Aran Sei

சாதி அமைப்பு முறையை உருவாக்கியவர்கள் ஆரியர்களா? ஹரப்பாவினரா? – மரபணு சொல்வது என்ன?

ரப்பாவின் முத்திரைகள், மட்பாண்டங்கள், சிலைகள் மற்றும் விலங்குகளின் எலும்புகள் பல உண்மையான மற்றும் புராண விலங்குகளை வெளிப்படுத்துகின்றன. நாய், புலி, பறவைகள், காட்டுக் கழுதை, ஒற்றைக் கொம்புக் குதிரை போன்ற ஒரு கற்பனை விலங்கு, திமில் கொண்ட காளை, யானை, காண்டாமிருகம், நீர் எருமை, குறுகிய கொம்புகள் கொண்ட எளிய காளை, ஆடு, மான், முதலை மற்றும் முயல் ஆகியவை அவை. ஆனால் குதிரை, ஒற்றைக் கொம்பு ஒட்டகம் அல்லது கழுதை ஆகியவை இருக்கவில்லை. ஹரப்பா நாகரீகம் அழிந்த பின்புதான் துணைக் கண்டத்தில் குதிரை காணப்பட்டது. அது குதிரை சவாரி தெரிந்த, சிறிது பயிரிடவும் தெரிந்த கால்நடை மேய்ப்பவர்களாக இருந்த மத்திய ஆசியாவைச் சேர்ந்த நாடோடிகளுடன் அதிக எண்ணிக்கையில் வந்ததாகத் தெரிகிறது. அவர்களோடு அவர்களுடைய மொழியும், மதமும் வந்தது.

தொன்மை சமஸ்கிருதம், தொன்மை வேதம் மற்றும் வேத கால கடவுள்கள் பெரும்பாலும் ஆண் கடவுள்களான இந்திரன், அக்னி, மித்ரா, வருணன், ருத்ரன் மற்றும் சூரியன், மேலும் ஒரு சில பெண் கடவுள்களான உஷா, பிருத்வி ஆகியவையும் அவர்களோடு வந்தன. அவர்கள் இரும்பைப் பயன்படுத்தினார்கள். நெருப்பையும், மாட்டையும் வணங்கினர்( மாட்டை வெட்டி மாட்டுக்கறி உண்பவர்களாகவும் இருந்தாலும்). அவர்கள் இறந்தவர்களை எரிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தார்கள். துணைக் கண்டத்தில் இந்த ஆரிய மேய்ச்சல்காரர்கள்/ ஆயர்கள் நுழைந்த சமயத்தில் கி.மு. இரண்டாவது ஆயிரமாவது ஆண்டுகளுக்கு இடைப்பட்ட நூற்றாண்டுகளில் நகர ஹரப்பா மக்கள் கிராமிய வாழ்க்கையில் கரைந்துப் போனார்கள்.

