Aran Sei

மியன்மார் தேர்தல் – ரோஹிங்கியா முஸ்லீம்களின் உரிமைகள் மீட்கப்படுமா?

தேர்தலில் ஆங் சான் சூ கி படத்தை பிடித்திருக்கும் ஆதரவாளர் - Image Credit : thewire.in

மியான்மாரில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் ஆங் சன் சூ கியின் மக்களாட்சிக்கான தேசிய கூட்டமைப்புக் (NLD) கட்சி தனது வெற்றியை உறுதி செய்துள்ளது. தேர்தல் முடிவுகள் அதிகாரபூர்வமாக, அறிவிக்கப் படவில்லை, எனினும், சுயேச்சையான வாக்கு எண்ணிக்கை நடத்தும் குழு Yway Mal-ன் மதிப்பீட்டின்படி  ஆட்சி அமைக்கத் தேவையான 322 இடங்களுக்கும் மேலாக 392 இடங்களில் ஆங் சன் சூ கியின் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

தேசிய, மாநில அளவிலான 1,119 இடங்களுக்கு 91 கட்சிகளைச் சேர்ந்த 5,643 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தனது இரண்டாவது பதவிக் காலத்தில் ஆங் சான் சூ கி சீர்திருத்தங்களை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அவை, இராணுவத்தின் கட்டுப்பாட்டை பலவீனப்படுத்துவதாக இருக்காது என்பதுடன் அதற்கும் மேலாக ரோஹிங்கியாக்களின் அவலநிலையை ஏறெடுத்தும் பார்க்காது.

மியான்மாரின் வரலாற்றில், அந்நாடு 1962-லிருந்து இராணுவ ஆட்சியின் கீழ்தான் இருந்து வந்தது. 2015-ல் தான் கணிசமான அளவு சுதந்திரத்துடனும், அமைதியாகவும் முதல்முறையாக தேர்தல்கள் நடைபெற்றன.

எனினும், அதற்குப் பிறகும் கூட, சர்ச்சைக்குரிய முறையில் கருத்துக்கேட்பு வாக்கெடுப்பின் (Referendum) மூலம் இராணுவத்தால் வரையப்பட்ட அரசியல் அமைப்பு 2008-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. அதன் 14-ம் பிரிவின்படி இராணுவத்திற்கு தானாகவே 25% மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. மேலும் பிரிவு 17b-ன் கீழ் அயல்நாட்டு பாதுகாப்பு, உள்நாட்டு பாதுகாப்பு, எல்லைப் புற உறவு ஆகிய துறைகளுக்கான அமைச்சர்களை நியமித்துக் கொள்ளும் அதிகாரமும் இராணுவத்திற்குத் தரப்பட்டது. இதற்கு மேலும், பிரிவு 201ன் படி, நெருக்கடி நிலையில், இராணுவ பிரதிநிதிகள் அடங்கிய தேசிய பாதுகாப்பு கவுன்சிலை அமைத்து, நாட்டின் ஆட்சி அதிகாரத்தை தன் வசம் எடுத்துக் கொள்ளும் அதிகாரமும் இராணுவத்திற்குத் தரப்பட்டது.

ரோஹிங்கியா பிரச்சினை

ரோஹிங்கியாக்கள் மீதான பாகுபாடு இராணுவ ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் மியான்மாரில் ஆழமாக வேரூன்றியுள்ளது. மத நல்லிணக்கம், நாட்டின் ஒற்றுமை ஆகியவற்றைப் பற்றி பேசினாலும், ஆங் சன் சூ கி நடைமுறை தந்திரத்துக்கு ஏற்ப, தேர்தலில் தனது கட்சியின் சார்பாக, ஒரு முஸ்லீம் அல்லது ரோஹிங்கியாவை கூட வேட்பாளராக அறிவிக்கவில்லை. இது தேர்தலில் அவருக்கு ‘நல்ல’ பலனைத் தந்தது.

அக்டோபர் 2016-ல் இராணுவத்தின் அடக்குமுறையால் நூற்றுக்கணக்கான ரோஹிங்கியாக்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்ட போதும் ஆங் சன் சூ கி அமைதியாகவே இருந்தார்.

அக்டோபர் 9, 2016 ல் வங்க தேச- மியான்மார் எல்லையில் “அடங்காத தீவிரவாதிகள்” என கூறப்படுவோர் ஒன்பது மியான்மார் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களைக் கொன்றதே அந்த இராணுவத் தாக்குதலுக்குக் காரணம்.

