Aran Sei

`நம் கோரிக்கை நிறைவேறும் போது வீட்டிற்கு வந்தால் போதும்” – போராட்டக் களத்தில் பள்ளி மாணவன்

ஆன்லைன் வகுப்புகள் வழியே படித்துக்கொண்டிருக்கும் ஒரு 15 வயதுச் சிறுவன், ஒரு 21 வயது விவசாயி, நான்கு லட்சம் கடன் வைத்திருக்கும் ஒரு 80 வயது நபர், ‘நானேதான் வந்தேன், ஒரு நாளுக்கு நூறு ரூபாய் கிடைக்குமென வரவில்லை’ எனும் ஒரு 45 வயதுப் பெண்- இவர்கள் எல்லாரும் டெல்லியில் போராட்டம் நடக்கும் சிங்கு எல்லைக்குப் போராட்டத்தில் கலந்துகொள்ள வந்தவர்கள்.

பத்தாம் வகுப்பு அரசு பள்ளி மாணவனான அர்ஷ்தீப் சிங் சைனி, தன்னுடைய உறவினர்களோடு நவம்பர் 26 அன்று போராட்டக்களத்திற்கு வந்திருந்தான். தன்னுடைய புத்தகங்கள், நோட்களை உடன் எடுத்து வந்திருந்தான். ஆன்லைன் வகுப்புகளை கவனிக்க வசதியாக அவனிடம் ஒரு ஸ்மார்டோனும் இருக்கிறது.

“என்னுடைய புத்தகப்பையை நான் கொண்டு வந்திருக்கிறேன், எனக்கு காலை 10-12 மணி வரை வகுப்பு இருக்கிறது. ஞாயிறு தவிர மற்ற நாட்களில் எல்லாம் வகுப்பு இருக்கிறது”. பத்தாம் வகுப்பு மாணவர்கள் (க்ளாஸ் 10 பாய்ஸ்) எனப் பெயரிடப்பட்ட ஒரு வாட்ஸ் அப் குழுவை அடிக்கடி எடுத்துப் பார்த்துக்கொண்டே இருக்கிறான் – அந்தக் குழுவில்தான் அவனுடைய வீட்டுப் பாடங்கள் குறித்த விவரங்களும் பணித்தாள்களும் கொடுக்கப்படுகின்றன.

தான் போராட்டத்தில் பங்கேற்க விரும்பியது மட்டுமல்லாமல், தன்னுடைய பெற்றோரும் ஆர்வமாக அனுப்பி வைத்ததாகச் சொல்கிறான் அர்ஷ்தீப். அவனுடைய ஆசிரியர்களும் அர்ஷ்தீப்பின் முடிவிற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். “நம்முடைய கோரிக்கை எல்லாம் நிறைவேறும் போது வீட்டிற்கு வந்தால் போதும் என என்னுடைய அம்மாவும் அப்பாவும் சொன்னார்கள்.

Photo Credit : theshillongtimes

நான் இங்கிருப்பது என்னுடைய ஆசிரியர்களுக்குத் தெரியும். நான் வாட்ஸ் அப்பில் இங்கு நடப்பவற்றைப் பதிவு செய்துகொண்டே இருக்கிறேன். எவ்வளவு நாள் வேண்டுமானாலும் நான் இங்கே தங்கி, என்னுடைய படிப்பு தொடர்பான வேலைகளை எல்லாம் செய்யலாம் எனச் சொன்னார்கள்” என்கிறான்.

மேலும், எதற்காக விவசாயிகள் போராடுகிறார்கள் என்பதும் அர்ஷ்தீப்பிற்குத் தெரிந்திருக்கிறது. எங்கள் உற்பத்திக்குக் குறைந்தபட்ச ஆதார விலை கொடுக்கப்படும் என அரசு உறுதியளிக்க வேண்டும் என்கிறான்.

வகுப்புகள் முடிந்த பிறகு, போராட்டக்களத்தில் நடந்துகொண்டும், வீடியோக்கள் எடுத்துக் கொண்டும் இருக்கும் அர்ஷ்தீப் போல இன்னும் சில மாணவர்கள் அங்கே இருக்கின்றனர்.