நினைவை வதைக்கும் வாதை – கண்ணகி முருகேசன் நினைவு நாள்

ஆரியர்களின் வேதக் கதைகள்,  தற்காப்பு கவசம், ஆயுதங்கள், தேர்கள் மற்றும் தாசர்கள் (Dasas) எனப்பட்ட கருத்த நிறமுடைய எதிரிகளுக்கு எதிராக நடைபெற்ற போர் ஆகியவற்றைப் பற்றிக் கூறுவது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த தாசர்கள், ஆரியர்கள் சிந்து சமவெளிக்கு வந்த போது, இனியும் கோட்டைகளால் பாதுகாக்கப்பட்ட நகரங்களில் வாழ்ந்திராத ஹரப்பியர்கள் அல்ல. ரிக் வேதத்தில் கூறப்படும் தாசர்களின் கோட்டைகள் பற்றிய விளக்கங்களின் படி, பர்போலாவும் மற்றவர்களும் வாதிடுவது போல தாசர்கள், மத்திய ஆசியப் படிகளின் ஆயர் குழுவான தொன்மை சாகர்கள்(Sakas) என்றும், ஆரியர்களுக்கும், தாசர்களுக்கும் இடையே முக்கிய சண்டைகள், சிந்து சமவெளியில் அல்ல,  இந்தோ- ஈரானிய எல்லைப்பகுதியில் சிந்து சமவெளிக்குச் செல்லும் பாதையில் நடந்திருக்கலாம். அதே போல ரிக் வேதத்தில் கூறப்பட்டிருக்கும்  சரஸ்வதி ஆறு குறித்த விவரங்கள் கி.மு. 2000 வது ஆண்டுகளில் வற்றிப் போன காகர்-ஹாக்ரா ஆற்றிற்குப் பொருத்தமாக இல்லை. அதற்குப் பதிலாக, ஹரக்ஸ்வதி (அவஸ்தான் மொழியில்) அல்லது  ஹராஹூவதி ( பண்டைய பாரசீக மொழியில்) தற்கால ஆப்கானிஸ்தானில் உள்ள  ஏறத்தாழ ஹெல்மாண்ட் ஆறு என்று அழைக்கப்படும் ஆற்றினையே வரைபடங்கள் காட்டுகின்றன.

சிந்து சமவெளிக்கு ஆரியர்கள் வந்த பிறகு, உள்ளூர் மக்கள் ( ஹரப்பியர்களின் கிராமப்புற சந்ததியினர்) அவர்களை ஆவேசமான கும்பல் எனப் பார்த்திருக்கலாம். மேலும் அவர்களின் சந்திப்புகள் அமைதியானதாக இருக்கவில்லை. இதற்கு, பிற்கால மக்கள் தொகையில், (பிற இடம் பெயர்ந்த குழுக்களைப் போலின்றி ஆரியர்கள் ஒட்டுமொத்த குடும்பத்துடன் வந்திருந்ததால்) ஆரிய ஆணின் அதிக அளவில் திரிந்த மரபணுத் தடங்கள் இருந்தது ஒரு குறிக்காட்டி ஆகும்.  2017 ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு அறிவியல் ஆய்வின்படி, ‘ வெண்கல யுகத்தில் மத்திய ஆசியாவிலிருந்து வந்த மரபணு வருகை வலுவான ஆண் உந்துதலாக இருந்தது.

பீமாகோரேகான் வழக்கு : நிராகரிக்கப்பட்ட பிணை மனுக்களும் ஊசலாடும் நீதியும்

அது முற்கால இந்தோ- ஆரிய சமூகத்தின் இயல்பான ஆயர் சமூகத்திற்குரிய ஆணாதிக்க, தந்தை வழி அண்மை, தந்தை வழியில் நீளும் (patriarchal, patrilocal,patrilineal) சமூகக் கட்டமைப்புடன் ஒத்துச் செல்கிறது. மேலும், தொல்பொருள் ஆய்வாளர்கள் போர் அல்லது படையெடுப்புகளின் எந்தவித அறிகுறிகளையும்  கண்டுபிடிக்கவில்லை என்ற நிலையில், உள்ளூர் மக்கள் ஆரியர்களின் மொழி, கலாச்சாரம் மற்றும் மதம் ஆகியவற்றை தங்கள் மீது திணிப்பதை முதலில்  எதிர்த்திருப்பார்கள்  என்று எதிர்ப்பார்ப்பதற்கு நியாயம் உள்ளது‌. ஏனெனில் அவ்வாறுதான் இத்தகைய சந்திப்புகள் நிகழ்ந்துள்ளன.

