Aran Sei

மதத்தின் தன்மை என்ன? – பகத்சிங், நரேந்திர தபோல்கர் இணையும் புள்ளிகள்

லந்தர் ரோமன் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் தலைவராக இருந்த பிஷப் பிராங்கோ முல்லகல் 2014 முதல் 2016 வரை பல சந்தர்ப்பங்களில் பெண் பாதிரியாரை பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பாலியல் பலாத்கார வழக்கு சமீபத்தில் செய்தி  வெளியானது. அவர் மீது சட்டவிரோதமாக அடைத்து வைத்தல்,  பாலியல் வன்புணர்வு,  குற்றவியல் மிரட்டல் விடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ்  குற்றம் சாட்டப்பட்டது. 2004 ஆம் ஆண்டில், மற்றொரு பிரபலமான மதத் தலைவர் காஞ்சி மடத்தின் அப்போதைய மடாதிபதி, சுவாமி ஜெயேந்திர சரஸ்வதி,  அதே காஞ்சிபுரத்தில் உள்ள மற்றொரு கோவிலின் மேலாளர் சங்கரராமன் கொலையில் குற்றம் சாட்டப்பட்டார். இன்னும் பல சமயப் பிரமுகர்கள் இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார்கள்.

இந்த இரண்டு வழக்குகளிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அந்தந்த நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்டனர். குற்றஞ்சாட்டப்பட்டவர்களை நீதிமன்றங்கள் விடுவித்திருந்தாலும், இவை மத நிறுவனங்களின் பாதுகாவலர்கள் மீது குற்றத்தின் இருண்ட மேகம்  படர்வதைக் குறிப்பதாக  உள்ளன. இந்த பாதுகாவலர்கள் அத்தகைய அவதூறுடன் தொடர்புபடுத்தப்பட வேண்டும் என்ற எண்ணமே மத நடைமுறைகள் மற்றும் நிறுவனமயமாக்கப்பட்ட மதத்திற்காக, எதிர்த்து வாதிடுபவர்களுக்கு குழப்பமாக இருக்க வேண்டும். பொதுவாக மதத்துடன் தொடர்புடைய புனிதத்தன்மையை இந்தத் தொடர்பு சிதைக்கிறது. மதத்தின் களம் அறநெறிகள், பொருள் மற்றும் மதிப்பு ஆகியவற்றின் மீது விரிவடைகிறது என்ற பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பார்வையை இது இடையூறு செய்து சிதைக்கிறது.

“தென்னாடுடைய சிவனும் நந்தனை எரித்த நெருப்பும்” – சூர்யா சேவியர்

இது பொதுவாகக் கடைப்பிடிக்கப்படும் பார்வையாக இருந்தாலும், வாழ்க்கையின் பொருள் மற்றும் நோக்கம் பற்றிய நெறிமுறைகளும்  மற்றும் விவாதங்களும் சுதந்திரமான சொற்பொழிவு களங்களாக இருக்கின்றன. அத்துடன் இந்தக் களங்களில் உள்ள கேள்விகள் மதத்தில் அவற்றின் மூலத்தைக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. மத ஆய்வுகளில் ஒரு அறிஞரான டக்ளஸ் கோவன், “நன்மை, ஒழுக்கம் மற்றும் கண்ணியம் ஆகியவை மதத்தின் இன்றியமையாத பண்புகள்.  அவை “நல்ல, தார்மீக மற்றும் கண்ணியமான தவறு” என்று வரையறுக்க உதவும் தவறான ஆனால் குறிப்பிடத்தக்க பரவலான நம்பிக்கை. மேலும், மதத்திற்கு நன்மை மற்றும் அறநெறியைக் கூறுவதற்கு “மதிப்புமிக்க சிறிய வரலாற்று அல்லது சமூகவியல் சான்றுகள்” இருப்பதாக அவர் குறிப்பிடுகிறார்.

