Aran Sei

பாபர் மசூதிக்கு கீழே, கோவிலைக் கண்டுபிடித்தவருக்கு பத்ம விபூஷன் – யார் இந்த பி.பி.லால்?

ந்த குடியரசு தினத்தில், பத்ம விபூஷன் அறிவிக்கப்பட்டவர்களில் 1970 களின் மத்தியில் ராம்ஜென்மபூமியில் அகழ்வாராய்ச்சிக்கு தலைமை தாங்கிய தொல்பொருள் ஆய்வாளர் பிரஜ் பாசி லாலும் ஒருவர். லால் 1968 மற்றும் 1972 க்கு இடைப்பட்ட வருடங்களில், இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் தலைமை இயக்குநர் இருந்தார். ஹரப்பா நாகரிகம், இந்து புராணமான மகாபாரதத்துடன் தொடர்புடைய தொல்பொருள் தளங்கள் மற்றும் பல யுனெஸ்கோ குழுக்களிலும் பணியாற்றியுள்ளார். 2000 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் பத்ம பூஷண் விருது அவருக்கு வழங்கப்பட்டது. இடிக்கப்பட்ட பாபர் மசூதிக்கு அடியில் ஒரு கோயில் போன்ற கட்டமைப்பு என்கிற அவரது கோட்பாட்டுக்காக அவர் பரவலாக அறியப்படுகிறார்.

பி.பி.லால் யார்?

லால் 1921 இல் உத்தரபிரதேசத்தின் ஜான்சியில் பிறந்தார். தற்போது புதுதில்லியில் வசிக்கிறார். அலகாபாத் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத்தில் முதுகலைப் பட்டம் முடித்த போது அவருக்கு தொல்பொருள் ஆய்வில் ஆர்வம் ஏற்பட்டது.

பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் சதித்திட்டம் – லிபர்ஹான் கமிஷன் கூறியது என்ன?

1943 ஆம் ஆண்டில், புகழ்பெற்ற பிரிட்டிஷ் தொல்பொருள் ஆய்வாளர் மோர்டிமர் வீலரிடம் அகழ்வாராய்ச்சியில் பயிற்சி பெற்றார். தற்போதைய பாகிஸ்தானிலிருக்கும் டாக்ஸிலா தளத்திலிருந்து தான் தொல்பொருள் ஆராய்ச்சியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இந்த 50 ஆண்டுகளில், 50 க்கும் மேற்பட்ட புத்தகங்கள், தேசிய மற்றும் சர்வதேச பத்திரிகைகளில் வெளியான 150க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளில் பணியாற்றியிருக்கிறார்.

அவற்றுள்

2002ல் வெளியான The Saraswati flows on: The continuity of Indian culture, 2008 ல் வெளியான Rama, his historicity, mandir and setu: Evidence of Literature, Archaeology and other Sciences ஆகியவை மிகவும் முக்கியமான புத்தகங்கள்.

அவரது ‘The Saraswati flows on’ புத்தகத்தில், வரலாற்றாசிரியர் ஆர்.எஸ்.ஷர்மாவின் ஆரியப் படையெடுப்பு அல்லது குடியேற்றக் கோட்பாட்டை லால் விமர்சித்தார். ரிக் வேத மக்கள் ஹரப்பா நாகரிகத்தின் ஒரு பகுதியாகவே இருந்தார்கள் என்ற லாலின் கருத்து மிகுந்த சர்ச்சைக்குள்ளானதுடன் வரலாற்றாசிரியர்களின் கடும் விமர்சனங்களைப் பெற்றது.

1950 மற்றும் 1952 க்கு இடையில் பி.பிலால், மகாபாரதத்துடன் தொடர்புடைய பல தளங்களை தோண்டினார். இதன் விளைவாக, இந்தோ-கங்கை பிரிவு மற்றும் மேல் யமுனா-கங்கா தோவாப் ஆகியவற்றில் பல வர்ணம் பூசப்பட்ட சுடுகளிமண் தளங்களை அவர் கண்டுபிடித்தார். சுமார் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு 1975 ஆம் ஆண்டில், ‘இந்தியாவின் பாரம்பரிய கடந்த காலத்தைத் தேடி: ஹஸ்தினாபுரா மற்றும் அயோத்தியில் அகழ்வாராய்ச்சியிலிருந்து வெளிச்சம்’ என்ற தலைப்பில் அவர் எழுதிய ஒரு கட்டுரையில், அவர் தனது கண்டுபிடிப்புகளை பற்றி “கிடைக்கக்கூடிய தொல்பொருள் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால், மகாபாரதக் கதையின் அடிப்படை இருந்ததற்கான அறிகுறிகள் தெரிகின்றன, ஆனால் காலப்போக்கில் அவை மாற்றப்பட்டிருக்கின்றன” என்று கூறினார்.