மத குருமார்களை மேல் தட்டில் வைத்திருக்கும் அக மணமுறை (அதாவது குறிப்பிட்ட சமூகக் குழுக்களுக்குள்ளேயே திருமணம் செய்து கொள்ளும் முறை)  இல்லாத, ஒரு வகையான தொன்மை- வர்ணாசிரம முறையைக் கொண்ட ஒரு சமூக பாரம்பரிய வடிவத்தைக் கொண்டு வந்தனர். நகர்புற நாகரீகம் இல்லாததால் அவர்களிடம் எழுத்து வடிவம் கொண்ட மொழியின் தேவை குறைவாகவே இருந்தது. தங்கள் தனிச்சிறப்பான மேலதிகாரத்தை தகர்த்துவிடும் என்பதால், மதகுருக்கள் தங்கள்  வாய்வழி மந்திரங்களை ஜனநாயகப்படுத்தி இருக்கக்கூடிய ஒரு எழுத்து வடிவத்திற்கு தடையாக இருந்திருக்கலாம். எங்கும் கிடைத்துள்ள கலைப் பொருட்களின் மீதுள்ள எழுத்துக்களை கண்ணுற்றால்,  அத்தகைய உள்ளுணர்வு ஹரப்பியர்களின் நெறிமுறைக்கு அன்னியமாகத் தோன்றுகிறது. எடுத்துக்காட்டாக, தோலவீராவில் கிடைத்துள்ள பொது இடங்களில் உள்ள கற்பலகைகளில் உள்ள எழுத்துக்களையும், சாதாரண மக்கள் பயன்படுத்தும் மட்பாண்ட பொருட்களில் உள்ள செய்திகளாகக் கூறப்படும் முத்திரைகளையும் (அவை வகை அல்லது உரிமையாளர் விவரங்களாக இருக்கலாம்) கூறலாம்.

போராட்ட நாட்குறிப்பின் கடைசிப் பக்கங்கள் – ஸ்டான் சாமியின் கடிதம்

துணைக் கண்டத்தில் ஒராயிரம் ஆண்டு கலப்பு மற்றும் இடப்பெயர்வுக்குப் பின், கங்கை சமவெளியில் ஏராளமான வாழிடங்கள் உருவாயின. அங்கு குடியேறியவர்கள் அதிகநாள் நீடிக்கக்கூடிய வசதியான சாம்பல் நிற செராமிக் பாத்திரங்களை(PSW) சுட்டு உருவாக்க கற்றிருந்தார்கள், என்று எழுதுகிறார்  வரலாற்றாசிரியர் சுதிப்தா சென். ‘ குலங்கள், பரம்பரையாளர்கள் மற்றும் பழங்குடியினர் ஆகியோர் புதிய ஆளும் குழுக்களுக்கும், அரசர்களுக்கும் இணக்கமாகச் செல்லத் தொடங்கும் ஒரு சமூக கட்டமைப்பை உருவாக்கினார்கள். இதிலிருந்து புதிய நகர வாழ்க்கை,  வீரிய கலப்பின கலாச்சாரம், மொழிகள், பல தெய்வக் கோவில்கள் மற்றும் மத-ஆன்முக கருத்துக்கள் ஆகியவை வந்தன. இவற்றை இப்போது நாம் கி.மு முதல் ஆயிரமாண்டின் இடைப்பட்டக் கால இந்தியாவுடன் இணைத்துப் பார்க்கலாம். இந்த முன்னேற்றங்கள் ஆரிய மற்றும் ஹரப்பாவின் அடி மூலக்கூறுகளிலிருந்து வலுவான பங்களிப்புகளைக் கொண்டிருந்தன. புதிய அரசியல் மற்றும் சமூக மோதல்கள் மாபெரும் இதிகாசமான மகாபாரதத்தின் பல கதைகளுக்கு ஊக்கமளித்துள்ளன.