ஒருவர் ஒழுக்கமானவராகவும், ஒழுக்கத்தைப் பற்றி சிந்தனையும், நீதி மற்றும் வாழ்க்கையின் பொருள் பற்றிய கோட்பாடும், ஒருவரின் மத மனப்பான்மையிலிருந்து சுதந்திரமாகவும் இருக்கலாம். ஒரு நாத்திகர் தார்மீகமாக இருப்பது சாத்தியமானது. அதே போல மதவாதிகள் நெறிமுறையற்றவர்கள் என்பதற்கும் எடுத்துக்காட்டுகள் உள்ளன.

எனவே, இந்த இரண்டு புள்ளிகளும் – மதத்தின் களம் மற்றும் மத நிறுவனங்களின் பாதுகாவலர்களுடன் தொடர்புடைய அவதூறுகளின் மேலே குறிப்பிடப்பட்ட கறை – மதத்தின் மதிப்பு மற்றும் நடைமுறை மற்றும் ஒரு நிறுவனம் பற்றிய பெரிய அச்சியல் கேள்வியை எழுப்புகின்றன. புரட்சிகர சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங் மற்றும் பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் ஆகியோர் மதத்தின் மீது இதுபோன்ற கேள்விகளை எழுப்பினர். அவர்கள் மதத்தின் மதிப்பற்ற தன்மைக்கு ஆதரவாக வாதிடுவதற்கு காரணத்தை கோரினர்.பகத்சிங் 1930 இல் சிறையில் “நான் ஏன் நாத்திகன் ஆனேன்” என்ற சிறு புத்தகத்தை எழுதினார். பெரும்பாலான மதங்களுக்கு கடவுள் என்ற கருத்து மிகவும் மையமானது. இத்தகைய கருத்து பொது நனவில் பரவலாக உள்ளதுடன், நன்கு வேரூன்றியும்  உள்ளது. உண்மையில், வெவ்வேறு வடிவங்களில், தெய்வீகத்தின் பொருள், இயல்பு, கடவுளின் இருப்பு, மனிதனுடனான அதன் உறவு ஆகியவை இயல்புநிலை மதச் சொற்பொழிவின் முக்கிய பகுதியாகும். பகத்சிங்  இவற்றை பிரபலமான உணர்வுகள் என்கிறார்.

‘மோடியின் ஆட்சியில் சீரழிந்த ஜனநாயகம்’ – கல்வியாளர் பிரதாப் பானு மேத்தாவோடு ஓர் உரையாடல்

இத்தகைய மக்கள் உணர்வுகள் மீதான விமர்சனங்களுக்கு, பகுத்தறிவு வழியில் பதிலளிக்கப்படுவதில்லை என்று அவர் குறிப்பிடுகிறார்.அவர்,  இதுபோன்ற உணர்வுகளைக் கொண்டவர்களிடம் மிகவும் கண்ணியமாக இருந்தார்.  ஏனெனில், கேடு விளைவிக்கும் வன்முறையாக அன்றி அவர்களின் “மனநலம் குன்றியதன்மை” காரணமாக மட்டுமே அவர்களால் விமர்சன சிந்தனையில் ஈடுபட முடியவில்லை என அமைதியாக கூறுகிறார். தபோல்கரின் காலத்திற்கு வரும்போது, ​​அத்தகையவர்கள் பாதிப்பில்லாதவர்கள் அல்ல. உண்மையில், மதத்தின் மதிப்பற்ற தன்மை பற்றிய பகுத்தறிவுப் பார்வையின் வடிவத்தில் அவரது விமர்சனம், தீவிரவாதக் கூறுகளால் அவர் கொலை செய்யப்படுவதற்கு வழிவகுத்தது.

கடவுள் மற்றும் கடவுளின் இருப்பு பற்றிய யோசனையை நிராகரிக்கும் எண்ணம், அது நியாயமற்ற ஒன்று, விசுவாசிகள் அல்லது இறை நம்பிக்கையாளர்களால் ஒருவித மாயையாகவும் பெருமையாகவும் கருதப்பட்டு அவர்களிடமிருந்து கோபத்தை வரவழைக்கிறது. தபோல்கரை சுட்டுக் கொன்ற சில பழிவாங்கும் தீவிரவாதிகளிடம் இந்த கோபம் வன்முறை வடிவத்தை எடுத்தபோது அதுதான் சரியாக நடந்தது.