2017, ஆகஸ்ட் மாதம் 25-ம் நாள், அராக்கன் ரோஹிங்கியா மீட்புப் படை (ARSA), அராக்கன் மாநிலத்திற்கு வடக்கே உள்ள மாங்டவ், புத்திடங்க், ராத்தேடங்க் ஆகிய நகரங்களில் இருந்த 30 காவல்துறை முகாம்களையும், இராணுவ தளங்களையும் தாக்கியதைத் தொடர்ந்து ரோஹிங்கியாக்களின் சமீபத்திய பிரச்சனை தொடங்கியது. அந்தத் தாக்குதலில் இராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர்‌. 80 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து, ரோஹிங்கியாக்களின் 3000 வீடுகள் தீக்கிரையாக்கப் பட்டன. இராணுவத்தினரால் பெண்கள் கும்பல் பாலியல் வன் கொடுமைக்கு ஆளாயினர். தப்பித்து ஓடியவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வன்முறையால் அராக்கன் மாநில புத்தமதத்தினர் மற்றும் இந்துக்கள் 30,000 பேரும் கூட இடம் பெயர்க்கப்பட்டனர். ஆகஸ்ட் 2017 வரை, வங்க தேசத்திற்குள் மட்டும் 6,56,000 ரோஹிங்கியாக்கள் குடியேறி உள்ளனர்.

ஆப்பிரிக்க நாடான சூடானின் டார்ஃபுர், ஐரோப்பாவில் முன்னாள் யூகோஸ்லேவியா குடியரசு போஸ்னியா, ஆப்பிரிக்காவின் ருவாண்டா போன்ற இடங்களில் நடந்ததை போன்ற மனித கொடூரங்களை ஒத்த மியான்மாரின் இந்த ” சிறுபான்மையினர் அழித்தொழிப்பு மற்றும் மனித இனப் படுகொலையை” உலகமே கண்டித்த போதும், ஆன் சாங் சூ கி இராணுவத்தின் பக்கமே நின்றார்.

ஆகஸ்ட் 2017 தாக்குதல்களுக்குப் பின், மாநில மன்ற உறுப்பினர் டாவ் ஆங் சன் சூ கி, தேசிய பாதுகாப்புச் செயலாளர், உள்துறை, பாதுகாப்பு, எல்லை உறவு, ஆகிய துறைகளின் அமைச்சர்கள், மாநில மன்ற உறுப்பினர் அலுவலகம், குடியரசு தலைவர் அலுவலகம் ஆகியோருடன் ஒரு கூட்டத்தை நடத்தினார். அது ரோஹிங்கியாக்களின் ARSA அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது. பாதுகாப்பிற்காகவும், நிலைத்த தன்மைக்காகவும் மற்றும் ‘அமைதி, சட்டத்தின் ஆட்சி மற்றும் அராக்கன் மாநில வளர்ச்சி ஆகியவற்றிற்காக பல்வேறு குழுக்களும் அமைக்கப்பட்டன.

எதிர்த் தாக்குதல் நடத்திய இராணுவம், ரோஹிங்கியாக்கள் மீது நடத்திய மனித உரிமை மீறல், படைகளின் வன்முறை ஆகியவை குறித்த படுபயங்கரமான சான்றுகள் அடங்கிய மியான்மார் அறிக்கை, ஐ.நா. வின் தனி உண்மை கண்டறியும் குழு வினால் செப்டம்பர் 2018-ல் ஐ.நா வில் வைக்கப்பட்டது. கோஃபி அன்னானின் ஆலோசனைக் குழு ஆகஸ்ட் 24, 2017-ல் ஆங் சான் சூ கி அரசுக்குக் கொடுத்த பரிந்துரைகளும் கூட பிரச்சனைகளைத் தீர்க்க பயன்படாத வீண் முயற்சியாகவே போனது‌

கோஃபி அன்னான் குழுவின் அறிக்கை, அராக்கன் மாநிலத்தில், ஒட்டு மொத்த சமூக- அரசியல், பொருளாதார, சட்ட, மனிதாபிமானம் ஆகியவற்றுக்கான விரிவான அரசு கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என கூறியது‌. மேலும் அது ஒரு செயற்பாட்டுக் குழுவை அமைக்கக் கூறியது. ஆனால் அதன்படி அமைக்கப்பட்ட குழுவின் இரண்டு முக்கிய உறுப்பினர்கள், குழு அரசின் “புகழ்பாடும் குழுவாகவும்”, “கண்துடைப்பு வேலைகளை மட்டுமே செய்யும் குழுவாகவும்” இருப்பதாகக் குற்றம் சாட்டி அதிலிருந்து விலகிவிட்டனர்.

தற்போது 19 லட்சம் ரோஹிங்கியாக்கள் குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளனர். மேலும் 7,23,000 பேர் அராக்கன் மாநிலத்திலிருந்து, தங்கள் சொந்த வீட்டை விட்டு வங்க தேசத்திற்கு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். அங்கு காக்ஸ் பஜாரில் (CoxBazaar) உலகிலேயே மிகப் பெரிய அகதிகள் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. சில அகதிகள் முகாம்கள் இந்தியாவிலும் உள்ளன. 1978-லிருந்தே வங்க தேசத்தில் ரோஹிங்கியாக்கள் வந்து குடியேறினாலும், அவர்களில் 2,10,000 பேருக்கு மட்டுமே , ஏற்கனவே அப்போதைய பர்மிய ஒன்றியத்தின் சோசலிஸ்ட் குடியரசு அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி, குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

மீண்டும் 1991-92-ல் மியான்மார் இராணுவத்தின் அதிகரித்த, இன ஒடுக்குமுறைக்கும், வன்முறைக்கும் அஞ்சி 2,50,000 பேர் வங்க தேசத்திற்குள் ஓடிவந்தனர்.