மாட்டிறைச்சியே சிந்து சமவெளி மக்களின் விருப்ப உணவு – கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வில் தகவல்

அயோத்தியின் ராம்ஜென்மபூமி தளத்தில் அவரது கண்டுபிடிப்புகள் என்ன?

மகாபாரதத் தளங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், லால் 1975 ஆம் ஆண்டு ‘ராமாயண தளங்களின் தொல்லியல்’ என்ற தலைப்பில் மற்றொரு பணித்திட்டத்தைத் தொடங்கினார். இந்த திட்டத்திற்கு இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம், குவாலியரின் ஜிவாஜி பல்கலைக்கழகம் மற்றும் உத்தர பிரதேசத்தின் தொல்பொருள் துறை நிதியுதவி அளித்தன. இந்த திட்டம் மார்ச் 31, 1975 அன்று அயோத்தியில் தொடங்கப்பட்டது. இந்த பணித்திட்டத்தில் அயோத்தி, பரத்வாஜ் ஆசிரமம், நந்திகிராம், சித்ரகூட் மற்றும் சிருங்கவெரபுரா உள்ளிட்ட ஐந்து ராமாயணம் தொடர்பான தளங்களில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டது

லால், தனது 1975 ஆம் ஆண்டு ஆய்வறிக்கையில், அயோத்தியில் நடந்து வரும் அகழ்வாராய்ச்சி பற்றி: “இதுவரை அயோத்தியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகள், கிமு 8 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் இந்த தளம் இருந்ததற்கான அறிகுறிகள் இல்லை.” என்றார். இந்த ஆய்வறிக்கையில் அயோத்தியில் நாணயங்கள் மற்றும் மட்பாண்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அவர் குறிப்பிட்டுள்ள நிலையில், கோவில் எச்சங்களை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இருப்பினும், 1990 இல், லால் தனது அகழ்வாராய்ச்சியின் அடிப்படையில் ‘தூண்-அடிப்படைக் கோட்பாட்டை’ எழுதினார். பாபர் மசூதிக்கு அடித்தளமாக கோயில் போன்ற தூண்கள் அமைந்திருப்பதைக் கண்டுபிடித்ததாக அவர் கூறினார். லாலின் கண்டுபிடிப்புகள் பாஜக தொடர்பு பத்திரிகையான, மந்தனில் வெளியிடப்பட்டன. 2008 ஆம் ஆண்டு தனது Rāma, His Historicity, Mandir and Setu: Evidence of Literature, Archaeology and Other Sciences புத்தகத்தில் “பாபரி மஸ்ஜித்தின் தூண்களின் கீழே பன்னிரண்டு கல் தூண்கள் இருந்தன, அவை இந்து உருவங்கள், சிற்பங்கள் மற்றும் கடவுளர்களை உள்ளடக்கியிருக்கின்றன, இந்த தூண்கள் மசூதியின் ஒருங்கிணைந்த பகுதிகளாக இல்லை, அதற்கு அந்நியமானவை என்பது இதிலிருந்தே தெரிந்தது. ” என எழுதினார்.

அவரது கோயில்-தூண் கோட்பாடு, 2002 ஆம் ஆண்டில் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அகழ்வாராய்ச்சி குழுவின் விளக்கக் கட்டமைப்பாக அங்கீகரிக்கப்பட்டது.

(இந்தியன் எக்ஸ்பிரசில் வெளியான, பி.பி.லால் குறித்த விளக்க செய்தியின் மொழியாக்கம்)

பாபர் மசூதிக்கு கீழே, கோவிலைக் கண்டுபிடித்தவருக்கு பத்ம விபூஷன் – யார் இந்த பி.பி.லால்?

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்