Aran Sei

” டிரம்பை பதவி நீக்க முயற்சித்தால், வன்முறை வெடிக்கும் ” – அமெரிக்காவில் வன்முறை அபாயம் நீடிக்கிறது

Image Credit : theguardian.com

டுத்த புதன் கிழமை அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்பதை ஒட்டி அமெரிக்காவில் மேலும் வன்முறை வெடிக்கும் என்று அமெரிக்காவின் பாதுகாப்பு நிறுவனங்கள் கவலைப்படுவதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் எஃப்பிஐ (ஒன்றிய புலனாய்வு அலுவலகம்) தனது அறிக்கை ஒன்றில், இந்த வார இறுதிக்கும் ஜனவரி 20-க்கும் இடையே இப்போதைய அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள் அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் ஆயுதம் ஏந்திய போராட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கிறது. இந்தத் தகவல் அமெரிக்க ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

ஜனவரி 20-ம் தேதி அதிபர் பதவி ஏற்பு நிகழ்வின் பாதுகாப்புக்குப் பொறுப்பான உள்நாட்டு பாதுகாப்புத் துறையின் தற்காலிக செயலாளராக இருந்த சாட் வோல்ஃப் திங்கள் கிழமை பதவி விலகலை அறிவித்திருப்பது இன்னும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. உள்நாட்டு பாதுகாப்புத் துறை, அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகைக்கும் அமெரிக்க அதிபருக்கும் பாதுகாப்பு அளிக்கும் பொறுப்பில் உள்ள அமெரிக்காவின் உளவுத் துறை உட்பட பல காவல் துறைகளை நிர்வகிக்கிறது.

அமெரிக்க பாதுகாப்புத் துறை (பென்டகன்), பதவி ஏற்பு விழாவின் போது காவல் பணிக்காக 15,000 தேசிய பாதுகாவல் படையினரை ஒதுக்கியிருப்பதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே, 6,200 பாதுகாவல் படையினர் களத்தில் உள்ளனர் என்றும் இந்த வார இறுதிக்கும் அது 10,000 ஆக உயரும் என்றும், பதவி ஏற்பு நாளுக்கு முன்னர் இன்னும் 5,000 பேர் காவலுக்கு அனுப்பபடுவார்கள் என்றும் பாதுகாப்புத் துறையின் தேசிய பாதுகாவல் அலுவலகத்தின் தலைவர் ஜெனரல் டேனியல்சன் ஹோகன்சன் கூறியுள்ளார்.

டொனால்ட் டிரம்புக்கு அடுத்த அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்கவிருக்கும் அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடத்தைச் (கேப்பிட்டல்) சுற்றி ஒரு பாதுகாப்பு வேலை அமைக்கப்பட்டுள்ளதாக தி ஹிந்து செய்தி தெரிவிக்கிறது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கும் குறிப்பான பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து எஃப்பிஐ அவர்களை எச்சரித்துள்ளதாக தி கார்டியன் செய்தி தெரிவிக்கிறது.

“ஒரு உள்நாட்டு பயங்கரவாத சதித்திட்டத்தின்படி, ஆயிரக்கணக்கான ஆயுதம் ஏந்திய ‘தேசபக்தர்கள்’ நாடாளுமன்ற கட்டிடத்தைச் சூழ்ந்து கொண்டு ஜனநாயகக் கட்சியினர் உள்ளே போவதைத் தடுப்பார்கள்” என்று தெரிய வந்துள்ளதாக, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் சபை உறுப்பினர் கானர் லேம்ப் சிஎன்என்-டம் கூறியுள்ளார்.

“எப்போது சுடலாம், எப்போது சுடக் கூடாது என்று போருக்கான விதிமுறைகளை இந்தக் குழு வகுத்துள்ளது” என்று கூறியுள்ள கானர் லேம்ப், “இது ஒரு திட்டமிட்டு திரப்பட்ட கும்பல்” என்கிறார்.

