெற்ற 2023-ம் ஆண்டு தமிழர் திருநாள் பொங்கல் நிகழ்வுகள்

கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2023, திருவள்ளுவர் ஆண்டு 2054, தைத்திங்கள் 29-ம் நாள் ஞாயிறன்று (12 பிப்ரவரி 2023) கச்சான் பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. கொரியாவில் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக, பொங்கல் நிகழ்வுகள் இணையவழி இயங்கலை மூலமாக நடைபெற்று வந்தது. இவ்வாண்டு பொங்கல் நிகழ்வுகள் நேரடி விழாவாக முன்னெடுக்கப்பட்டது. கொரியாவின் பல்வேறு பகுதிகளிருந்து பெண்கள், குழந்தைகள் உட்பட 200-விற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள். மகளிர் குத்துவிளக்கேற்ற தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்வு இனிதே தொடங்கியது.

ஆளுநரின் பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழ்நாடு இலச்சினை எங்கே? – மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி

இந்தியத்தூதரகத்தின் கன்சுலார் ஜெனரல் திரு நரேந்திர சர்மா கலந்துகொண்டு மாண்புமிகு தூதர் அமித்குமார் அவர்களின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்தார். கொரியாவில் முனைவர் பட்டம் பெற்று, பேராசிரியராக பணிபுரியும் ம. பாலச்சந்திரன், இங்கு தமிழ்ச் சமூகம் வளமுடன் வாழ பதிவு செய்யப்பட்ட தமிழ்ச் சங்கம் வலுவுடன் இருக்க வேண்டும் என்று வாழ்த்தினார். இளைஞர்களால் உருவாக்கப்பட்டு வழிநடத்தப்படும் கொரிய தமிழ்ச் சங்கத்தின் வளர்ச்சியின் எப்பொழுதும் அக்கறை கொண்ட பொறியாளரும் அரசியல் பிரமுகருமான திரு. காரை செல்வராஜ் மற்றும் ஊடகவியலாளர் மு. அசிப் ஆகியோர் நேரலையில் கலந்துகொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர். இளம் விங்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் உள்ளிட்டோர் துடிப்புடன் தமிழ்ப்பணியாற்றுவதை பாராட்டி தமிழர் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

கொரியாவில் நடைபெறும் தமிழர் திருநாள் நிகழ்வு தமிழ்ப்பண்பாட்டின் தொடர்ச்சி என்று குறிப்பிட்ட அசீப், கீழடி அகழாய்வு சான்றுகள் “யாதும் ஊரே யாவரும் கேளீர், திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” உள்ளிட்ட மேற்கோள்கள் சங்ககாலம் தொட்டு நமது வாழ்வியலாக இருந்து வருவதை எடுத்துரைத்து இன்றும் நம்மை உலகோடு இணைக்கிறது என்றார்.இவற்றை நினைவில் வைத்து எவ்வளவு நெருக்கடிகள் வந்தாலும் வெறுப்புகளை, சுரண்டல்களை புறந்தள்ளி தமிழர்கள் முன் செல்லவேண்டும் என்று குறிப்பிட்டு உழைப்பிற்கு மதிப்பளிக்கும் தமிழர் திருநாளில் வாழ்த்துகிறேன் என்றார்.

போராடும் உழவர்களோடு பொங்கல் திருநாளை கொண்டாடுவோம் – சிபிஎம் அழைப்பு

தமிழரின் பாரம்பரிய கலைகளான பரதநாட்டியத்தை செல்வி சாரா பாலச்சந்திரன் மற்றும் செல்வி சரஸ்வதி நித்யானந்தம் ஆகியோர் நிகழ்த்த, செல்வி நேஹாஸ்ரீ சாமிராஜன் கம்புடன் வேல்கம்புடன் போரிட்ட தமிழரின் வீரத்தை தனது சிலம்பாட்டத்தின் மூலம் வெளிப்படுத்தினார். செல்வி அக்சயா முத்துகிருஷ்ணன் பியானோ வாசிக்க, செல்வி நிவேதாஸ்ரீ லக்ஷ்மனப்பெருமாள் மற்றும் திரு. விபின் ஜியோ ஆகியோர் திரையிசை பாடல்களை பாடி மகிழ்வித்தனர்.

தமிழர் திருநாள் – 2023, இன்றியமையாத அங்கமாக, அறிவுரைக்குழு உறுப்பினர்கள் முனைவர் இரா. அச்சுதன், செ. இரத்ன சிங் மற்றும் த. எடிசன் வழிக்காட்டுதலின்படி உரிய தேர்தல் நடைமுறைகளின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முனைவர் செல்வராஜ் அரவிந்தராஜா தலைமையிலான புதிய ஆளுமைக்குழுவினர் தூதரகத்தின் கன்சுலார், சங்க உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றிய அறிவுரைக்குழு உறுப்பினர்கள் முனைவர்கள் போஜன் கருணாகரன், அந்தோணி ஆரோக்கியசாமி ஆகியோர் முன்னிலையில் தமிழ்த்தாயின் பெயரால் உறுதிமொழியெடுத்து பொறுப்பேற்றனர். பணிநிறைவுபெறும் தலைவரும் சங்க உருவாக்கத்திற்கு கள வேலைகளை செய்தவருமான முனைவர் சுப்ரமணியன் இராமசுந்தரம் நிகழ்வை ஒருங்கிணைத்தார். அண்ணன்கள் கடும் உழைப்பால் உருவாகிய சங்கம் முறைப்படி தம்பிகளின் கைகளில் ஒப்படைக்கப்பட்ட நிகழ்வு அனைவரையும் நெகிழச்செய்தது.

மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை புதிய தலைமை பொறுப்பேற்க வேண்டும் என்கிற சங்கத்தின் சட்டதிட்டத்தைப் பின்பற்றி அண்ணன்கள் தம்பிகளிடம் ஒப்படைத்து தமிழ் சமுகத்தில் புதிய தலைமைகள் வழிசமைக்கப்பட்டதை சிறந்த முன்மாதிரி என்று அனைவரும் பாராட்டினர்.

இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்து சாப்பிட்ட உணவுகளில் தொடர்ந்து 7 ஆண்டாக பிரியாணி முதலிடம் – ஸ்விக்கி நிறுவனம் தகவல்

கவிதை மற்றும் கட்டுரைப்போட்டிகள் முன்னறிவித்தல் மூலம் நடைபெற்றது. கவிஞர்கள் கவிபாட கட்டுரையாளர்கள் கருத்துக்களை அறியத்தந்தனர். பொங்கலுடன் கூடிய நண்பகல் தமிழ்-சைவ உணவு பரிமாறப்பட்டது. பின்னர் மழலையர் நிகழ்வுகள் நடைபெற்றது. சிறுவர் சிறுமியரின் பாடல், நடனம் மற்றும் பேச்சு என அரங்கம் மகிழ்வுற நடைபெற்ற நிகழ்வு திருமணமான மற்றும் திருமணத்திற்குக் காத்திருக்கும் ஆடவர் மற்றும் மகளிர் குழுக்கள் பங்குபெற்ற கயிறு இழுக்கும் போட்டி மிகவும் பரபரப்பாக நடைபெற்றது. இதில் திருமணமான ஆடவரும், திருமணத்திற்குக் காத்திருக்கும் மகளிரும் வெற்றிபெற்றனர். பின்னர், அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டு,

பின்னர் இந்நிகழ்விற்கு வாழ்த்து அனுப்பிய நாட்டிய கலைஞரும், தமிழ் நாடு அரசின் திட்டக்குழு உறுப்பினர் முனைவர் நர்த்தகி நடராஜ், தமிழ் நாடு அரசின் அயலகத் தமிழர் நல வாரியத்தின் தலைவர் முனைவர் கார்த்திகேய சேனாதிபதி, வருகை புரிந்த நிகழ்வை சிறப்பித்த இந்திய தூதரகத்தின் கன்சுலார் நரேந்திர சர்மா, சங்கத்தின் அனைத்து தமிழர் திருநாள் நிகழ்வுகளுக்கும் வாழ்த்து தெரிவித்துவரும் மூத்த ஊடகவியலாளர் நக்கீரன் கோபால், எழுத்தாளர் ஆதனூர், வி. ஜி. பி. உலகத்தமிழ்சங்கத்தின் தலைவர் முனைவர் வி.ஜி. சந்தோசம், சன் செய்தி தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியர் திரு. மு. குணசேகரன், இந்து தமிழ் திசை இணைய ஆசிரியர் திரு. பாரதி தமிழன், கெவின் கேர் நிறுவனத்தின் அங்கத்தினரும், மூத்த குடி அமைப்பின் தலைவருமான திரு அசோக் குமார், மற்றும் இரஷ்ய தமிழ்ச் சங்கத்தின் தலைவர் சாமியப்பன் சேகர், மற்றும் கோபி கலைக்கல்லூரியில் இயற்பியல் துறை பேராசிரியர்கள் உள்ளிட்டோருக்கு சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. முன்னதாக அனைவரின் வாழ்த்தும் அரங்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.

நிகழ்விற்கு அரங்கம் தந்து உதவிய கச்சான் பல்கலைக்கழகத்திற்கும் நன்றி கூறி நாட்டுப்பண்ணுடன் நிறைவுபெற்றது.

நிகழ்விற்கான ஏற்பாட்டினை பொறுப்பேற்றுக்கொண்ட சங்கத்தின் புதிய ஆளுமைக்குழுவின் அங்கத்தினர்களான செ. அரவிந்தராஜா, தெ. விஜயலட்சுமி, கோவி. சரவணன், பீ. சகாய டர்சியூஸ், ஆ. சிவகுமார், இரா. மணிகண்டன், மு.சந்திரன், ந. முத்துசாமி, பி. ஜெரோம், மு. பாலாஜி, ஜி. சம்பத்குமார், மு. ஆனந்த், ஆ. பாரதி, இ. செலஸ்டின்இராஜா, தி. மணிகண்டன், சந்தோஷ்குமார், ஹா. ஆஷிக் இலாஹி, வே. ஹேமநாதன், இரா. சாமிராஜன், ந. வைஷ்ணவி, விபின் ஜியோ, ஆகாஷ் விபின், பத்ம பிரியா, மற்றும் இரவி ஆகியோர் செய்திருந்தனர்.

இந்தியாவில் மதச் சுதந்திரம் மோசமடைந்துள்ளன – சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் அறிக்கை 

மேனாள் ஆளுமைக்குழு உறுப்பினர்களான முனைவர்கள் கு. இராமன் மற்றும் மோ. பத்மநாபன் உள்ளிட்டோர் வழிகாட்டி உதவி புரிந்தனர்.

விழாவிற்கான உதவிகளை கச்சான் பல்கலையில் இருக்கும் சங்கத்தின் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் வீ. மேகலா, மற்றும் மு. சந்திரன் ஆகியோர் சங்கத்தின் நிகழ்வு இனிதே நிறைவுற வழிவகை செய்தனர்.

யாதும் ஊரே யாவரும் கேளீர்: தென்கொரியாவில் நடைபெற்ற 2023-ம் ஆண்டு தமிழர் திருநாள் பொங்கல் நிகழ்வுகள்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்