இந்திய விவசாயிகள் போராட்டம் குறித்தும் இந்தியாவில் ஊடக சுதந்திரம் குறித்தும் பிரிட்டிஷ் (ஐக்கிய முடியரசு) நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படும் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி தெரிவிக்கிறது.
“இந்த விவாதம் வரும் திங்கள்கிழமை (மார்ச் 8) மாலை 4:30 மணிக்கு, அந்நாட்டு நாடாளுமன்றத்தின் மக்கள் சபையின் இரண்டாவது விவாத அரங்கான வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் நடைபெறும், மனுக்கள் குழுவின் உறுப்பினர் ஒருவர் விவாதத்தைத் தொடங்கி வைத்து பேசுவார். அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் முன்னணி பேச்சாளர்களும் ஒரு அமைச்சரும் உள்ளிட்ட பிற உறுப்பினர்கள் உரையாற்றுவார்கள்.” என்று இது தொடர்பாக நாடாளுமன்றம் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி தெரிவிக்கிறது.
‘எங்கள் குடியரசு தின விழாவிற்கு வர வேண்டாம்’ – பிரிட்டன் பிரதமருக்கு விவசாயிகள் கோரிக்கை
பஞ்சாபின் லூதியானாவிலிருந்து பிரிட்டனுக்கு குடிபெயர்ந்த முன்னோர்களின் வழி வந்த, தாராளவாத ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் குர்ச் சிங் ஏற்படுத்திய “எதிர்ப்பாளர்களின் பாதுகாப்பையும் பத்திரிகை சுதந்திரத்தையும் உறுதிப்படுத்தும்படி இந்திய அரசை வலியுறுத்தவும்” என்ற மனுவின் அடிப்படையில் இந்த விவாதம் நடைபெறும்
இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் மனுக்கள் இணையதளத்தில் அந்த மனு 1.15 லட்சத்துக்கும் கையெழுத்துக்களைப் பெற்றுள்ளது என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவிக்கிறது. இந்தியாவில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாகவும், பத்திரிகை சுதந்திரம் தொடர்பாகவும் ஒரு அறிக்கையை வெளியிடும்படி இந்த மனு பிரிட்டிஷ் அரசை கோருகிறது.
வேளாண் சட்டங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தான் பயன்தரும் – சர்வதேச விவசாயிகள் சங்கங்கள்
ஒரு லட்சத்துக்கும் அதிகமான கையெழுத்துக்களை பெற்ற மனுக்களை, மனுக்கள் குழு விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள முன் வைக்கும். இந்த விவாதங்கள் அரசின் கொள்கையோ, அல்லது சட்டத்தையோ மாற்றப் போவதில்லை. ஆனால், இந்த உள்நாட்டு அல்லது சர்வதேச பிரச்சினைகளை எழுப்பி, அது தொடர்பான அமைச்சரிடம் ஒரு பதிலை பெறுவதற்கு இது உறுப்பினர்களுக்கு ஒரு வாய்ப்பளிக்கிறது.
ஸ்காட்டிஷ் தேசியக் கட்சி உறுப்பினர் மார்ட்டின் டே விவாதத்தைத் தொடங்கி வைத்து பேசுவார். இந்த விவாதம் ஒன்றரை மணி நேரத்துக்கு நடைபெறும்.
“இந்த விவாதம், இந்தப் பிரச்சினையை இந்திய அரசிடம் நேரடியாகவோ சர்வதேச மட்டத்திலோ எடுத்துச் செல்லும்படி பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுக்கும்” என்று குர்ச் சிங் கூறியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.