ஹரப்பன் சமூக படிமுறையில் பல ஆக்கிரமிப்பின் அடிப்படையில் குழு மணத்தை உள்ளடக்கி இருக்க முடியுமா? அதாவது தொன்மை – சாதி அமைப்பு முறை இருந்திருக்குமா? தோலவீரா வீடுகளில் கழிவுநீர்த் தொட்டிகளை(sullage jars)  ஒரு பரம்பரைக் குழு சுத்தம் செய்திருக்குமா? தற்போதைய தொல்லியல் மற்றும் மரபியல் இது சாத்தியமில்லை என்று கருதுகிறது. (ஹரப்பியர்களின்  மேலதிக பண்டைய டிஎன்ஏ ஆய்வுகள் ஒரு முடிவான ஆதாரத்தைத் தரக்கூடும்). கி.மு. முதல் ஆயிரமாண்டுகளில் குழு மணத்தின் ஆரம்பத்தை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மக்களிடையே கலப்பு ஒரு விதியாக இருந்த வரை துணைக் கண்டத்தில் ஆரியர்கள் வந்து குடியேறிய  ஆயிரமாண்டுகளுக்குப் பின் இது நடந்திருக்கலாம். அதன்பின்னர் கலப்பு நடந்துக் கொண்டிருந்த போதே சில குழுக்கள் குழு மணமும் இருந்திருக்கலாம். இதுவே இறுதியில் மேலும் அதிக விரிவான குழுமண சாதி அமைப்பு முறைக்கு வழி வகுத்திருக்கலாம்.

நீதிக்கான நீண்ட பயணம் – நிரபராதி என்று நிரூபிக்க 12 ஆண்டுகளை சிறையில் கழித்த காஷ்மீரி

ஆனால், எந்த கலாச்சார அடிமானங்கள் சாதி அமைப்பு முறையை உருவாக்கத் தூண்டியிருக்கும் என உங்களால் கூற முடியுமா? ஆரியர்களுடையதா அல்லது ஹரப்பியர்களுடையதா? இது பற்றிய ஒரு வலுவான துப்பு சராசரியாக வெளிர் தோலுடையவர்களாகவும் இருந்த உயர்சாதி ஆரியர்களின் மரபணுக்களிலிருந்து கிடைக்கிறது. மேலும், குழுமணம் முதலில் உயர்சாதிகள் மற்றும் இந்தோ ஐரோப்பிய மொழி பேசுபவர்களிடம் தோன்றி பின்னர் ஒரு விதியாக மாறியிருக்கலாம் எனக் டிஎன்ஏ ஆதாரங்கள் காட்டுகின்றன. உண்மையில், பல அறிஞர்களும் நீண்டகாலமாக வாதிட்டபடி இந்திய சாதி அமைப்பு முறையின் வேர்கள் பெரும்பாலும் நிச்சயமாக ஆரிய அடிமூலக்கூறிலேயே காணப்படுகிறது.

மேலும், சதி போன்ற ஆணாதிக்க நடைமுறைகளும், ஆரிய அடி மூலக்கூறின் மரபு என்றே தோன்றுகிறது. கி.மு. முதலாம் நூற்றாண்டு எழுத்தாளர்களான டியோடரஸ் சிசுலஸ் மற்றும் ஸ்ட்ராபோ ஆகியோரின் பதிவுகளின் படி, இந்தியாவில் சதியின் ஆரம்பக் கால நிகழ்வு கி.மு. நான்காம் நூற்றாண்டிலிருந்து துவங்குகிறது. தற்போது பெரும்பாலும் இந்தியாவுடன் மட்டுமே இணைத்துப் பேசப் பட்டாலும்,  சதி பழக்கம்  அண்மை கிழக்கு மற்றும் ஐரோப்பிய பகுதியில் இருந்த, ஆரம்பகாலத்தில் இடம் பெயர்ந்த, இந்தோ ஐரோப்பிய கலாச்சாரத்தின் வேர்களைக் கொண்டவர்களின் வழிவந்த,  யம்னயர்(Yamnaya) என்பவர்களிடையே  முன்பே இருந்தது. அத்துடன் இந்தோ- ஆரிய பெற்றோர் கலாச்சாரத்தைக் கொண்டவர்களிடமும் இந்த வழக்கம் இருந்தது. கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் த்ராசிய பழங்குடி இனத்தில் ஒரு  இறந்த கணவனின் “மிகவும் நேசிக்கப்பட்ட மனைவியை” அவளது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மரியாதைக்குரிய பெருமையாகக் கருதி இவ்வாறு ‘சதி’யில் இறங்கி, அவ்வாறு தியாகம் செய்தவரை இறந்தவருடன் அடக்கம் செய்ததாக கிரேக்க வரலாற்றாசிரியர் ஹெரோடோடஸ் எழுதி உள்ளார்.

