அமெரிக்காவில், கொரோனா நோய்த்தொற்றால் நிமிடத்துக்கு ஒருவர் இறக்கும் நிலையில் அதிபர் தேர்தல் தொடர்பான குடியரசுக் கட்சியின் சட்ட எதிர்ப்புகள் பின்னடைவைச் சந்தித்து வருகின்றன. இப்போதைய அதிபர் டிரம்ப், ஜோ பைடனுக்கு எதிராக தேர்தலில் தனது தோல்வியை ஏற்றுக் கொள்ளாமல், ஊடகங்களைச் சந்திப்பதை தவிர்த்து, பொதுவெளியில் தென்படாமல், முடங்கி விட்டிருக்கிறார் என்று தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த வெள்ளிக் கிழமை, அமெரிக்காவில் 1,448 பேர் கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தார்கள் என்று ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது. இது ஒரு நிமிடத்துக்கு ஒருவர் இறப்பதற்கு சமமானது என்று புளூம்பெர்க் ஊடகவியலாளர் ஸ்டீவன் டென்னிஸ் ட்வீட் செய்துள்ளார்.
The USA COVID death toll run-rate is now *1 per minute.*
— Steven Dennis (@StevenTDennis) November 22, 2020
கடந்த நவம்பர் 3-ம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் அதிக மாநிலங்களில் பெரும்பான்மை வாக்குகளை பெற்று வெற்றி அடைந்துள்ளார். ஆனால், பென்சில்வேனியா, ஜார்ஜியா போன்ற மாநிலங்களில் இலட்சக்கணக்கான தபால் வாக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அதிபர் டிரம்பும், குடியரசுக் கட்சியும் நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
டிரம்பின் இந்த முயற்சிகளுக்கான சமீபத்திய பின்னடைவாக, பென்சில்வேனியா மாநிலத்தில், சுமார் 70 லட்சம் வாக்குகளை செல்லாது என்று அறிவிக்கக் கோரும் டிரம்ப் தரப்பின் கோரிக்கையை ஒரு குடியரசுக்கட்சியைச் சேர்ந்த அமெரிக்க மாவட்ட நீதிமன்ற நீதிபதி, சனிக்கிழமை அன்று நிராகரித்திருக்கிறார்.
“மனுதாரர்களின் வாதம், ஃபிராங்கன்ஸ்டைன் பூதத்தைப் போல இரண்டு வெவ்வேறு அடிப்படைகளில் இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது.” என்று டிரம்புக்கு கடுமையான பின்னடைவை அளிக்கும் உத்தரவில் எழுதியுள்ளார்.
அதிபராக தொடர்ந்து நீடிக்க வேண்டுமானால், டிரம்ப் பென்சில்வேனியா மாநிலத்தில் ஜோ பைடனின் 81,000 வாக்கு முன்னிலையை ஒழித்துக் கட்டுவதற்கு வழி கண்டுபிடிக்க வேண்டும் என்று தி கார்டியன் தெரிவிக்கிறது.
இந்நிலையில், டிரம்ப் பொதுவெளியில் தென்படாமலே பல நாட்கள் கடந்து விட்டன என்றும், அவர் ஊடகவியலாளர் சந்திப்புகளை நடத்துவதில்லை எனவும், பழமைவாத ஊடகங்களைக் கூட அழைத்து பேசுவதை நிறுத்தி விட்டார் என்றும் தி கார்டியன் பத்திரிகையின் வாஷிங்டன் செய்தியாளர் டேவிட் ஸ்மித் எழுதியுள்ளார்.
1970-களில் அதிபராக இருந்த “ரிச்சர்ட் நிக்சனுக்கு பிறகு நாட்டு மக்களிடமிருந்து தனிமைப்பட்டு விட்ட ஒரு அதிபர் டொனால்ட் டிரம்ப்தான்” என்று கூறியுள்ளார், மின்னசோட்டா பல்கலைக் கழகத்தின் அரசியல் துறை இயக்குநர் லேரி ஜேக்கப்ஸ்.
“டொனால்ட் டிரம்ப் ஒரு பெரும் அரசியல் தோல்வியை சந்தித்ததோடு மட்டுமின்றி, அவர் ஒரு உணர்ச்சி ரீதியான உடைவையும் எதிர்கொள்கிறார் என்பது தெளிவு” என்று அவர் கூறியுள்ளார். “இது வழக்கத்தை விட மோசமாக அவர் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதில் வெளிப்படுகிறது. அவர் தன்னைத் தானே ஒரு விதமான உளவியல் தனிமையில் அமர்த்திக் கொண்டிருக்கிறார்.” என்று கூறியுள்ள அவர், “பொதுமக்கள் மொழியில் சொல்வதானால் அவருக்கு கிறுக்கு பிடித்து விட்டது” என்றும் கூறியுள்ளார்.
