Aran Sei

கனடா தமிழர்கள் – இலங்கை மீது இனப்படுகொலை, போர்க்குற்ற விசாரணை கோரி பேரணி

மிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை, போர்க் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிராக குற்றங்கள் ஆகியவற்றுக்காக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இலங்கைக்கு எதிராக பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று கோரி டொராண்டோவிலிருந்தும் மாண்ட்ரீலிலிருந்தும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் ஒட்டாவாவில் உள்ள நாடாளுமன்றத்தை நோக்கிச் சென்றன.

ஐக்கிய நாடுகள் கூட்டம் நடைபெற இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில், ஐ.நா.வின் மனித உரிமைகள் குழுவில் இலங்கைக்கான மையக் குழுவில் வலிமை வாய்ந்த உறுப்பினராக இருந்தும், இந்த முக்கியமான மனித உரிமை பிரச்சனையில் பிரதமர் ட்ரூடோவின் அரசு அமைதி காத்து வருகிறது..

“கனடா விரும்பினால் அது இலங்கை மீது பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடத்த பரிந்துரைக்க முடியும்,” என்கிறார் இந்த வாகனப் பேரணியை ஏற்பாடு செய்த ஒருவர். “தமிழர்களின் ஒன்றுபட்ட வேண்டுகோளை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முக்கியமானதாக எடுத்துக் கொள்வாரா அல்லது பல பத்தாயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று, தமிழினப் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கும், வன்புணர்வுக்கும் ஆளாக்கிய இலங்கை அரசை காப்பாற்றுவாரா என்பது நமக்கு தெரியப் போகிறது,” என்கிறார் அவர்.

  • அண்மையில், ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையத் தலைவர் மிச்செலி புச்லெட் 2021, ஜனவரி 12 தேதியிட்ட தனது அறிக்கையில் இலங்கையின் நிலை குறித்து பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்க பரிந்துரைக்குமாறு மனித உரிமைகள் குழுவின் உறுப்பு நாடுகளை வலியுறுத்தி உள்ளார்.
  • 2011-ல், கனடாவின் முன்னாள் பிரதமர் ஸ்டீஃபன் ஹார்ப்பர் இலங்கை அரசு தமிழர்களை படுகொலை செய்ததை கண்டித்து, இலங்கையில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார்.
  • எட்மோன்டன் ஸ்ட்ராத்கோனாவின் நாடாளுமன்ற உறுப்பினரும், புதிய ஜனநாயகக் கட்சியின் துணை அவைத் தலைவருமான மெக்ஃபெர்சன், இணைய வழி மனுவுக்கு அனுமதி வழங்கியுள்ளார். அந்த மனுவின் முகவுரையில் ஐ.நா. தலைமை ஆணையரின் அறிக்கையும், அதன் வேண்டுகோளில் அவரது பரிந்துரைகளும் அடங்கியிருந்தன.
  • 2019-ம் ஆண்டு புதிய ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செரைல் ஹார்ட்கேசில் இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலைகள் பற்றிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஐ.நா. விசாரணையை கோரும் தீர்மானத்தை நாடாளுமன்ற மக்களவையில் கொண்டு வந்தார். அது ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. ஆனால் ட்ரூடோவ் அரசு இதுவரை அது குறித்து எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை.

இலங்கை அரசின் போர்க் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தமிழ் மக்கள் மீதான இனப் படுகொலை ஆகியவை குறித்த தகவல்கள்:

  1. இலங்கையில் ஐ.நா. நடவடிக்கைகள் குறித்த ஐ.நா. பொதுச் செயலாளரின் உள் ஆய்வுக் குழுவின் 2012, நவம்பர் அறிக்கையின் படி, 2009-ம் ஆண்டு மே மாதம் போர் முடிவுற்ற போது, கடைசி ஆறு மாதங்களில் மட்டும் 70,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
  2. அரசு பாதுகாப்பான பகுதிகள் (தாக்கப்படக் கூடாத பகுதிகள்) என்று அறிவித்த பகுதிகளிலேயே இலங்கை இராணுவம் மீண்டும் மீண்டும் குண்டுகளை வீசித் தாக்கியதில் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளும், உணவகங்களும் கூட குண்டு வீச்சுக்கு ஆளாகி உள்ளன. பட்டினியாலும், காயமடைந்தவர்களுக்கு போதிய மருத்துவ வசதியின்மையாலும் பலர் உயிரிழந்துள்ளனர்.
  3. 2017-ல் பன்னாட்டு உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் (ITJP), ஐ.நா. விடம், இலங்கை ராணுவம் தமிழ் பெண்களை “பாலியல் அடிமைகளாக” வைத்திருந்த “பாலியல் வன்புணர்வு முகாம்கள்” பற்றிய விரிவான அறிக்கையை கொடுத்துள்ளது.
  4. 2013, ஏப்ரல் மாதத்தில் இங்கிலாந்து வெளிநாட்டு மற்றும் காமன் வெல்த் அலுவலகம் கொடுத்துள்ள அறிக்கையில் இலங்கையில் 90,000-க்கும் மேற்பட்ட போர் விதவைகள் இருப்பதாகக் கூறி உள்ளது.
  5. கைக்குழந்தைகளும் குழந்தைகளும் உள்பட ஆயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல் போய் விட்டனர். வலுக்கட்டாயமாக வெளியேற்றம் பற்றிய ஐ.நா பணிக்குழு இலங்கையில் நடந்துள்ள வலுக் கட்டாயமான இடம் பெயர்வு தான் உலகிலேயே இரண்டாவது மிகப் பெரிய இடப்பெயர்வு எனக் கூறியுள்ளது.

கனடா தமிழ் சிவில் சமூகம்(CTCS)

www.einpresswire.com. இணையதளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்

கனடா தமிழர்கள் – இலங்கை மீது இனப்படுகொலை, போர்க்குற்ற விசாரணை கோரி பேரணி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்