இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் போராட்டக்காரர்கள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த பெரும் பணக்காரரும் தொழிலதிபருமான கெளதம் அதானியின் நிறுவனம் ஆஸ்திரேலியாவின் வடக்கு குயின்ஸ்லாந்து பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் பணியில் ஈடுபடுவதாக அறிவித்தது.
இந்தச் சுரங்கத்தின் மூலம் ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலிய மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என அதானி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டாலும் மிகவும் தூய்மையான பகுதியில் சுரங்கம் அமைக்கக் கூடாது என ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் என எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
“உலக வெப்பமயமாதல் உட்பட பல்வேறு பிரச்சனைகளை நாம் சந்தித்துக்கொண்டிருக்கும் சூழலில் ஆஸ்திரேலியா அரசு இதுபோன்ற நிலக்கரிச் சுரங்கங்களுக்கு அனுமதியளித்தால், சுற்றுச்சூழல் மிகவும் மாசடையும், இயற்கையை அழிக்கக்கூடிய இதுபோன்ற சுரங்கப் பணிகளுக்கு அனுமதியளிப்பது தவறானது” எனப் போராட்டக்காரர்கள் கூறிவந்தனர்.
இதற்கிடையில் ஆஸ்திரேலிய அரசு அதானியின் நிலக்கரிச் சுரங்கக் கட்டுமானத்துக்கு ஒப்புதல் அளித்ததையடுத்து, இந்தத் திட்டத்துக்கு எதிராக ஸ்டாப் அதானி (STOP ADANI) எனும் இயக்கம் உருவாக்கப்பட்டது.
ஸ்டாப் அதானி இயக்கத்தின் சார்பில் ஆஸ்திரேலியாவின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. குறிப்பாக நியூ சவுத் வேல்ஸ் கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு அதானி நிறுவனத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தினர். அவர்கள் கடற்கரை மணலில் ஸ்டாப் அதானி (STOP ADANI) என்று எழுதி தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர் என தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுரங்கம் அமைப்பதற்காக அதானி குழுமத்திற்குப் பாரத ஸ்டேட் வங்கி 5000 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளதாக தி நேஷனல் ஹெரால்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளாக நடைபெற்ற போராட்டத்தில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம்தான் ஆஸ்திரேலியாவின் சர்ச்சைக்குரிய அதானி நிலக்கரிச் சுரங்கம் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு எதிராக வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. சுரங்கம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதால் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் மட்டும் 1500 க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டதாக அதானி நிலக்கரிச் சுரங்கத்தின் தலைமை அதிகாரி டேவிட் போஷாஃப் கூறியுள்ளார் என லைவ் மிண்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
கார்ப்பரேட் வங்கிகள் பொருளாதார ஆபத்தை விளைவிக்கும்- நிதி ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை
கொரோனாவால் ஏற்பட்ட வேலையிழப்புகளையும் பொருளாதாரச் சீர்கேடுகளையும் இந்நிறுவனம் சரி செய்யும் எனக் கூறிய அவர் அடுத்த ஆண்டு இங்கிருந்து எடுக்கப்பட்ட நிலக்கரிகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் எனக் கூறியதாக லைவ் மிண்ட் இணையத்தளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இன்று (27/11/20) சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இன்று ஆஸ்திரேலியாவிற்கும் இந்தியாவுக்குமான முதல் ஒரு நாள் போட்டி நடைபெற்று வருகிறது.
போட்டி ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே பாதுகாப்பு அதிகாரிகளின் தடுப்புகளை மீறி `ஸ்டாப் அதானி’ இயக்கத்தைச் சேர்ந்த போராட்டக்காரர்களான பென் பர்டெட் மற்றும் ஜோஷ் வைன்ஸ்டாக் அதானிக்கு 5000-ம் கோடி கடனை வழங்காதே எனும் பதாகைகளைப் பிடித்தபடி சிட்னி கிரிக்கெட் மைதானத்திற்குள் ஓடிவந்ததுள்ளனர்.
Pitch Invaders ?? Really ? Wowo ! Hahaha#AUSvsIND #INDvAUS #Sydney #ODI pic.twitter.com/yrFzPhSAvx
— “Raj”ini Siva (@rajsviewfinder1) November 27, 2020
அவருடைய உடையின் முன் பகுதியியில் `ஸ்டாப் அதானி’ எனும் வாசகமும் அவருடைய உடையின் பின் பகுதியில் `ஸ்டாப் கோல்’ (நிலக்கரி எடுக்காதே) எனும் வாசகமும் இடம் பெற்றிருந்தன.
மைதானத்திற்குள் போராட்டக்காரர்கள் நுழைந்ததை வெகு நேரம் கழித்தே பாதுகாப்பு அதிகாரிகள் உணர்ந்தனர். பின்னர் அவர்கள், பாதுகாப்பு அதிகாரிகளால் மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
மைதானத்திற்கு வெளியிலும் ஸ்டாப் அதானி இயக்கத்தைச் சேர்ந்த போராட்டக்காரர்கள் குவிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.