அமெரிக்க நாடாளுமன்றத்தில், இரு அவைகளும் கூடி, அதிபர் தேர்தல் முடிவுகளை இறுதி செய்ய வேண்டிய நேரத்தில், தேர்தலில் தோல்வியடைந்த இப்போதைய அதிபர் டிரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற கட்டிடத்துக்குள் நுழைந்து, நாடாளுமன்ற கூட்டத்தை கலைத்தார்கள் என்ற சிஎன்என் செய்தி தெரிவிக்கிறது.
அதிபர் தேர்தல் முடிவை உறுதி செய்யும் கூட்டம் – டிரம்பின் எதிர்ப்பு தொடர்கிறது
நவம்பர் 3-ம் தேதி நடந்த அமெரிக்க அதிபருக்கான தேர்தலில், நாடு முழுவதிலும் மொத்தம் சுமார் 7.5 கோடி வாக்காளர்கள் இப்போதைய அதிபர் டொனால்ட் டிரம்புக்கும், சுமார் 8.1 கோடி வாக்காளர்கள் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கும் வாக்களித்திருந்தனர்.
மேலும், ஜோ பைடன் மாநில வாரியாக 306 தேர்வாளர் வாக்குகளையும், அதிபர் டிரம்ப் 232 தேர்வாளர் வாக்குகளையும் வென்றனர். எனவே, ஜோ பைடன் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றவர் ஆகிறார்.
ஆனால், அரிசானோ, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, பென்சில்வேனியா, விஸ்கான்சின்போன்ற மாநிலங்களில் வாக்களிப்பில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அம்மாநில தேர்வாளர் வாக்குகள் தன்னிடமிருந்து திருடப்பட்டு விட்டதாகவும் அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி வந்தார்.
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் தேர்வு – டிரம்ப் தரப்பு எதிர்ப்பு தொடர்கிறது
இது தொடர்பாக, அவரது குடியரசுக் கட்சித் தரப்பு பல வழக்குகளைத் தொடுத்தது, அந்த மாநிலங்களில் அரசுப் பொறுப்பில் இருக்கும் குடியரசுக் கட்சித் தலைவர்கள் தனக்கு சாதகமாக வாக்குகளை ரத்து செய்யுமாறு அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வந்தார், அதிபர் டிரம்பின் ஆதரவாளர்கள் தெருக்களில் போராட்டம் நடத்தி வந்தனர்.
வெகுமக்கள் சீர்குலைவுவாதி டிரம்ப் போய் விட்டார் – ஆனால், டிரம்ப்வாதம்?
அமெரிக்க நேரப்படி, நேற்று மதியம் 1 மணிக்கு கூடவிருந்த நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்துக்கு, முன்னர் வெளியில் தனது ஆதரவாளர்கள் அடங்கிய கூட்டத்தின் முன் பேசிய டிரம்ப், தேர்தல் வெற்றி தன்னிடமிருந்து திருடப்பட்டு விட்டது என்றும், இன்றைக்கு நாடாளுமன்றத்தில் துணை அதிபர் மைக் பென்ஸ் துணிச்சலுடன் அதை மீட்டுத் தர வேண்டும் என்று பேசியிருந்தார்.
நாடாளுமன்ற கூட்டுக் கூட்டம் துணை அதிபரின் தலைமையில் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், துணை அதிபர் மைக் பென்ஸ், தான் அரசியல் சட்டப்படி மாநிலங்களிலிருந்து அனுப்பப்பட்ட தேர்வாளர் வாக்குகளை அறிவிப்பதை மட்டும் செய்யப் போவதாக அறிக்கை வெளியிட்டார். கூட்டுக் கூட்டத்தில் ஒரு மாநிலத்தின் தேர்வாளர் பட்டியலுக்கு எதிராக குடியரசுக் கட்சி மேலவை உறுப்பினர்கள் சிலரும், பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் சிலரும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், நாடாளுமன்றக் கட்டிடம் டிரம்ப் ஆதரவாளர்களால் கைப்பற்றப்பட்டு முடக்கப்பட்டது.