சாதிய ஒடுக்குமுறையும் சென்னை ஐஐடியும் – சாதிப் பாகுபாட்டை எதிர்த்து பதவி விலகிய பேராசிரியர் விபினோடு நேர்காணல்

பகத்சிங் நாத்திக நிலைப்பாட்டை வலுவாக வலியுறுத்துகிறார். நாத்திகம், அவரைப் பொறுத்தவரை, “எல்லாவல்லமையும் உள்ள, பிரபஞ்சத்தை உருவாக்கி, வழிநடத்தும் மற்றும் கட்டுப்படுத்தும் ஒரு உன்னதமானவர்” மீது நம்பிக்கை இல்லை. அத்தகைய யோசனைக்கு “சரியான அடித்தளம் இல்லை,” என்கிறார். அவரது துண்டுப்பிரசுரத்தின் தொடக்கத்தில்,  அவரது நண்பர்கள் சிலர் அவரது நாத்திகத்தை முட்டாள்தனம் மற்றும் “மாயையின் விளைவு” என கருதுகின்றனர்  என்று கூறும் அவர், கடவுள் மற்றும் மதத்தின் நம்பிக்கை வியாபாரிகளால் தாக்கத்திற்கு உள்ளான மதவிசுவாசிகள், நாத்திகர்களை அவர்களின் மாயைக்காக அடிக்கடி விமர்சிக்கின்றனர். நாத்திகத்திற்கும், மாயைக்கும் இடையே ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என தொடர்ந்து விவாதிக்கும் போது,  “சிலை வழிபாடு மற்றும் மதத்தின் பிற குறுகிய கருத்துக்களுக்கு எதிராகப் போராடியது போல், இந்தக் கடவுள் நம்பிக்கைக்கு எதிராக சமூகம் போராட வேண்டும். இதன் மூலம் மனிதன் தன் காலில் நிற்க முயற்சி செய்வான். யதார்த்தமாக இருப்பதால், அவர் தனது மூட நம்பிக்கையைத் தூக்கி எறிந்துவிட்டு, அனைத்து எதிரிகளையும் தைரியத்துடனும் வீரத்துடனும் எதிர்கொள்ள வேண்டும். அதுதான் என்னுடைய மனநிலை. என் நண்பர்களே, இது என் மாயை அல்ல; என்னுடைய சிந்தனை முறைதான் என்னை நாத்திகனாக மாற்றியது. கடவுள் மீது எனக்குள்ள நம்பிக்கையை வலுப்படுத்தி, தினமும் அவருக்கு பிரார்த்தனை செய்வதன் மூலம், (இது மனிதனின் மிகவும் இழிவான செயலாக நான் கருதுகிறேன்) என் நிலைமையில் முன்னேற்றம் கொண்டு வர முடியும் என்றோ,  நான் மோசமடைய முடியாது என்றோ நான் நினைக்கவில்லை,” என்று முடிக்கிறார்.

