Aran Sei

தாய்வானுக்கு மேல் பறந்த சீன போர் விமானங்கள் – “அமெரிக்காவுக்கு எச்சரிக்கை”

Image Credit : indianexpress.com

சீன விமானப்படை தாய்வான் நீரிணைப்பைத் தாண்டி தாய்வான் தீவின் வான்வெளியில் விமானங்களை பறக்க விட்டது என்று குளோபல் டைம்ஸ் செய்தி தெரிவிக்கிறது. சனிக்கிழமை 13 விமானங்களும் ஞாயிற்றுக் கிழமை 15 விமானங்களும் தாய்வான் தீவுக்கு மேல் அனுப்பப்பட்டுள்ளன.

இவற்றில் பல சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தின் போர் விமானங்கள் என்று குளோபல் டைம்ஸ் தெரிவிக்கிறது. இந்த விமானங்களில் அணுஆயுதத் திறன் வாய்ந்த எட்டு H-6K போர் விமானங்களும், நான்கு J-16 போர் விமானங்களும் இருந்ததாக தாய்வான் தெரிவித்துள்ளது.

தனது வான்வெளியில் நடைபெற்ற இந்த ஊடுருவல்களை கண்காணிக்க ஏவுகணைகளை பயன்படுத்தியதாக தாய்வான் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.

1949-ம் ஆண்டில் சீனாவில் நடந்த கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான புரட்சிக்குப் பிறகு, முந்தைய ஆளும் கட்சியான குவோமின்தாங் சீனாவின் தென் மேற்கில் உள்ள குட்டி தீவான தாய்வான் தீவுக்குள் பின் வாங்கி அங்கு சீனக் குடியரசு என்ற பெயரில் அரசை அமைத்தனர். சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில்  சீன மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது.

சீனாவும் தாய்வானும்
சீனாவும் தாய்வானும்

ஆனால், 1990-களுக்குப் பிறகு தாய்வானில் குவோமின்தாங் கட்சியில் செல்வாக்கு குறைந்து, தாய்வானை சுதந்திர நாடாக அங்கீகரிக்கப் போகும் தாய்வான் சுதந்திரக் கட்சி வலுப்பெற்றுள்ளது. சீன அரசு தொடர்ந்து தாய்வான் சீனாவோடு இணைந்த பகுதி என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

கடந்த 20-ம் தேதியோடு முடிவு பெற்ற முந்தைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆட்சியின் போது, தாய்வானுக்கு அமெரிக்க ஆதரவு அதிகரித்து வந்ததை சீனா கவலையுடன் கவனித்து வந்தததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் கருத்து தெரிவித்துள்ளது.

தாய்வானை சீனாவின் ஒரு பிரிக்க முடியாத பகுதி என்று சொந்தம் கொண்டாடி வரும் சீன அரசு சமீப மாதங்களில், தாய்வானின் தென்மேற்கு கடற்பகுதியில் தினமும் விமானங்களை பறக்க விட்டது என்றும் ஆனால், அவை ஒன்று அல்லது இரண்டு கண்காணிப்பு விமானங்கள் மட்டுமே என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

தாய்வான் மீது அழுத்தம் கொடுப்பதை நிறுத்துமாறும், அமெரிக்கா தாய்வானுக்கு ஆதரவாக உள்ளதாகவும் அமெரிக்க வெளியுறவுத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

“தாய்வானுக்கு எதிரான ராணுவ, அரசுத் துறை, பொருளாதார அழுத்தங்களை நிறுத்துமாறு சீனாவை கேட்டுக் கொள்கிறோம். தாய்வானின் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுமாறு வலியுறுத்துகிறோம்” என்று அமெரிக்க வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.

“ஒற்றை சீனா கொள்கையை அங்கீகரிப்பதன் மூலம்தான் தாய்வான் நீரிணைப்பில் தவறான நடவடிக்கைகளை தவிர்க்க முடியும்” என்று குளோபல் டைம்ஸ் கருத்து தெரிவித்துள்ளது.

Image Credit : globaltimes.cn
Image Credit : globaltimes.cn

தாய்வானின் ஆளும் கட்சியான ஜனநாயக முற்போக்கு கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் லோ ஷிசெங், “சீனா புதிதாக பதவி ஏற்றுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அரசாங்கத்துக்கு ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது” என்று கூறியுள்ளார். இதன் மூலம் தாய்வானுக்கு அமெரிக்கா ஆதரவு அளிப்பதை தடுக்க முயற்சிப்பதாக அவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

20-ம் தேதி ஜோ பைடன் பதவி ஏற்பு விழாவில் தாய்வானின் செயல்முறை தூதுவர் ஷியாவ் பி-கிம் பங்கேற்ற பிறகு, வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் எமிலி ஹார்ன், தாய்வானுக்கான அமெரிக்க ஆதரவு உறுதியாக உள்ளது என்று கூறியிருந்தார்.

தாய்வானுக்கு மேல் பறந்த சீன போர் விமானங்கள் – “அமெரிக்காவுக்கு எச்சரிக்கை”

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்