பூட்டான் நாட்டிற்கு அருகில் சீனா உருவாக்கியுள்ள புதிய எல்லை கிராமம், சீன எல்லையில் இருப்பதாக சீன ஊடகங்கள் நேற்று (நவம்பர் 23) கூறியுள்ளன.
ஆனால் வெளியிடப்பட்ட கிராமத்தின் படங்கள், இரு நாடுகளுக்கு இடையேயான சர்ச்சைக்குரிய பகுதியில் அமைந்திருப்பதாக ’தி இந்து’ செய்தி வெளியிட்டுள்ளது. பூட்டான் அதன் எல்லையாக கருதும் பகுதியில் இருந்து, கிராமம் சில கிலோமீட்டர்கள் தொலைவிலேயே உள்ளது.
பாங்டா என்று பெயரிடப்பட்ட இந்த புதிய கிராமம் கட்டப்பட்டு, செப்டம்பரில் மக்கள் அங்கு குடியேறியிருக்கிறார்கள் என்று சீனாவின் ‘குளோபல் டைம்ஸ்’ இணைய தளம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம், பூட்டான் நாட்டு அதிகாரிகள், கிராமம் தங்கள் நாட்டு பகுதியில் இல்லை என்று மறுத்துள்ளனர். இந்தியாவின் பூட்டான் தூதர் வெட்சோப் நம்கீல், தி இந்துவிடம், “பூட்டானின் எல்லைக்குள் சீன கிராமம் இல்லை.” என்று உறுதிப்படுத்தியுள்ளார்.
“தென்மேற்கு சீனாவின் திபெத் தன்னாட்சி பகுதியில் உள்ள யாடோங் கவுண்டி மாகாணத்தில் உள்ள அதிகாரிகள், அதே மாகாணத்தை சேர்ந்த ஷாங்கூய் கிராமத்தில் உள்ள, 124 பேர் தாமாக முன்வந்து, கடந்த செப்டம்பர் மாதம் பாங்டா கிராமத்தில் 27 வீடுகளில் குடிபெயர்ந்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளனர். கவுண்டியில் இருந்து 35 கி.மீ தூரத்தில் புதிய கிராமம் உள்ளது.” என்று ’குளோபல் டைம்ஸ்’ தெரிவித்துள்ளது.
மேலும் கிராமத்தில் சாலைகள், மக்கள் கூடும் மந்தை, கிராம நிர்வாக குழு, சுகாதார மையம், காவல்துறை அலுவலகம், மழலையர் பள்ளி, கடைகள் போன்றவை உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
எல்லை பிரச்சனை
சீன அரசு, தென் சீனக் கடல் தீவுகளில் செய்தது போலவே, கடந்த சில ஆண்டுகளாக சர்ச்சைக்குரிய பகுதிகளில், சீன மக்களை குடியேற்றுவதன் மூலம், அந்த பகுதிக்கான உரிமையை பறிக்கப்பார்கிறது என்று ‘தி இந்து’ குறிப்பிட்டுள்ளது.
சீனாவின் வரைபடங்களின்படி, இந்த கிராமம் சீனாவின் எல்லைக்குள் உள்ளது. ஆனால் சீனாவை பொறுத்தவரை அதன் எல்லை என்பது, இந்தியா மற்றும் பூட்டானின் எல்லைகளை தாண்டி, சில பகுதிகளை உள்ளடக்கியது. இந்த கிராமம், டோக்லாம் பீடபூமி பகுதியில், இந்தியா-பூட்டான்-சீனா முக்கோண எல்லை பகுதியின் கிழக்கே உள்ளது.
நேற்று (நவம்பர் 23) சீன வல்லுநர்கள், தீர்க்கப்படாமல் இருக்கும் சீனா-பூட்டான் எல்லை பிரச்சனை குறித்து, இந்தியாவை குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், “சீனாவுக்கும் பூட்டானுக்கும் இடையிலான எல்லை பிரச்சனை மிகச் சிறியது, ஆனால் இந்தியாவின் தலையீடு காரணமாக பிரச்சனை சரி செய்யப்படவில்லை.” என்று ஷின்ஹூவா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சித் துறையின் இயக்குனர் கியான் ஃபெங் ’குளோபல் டைம்ஸிடம்’ தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.