கடவுள் மற்றும் மதத்தின் மீதான நம்பிக்கை என்று வரும்போது, அனுபவம், பகுத்தறிவு, கருத்து மற்றும் அனுமானம் ஆகியவற்றின் அடிப்படையிலான “சிந்தனை முறை”, சுருங்கிவிட்டதாகத் தெரிகிறது. பகத்சிங் கருத்துப்படி, கடவுள் பற்றிய சிந்தனையின் தோற்றம், “மனிதன் தனது பலவீனங்கள், வரம்புகள் மற்றும் குறைபாடுகளை உணர்ந்து தனது கற்பனையில் கடவுளை உருவாக்கினான்” என்பதே. பிரபல அறிவியல் அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஜெர்மானிய தத்துவஞானி எரிக் குட்கிண்டிற்கு எழுதிய ‘கடவுளின் கடிதம்’ என்ற புத்தகத்தில் இதேபோன்ற கருத்தை எதிரொலித்தார்: “கடவுள் எனக்கு மனித பலவீனங்களின் வெளிப்பாடு மற்றும் விளைபொருளைத் தவிர வேறில்லை.” அறிவியல் அறிஞரின் இந்த கடிதம் 2018 ஆம் ஆண்டு கிறிஸ்டியின் ஏலத்தில் 2.9 மில்லியன்  டாலருக்கு விற்கப்பட்டது.அந்த சிந்தனை முறையில், பகத்சிங் “அனைத்து வல்லமையும் உள்ள, எங்கும் நிறைந்த,  எல்லாம் வல்ல உள்ள கடவுள்” என்ற நம்பிக்கையின் மீது இரண்டு கேள்விகளை முன்வைக்கிறார். அவர் ஆஸ்திகர்களின் கூற்றுப்படி, பேரண்டத்தை உருவாக்கினார் எனில் முதல் கேள்வி:  முதலில் கடவுள் ஏன் பேரண்டத்தை உருவாக்கினார்? அடுத்த கேள்வி, வேதத்தை வரைந்து இறை நம்பிக்கையாளர்கள் சொல்வது போல், அவர் சட்டத்திற்கு கட்டுப்பட்டவர் என்று கூறினால்  அவர் அனைத்து வல்லமைகளையும்  பெற்றவர் இல்லை.  மேலும், எல்லாம் வல்ல கடவுளுக்கு ஆற்றல் இல்லை என்று பகத்சிங் வாதிடுகிறார்.  ஏனென்றால் அவர் ஒரு மனிதனை பாவம் செய்வதைத் தடுக்கவில்லை. பல பெரிய பேரிடர்களின் மனிதகுலத்தை அவரால் காப்பாற்ற முடியவில்லை. கடவுள் ஏன் “ஆங்கிலேயர்களின் மனதில் மனிதநேய உணர்வுகளை செலுத்தி, விருப்பத்துடன் அவர்களை இந்தியாவை விட்டு வெளியேறச் செய்யவில்லை? ” என கேட்கிறார்.

காந்தியைக் கொன்றவர்: இஸ்லாமிய வெறுப்பு அரசியலுக்கு கோட்சேவை சாவர்க்கர் பயன்படுத்தியது எப்படி?

பகத்சிங்கின் இந்தக் கேள்விகள்  மிகவும் தத்துவரீதியாக மெருகூட்டப்பட்ட நாத்திக தத்துவவாதியான பெர்ட்ரான்ட் ரஸ்ஸல் ஒரு இரவு உணவுக் கூட்டத்தில் அவரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அவர் அளித்த பதிலைப் பிரதிபலிக்கிறது: கடவுளின் இருப்பு பற்றிய முழு யோசனையிலும் உங்கள் நிலைப்பாடு தவறாக மாறி, கடவுள் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம்;  உங்கள் மரணத்திற்குப் பிறகு நீங்கள் கடவுளை நேருக்கு நேர் சந்திக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்; நீங்கள் எப்படி பதிலளிப்பீர்கள்?  என்று ரஸ்ஸலிடம் கேட்ட போது,  ரஸ்ஸல், “சரி, நீங்கள் [கடவுள்] அதிக ஆதாரங்களைத் தரவில்லை என்று நான் கூறுவேன்,” என்றார்.

கடவுளின் ஆற்றலைக் குறித்து பகத்சிங் கேள்வி எழுப்பிய அவரது வாதத்தின்படி, கடவுள் இருந்ததற்கான ஆதாரம் இல்லை என்பது மட்டுமல்ல, அதற்கு நேர்மாறான ஆதாரமாகவும் உள்ளது என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும்.இதேபோன்ற சிந்தனை முறையில், ஆனால் மிகவும் தெளிவாக, தபோல்கர் திமிரதுனி தேஜகடே என மராத்தியில் முதலில் வெளியிடப்பட்ட ‘தி கேஸ் ஃபார் ரீசன்’ என்ற இரண்டு தொகுதி புத்தகத்தை எழுதினார். தபோல்கர் புத்தகத்தின் இரண்டாவது தொகுதியின் முதல் மற்றும் இரண்டாவது கட்டுரையில் (“கடவுளின் கருத்து” மற்றும் “மதம்”) மதத்தின் வடிவத்தை முன்வைக்கிறது. ஒரு பகுத்தறிவாளர் மதத்தை விமர்சிப்பது இன்றியமையாதது என்றும், மகாராஷ்டிரா அந்தஷ்ரத்தா நிர்மூலன் சமிதியின் (MANS) முக்கிய அடிமட்டச் செயல்பாடாக இந்த விமர்சனப் பொறுப்பு உள்ளது என்றும் அவர் கூறுகிறார். இந்த அமைப்பு குருட்டு நம்பிக்கையையும், மூடநம்பிக்கையையும் ஒழிப்பதற்காக தபோல்கரால் நிறுவப்பட்ட ஒரு அமைப்பாகும்.ஏன் இப்படி ஒரு விமர்சனம் தேவை? என்பதற்கு, ஒவ்வொரு மதமும் ஒருவரின் சொந்த நம்பிக்கையின் பெருமையை உயர்த்துவதாகவும், அத்தகைய “முயற்சிகள் பிற மதங்களின் மீதான வெறுப்பு மற்றும் அவமதிப்பின் வடிவத்தை எடுத்துக்கொள்கின்றன” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