நாட்டின் தலைநகர் வாஷிங்டனில் உள்ள குடியரசுக் கட்சி தலைமை, அதிபர் தேர்தல் முடிவுகளை மாற்றுவதற்கான அதிபர் டிரம்பின் கடைசி முயற்சிகளை ஆதரிக்கிறது. ஆனால், இரண்டு தேசிய பாதுகாப்பு முன்னாள் ஆலோசகர்கள் உட்பட பல குடியரசுக் கட்சி தலைவர்கள் டிரம்பை வெளிப்படையாக இந்த முயற்சிகளை எதிர்த்துள்ளனர்.
டிரம்ப் அரசாங்கத்தின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், “பல்வேறு மாநிலங்களில் தாக்கல் செய்த 30 வழக்குகளில் 2-ஐ தவிர மற்றவற்றில் டிரம்ப் தோல்வியை கண்டு விட்டார்” என்று கூறியிருக்கிறார். “இப்போது டிரம்ப் ஜன்னல் வழியாக கல் வீச்சு நடத்தி வருகிறார். தெருவில் கலவரம் செய்பவரைப் போல நடந்து கொள்கிறார்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
டிரம்ப் அரசாங்கத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றிய இன்னொரு குடியரசுக் கட்சித் தலைவர் எச்ஆர் மெக் மாஸ்டர், “டிரம்பின் செயல்பாடுகள் நமது எதிரிகளின் கரங்களை வலுப்படுத்துகின்றன. உதாரணமாக, ரசியாவைப் பொறுத்தவரையில் யார் வெற்றி பெற்றாலும் அவர்களுக்குக் கவலை இல்லை. பல அமெரிக்கர்கள் முடிவின் மீது அவநம்பிக்கை கொண்டு அது அமெரிக்க ஜனநாயகத்தை பலவீனப்படுத்துவதை அது விரும்புகிறது” என்று கூறியுள்ளார்.
மேரிலாந்து மாநிலத்தின் ஆளுநர், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த லேரி ஹோகன், “ஜனவரி 20ம் தேதி ஜோ பைடன் அதிபராக பதவி ஏற்பார்” என்று கூறியுள்ளார். “உலகின் பிற நாடுகளில் தேர்தலை அமெரிக்கா மேற்பார்வையிடுவது வழக்கம். ஆனால் இப்போது நாமே ஒரு வாழைப்பழ குடியரசாகி விட்டோம்” என்று அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை, மக்களின் தீர்ப்பை புறக்கணித்து விட்டு தன்னை அவர்களது மாநிலத்தில் வெற்றிபெற்றவராக அறிவிக்கும்படி வலியுறுத்துவதற்கான அதிபர் டிரம்ப் மிச்சிகன் மாநிலத்தைச் சேர்ந்த குடியரசுக் கட்சி தலைவர்களை வெள்ளை மாளிகையில் சந்தித்திருக்கிறார் என்று தி கார்டியன் தெரிவிக்கிறது. உள்ளூர் அளவிலும், நாடு அளவிலும் இந்தத் தேர்தல் மிகவும் நம்பகத்தன்மையுடன் நடத்தப்பட்டது என்று அதிகாரிகள் அறிவித்த பிறகும் அதிபர் டிரம்ப் மிச்சிகன் மற்றும் பிற போர்க்கள மாநிலங்களின் முடிவை தனது கட்சி ஆதரவாளர்கள் மூலம் தனக்கு சாதகமாக மாற்றுவதற்கு முயற்சித்து வருகிறார்.
பென்சில்வேனியாவில் வாக்குகளை ரத்து செய்வதை நிராகரித்த தீர்ப்பில் நீதிபதி மாத்யூ பிரான், மாநில அதிகாரிகள் தேர்தல் முடிவுகளை அதிகாரபூர்வமாக வெளியிடலாம் என்று அனுமதித்துள்ளார். ஏற்கனவே, இதே போன்ற நீதிமன்ற வழக்குகள் ஜார்ஜியா, மிச்சிகன், அரிசோனா மாநிலங்களில் தோல்வியடைந்து, அம்மாநிலங்கள் தமது வாக்குப் பதிவு விபரங்களை அதிகாரபூர்வமாக வெளியிடுவதை தடுக்க முடியாமல் போயுள்ளது.
பென்சில்வேனியா தீர்ப்பை எதிர்த்து டிரம்ப் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.