நாளை உங்களுக்கொரு அரசாங்கம் தேவைப்பட்டால் அதற்கு டெண்டர் விடுவீர்களா? முதலமைச்சர், பிரதமர் தேவையென டெண்டர்களை வெளியிடுவீர்களா? என்று ஒன்றிய அரசை நோக்கி மகாராஷ்டிரா முதலமைச்சரும் சிவசேனா கட்சி தலைவருமான உத்தவ் தாக்ரே கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியுள்ள அக்னிபாத் திட்டத்தின்படி ராணுவத்தில் 17.5 முதல் 21 வயதுள்ள 45 ஆயிரம் பேர், 4 ஆண்டு ஒப்பந்தம் அடிப்படையில் ராணுவத்தில் சேர்க்கப்படவுள்ளனர். இதன்மூலம் இளைஞர்களுக்கு பணிபுரிய வாய்ப்பு கிடைப்பதோடு, ஆயுதப்படை இளம் வீரர்கள் படையாகும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
இதற்கான ஆட்கள் தேர்வு அடுத்த 90 நாட்ள்களில் ஆன்லைன் முறையில் நடக்கவுள்ளது. இதில் தேர்வாகும் இளைஞர்கள் அக்னிவீரர்கள் என அழைக்கப்படுவார்கள். ஆயுதப்படைக்கு வழக்கமாக ஆட்கள் தேர்வு செய்வதற்கான கல்வி தகுதியே, அக்னிவீரர்களுக்கும் பொருந்தும். அதன்படி, புதிய தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்தப்பட்ட மட்டங்களில் பயிற்சி வழங்கப்படும். பல்வேறு துறைகளில், புதிய திறன்களுடன் வேலைவாய்ப்புகளை இந்த திட்டம் உருவாக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் 4 ஆண்டுகள் மட்டுமே பணியில் இருப்பர். இதற்காக மாத சம்பளம் ரூ. 30 ஆயிரம் முதல் ரூ. 40 ஆயிரத்துடன் படிகளும் வழங்கப்படும். மருத்துவ மற்றும் காப்பீடு வசதிகளும் வழங்கப்படும்.
4 ஆண்டுகளுக்குப் பின்னர், 25 சதவீத வீரர்களுக்குப் பணி நீட்டிக்கப்பட்டு, ஆயுதப்படைகளில் 15 ஆண்டுக்காலம் பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள். ஆயுதப்படையில் சேர முடியாதவர்களுக்கு 11 லட்சம் முதல் 12 லட்சம் வரை நிதி வழங்கப்படும். ஆனால், அவர்கள் ஓய்வூதிய பலன்கள் பெற முடியாது. இந்த திட்டம் வெற்றிகரமாக அமைந்தால், ராணுவத்தின் செலவு குறையும் என ஒன்றிய அரசு கூறியுள்ளது.
இத்திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், உத்தவ் தாக்ரேவும் ஒன்றிய அரசை சாடியுள்ளார். சிவசேனா கட்சியின் 56 ஆம் ஆண்டு விழா கொண்டாட்டத்தில் பேசிய அவர், ‘நாட்டின் இளைஞர்களின் எதிர்காலத்துடன் ஒன்றிய பாஜக அரசு விளையாடக்கூடாது. உங்களால் என்ன செய்ய இயலுமோ அதை மட்டுமே நீங்கள் வாக்குறுதியாகத் தர வேண்டும்.
அர்த்தமில்லாத திட்டத்திற்கு அக்னிவீர், அக்னிபத் என பெயர் வைக்க வேண்டாம். 17 முதல் 21 வயது இளைஞர்கள் நான்கு ஆண்டுகள் கழித்து என்ன செய்வார்கள். நாட்டின் ராணுவ வீரர்களை ஒப்பந்தத்தில் வேலைக்கு எடுப்பது ஆபத்தானது. நாளை அரசங்கத்தை கூட டெண்டர் மூலம் நீங்கள் தேர்வு செய்ய நினைப்பீர்கள். முதலமைச்சர் மற்றும் பிரதமர் பதவிகளுக்கும் டெண்டர் விடுவீர்களா? இளைஞர்கள் என்ன யூஸ் அண்ட் த்ரோவா (Use and throw) என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
“உங்களால் நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகளை மட்டுமே கொடுக்க வேண்டும். ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்பு தருவோம் என்று வாக்குறுதிகளை அளிக்கிறீர்கள். என்ன செய்வீர்கள்? ஒன்றுமில்லை. அக்னிபாத், அக்னிவீரர் போன்ற பெயர்களில் திட்டங்களை கொண்டு வருகிறீர்கள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
“இளைஞர்களுக்கு வேலை இல்லாமல், மனதில் கடவுளின் பெயரை துதிப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது. எனவே தான் எனது தொண்டர்களிடம் நம் மனதில் ராமரை வைத்துக்கொள்வோம், அதேவேளை உங்களுக்கு வேலையையும் உறுதி செய்து தருவோம் எனத் தொடர்ந்து கூறி வருகிறேன். முதலில் விவசாயிகளை வீதிக்கு வர வைத்து போராட வைத்தீர்கள் தற்போது இளைஞர்களை போராட வைத்துள்ளீர்கள். இது மிகவும் ஆபத்தானது” என்று மகாராஷ்டிரா முதலமைச்சரும் சிவசேனா கட்சி தலைவருமான உத்தவ் தாக்ரே தெரிவித்துள்ளார்.
Source: ndtv
Agnipath க்கு எதிரா போராடுவரங்க மேல Bulldozer பாயுமா? Congress Peter Alphonse Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.