மோடி ஆட்சியில் மக்களை ஒடுக்க பயன்படுத்தப்படும் தேசத் துரோக சட்டம் – அபிஷேக் ஹரி

மதத்தின் பரவலான வணிகமயமாக்கலும், மத விழாக்களை ஏற்பாடு செய்வதில் சமூக விரோத சக்திகளின் ஈடுபாடும் உள்ளது என்று அவர் வாதிடுகிறார். “மதத்தின் பொதுப் பதிப்பு” (சமீபத்தில் ஹரித்வாரிலும் ராய்ப்பூரிலும் முஸ்லிம் இனப்படுகொலைக்கு அழைப்பு விடுக்கப்பட்ட தர்ம சன்சத்கள் இந்த  கருத்திற்கான விளக்கம்) அனைத்து விழுமியங்களையும் (தார்மீக மற்றும் கலாச்சாரம்) மிதித்து நசுக்கும் பார்ப்பனிய மத உணர்வுகளை உருவாக்குகின்றன. மதத்தின் இத்தகைய தீய விளைவுகளை எதிர்க்க சமிதி “மத உணர்வுகளின் மீது ஆக்கபூர்வமான விமர்சனத்தில் ஈடுபடுகிறது”.தபோல்கர், பகத் சிங்கின் அதே வரிகளில், கடவுள் பிரபஞ்சத்தை உருவாக்கியவர் என்ற கருத்து பற்றிய தனது கட்டுரையில் கேள்விகளை எழுப்புகிறார்: “கடவுள் பிரபஞ்சத்தைப் படைத்திருந்தால், படைப்பின் செயல்முறை தொடர்கிறதா அல்லது நின்றுவிட்டதா? பிரபஞ்சம் உருவான பிறகு அடுத்த படி என்ன?” “இதற்கு யாரிடமும் பதில் இல்லை” என்று அவர் கூறுகிறார்.