ஹரியானாவின் கர்னலைச் சேர்ந்தவர் குர்ஜந்த் சிங். 21 வயதான குர்ஜந்த் சிங், குருஷேத்ரா பல்கலைகழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர். இவருடைய குடும்பத்திற்குப் பத்து ஏக்கர் விளைநிலம் இருக்கிறது. “நாங்கள் குழந்தைகளாக இருக்கும் போதே யாருக்கும் அடிமையாக இருக்கக் கூடாது என்று எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தார்கள்” என்பதனால் தனக்குத் தனியார் நிறுவனங்கள் வேலை தேவையில்லை என்கிறார் இவர்.

புதுச் சட்டங்கள், உற்பத்திக்கான, விளைச்சலுக்கான, விலைக்கான உரிமையை எல்லாம் விவசாயிகளிடம் இருந்து எடுத்து, கார்ப்பரேட்களுக்குக் கொடுத்துவிடும் என்கிறார் குர்ஜந்த்.

“நான் ஒரு விவசாயி. நானும் என் அப்பாவும் சுரண்டப்படுவதை என்னால் அனுமதிக்க முடியாது. உதாரணமாக, இரண்டு ஏக்கர் நிலத்தில் நான் சோளம் உற்பத்தி செய்து, ஒரு நிறுவனத்திற்கு 38 குவிண்டாலை 1,100 ரூபாய்க்கு விற்றேன். அது இப்போது சந்தையில் கிலோ 22 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதைத்தான் கார்ப்பரேட்ஸ் நமக்குச் செய்வார்கள். நான் ஒரு விவசாயியாக சம்பாதித்துக்கொள்வேன். என்னுடைய தாத்தா கர்த்தார் சிங் ஒரு விடுதலை போராட்ட வீரர்” என்கிறார்.

மஹிந்தர் கௌர் எனும் 45 வயதுப் பெண், பஞ்சாப்பின் சன்க்ரூர் மாவட்டத்தில் இருந்து 78 பேர் கொண்ட பெண்கள் குழுவோடு வந்திருக்கிறார். கௌரின் கணவர் ஏழு வருடங்களுக்கு முன் மாரடைப்பால் இறந்துவிட்டார். இப்போது கௌர் தனது மகன், மருமகள் மற்றும் பேரனோடு வாழ்கின்றார்.

“இங்கே பெண்களை ஒரு நாள் போராட்டத்திற்கு 100-500 ரூபாய் எனச் சொல்லி அழைத்து வருவதாகச் சொல்லும் ஆட்கள் இருக்கின்றனர். நாங்கள் எங்கள் உரிமைகளுக்காக வந்திருக்கிறோம் என்பதை இவர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன்” எனும் கௌர், அவருடைய உடல் நலன் அனுமதிக்கும் காலம் வரை போராட்டக் களத்தில் தங்க தயார் என்கிறார்.

போராட்டக்களத்தில் கழிவறைகள் இல்லாதது பெரிய பிரச்சினை. இதன் காரணமாகவே பெண்கள் பங்கேற்பு பெரிய அளவில் இல்லை எனும் பெண்களின் குழு, “ நாங்கள் பொதுவெளியையோ, உள்ளூரில் இருக்கும் வீடுகளையோ பயன்படுத்திக்கொள்கிறோம்” என்கின்றனர்.

பாட்டியாலாவைச் சேர்ந்த 80 வயதுப் போராட்டக்காரர் குர்தீப் சிங் நிஹாங், தனக்கு நான்கு லட்சம் கடன் இருப்பதாகச் சொல்கிறார். “இந்த வயதில், எவ்வளவு காலம் தேவைப்படுகிறதோ, அவ்வளவு காலம் இங்கே நான் இருக்கத் தயாராக இருக்கிறேன்” என்கிறார். மனைவியும், மகனும், நான்கு மகள்களும் இவருடைய முடிவுக்கு ஆதரவு அளிப்பதாகச் சொல்லும் குர்தீப், போனில் அவர்களை அழைத்துப் பேசிக்கொள்வதாகச் சொல்கிறார்.

`நம் கோரிக்கை நிறைவேறும் போது வீட்டிற்கு வந்தால் போதும்” – போராட்டக் களத்தில் பள்ளி மாணவன்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்