கர்நாடக மாநிலத்தில் அரசு பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவில் முட்டை வழங்கப்படுவது ஏன்? என்று பாஜக பிரமுகரும் ஒன்றிய அரசின் முன்னாள் அமைச்சர் அனந்த் குமாரின் மனைவியுமான தேஜஸ்வினி அனந்த் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
மாநிலத்தின் பீதர், ராய்ச்சூர், கலபுரகி, யாதகிரி, விஜயப்புரா, கொப்பல் ஆகிய மாவட்டங்களில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு இருப்பது ஓர் ஆய்வில் தெரியவந்தது.
அதனால் அந்த பகுதியில் அரசுப் பள்ளிகளில், ‘பி.எம். போஷன் சக்தி நிர்மான்’ திட்டத்தின் ஒரு பகுதியாக, 1 முதல் 8-ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு, மதிய உணவில் வாரத்திற்கு இரண்டு நாட்கள் முட்டை வழங்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில், மாநிலம் முழுவதுமுள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவு படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி 1 முதல் 8-ம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு மதிய உணவில் முட்டை வழங்க அரசு முடிவு செய்திருக்கிறது. மேலும், முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு வாழைப்பழம் அல்லது வேர்க்கடலை, சுண்டைக்காய் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், கர்நாடக அரசு மாணவர்களுக்கு மதிய உணவில் முட்டை வழங்குவது தொடர்பாக பா.ஜ.க தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சர் அனந்த் குமாரின் மனைவியுமான தேஜஸ்வினி அனந்த் குமார் தன்னுடைய அதிருப்தியைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”நமது கர்நாடக அரசு மதிய உணவில் முட்டை கொடுக்க முடிவு செய்தது ஏன்… முட்டை மட்டுமே ஊட்டச்சத்துக்கான ஒரே ஆதாரமில்லை. சைவ உணவு உண்ணும் பல மாணவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. பள்ளியில் ஒவ்வொரு மாணவருக்கும் சம வாய்ப்பு கிடைக்கும் வகையில் இந்த உணவுக் கொள்கை வடிவமைக்கப்பட வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, முட்டை, இறைச்சி உள்ளிட்ட அசைவ உணவுகளை மாணவர்கள் உட்கொள்வதால், அவர்களுக்கு வாழ்வியல் முறை கோளாறு ஏற்பட்டு, கற்றல் திறன் குறைய வாய்ப்புள்ளது என்று தேசிய கல்வி கொள்கை தொடர்பாக கர்நாடக அரசின் குழு பரிந்துரை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Source: Vikatan
புறக்கணிக்கப்படுகிறாரா அறிவு? Dhee Ft Arivu Enjoy Enjaami | Santhosh Narayanan | Deva’s Update 10
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.