Aran Sei

மேலுமொரு உட்கட்சி மோதல், ஆட்டம் காணும் நேபாள அரசு! 

credits : indian express

நேபாளத்தின் ஆளும் கட்சியான நேபாள கம்யூனிஸ்ட் கட்சியில் (என்.சி.பி-ல்) ஏற்பட்டிருக்கும் உட்கட்சி மோதல், பிரதமர் கே.பி.ஷர்மா ஒளி-யின் தலைமையிலான அரசாங்கத்தை ஆட்டம் காண வைத்திருக்கிறது.

ஏற்கனவே கணிக்கப்பட்டது போல, கட்சியின் மூத்த தலைவர் ஒளி மற்றும் ‘எக்ஸிக்யூட்டிவ் தலைவர்’ (நிர்வாக தலைவர்)  புஷ்ப கமல் தஹல் எனப்படுகிற ப்ரச்சந்தா,  அரசாட்சியிலும், கட்சி அலுவல்களிலும் தங்கள் அதிகாரத்தை நிலைநாட்டி வியாபிக்க மோதலில் ஈடுபட்டிருக்கின்றனர். இப்படியான மோதலில் இவர்கள் இருவரும் ஈடுபடுவது இது முதல் முறை அல்ல.

2018 -ல், நேபாள கம்யூனிஸ்ட் கட்சியை தோற்றுவிக்க, தத்தம் கட்சிகளை ஒருங்கிணைத்ததில் இருந்தே இருவரும் அடிக்கடி மோதிக் கொள்வது வாடிக்கையாகி விட்டது. தம்முடைய தனிப்பட்ட ஆசைகளுக்காக, கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டும் என இருவரும் முடிவு செய்யத் தொடங்கியதில் இருந்தே, ஒளி மற்றும் தஹலுக்கு அதிகாரத்தை பகிர்ந்து கொள்வது சிக்கலாகவே இருந்தது.

இதற்குத் தீர்வாக, கடந்த இரண்டரை வருடங்களில் இருவரும் போட்டுக் கொண்ட ஒப்பந்தங்கள் எதுவும் யதார்த்தத்தில் கை கொடுக்கவில்லை. தஹலுக்கே கட்சி அலுவல்களில் அதிக அதிகாரம் இருக்கிறது எனும் பிம்பத்தை தொண்டர்கள் மத்தியில் உருவாக்க, ‘எக்ஸிக்யூட்டிவ்’ எனும் வார்த்தை தஹலின் பதவியின் முன் சேர்க்கப்பட்டிருக்கிறது.

கருத்து வேறுபாடுகளுக்கு தீர்வாக இருவரும் கடந்த செப்டம்பர் மாதத்தின் இரண்டாம் வாரம், ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்கள். அப்போது, தங்களுக்குள் இருந்த வேறுபாடுகள் அனைத்தும் சரி செய்யப்பட்டதாகவும், ‘கட்சியில் பிளவை உண்டாக்க நினைக்கும் அனைத்து பிற்போக்கு சக்திகளின் முயற்சிகளும் தோற்கடிக்கப்பட்டதாகவும்’ இருவரும் தெரிவித்தனர்.

குறிப்பிடப்பட்ட ஒப்பந்தத்தில், தஹல் ‘எக்ஸிக்யூட்டிவ் தலைவராக’ இருப்பார் எனவும், ஒளி, அடுத்த இரண்டு வருடங்களுக்கு பிரதமராக இருப்பார் எனவும் பேசப்பட்டு இருந்தது. இந்த தற்காலிக ஏற்பாடு முழுமையாக ஒரு மாதம் கூட நடந்தேறாத நிலையில், இரண்டு தலைவர்களும் வாய்ச்சண்டையில் இறங்கியிருக்கிறார்கள்.

கடந்த வெள்ளியன்று,  ‘கட்சியின் ஒற்றுமைக்காகவும், கூட்டாட்சி ஜனநாயகக் குடியரசை காக்கவும் ஒளி பிரதமர் பதவியை  தியாகம் செய்ய வேண்டும்’ என தஹல் வற்புறுத்தியிருந்தார்.

கட்சியின் தலைமையகத்தில் வெளியிடப்பட்ட அரசியல் ஆவணம் ஒன்றில், உடனடியாக கவனிக்க வேண்டிய பிரச்சினைகளில் முடிவு எடுக்கும்படி ஒன்பது முக்கிய தலைவர்கள்அறிவுறுத்தியிருந்தனர்.

இதில், தஹலோ, ஒளி கடந்த காலத்தில் செய்த தவறுகளை பார்க்க வேண்டும் என குறிப்பிட்டிருக்கிறார். நாட்டில் ஊழல் பெருகியதற்கும், நல்லாட்சி செய்யத் தவறியதற்கும் ஒளி மீது குற்றம் சாட்டியிருக்கிறார். மேலும் பல குற்றச்சாட்டுகள் ஒளி மீது வைக்கப்பட்டிருக்கின்றன.