இரவாகி விடுவதாலேயே சூரியன் இல்லாமல் போய்விடுவதில்லை – கனடாவில் நடந்த இன அழிப்பின் சாட்சியங்கள்

இதற்கு ஒரு நூற்றாண்டிற்குப் பிறகு, அலெக்சாண்டரின் தந்தையான இரண்டாம் பிலிப்பின்  த்ராசிய மனைவி, அவருடைய மக்களின் பழக்க வழக்கத்தின்படி, அவரது கணவனின் சிதைத் தீயில்  எரிக்கப்பட்டாள். கிமு. முதல் நூற்றாண்டில், ரோம வரலாற்றாளர் டேசிடஸ், ஒரு ஜெர்மானிய பழங்குடியினர் (யம்னயா வழிவந்த) கணவனின்றி உயிர்வாழ மறுத்த ஒரு மனைவி, கணவனின் சிதைத்தீயில் தன்னை எரித்துக் கொண்டாள் என்பதைக் குறிப்பிடுகிறார். வேறு பல பழங்குடியினரும் விதவைகள் மறுமணத்தை விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அராபிய வரலாற்றாசிரியர் அல் மசூதி சதி வழக்கம் பத்தாம் நூற்றாண்டில்,  காகசஸ் பகுதி மற்றும் இந்தியாவில் ஸ்லாவிக் மற்றும் ருஷ்ய இனத்தவரிடம் (இவர்களும் யம்னயாவின் வழிவந்தவர்கள்) இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய இறுதிச்சடங்கு முறைகள் தனிப்பட்ட ஆணாதிக்க வடிவம் கொண்டவை. அவை பண்டைய எகிப்தியர்களின் பழக்கவழக்கத்திலிருந்து தர அடிப்படையில் வேறுபட்டவை. அங்கு  சில சமயங்களில்  முக்கிய ஆட்களின் வேலைக்காரர்களும் தியாகம் செய்யப்பட்டு அவர்களுடன்  புதைக்கப்பட்டனர். ஹரப்பியர்களுக்கு சதி  அந்நியமானதாகவே இருந்திருக்க வேண்டும். ஆனால் பின்னர் உருவான கலப்பின கலாச்சாரத்தில் மேல்தட்டு போர் வீரர்களிடையே அது ஒரு முக்கிய அடித்தளத்தைப் பெற்றது. மேலும் அது துணைக் கண்டத்தில் இந்தோ- ஆரியர்களின் மரபின் ஒரு பகுதியாக மாறியது.

இருப்பினும், இருபதாம் நூற்றாண்டின் கடைசி பத்தாண்டுகளில், இந்திய முற்கால வரலாற்றின்  ஆதரவால் கலாச்சார பேரினவாதம் தனது அருவெறுப்பான தலையை நுழைத்தது. இந்து தேசியவாதிகள் மற்றும் ‘ஊக்கப்படுத்தப்பட்ட அறிஞர்கள்’ ( ஏறத்தாழ பழுப்பு மற்றும் வெள்ளை நிற இந்து ஆண்கள்) ஆரிய இடப்பெயர்வு பற்றிய மாற்று பார்வையை முன்னெடுத்தனர். ஆரிய இடப்பெயர்வு என்பதே இல்லை என வாதிட்டனர்! ஆரியர்களும், ஹரப்பியர்களும் ஒரே மக்கள்தான். இருவரும் முழுக்க முழுக்க பழங்குடியினரே என்றனர். இந்தத் தொன்மை இந்தோ- ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த, அதன் ஒரு பகுதியான சமஸ்கிருதம் இந்தப் பழங்குடியினரால் உருவாக்கப்பட்டு மேற்கத்திய நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக ‘இந்தியாவை விட்டு வெளியே (Out of India Theory-OIT)’ என்ற கருதுகோளின் அடிப்படையில் கூறுகின்றனர்.