“அவர்களைப் பொறுத்தவரை 1776-ல் அமெரிக்கா பிரிட்டனுக்கு எதிராக நடத்திய போராட்டத்தைப் போன்ற தேசபக்த போர் இது.” என்று கானர் லேம்ப் எச்சரித்துள்ளார்.

வழக்கமாக, பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள, நாடு முழுவதிலும் இருந்து வரும் புதிய அதிபரின் (ஜோ பைடன்) லட்சக்கணக்கான ஆதரவாளர்களை, வர வேண்டாம் என்று வாஷிங்டன் நகரத் தந்தை முரியல் பவ்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

“ஜனவரி 20-ம் தேதி, 59-வது அதிபர் பதவியேற்பு விழாவுக்கு வாஷிங்டன் நகருக்கு வர வேண்டாம் என்றும் இணைய வழியில் நிகழ்வில் பங்கேற்குமாறும் அமெரிக்கர்களைக் கேட்டுக் கொள்கிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.

இந்தப் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். சென்ற நவம்பர் 3-ம் தேதி நடந்த அதிபர் தேர்தலுக்கான தேர்தலில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த அதிபர் டிரம்ப், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனிடம் தோல்வியடைந்தார்.

அந்தத் தோல்வியை ஏற்றுக் கொள்ளாமல், தேர்தலில் பெருமளவு முறைகேடு நடந்திருப்பாக குற்றம் சாட்டி, தேர்தலுக்கு எதிராக தொடர்ந்து சட்ட ரீதியாகவும், தனது அதிபர் அதிகாரத்தைப் பயன்படுத்தியும் அவரும் அவரது குடியரசுக் கட்சி ஆதரவாளர்களும் முயற்சித்தனர்.

அவை அனைத்தும் தோல்வியடைந்த நிலையில், அதிபர் தேர்தல் முடிவை உறுதி செய்து அறிவிப்பதற்கான அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தின் போது வன்முறை கும்பல் ஒன்று நாடாளுமன்ற கட்டிடத்தில் புகுந்து கூட்டத்தை கலைத்தது அமெரிக்காவிலும், உலகெங்கிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

Image Credit : thehindu.com
Image Credit : thehindu.com

அந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். இந்த வன்முறை கும்பலை தூண்டி விட்டது அதிபர் டிரம்ப் என்பதற்கான வீடியோ ஆதாரங்கள் வெளியாகின.  எனவே, அவரை உடனடியாக பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்தன.

அதிபர் டிரம்பை 20-ம் தேதிக்கு முன்பே பதவியிலிருந்து நீக்கும் முயற்சியில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். இது டிரம்ப் ஆதரவாளர்களை மேலும் வன்முறையில் இறங்கத் தூண்டும் என்று எப்ஃபிஐ எச்சரித்துள்ளது.

“அமெரிக்க நாடாளுமன்றம் 25-வது அரசியல் சட்டத் திருத்தத்தைப் பயன்படுத்தி அமெரிக்க அதிபரை (டிரம்ப்) பதவி நீக்க முயற்சித்தால், ஒரு மிகப்பெரிய எழுச்சி நடைபெறும் என்று ஒரு குழு எச்சரித்துள்ளது” என்று எஃப்பிஐ கூறியுள்ளது.

திங்கள் கிழமை அறிமுகப்படுத்தப்பட்ட, அதிபரை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை பிரதிநிதிகள் சபை புதன் கிழமை விவாதத்துக்கு எடுத்துக் கொள்கிறது. அதன் மீதான வாக்கெடுப்பில், அதிபர் டிரம்ப் மீது வரலாறு காணாத வகையில் இரண்டாவது முறையாக பதவி நீக்க தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தி கார்டியன் கூறுகிறது.

” டிரம்பை பதவி நீக்க முயற்சித்தால், வன்முறை வெடிக்கும் ” – அமெரிக்காவில் வன்முறை அபாயம் நீடிக்கிறது

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்