தேச நலனுக்கு எதிரான அக்னிபத் திட்டத்தை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ராணுவத்தில் இளைஞர்கள் 4 ஆண்டுகள் மட்டுமே பணியாற்றக்கூடிய அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சென்னையிலும் நேற்று (ஜூன் 18) இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அக்னிபத் திட்டம்: சென்னை தலைமைச் செயலகம் அருகே இளைஞர்கள் போராட்டம்
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “ராணுவத்தில் ஒப்பந்த முறையில் ஆள் சேர்ப்பதற்கு ஒன்றிய பாஜக அரசு புதிதாகக் கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாட்டின் பாதுகாப்பின் மீது அக்கறை கொண்டுள்ள பல முன்னாள் ராணுவ அதிகாரிகள் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
மாதமிரு முறை வெளிவரும் பிரபல ஃப்ரன்ட்லைன் பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில், முன்னாள் மேஜர் ஜெனரல் ஜி.டி பக்ஸி, இத்திட்டத்தைக் கேள்விப்பட்டுத் திடுக்கிட்டுப் போனேன் For God’s sake please don’t do it என்று தனது அச்சத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இன்னொரு ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் ராஜ் கத்யன், 4 ஆண்டு ஒப்பந்தப் பணியில் சேரும் ராணுவ வீரர், தன் உயிரைத் தியாகம் செய்யும் அளவிற்கு போரில் பணியாற்றுவார் என எதிர்பார்க்க முடியாது என்று கவலை தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சிகள் தவிர, நாட்டின் பாதுகாப்புப் பணியில் பல்லாண்டுகள் பணியாற்றிய பல முன்னாள் ராணுவ அதிகாரிகளும், ராணுவப் பணி பகுதிநேர பணி அல்ல என்றும், இதுபோன்ற தேர்வு, ராணுவத்தில் கட்டுப்பாட்டைக் கெடுக்கும் என்று கூறி, இந்தத் தேர்வு திட்டம் ஆபத்தானது என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்திய நாட்டின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு, லட்சக்கணக்கான இளைஞர்களின் ராணுவப் பணி எனும் இலட்சியத்தைச் சிதைக்கும் இந்த அக்னிபத் எனும் தேச நலனுக்கு எதிரான திட்டத்தை உடனடியாக ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அக்னிபத் திட்டம் எதிரொலி பற்றி எரியும் பாஜக அலுவலகம் Piyush Manush
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.