உலக அளவில் தொழில்களில் நிலவும் லஞ்சத்தில் இந்தியா 45 புள்ளிகளுடன் 77-வது இடத்தில் உள்ளது என்று அமெரிக்காவைச் சேர்ந்த லஞ்ச ஒழிப்பு அமைப்பு கண்டறிந்துள்ளது.
அமெரிக்கா, மேரிலாந்து மாகாணத்தில் உள்ள அன்னாபொலிஸ் நகரில் ‘டிரேஸ் பிரைபாரி ரிஸ்க் மேட்ரிக்ஸ்’ (TRACE Bribery Risk Matrix) அமைப்புச் செயல்படுகிறது. இது 194 நாடுகள், பிரதேசங்கள் மற்றும் தன்னாட்சி பிராந்தியங்களில் வணிக லஞ்ச அபாயத்தை அளவிடுகிறது.
இந்த அமைப்பு, அரசுடன் தொழில் தொடர்புகள், லஞ்ச ஒழிப்பு மற்றும் அமலாக்கல், அரசு மற்றும் சிவில் சேவை வெளிப்படைத்தன்மை, ஊடகங்கள் உள்ளிட்டவற்றின் சிவில் சமூக மேற்பார்வை திறன் ஆகிய 4 காரணிகளின் அடிப்படையில் உலகளவில் நிலவும் லஞ்சத்தை மதிப்பிட்டுப் பட்டியலிட்டு வருகிறது.
தற்போது, இந்த ஆண்டுக்கான பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் இந்தியா 45 புள்ளிகளுடன் 77-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு பட்டியலில் இந்தியா 48 புள்ளிகளுடன் 78-வது இடத்தில் இருந்தது.
இத்தரவின்படி, வடகொரியா, துர்க்மேனிஸ்தான், தென்சூடான், வெனிசூலா, எரித்ரியா ஆகியவை தொழில் ரீதியிலான லஞ்ச ஆபத்தை அதிகம் கொண்டுள்ளன.
டென்மார்க், நார்வே, சுவீடன் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் லஞ்ச அபாயம் குறைவாக உள்ளது.
பட்டியல் தரவின்படி, பாகிஸ்தான், சீனா, நேபாளம், வங்காளதேசம் ஆகிய அண்டை நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் லஞ்ச அபாயம் குறைவாக உள்ளது. இதற்கிடையில், பூட்டான் 37 புள்ளிகளுடன் 48-வது இடத்தைப் பிடிதித்துள்ளது.
“சீனா அதன் அதிகாரத்துவத்தைத் தொடர்ந்து ஒழுங்குபடுத்திவருகின்றது. இது அரசு அதிகாரிகள் லஞ்சம் பெறுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்க உதவியுள்ளது” என்று டிரேஸ் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவைத் தவிர, பெரு, ஜோர்டான், வடக்கு மாசிடோனியா, கொலம்பியா மற்றும் மாண்டினீக்ரோ ஆகியவையும் 45 புள்ளிகளைப் பெற்றுள்ளன.
2017-ம் ஆண்டு முதல் கடைசி இடத்தைப் பிடித்துவந்து சோமாலியா, இப்போது 194 நாடுகளில் 187-வது இடத்தில் உள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.