வங்க தேசத்திற்கு தப்பிச் செல்லும் ரோஹிங்கியா அகதிகள் - Image Credit : thewire.in
வங்க தேசத்திற்கு தப்பிச் செல்லும் ரோஹிங்கியா அகதிகள் – Image Credit : thewire.in

இந்த நிலைமையை எதிர்கொள்ள மியான்மார், வங்க தேசத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி ரோஹிங்கியர்களை மியன்மாரின் சட்டபடியான குடிமக்களாக ஏற்றுக் கொண்டது. மேலும் மியான்மார் அரசு, இந்த வெளியேற்றத்தைத் தடுப்பதற்கும், மியான்மாருக்கு திரும்பி வருபவர்களை பாதுகாப்பாக, தாமாகவே முன்வந்து நாடு திரும்புவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக உறுதி அளித்தது.

தேர்தல் நிகழ்வு

மக்களாட்சிக்கான தேசிய கூட்டமைப்புக் கட்சி தனது 2020-ம் ஆண்டிற்கான 34 பக்க தேர்தல் அறிக்கையில் மூன்று முக்கிய நிலைப்பாடுகளை அறிவித்திருந்தது: இனப் பிரச்சினையை கவனத்தில் கொள்ளுதல் மற்றும் உள்நாட்டில் ஒற்றுமையை அடைதல்; தனித்துவமான மக்களாட்சி கூட்டாட்சி ஒன்றியத்தை உறுதி செய்யும் அரசியல் அமைப்பை ஏற்படுத்துதல்; மற்றும் தொடர்ச்சியான முன்னேற்றம்.

கவனத்தை ஈர்க்கும் வகையில், கட்சியின் அறிக்கை, இராணுவத்தின் பாராளுமன்ற தொகுதி ஒதுக்கீட்டை 2020 தேர்தலுக்குப் பின் 15% ஆகவும், 2025 ற்குப்பின் 10% ஆகவும், 2030ல் 5% ஆகவும் குறைக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை வலியுறுத்தி உள்ளது. 2020 துவக்கத்தில் ஆங் சான் சூ கி இந்த திருத்தங்களுக்காக எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்து விட்டன.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் அறிக்கை, 2015-ம் ஆண்டு அராக்கன் மாநிலத்தில் 200 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்ததாகவும், ஆனால் 2020-ல் அங்கு வாக்காளர் பட்டியலே இல்லை என்றும் தெரிவிக்கிறது. ஏனெனில், அராக்கன் உள்ளிட்ட ஐந்து நகரப்பகுதிகளில் பாதுகாப்புக் காரணங்களுக்காக தேர்தலை நடத்த வேண்டாம் என இராணுவம் கேட்டுக் கொண்டது.

ரோஹிங்கியர்களுக்கு ஓட்டுரிமை மறுக்கப்பட்டிருக்கும் நிலையில், தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்பட்டிருக்கும் ஆறு ரோஹிங்கியர்களில் ஒருவரான ஆயே வின் (Aye Win), ” வாக்கெடுப்பு நாளுக்கு முன் அதிகமான ரோஹிங்கியர்களுக்கு வாக்குரிமை தரப்படா விட்டால் வெற்றி பெறுவதில் ஓரளவே நம்பிக்கை உள்ளது.” என ராய்ட்டர்சிடம் கூறி உள்ளார்.

வங்க தேச அகதிகள் முகாமில் கூடிய ரோஹிங்கியா அகதிகள் - image credit : thewire.in
வங்க தேச அகதிகள் முகாமில் கூடிய ரோஹிங்கியா அகதிகள் – image credit : thewire.in

2010 வரை “தற்காலிக பாதுகாப்பு அட்டை” வைத்திருந்த ரோஹிங்கியா க்கள் வாக்களித்து வந்தார்கள் என்பதை முக்கியமாக கவனிக்க வேண்டும். 2010 தேர்தலில் ரோஹிங்கியாக்களின் கட்சிகள் போட்டியிட்ட போதும் ஒரு இடத்தில் கூட அவை வெற்றி பெறவில்லை. 2015-ல் அவர்களது வாக்குரிமை பறிக்கப்பட்டு விட்டது.

மியான்மாரின் அரசியல்- இராணுவத் தலைமை ரோஹிங்கியா கண்களைப் பற்றிய தங்கள் நிலைப்பாடுகளில் உறுதியாக இருக்கும் வரை, அவர்களது அவலநிலை தொடரும். இன்னும் மியான்மாரில் இருப்பவர்கள் மேலும் வன்முறைக்கு ஆளாக நேரிடும் மற்றும் அகதிகளாக நாட்டை விட்டுத் தப்பி ஓடியவர்கள் அகதிகளாகவே வாழ வேண்டும்.

– அமித் ரஞ்சன், காவேரி

(www.thewire.in தளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்)

மியன்மார் தேர்தல் – ரோஹிங்கியா முஸ்லீம்களின் உரிமைகள் மீட்கப்படுமா?

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்