Aran Sei

பெட்ரோல் விலையை குறைக்க முடியாததற்கு காங்கிரஸ் காரணமா? – நிர்மலா சீதாராமன் கூறுவதில் உண்மை உள்ளதா?

Image Credits: The Indian Express

2009 முதல் 2014 வரையிலான காங்கிரஸ் கூட்டணியின் ஆட்சி காலத்தில், சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாய் 110 டாலர் வரை உயர்ந்தது. உலக அளவில் வரலாறு காணாத அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தபோதும், காங்கிரஸ் அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கியதன் மூலம், அந்த விலையேற்றம் பொதுமக்களை பாதிக்கவில்லை.

2014 ஆம் ஆண்டு, பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கியது. ஆனால், விலை குறைந்தாலும், பாஜக அரசு அதன் பலனை மக்களுக்கு அளிக்காமல், அதாவது பெட்ரோல் டீசல் விலையை குறைக்காமல், அதன் மீதான வரியை தொடர்ந்து உயர்த்தி வந்துள்ளது தரவுகள் மூலம் நிரூபணமாகியுள்ளது.

பாஜக ஆட்சி பொறுப்பேற்ற அடுத்த இரண்டு ஆண்டுகளில் கச்சா எண்ணெயின் விலை 40 டாலர் அளவுக்கும் குறைந்தது. அதன் பிறகு 50 மற்றும் 70 டாலருக்கு இடையிலேயே கச்சா எண்ணெயின் விலை நீடித்து வந்துள்ளது. ஆனால், இந்த அளவிற்கு விலை இறங்கினாலும், பாஜக அரசு அதற்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை. மாறாக அதன் மீதான வரியையே தொடர்ந்து அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா பெருந்தொற்று பரவத்தொடங்கிய சமயம், சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை குறைந்த போது, அந்த நெருக்கடியான காலத்திலும் கூட, அதன் பலனை பாஜக அரசு மக்களுக்கு வழங்கவில்லை. விலையை குறைக்காவிட்டாலும் பரவில்லை ஆனால் அதற்கு நேர் மாறாக பெட்ரோல் டீசல் மீதான கலால் வரி கடுமையாக உயர்த்தப்பட்டது. 2020 மார்ச் முதல் மே மாதம் வரையிலான காலத்தில் மட்டும் பெட்ரோல் மீதான வரி 65 சதவீதமும், டீசல் மீதான வரி 101 சதவீதமும் உயர்த்தப்பட்டது. கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் பரவிவந்த இந்த குறிப்பிட்ட காலத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரல் 25 டாலர் வரை இறங்கியது.

கச்சா எண்ணெயின் விலை இந்த அளவிற்கு குறைந்தாலும், கொரோனா முழு முடக்கத்தால் பொருளதார ரீதியாக மக்கள் பாதிக்கப்பட்டிருந்த அந்த சமயத்திலும், பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய பாஜக அரசு குறைக்கவில்லை.

2014 – 15 ஆண்டுகளில் எரிபொருள் விற்பனை மூலம் ஒன்றிய அரசுக்கு 99,068 கோடி ரூபாய் வரி வருவாய் கிடைத்து. 2020 – 21ஆம் நிதி ஆண்டில் இது 3.7 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.  அதேநேரத்தில் 2014 – 15 ஆண்டுகளில் மாநில அரசுகளுக்கு எண்ணெய் விற்பனை மூலம் 1.3 லட்சம் கோடி வரி வருவாய் கிடைத்துள்ளது. ஆனால் அடுத்த ஏழு ஆண்டுகளில் இது 2 லட்சம் கோடி என்ற அளவில் மட்டுமே உயர்ந்துள்ளது.

ஆகவே, கடந்த ஏழு ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மீதான வரியின் மூலம் ஒன்றிய அரசின் வருமானம், சுமார் 250 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால், மாநில அரசுகளின் வருமானமோ 50 சதவீதம் கூட உயரவில்லை. 2021 ஜூலை 1 ஆம் தேதி நிலவரப்படி, ஒன்றிய அரசு பெட்ரோலுக்கு 32.90 ரூபாயும், டீசலுக்கு 31.80 ரூபாயும் வரி விதிக்கிறது. தமிழக அரசு அதை விட குறைவாக பெட்ரோலுக்கு 23.89 ரூபாயும் டீசலுக்கு 17.73 ரூபாயும் வரி விதிக்கிறது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு பெட்ரோல் மீதான வரியை 3 ரூபாய் குறைத்து கடந்த பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட்டது. அந்த அறிவிப்பு உடனடியாக நடைமுறைக்கும் வந்தது. இதை சுட்டிக்காட்டி, ஒன்றிய அரசும் வரியை குறைக்குமா என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோல், டீசலுக்கு மானியம் வழங்கியதால் (எண்ணெய் கடன் பத்திரம் வெளியிட்டது) ஏற்பட்ட 1.3 லட்சம் கோடி கடனை திரும்ப செலுத்த வேண்டும் என்று கூறினார். அத்துடன், அடுத்த ஐந்து ஆண்டுகளில் அந்த கடனுக்காக (எண்ணெய் கடன் பத்திரம்) 37,000 கோடி வட்டி செலுத்த வேண்டும் என்று கூறிய அவர் அதனால், பெட்ரோல், டீசலுக்கு வரியை குறைக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறினார்.

இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்காக சுமார் நான்கரை மாதம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்து பெட்ரோல், டீசல் விலை உயர்வு தற்போது மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது.

கடந்த 10 நாட்களில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை 9 முறை உயர்த்தப்பட்டு அவற்றின் விலை ரூபாய் 6.40 உயர்ந்துள்ளது. கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் பெட்ரோல் விலை உயர்ந்து வந்துள்ள நிலையில், மார்ச் 26 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பேசிய நிர்மலா சீதாராமன், பெட்ரோல் டீசல் விலை 137 நாட்களாக உயர்த்தப்படாமல் இருந்ததற்கு 5 மாநில தேர்தல் காரணம் இல்லை என்றும், தற்போது உயர்த்தப்படுவதற்கு ரஷ்யா-உக்ரைன் போர்தான் காரணம் என்றும் கூறினார்.

அடுத்ததாக, கடந்த 29 ஆம் தேதி மீண்டும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் ஆட்சியில் வழங்கிய மானியமே விலையை குறைக்க முடியாததற்கு காரணம் என்று கடந்த ஆண்டு கூறிய அதே விளக்கத்தை கூறியுள்ளார். அத்துடன் கடந்தமுறை கூறியது போலவே, அடுத்த 5 ஆண்டுகளுக்கு கடனை திரும்ப செலுத்த வேண்டி உள்ளதால் விலையை குறைக்கு முடியாது என்று அச்சுபிறழாமல் அதே காரணத்தை கூறியுள்ளார்.

நிர்மலா சீதாராமன் கூறியுள்ள இந்த காரணம் சரியானதுதானா? எண்ணெய் நிறுவனங்கள் உண்மையில் அவ்வளவு பெரிய நெருக்கடியில் உள்ளதா என்று ஆராயும்போது அதில் உண்மை இல்லை என்பது தெரியவந்துள்ளது.

கடந்த 7 ஆண்டுகளில், கடனுக்கு வட்டியாக 70,195 கோடி ரூபாயை எண்ணெய் நிறுவனங்கள் செலுத்தப்பட்டுள்ளன. தற்போது 1.30 லட்சம் கோடி ரூபாய் கடன் நிலுவையில் உள்ள நிலையில், கடந்த 7 ஆண்டுகளில் பெட்ரோலிய பொருட்களின் வரியின் மூலம் ரூபாய் 15.5 லட்சம் கோடி ஒன்றிய அரசுக்கு வருவாயாக கிடைத்துள்ளது. கடந்த மூன்று நிதியாண்டில் மட்டும் 8.02 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இந்த வருவாயுடன் ஒப்பிடும்போது செலுத்தப்பட வேண்டிய கடனின் அளவு மிகவும் சொற்பமே. அத்துடன் கடந்த நிதி ஆண்டு (2020 – 2021) மட்டும் எண்ணெய் விற்பனை மூலம் ஒன்றிய அரசுக்கு 3.7 லட்சம் கோடி வரி வருவாய் கிடைத்துள்ளது கவனிக்கத்தக்கது.

காங்கிரஸ் ஆட்சியில், சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்தபோதும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்துவதற்காக எண்ணெய் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்பட்டது. இதனால், கச்சா எண்ணெயின் விலை 110 டாலராக இருந்தபோது கூட, இந்தியாவில் பெட்ரோலின் தற்போதைய அளவிற்கு உயரவில்லை. ஆனால், தற்போது, கச்சா எண்ணெயின் விலை சுமார் 70 டாலராக இருக்கும்போதே, பெட்ரோல் விலை பல மாநிலங்களில் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

ஆகவே, மக்களின் நலன் கருதி, விலையை கட்டுப்படுத்துவதற்காக வழங்கப்பட்ட மானியத்தால் நிலுவையில் உள்ள சொற்பமான கடனை காரணம் காட்டி பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியாது என்று நிர்மலா சீதாராமன் மீண்டும் கூறியுள்ளது உண்மைக்கு புறம்பானது என்பது தெளிவாகிறது.

பெட்ரோல் விலையை குறைக்க முடியாததற்கு காங்கிரஸ் காரணமா? – நிர்மலா சீதாராமன் கூறுவதில் உண்மை உள்ளதா?

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்