சட்ட நெறிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பிரயூத் சான் ஓச்சா பிரதமராக நீடிப்பதற்குத் தகுதியானவரா இல்லையா என்பது குறித்து, தாய்லாந்தின் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது என தி வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
2014-ல் ராணுவத் தளபதியாக இருந்த பிரயுத் பியூ தாய் கட்சியின் ஆட்சியைக் கவிழ்த்து, அடுத்த ஐந்து ஆண்டுகள் இராணுவ ஜுண்டா ஆட்சிக்கு பிரயூத் சான் ஓச்சா தலைமை தாங்கி வந்தார். (ஜுண்டா என்பது ஜனாதிபதி, பிரதமர், மன்னர் ஆகியோரின் அதிகாரத்தை எடுத்துக் கொள்ளும் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகளைக் குறிக்கும் சொல்).
கடந்த ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் இராணுவத்தால் நிறுவப்பட்ட ஒரு பினாமி கட்சியை ஆட்சிக்குக் கொண்டு வந்து, அதன் கூட்டணிக் கட்சிகளின் மூலம் மீண்டும் பிரதமராகப் பணியாற்ற பிரயூத் தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த ஜுலை மாதம் முதல் தாய்லாந்து அரசுக்கு எதிராக மாணவர்கள் மற்றும் ஜனநாயக சார்பு இயக்கங்கள் போராடி வருகின்றனர். இதனால் தாய்லாந்து வீதிகளில் தினமும் போராட்டம் நடைபெற்று வருகிறது என தி வயர் செய்தி கூறுகிறது.
பிரதமர் பிரயுத் சான் ஓச்சா பதவி விலக வேண்டும், அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் செய்து அதை மேலும் ஜனநாயகமாக மாற்ற வேண்டும், மன்னரின் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் போராடி வருகின்றனர்.
பிரயூத்துக்கு எதிராக மாணவர்கள் போராடி வரும் சூழலில், அரசியலமைப்புச் சட்டத்தை மீறிய குற்றம் தொடர்பாக அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு வர உள்ளது.
தாய்லாந்து நாடாளுமன்றத்தின் மிகப் பெரிய எதிர்க்கட்சியான பியூ தாய் கட்சி “பிரயூத் சான் ஓச்சா ராணுவத் தளபதியாக 2014-ம் ஆண்டே பதவி விலகினாலும் சட்ட நெறிமுறைகளை மீறித் தற்போது வரை பாங்காக்கில் உள்ள ஒரு ராணுவக் குடியிருப்பில் தொடர்ந்து வசித்து வருகிறார்” எனும் குற்றச்சாட்டை நாடாளுமன்றத்தில் வைத்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து நீதிமன்றத்திற்கு அவர்கள் அனுப்பிய புகாரில், பிரயூத் சான் ஓச்சா தன்னுடய அதிகாரத்தைப் பயன்படுத்தி ராணுவக் குடியிருப்பில் தங்கி வந்தது. அரசிடமிருந்தோ அல்லது அரசு நிறுவனங்களிலிருந்தோ எந்தச் சிறப்புச் சலுகையும் பெறக் கூடாது எனும் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக்கே எதிரான செயல் எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
`நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம்; போராட்டங்கள் தொடரும்’ – தாய்லாந்து போராட்டக்காரர்கள்
இதற்குப் பதிலளித்த ராணுவத் தரப்பு ”பிரதமர் இல்லம் புதுப்பிக்கப்பட்டு வருவதாலும், பாதுகாப்பு கருதியும் பிரதமர் ராணுவக் குடியிருப்பில் தங்கியிருப்பதாக” விளக்கம் அளித்துள்ளது.
தாய்லாந்து சட்டங்களின் படி அரசாங்கப் பதவியில் இருக்கும் அமைச்சர், நெறிமுறைகளை மீறிய குற்றம் உறுதி செய்யப்பட்டால், அவர் உடனடியாகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டு அவருடைய பதவி பறிக்கப்படும். பிரயூத் சான் ஓச்சாவுக்கு எதிரான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவரால் எந்த அரசாங்கப் பதவியையும் வகிக்க முடியாது என தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
‘பால் தேனீர் கூட்டணி’ – ஜனநாயகம் கோரி ஒன்றிணையும் மூன்று நாட்டு போராளிகள்
இராணுவத்தைப் போலவே நீதிமன்றமும் தாய்லாந்து மன்னராட்சியின் தூணாகக் கருதப்படுகிறது. மன்னராட்சிக்கு எதிரான அச்சுறுத்தல்களுக்கு எதிரான இறுதி அரணாகவும் பார்க்கப்படுகிறது. தாய்லாந்து நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்பின் மூலம் கடந்த 12 ஆண்டுகளில் 3 தாய்லாந்து பிரதமர்கள் பதவி விலக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.