இரண்டு கட்சிகளும் ஒருங்கிணைந்ததில் இருந்து, இப்படியான ஆழமாக குற்றச்சாட்டுகள் ஒளி மீது வைக்கப்படுவது இதுவே முதல் முறை.  அடிப்படையில் இரண்டு தலைவர்களுக்கும் சிக்கலாக இருப்பது அதிகார நிலைகளே. அரசாட்சியில், கட்சியின் கண்காணிப்பு ஓங்கி இருக்க வேண்டும் என்பதில் இருந்து பிரச்சினை தொடங்குகிறது.

ஒருங்கிணைப்பின் போது , ‘இணை-தலைவர்கள்’ முறையை தேர்ந்தெடுத்ததால், இரண்டு பேருமே சமம், எந்த அதிகார நிலையும் இருக்கக் கூடாது என்பது தஹலின் கருத்து. ஒளி, இதை மறுத்து, தான் கட்சியின் மூத்த தலைவர் என சொல்கிறார்.

இதைப் போலவே, அரசாட்சியை கட்சி கட்டுப்படுத்த வேண்டும் என தஹல் சொல்லும் போது, ‘இது ஒரு பாராளுமன்ற ஜனநாயகம், கட்சி அரசின் இயக்கத்தில் தலையிடக்கூடாது’ என்கிறார் ஒளி.

இப்படி, நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய பிரச்சினையாக இருப்பது தலைமைக்கான மோதலே! 2018-ல் இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்த போது, கட்சியையும் அரசையும் நடத்துவதில் இருவருக்கும் சமமான அதிகாரம் இருக்கும் என்று ஒரு உடன்படிக்கை இருந்தது. ஆனால், கட்சி பணிக்குழுவின் பரிந்துரை காரணமாக, ஒளி அரசை நடத்துவார் எனவும், தஹல் கட்சியை நடத்துவார் எனவும் முடிவானது.

கடந்த செப்டம்பரில், கட்சி பிளவின் விளிம்பில் இருந்தது. அப்போது, ஒன்று ஒளி கட்சியை விட்டு விலக வேண்டும், அல்லது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்கட்சி தலைவர்கள் வற்புறுத்தினர். அந்நேரம், பாராளுமன்ற கட்சிகளிடம் இருந்து பெரும்பான்மை வாக்குகளை பெற இரண்டு தரப்பினரும் கையெழுத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தன. இருப்பினும், கட்சியை பிரிக்கக் கூடாது என இரண்டாம் நிலை தலைவர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக, இரண்டு தலைவர்களும் தற்காலிகமாக சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.

கட்சி பிளவுபடாமல் இருந்ததற்கு மேலுமொரு காரணம், புதிய தலைமையை தேர்ந்தெடுக்க பொது மாநாடு நடத்தப்படவிருப்பதாக எடுக்கப்பட்ட முடிவு. ஆனால், இந்த மாநாட்டை நடத்த எடுக்கப்பட்ட முயற்சிகள் வெற்றியில் முடியவில்லை.

இந்த வாரமோ, கட்சியின் மூத்த தலைவர்களான மாதவ் குமார் நேபாளும், ஜலா நாத் கனலும், தஹலின் அரசியல் ஆவணத்திற்கு ஆதரவு அளிக்கும் அளவு பிரச்சினை பெரிதாகி இருக்கிறது. அவர்களும், ஒளி ஒன்று பதவி விலக வேண்டும் அல்லது கட்சியின் தலைமை பதவியில் இருந்து இறங்க வேண்டும் என வற்புறுத்தியிருக்கின்றனர். ஆனால், ஒளியோ, தனக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், தக்க பதிலடி கொடுக்கப்படும் என பொதுவெளியில் அறிவித்திருக்கிறார்.

ஒளியின் இந்த ‘பதிலடி’, பாராளுமன்றத்தை கலைத்து அவசரகால சட்டத்தை பிரகடனம் செய்வதாகவோ, அல்லது , ஏற்கனவே நடந்தது போல, தனக்கு சாதகமாக, கட்சியை கலைக்க சட்டம் கொண்டு வருவதாகவோ இருக்கலாம். கட்சிக்குள் மோதல்கள் வரும் போதெல்லாம், அந்நிய சக்திகளின் தூண்டுதலால் ( ‘இந்தியாவினால்’ எனக் கொள்க) கட்சித் தலைவர்கள் அரசை கவிழ்க்க முயற்சிக்கிறார்கள் என ஒளி சொல்வது வழக்கம்.

ஆனால் இப்போதோ, இந்தியாவுடன் ஆன உறவை பலப்படுத்த ஒளி கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கும் காரணத்தால், நிலைமை தலைகீழாக இருக்கிறது. தஹலோடான மோதல் காரணமாக, மாதவ் குமார் நேபாள், பம் தேவ் கௌதம் போன்ற மூத்த தலைவர்களின் ஆதரவ பெற ஒளி முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.

ஆளும் கட்சியில் ஏற்படும் எந்தவொரு மாற்றமும் அரசாங்கத்தை பாதிக்கும் என்பதால்,
வரும் வாரங்கள் ஆளும் கட்சியான என்.சி.பி-க்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. இன்றைய தேதிக்கு, கட்சியின் மூத்த தலைவர்கள் பிரதமர் ஒளிக்கு ஆதரவளிப்பதாக இல்லை!

மேலுமொரு உட்கட்சி மோதல், ஆட்டம் காணும் நேபாள அரசு! 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்