Aran Sei

பிரதமர் ஒலி கட்சியிலிருந்து நீக்கம் – நேபாளத்தில் அரசியல் சட்ட நெருக்கடி

நேபாள பிரதமர் கே பி ஷர்மா ஒலி - Image Credit : thehindu.com

நேபாள பிரதமர் கே பி ஷர்மா ஒலியை நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியுள்ளதாக, அக்கட்சியின் எதிர்த்தரப்பு தலைவர்கள் அறிவித்துள்ளனர். கட்சிக்குள் பிரதமரின் எதிர்த்தரப்பில் புஷ்ப கமல் தஹால் ‘பிரச்சந்தா’வும் முன்னாள் பிரதமர் மாதவ் குமார் நேபாளும் உள்ளனர்.

மேலுமொரு உட்கட்சி மோதல், ஆட்டம் காணும் நேபாள அரசு! 

நேற்று எடுக்கப்பட்ட இந்த முடிவின் மூலம் ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளது என்றும், அதன் தேர்தல் சின்னம் வழக்கில் சிக்கியுள்ளது என்றும் தி ஹிந்து தெரிவிக்கிறது. ஆனால், எந்த ஒரு பிரிவையும் அதிகாரபூர்வ கட்சியாக அங்கீகரிக்க தேர்தல் ஆணையம் மறுத்து விட்டிருக்கிறது.

இதன் மூலம், இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக இருக்கும் ஒலி இப்போது எந்தக் கட்சியையும் சேராதவராக ஆகி விட்டார். இது ஒரு தீவிரமான அரசியல் சட்ட நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது என்று தி ஹிந்து கருத்து தெரிவித்துள்ளது

பிரதமர் ஒலி கடந்த டிசம்பர் 20-ம் தேதி, நேபாளத்தின் நாடாளுமன்றத்தின் மக்களவையை கலைத்ததை பிரச்சந்தாவும், மாதவ் குமார் நேபாளும் எதிர்த்தனர். அது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்றும் அவையை கலைத்ததை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.

நேபாளம் சென்றுள்ள சீனக் குழு – ‘ கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவை தவிர்க்க முயற்சி’

கட்சி கொள்கைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு, ஜனவரி 15-ம் தேதி, பிரச்சந்தா தரப்பு ஒலியிடம்கேட்டிருந்தது, அவர் அதற்கு எந்த பதிலும் அளிக்கவில்லை.

கட்சி விரோத நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் ஒலி விளக்கம் அளிக்கத் தவறி விட்டதால், நேற்று கூடிய கட்சியின் நிலைக்குழு ஒலியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்து நீக்கும் முடிவை எடுத்துள்ளதாக கட்சியின் நிலைக்குழுவின் ஒரு மூத்த உறுப்பினரான கணேஷ் ஷா கூறியுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த வெள்ளிக் கிழமை அன்று பிரச்சந்தா தரப்பினர் பிரதமர் ஒலியின் அரசாங்கத்துக்கு எதிராக மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவிக்கிறது.

ஏப்ரல்-மே மாதங்களில் நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நடைபெறும் என்று ஒலி அறிவித்துள்ளார். ஆனால், இப்போதைய நிலைமையில் தேர்தல் ஆணையமும், நாடாளுமன்றத்தை கலைத்ததற்கு எதிரான மனுக்களை விசாரித்து வரும் நேபாள உச்சநீதிமன்றமும் எடுக்கும் முடிவே அடுத்து நடக்கவிருப்பவற்றை தீ்ர்மானிக்கும் என்று தி ஹிந்து தெரிவித்துள்ளது.

பிரதமர் ஒலி கட்சியிலிருந்து நீக்கம் – நேபாளத்தில் அரசியல் சட்ட நெருக்கடி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்