நெதர்லாந்து நாட்டில் கொரோனா ஊரடங்குக்கு எதிராக கலவரங்கள் வெடித்துள்ளன. போராட்டக் காரர்கள் கிரிமினல்கள் என்று நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டே கூறியுள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி தெரிவிக்கிறது.
சனிக்கிழமையும், ஞாயிற்றுக் கிழமையும் நெதர்லாந்து நாடு முழுவதும் நடந்துள்ள இந்த கலவரங்களுக்கும் “போராட்டத்துக்கும் தொடர்பில்லை, இது கிரிமினல் வன்முறை, அதை அந்த வகையில் கையாள்வோம்” என்று மார்க் ருட்டே செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக செய்தி வெளியிட்ட ஜெர்மனியின் வலதுசாரி பத்திரிகையான பில்ட், இது நெதர்லாந்தின் உள்நாட்டுப் போர் என்று சித்தரித்துள்ளது.
நெதர்லாந்து ஐரோப்பா கண்டத்தின் வடமேற்கு பகுதியில் ஜெர்மனிக்கு அருகில் உள்ள சிறிய நாடாகும். இந்த நாட்டின் மக்கள் தொகை சுமார் 1.7 கோடி.
இங்கு கொரோனா நோய்த்தொற்றால் சுமார் 9.44 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், 13,500 பேர் உயிரிழந்தனர் என்று பதிவாகியுள்ளது. புதிய வகை கொரோனா நோய்க்கிருமி நோய்த்தொற்றுகளை பெருமளவு அதிகரித்து விடும் என்று அஞ்சப்படுகிறது.
கொரோனா நோய்த்தொற்றை தடுப்பதற்காக, அக்டோபர் மாதம் முதல் மதுபான கூடங்களும், உணவகங்களும் அக்டோபர் மாதம் முதல் மூடப்பட்டிருக்கின்றன. டிசம்பர் இறுதியில் பள்ளிக் கூடங்களும், கடைகளும் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டன.
கொரோனா நோய்த்தொற்று பரவுவதை தடுப்பதற்காக புதிதாக இரவு 9 மணி முதல் காலை 4.30 வரை ஊரடங்கை அரசு அறிவித்ததை எதிர்த்து குறைந்தது 10 நகரங்களிலும் மாநகரங்களிலும் ஒன்று கூடிய போராட்டக்காரர்கள் கடைகளை சூறையாடினர், போலீசுடன் மோதினர் என்று வாஷிங்டன் போஸ்ட் கூறுகிறது.
ஆம்ஸ்டர்டாம் நகரின் மத்திய பகுதியில் போராட்டக்காரர்களை கலைக்க நாய்களையும் நீர் பீரங்கிகளையும் பயன்படுத்திய போலீசார் 200 பேரை கைது செய்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது. கொரோனா ஊரடங்குக்கு எதிரான குழுக்கள் டெலிகிராம் செயலி மூலம் இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்துள்ளனர்.
மீன்பிடி கிராமமான உர்க்-ல் சனிக்கிழமையன்று இளைஞர்கள் ஒரு கொரோனா நோய்க்கிருமி சோதனை மையத்தை தீக்கிரையாக்கினர், உள்ளூர் ஊடகங்களுடனும் போலீசுடனும் மோதினர் என்று வாஷிங்டன் போஸ்ட் தெரிவிக்கிறது.
இந்தக் கலவரத்துக்குக் காரணம் பொருளாதார நெருக்கடியும் ஏற்றத் தாழ்வும் என்று கலையகம் யூடியூப் வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தென் பகுதியில் உள்ள ஐன்டோவன் நகரில் கலவரக்காரர்கள் போலீஸ் மீது கற்களை எறிந்தும், நெருப்பு குண்டுகளை எறிந்தும் தாக்கியுள்ளனர், உள்ளூர் ரயில் நிலையத்தை சேதப்படுத்தியுள்ளனர்.
இங்கு ஒரு தீவிர வலதுசாரி குழுவான பெகிடா, ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்ததாகவும், இந்தப் போராட்டத்தின் போது குரான் பிரதிகளை எரிக்கப் போவதாக கூறியிருந்ததாகவும் செய்தி தெரிவிக்கிறது.
இது தொடர்பாக கலையகம் யூடியூப் வீடியோவை பார்க்க:
தேசிய போலீஸ் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், மேலும் கலவரங்களை எதிர்கொள்வதற்கு சட்ட ஒழுங்கு பிரிவினர் தயாராகி வருவதாக தெரிவித்திருக்கிறார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.