பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்த நாடுகள், தங்கள் நாட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை ஒத்திவைக்க வேண்டும். அதற்குப் பதிலாக அந்தத் தடுப்பூசிகள் பொருளாதாரத்தில் நலிவுற்ற நாடுகளுக்கு நன்கொடையாக அளித்து உதவ வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
”அதிக எண்ணிக்கைகளில் தடுப்பூசியை வாங்கியிருக்கும் சில பணக்கார நாடுகள், குறைந்த ஆபத்துள்ள குழுக்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணியைத் தொடங்கியுள்ளன” என உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
”சில நாடுகள், தங்கள் நாட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்குத் தடுப்பூசி செலுத்த விரும்புகின்றன. ஆனால் இப்போது அதை மறுபரிசீலனை செய்து, அந்தத் தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என அவர் கூறியுள்ளார்.
குழந்தைகளுக்குப் பரவும் கொரோனா – உத்தரகண்டில் 1000 குழந்தைகளுக்கு உறுதியான தொற்று
”உலகளவில் கொரோனா தடுப்பூசி விநியோகம் சீரற்றதாக உள்ளது. 120 கோடி மக்கள் தொகை (உலக மக்கள்தொகையில் 16 விழுக்காடு) கொண்ட நான்கு நாடுகளிடம் 460 கோடி தடுப்பூசிகள் (உலக மக்கள் தொகையில் 53 விழுக்காடு) உள்ளன. ஆனால் பொருளாதாரத்தில் நலிவுற்ற நாடுகளிடம் 7.7 கோடி தடுப்பூசிகள் மட்டுமே உள்ளன.” என்பது டியூக் குளோபல் ஹெல்த் இன்னோவேஷன் செண்டர் அமைப்பின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஜூலை மாதத்தின் இறுதியில், அமெரிக்காவில் தற்போது இருக்கும் எண்ணிக்கையைவிட 30 கோடி அல்லது அதற்கு அதிகமான எண்ணிக்கையிலான தடுப்பூசிகள் கூடுதலாக இருக்கும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவை தொடர்ந்து சீனாவும், இந்தியாவும் ஒட்டு மொத்தமாக அதிக எண்ணிக்கையிலான தடுப்பூசிகளைச் செலுத்தி வருகின்றன. ஆனால் இன்னும் சில ஆப்பிரிக்க நாடுகளில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடப்படவில்லை என கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.
”இன்னும் பலர் பாதுகாக்கப்படவில்லை என்பதே உலகளாவிய அளவில் தடுப்பூசியை அணுகுவதில் இருக்கும் சிக்கலின் பிரதபலிப்பாகும். தற்போதைய தடுப்பூசி விநியோகத்தில் 0.3 சதவீதம் மட்டுமே குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்குக் கிடைத்துள்ளன. இன்னும் பல நாடுகளில் சுகாதாரம் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்குச் செலுத்தும் அளவிற்கு கூட தடுப்பூசிகள் கிடைக்கவில்லை என கவலை தெரிவித்துள்ளன.” என அவர் குறிப்பிட்டார்.
”உலகளாவிய நியாயமான அணுகல் திட்டம் அகோவாக்ஸ் திட்டத்தை உலகளாவிய தடுப்பூசி கூட்டணி, தொற்றுநோய்களுக்கான தயாரிப்பு கண்டுபிடிப்புகளுக்கான கூட்டணி மற்றும் யுனிசெப்புடன் இணைந்து உலக சுகாதார நிறுவனம் முன்னேடுத்துள்ளது. உலகின் 92 ஏழை நாடுகளில் உள்ள சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட 20 விழுக்காடு மக்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதை நோக்கமாக கொண்டு இந்தத் திட்டம் செயல்படும்.” என டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறினார்.
Source : Tribune India
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.