அர்ஜென்டின கால்பந்தாட்ட வீரர் டியெகோ மரடோனா கடந்த 25-ம் தேதி காலமானார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுக் காலமானதாகக் கூறப்பட்டது. தற்போது, கவனக்குறைவால் கொலை நடைபெற்றிருக்குமோ எனும் கோணத்தில் அவரது மருத்துவர் விசாரிக்கப்பட்டுவருவதாக அர்ஜென்டினா செய்தி நிறுவனமான டெலாம் தெரிவித்துள்ளது.
தொலைக்காட்சிப் படங்கள் மற்றும் நீதித்துறை ஆதாரங்களின்படி, கவனக்குறைவு ஏற்பட்டிருக்குமோ எனும் சாத்தியத்தைக் கண்டறிய மருத்துவர் லியோபோல்டோ லூக்கின் மருத்துவமனை மற்றும் வீட்டைக் காவலர்கள் சோதனை செய்துள்ளதாக அச்செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
மரடோனாவின் மகள்கள் டால்மா, கியானினா மற்றும் ஜனா ஆகிய மூன்று பேருக்கும் ஏற்பட்ட சந்தேகத்தின் பெயரில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது. அவரது இருதய சிகிச்சை குறித்து இவ்விசாரணை நடைபெறுவதாக நிதித்துறை தெரிவித்துள்ளது.
“எங்கள் விசாரணைகள் நடந்துகொண்டிருக்கின்றன, நாங்கள் மரடோனாவின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட அனைத்துச் சாட்சிகளுடனும் இது குறித்து பேசிக்கொண்டிருக்கிறோம்” என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக டெலாம் கூறியுள்ளது.
பிரான்ஸ் மீடியா ஏஜென்சி மருத்துவர் லியோபோல்டோ லூக்கை தொடர்பு கொண்டபோது அவர் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துள்ளார். ஆனால், மருத்துவர் லியோபோல்டோ, மரடோனாவுக்கு மூளையில் ஏற்பட்ட ரத்த உறைவைச் சரிசெய்ய எட்டு நாட்கள் அறுவை சிகிச்சை அளித்துள்ளார். நவம்பர் 12-ம் தேதி, சிகிச்சை முடிந்து மரடோனா வீடு திரும்பும்போது அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை மட்டும் லியோபோல்டோ வெளியிட்டுள்ளார்.
அதன்பின், மரடோனா அவரது டைக்ரே நகரத்து வீட்டிற்குத் திரும்பினார். அங்கு அவர் முழு நேர மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். நவம்பர் 25 அன்று மாரடைப்பால் அவர் உயிரிழந்தார். அவர் நவம்பர் 26 அன்று அர்ஜென்டினா தலைநகருக்கு அருகில் உள்ள ஜார்டின் டி பாஸ் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.