எல்லாம் அறிந்த, சர்வ வல்லமையுள்ள, கருணையுள்ள கடவுள் என்ற கருத்து முரண்பாடுகள் நிறைந்தது என்றும் தபோல்கர் கூறுகிறார்.இந்தக் கேள்விகளை உருவாக்குவதன் மூலம், பகத்சிங் மற்றும் தபோகர் இருவரும் மதத்தின் மதிப்பற்ற தன்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய கடவுள் பற்றிய கருத்து பற்றிய பகுத்தறிவுப் பார்வையை முன்வைக்கின்றனர். சலுகைப் பெற்ற வர்க்கம் ஒரு மத கட்டமைப்பிற்குள் தவறான கோட்பாடுகளை கண்டுபிடித்து ஒரு சுரண்டல் அமைப்பை கொண்டு வரும் மதத்தின் மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் பற்றியும் அவர்கள் விவாதிக்கின்றனர்.மத நிறுவனங்கள் வெட்கமின்றி சுரண்டுவது சாமானியர்களின் நம்பிக்கையின் போக்கைத்தான். நேர்மையாலும்,  பகுத்தறிவாலும்  தொடமுடியாத அளவிற்கு மதநம்பிக்கையின் கருத்துக்கள் மிகவும் உணர்திறன் கொண்டவை. இத்தகைய தங்கள் வணிக மற்றும் பிற நலன்களை மேம்படுத்துவதற்காக வஞ்சகமான சந்தர்ப்பவாதிகளுக்கு சாதகமாக இருப்பதற்காக, பகுத்தறிவற்ற  அப்பாவிகளின் ‘நம்பிக்கை’ க்கு நன்றி.அப்டன் சின்க்ளேர் தனது ‘மதத்திலிருந்து லாபம் ஈட்டுவதில் பொருளாதார விளக்கத்தில் ஒரு கட்டுரை’ (1917) என்பதில், மதத்தின் இரண்டு உணர்வுகளை வேறுபடுத்திக் காட்டுகிறார்; i) நேர்மையான உணர்வு மற்றும் ii) நிறுவனமயமாக்கப்பட்ட உணர்வு. பிந்தைய உணர்வுதான் இன்று நிலவுகிறது. மேலும் சின்க்ளேரின் புத்தகத்தின் ஆய்வறிக்கை, “இந்த அர்த்தத்தில் ஒட்டுண்ணிகளுக்கு வருமான ஆதாரமாகவும், ஒவ்வொரு வகையான ஒடுக்குமுறை மற்றும் சுரண்டலின் இயற்கையான கூட்டாளியாகவும்  இருக்கிறது,” என்று கூறுகிறது.பகத்சிங் மற்றும் நரேந்திர தபோல்கர் போன்றவர்களின் விருப்பப்படி, மதத்தின் பகுத்தறிவின்மையையும், பொருத்தமற்ற தன்மையையும், குறிப்பாக, மதத்தின் நிறுவனமயமாக்கப்பட்ட மற்றும் வகுப்புவாத வடிவத்தினையும் வீட்டிற்கு அனுப்ப நாம் பொதுவெளியில் இந்தக் கேள்விகளை மீண்டும் எழுப்ப வேண்டும்.  இருப்பினும், மூடநம்பிக்கைக்கு எதிரான அவரது நிலைப்பாட்டை சில மதவெறியர்களால் ஏற்றுக்கொள்ள முடியாததால் தபோல்கர் தனது உயிரை விலையாக கொடுக்க வேண்டியதாயிற்று.

அரசியல் கைதிகளை ஒடுக்குவதில் பாஜக, சிபிஎம், காங்கிரஸ் கட்சிகள் கைகோர்த்துள்ளன – ஆலன் ஷுஐப் 

இவர் கடந்த 2013ஆம் ஆண்டு ஒரு மத பிரிவைச் சேர்ந்த இளைஞர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கூறுகள் மூடநம்பிக்கைக்கு எதிரான அவரது போராட்டத்திற்கு எதிராக இருந்தன. மதத் தீவிரவாதிகளின் கைகளில் அவர் கொல்லப்பட்டது, ஆழ்ந்த மட்டத்தில், மூடநம்பிக்கை எதிர்ப்புக்கு எதிரான இத்தகைய எதிர்ப்பின் தன்மை உண்மையில் மத பாரம்பரியமே ஒரு வலுவான அர்த்தத்தில் மூடநம்பிக்கையைத் தவிர வேறில்லை, எனவே  அது  மதிப்பற்றது என்ற பார்வையை உண்மையில் காட்டிக் கொடுக்கிறதா என்று சிந்திக்கத் தூண்ட வேண்டும். மேலும், மத நிறுவனங்களின் பாதுகாவலர்கள் மீதான அவதூறுகளின் கறை, மதத்தின் மதிப்பு-தாக்கத்தைப் பற்றி சிந்திக்க  வேண்டிய மற்றொரு கருத்தாகும்.

 www.thewire .in  இணையத்தளத்தில் பஞ்சாபின் மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் துறையில் தத்துவம் கற்பித்த எஸ்.கே. அருண் மூர்த்தி எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்

 

மதத்தின் தன்மை என்ன? – பகத்சிங், நரேந்திர தபோல்கர் இணையும் புள்ளிகள்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்