மேலவை உறுப்பினர்களும், பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களும் வெளியேற்றப்பட்டு அவைகள் காலி செய்யப்பட்டன. உள்ளே புகுந்த கும்பலை தடுத்து நிறுத்தவோ, நாடாளுமன்றத்துக்குள் வந்த பிறகு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவோ போலீஸ் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.
இதனால், அமெரிக்க அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டதை உறுதி செய்யும் இறுதி நிகழ்வு தடைபட்டது.
வாஷிங்டன் நகரத்தின் நகரத் தலைவர், மாலை 6 மணிக்கு மேல் முழு ஊரடங்கை அறிவித்துள்ளார்.
பதிவு செய்த வீடியோ ஒன்றை வெளியிட்ட அதிபர் டிரம்ப், நாடாளுமன்ற கட்டிடத்தினுள் புகுந்தவர்களின் உணர்வுகளை தான் புரிந்து கொள்வதாகவும், அவர்களை நேசிப்பதாகவும், தேர்தல் வெற்றி தன்னிடமிருந்து திருடப்பட்டிருப்பதாகவும் கூறி, அவர்களை அமைதியாக கலைந்து செல்லும்படி கேட்டுக் கொண்டார்.
அதிபர் டிரம்ப்-ஐ இன்றே பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று theatlantic.com பத்திரிகை கருத்து வெளியிட்டுள்ளது.
“இன்று இரவே ஒரு அதிபர் பதவி நீக்க வாக்கெடுப்பை நடத்துங்கள். என்னென்ன தேவையோ செய்யுங்கள். இராணுவ சட்டத்தை பிறப்பிப்பதற்கான சாத்தியத்தை தடுத்து நிறுத்துங்கள். இராணுவத்தின் மீது டிரம்பின் அதிகாரத்தை மறுங்கள், அணு ஆயுத கட்டுப்பாட்டை திரும்பப் பெறுங்கள்” என்று அந்தப் பத்திரிகை எழுதியுள்ளது.
“46-வது அதிபராக துணை அதிபர் மைக் பென்ஸ்-ஐ ஆக்கி விட்டு, ஜனவரி 20-ம் தேதி ஜோ பைடன் 47-வது அதிபராக பதவி ஏற்க ஏற்பாடு செய்யுங்கள்” என்றும் இந்தக் கருத்தை எழுதிய டேவிட் ஃப்ரம் கூறியுள்ளார்.
இதற்கிடையில் வாஷிஷ்டன் மாநிலத்தின் தலைநகர் ஒலிம்பியாவிலும், ஆரேகான் மாநிலத்தின் சேலம் நகரிலும், விர்ஜினியா மாநிலத்திலும், டிரம்ப் ஆதரவாளர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது என்று சியாட்டில் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டள்ளது.
“அமெரிக்கத் தலைநகரில் நடந்துள்ள தேர்தல் தொடர்பான வன்முறை, அமெரிக்காவில் அமைதியாக அதிகாரம் கைமாறுவதை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. உலகெங்கும் ஜனநாயகத்தை தூக்கிப் பிடிப்பதாக தன்னை முன்நிறுத்திக் கொண்ட ஒரு வல்லரசில் ஒரு காலத்தில் நினைத்துப் பார்த்திருக்க முடியாத நிகழ்வுகள்” என்று சிங்கப்பூரைச் சேர்ந்த ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் கருத்து தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள முன்னாள் அமெரிக்க அதிபர், ஜார்ஜ் டபிள்யூ புஷ், “வாழைப்பழ குடியரசுகளில்தான், தேர்தல் முடிவுகள் தொடர்பான எதிர்ப்புகள் இப்படி தெரிவிக்கப்படும்” என்று டிரம்ப் ஆதரவாளர்களின் வன்முறை செயலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.