ஹரப்பியர்கள் இந்தத் தொன்மை சமஸ்கிருதத்தை பேசினர் என்பதையும், இன்னும் தங்களது வரையறுக்கப்படாத எழுத்து வடிவத்தில் உள்ளதை தொகுத்தாகவும், அவர்கள்  ரிக் வேதத்தை இயற்றியதாகவும், தோலவீரா போன்ற கோட்டைகளால் பாதுகாக்கப்பட்ட நகரங்களைப் பற்றியும் விளக்குகிறது. இத்தகைய போலி “ஞானோதயம்”, 1980களிலிருந்து இடைப்பட்ட இந்துத்துவா கருத்தியலாளர்கள் கும்பலுக்கு தீனியாகி இருப்பது தெளிவாகத் தெரிகிறது. குறைந்த அறிவுடன், இடம் மாற்றி வைக்கப்பட்டுள்ள, பெருமை பாராட்டும்  உயர்குதிகால் நகர்புற இந்துக்கள் ஆரிய வருகைக் கோட்பாடு “மதிப்பற்றவை” என  நம்பிக்கையுடன் கூறத் தொடங்கி உள்ளனர். எண்ணிலடங்கா இணைய தளங்கள் இந்த போலி செய்தியைப் பெற்றிருக்கின்றன.

கும்பமேளா கொரோனா போலி பரிசோதனைகள்: குற்றத்திற்கு துணை நின்றதா பாஜக? – விலகும் திரை பெருகும் ஒளி

உண்மையில், ஆரியர் வருகைக் குறித்த ‘சர்ச்சை’ அறிஞர்களுக்கிடையில்  ஒருபோதும் நேர்மையான கருத்து வேறுபாடாக இருந்ததில்லை. எடுத்துக்காட்டாக பர்போலா நீண்ட காலமாகவே, ‘வேதகால ஆரியர்கள் தெற்காசியாவின் பழங்குடியினர் என கருதுவதற்கு வாய்ப்பில்லை’ என்று கூறி வந்தார். மொழியியல், தத்துவவியல் மற்றும் தொல்பொருளியல் ஆகியவற்றின் மாபெரும் வலுவான  சான்றுகள் – அதில் உள்ள இடைவெளிகளை சாதகமாக பயன்படுத்திக்கொள்ள எதிரிகள் முயன்றாலும்- எது ஏற்கனவே நிரூபிக்கப்பட்டதோ அதற்கு மேலும் வலு சேர்ப்பதாகவும் அல்லது ரேடியோகார்பன்  கால நிர்ணயம் என்ற தொழில்நுட்பம் மூலம் பழங்கால வரலாற்றின் மீது தனது தாக்கத்தை  ஏற்படுத்தி வரும் துறையான மக்கள்தொகை தொல்பொருளியலாளர்கள் துறை மூலம் சுத்திகரிக்கப்பட்டதாகவும் உள்ளது. ‘இந்தியாவை விட்டு வெளியே(OIT) கோட்பாடு’  நல்ல புலமைக்குப் பதிலாக மோசமான அரசியலால் ஊக்கப்படுத்தப்படுவதாக உள்ளது.

 

இது  நமித் அரோரா  எழுதிய “இந்தியர்கள் : ஒரு நாகரீகத்தின் சுருக்கமான வரலாறு” என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.

www.theprint.in இணைய தளத்தில் நமித் அரோரா  எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்

 

 

 

 

 

 

சாதி அமைப்பு முறையை உருவாக்கியவர்கள் ஆரியர்களா? ஹரப்பாவினரா? – மரபணு சொல்வது என்ன?

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்