கடந்த அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி பாஜகவின் தமிழ் நாடு மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் அதிக விலை கொடுத்து மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதாக குற்றம்சாட்டி, பதிவிட்டிருந்தார். அதற்கு ஆதாரமாக, அந்தப் பதிவில் இந்திய மின்சார சந்தையின் (Indian Energy Exchange) இணையதளத்திலிருந்து தறவிறக்கம் செய்த ஆவணங்களை சுட்டிக்காட்டியிருந்தார்.
அந்த ஆவணத்தில் அக்டோபர் 13 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி தொடங்கி 12.45 மணி வரையில் மின்சார சந்தையில் (Indian Energy Exchange) ஒரு யூனிட் மின்சாரம் 20 ரூபாய்க்கு விற்கப்பட்டது குறிப்பிடப்பட்டிருந்தது. அதேபோல், அதே நாள் மாலை 6.15 மணி முதல் இரவு 11.30 மணி வரையில் 1 யூனிட் மின்சாரம் 20 ரூபாய்க்கு விற்கப்பட்டாதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த ஆவணங்களை சுட்டிக்காட்டியிருந்த அண்ணாமலை, தமிழ்நாடு மின்வாரியம் கடந்த வாரம் ஒரு யூனிட் மின்சாரம் 20 ரூபாய் வரை வாங்கியதாக குற்றம்சாட்டியிருந்தார். அத்துடன், அனல் மின்சாரத்தின் உற்பத்தி செலவை விட இது 5 மடங்கு அதிகம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த வாரம் ஒரு யூனிட் மின்சாரம் ரூ. 20.00 வரை கொள்முதல் செய்ய பட்டுள்ளது!
உற்பத்தி செய்யும் அனல் மின்சாரத்தின் உற்பத்தி செலவை விட 5 மடங்கு இது கூடுதலான விலை! #ResignEBMin
1 MWh – INR 20,000
1000 KWh is equal to 1 MWh.
1 KWh (1000 wats) is 1 Unit.
1 unit = INR 20. pic.twitter.com/GgFhDRmaKb— K.Annamalai (@annamalai_k) October 20, 2021
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, தனியார் லாபம் பெரும் நோக்கில், தமிழ்நாடு மின்வாரியம் இவ்வாறு அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்குவதாக குற்றம்சாட்டினார். தமிழ்நாடு மின்சாரத்ததுறை அமைச்சர் செந்தில் பாலாஜி இதுபோல் முறைகேடு நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார்.
அண்ணாலையின் இந்த குற்றச்சாட்டு குறித்து தமிழ்நாடு மின் பொறியாளர்கள் அமைப்பின் தலைவர் காந்தி அவர்களிடம் அரண்செய் பேசியபோது, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் மின்சார்த்துறையும் இந்திய மின்சார சந்தையில் (Indian Energy Exchange) மின்சாரம் வாங்குவதாக கூறுகின்றார். மின்சாரம் தேவைப்படுவோரையும், மின்சாரத்தை உற்பத்தி செய்பவர்களையும் இணைக்கும் பாலமாக செயல்படும் இந்திய மின்சார சந்தையில் மறைமுக ஏலமுறையில் மின்சாரம் விற்கப்படுவதாக கூறுகின்றார்.
ஒரு மாநிலத்தின் மின்சாரத்துறை, அடுத்த நாளைக்கு தேவையான மின்சாரத்தை முன் கூட்டிய கணிப்பதன் அடிப்படையில், தனது உற்பத்தியைத் தாண்டி அதிக மின்சாரம் தேவைப்படும் பட்சத்தில் அதை இந்திய மின்சார சந்தியில் வாங்குவதாக காந்தி கூறுகின்றார்.
இந்தச் சந்தையில் ஒரு வாரத்திற்கு முன்னர் தொடங்கி, அடுத்த ஒரு மணி நேரத்தில் தேவைப்படும் மின்சாரம் வரை, ஏலமுறையில் வாங்கிக்கொள்ளலாம். இந்தச் சந்தையில் விற்கப்படும் மின்சாரத்தின் விலை, சந்தையில் அப்போதைய தேவையையும், விற்பனையாளர்கள் குறிப்பிடும் விலையை பொறுத்து அமைவதாக காந்தி கூறுகின்றார்.
உதாரணத்திற்கு ஒரு நாளில் ஒரு குறிப்பிட்ட ஒரு மணி நேரத்திற்கு தமிழக மின்வாரியத்திற்கு மின்சாரப் பற்றாக்குறை இருக்கும்பட்சத்தில், அந்த ஒரு மணி நேரத்திற்கு தேவையான மின்சாரத்தை மட்டும் இந்திய மின்சார சந்தையில் வாங்கிக்கொள்ளலாம். அந்த ஒரு மணி நேரத்தில், எத்தனை நிறுவனங்கள் மின்சாரம் விற்கத் தயாராக இருக்கிறார்கள், அவர்கள் ஒரு யூனிட்டிற்கு எவ்வாளவு விலை நிர்ணயிக்கிறார்கள் என்பதை முன் கூட்டிய தமிழக மின்வாரியம் அறிந்திருக்க முடியாது. ஆனால், அந்த ஒரு மணிநேரத்தில் நான்கு நிறுவனங்கள் மின்சாரத்தை விற்க முன் வரும் பட்சத்தில், அதில் யார் விலை குறைவாக விற்கிறார்களே அவர்களிடமிருந்து மின்சாரத்தை பெற்றுக்கொள்ளலாம் என்று கூறுகிறார் காந்தி.
அந்த வகையில், பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டதுபோல், அக்டோபர் 13 ஆம் தேதி தமிழ்நாடு மின்வாரியம் ஒரு யூனிட் 20 ரூபாய் என்ற விலையில் மின்சாரத்தை வாங்கியுள்ளது என்று கூறும் காந்தி, பாஜக ஆளும் மாநிலங்கள் உட்பட இந்தியாவின் அனைத்த மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் இந்த முறையில்தான் மின்சாரத்தை கொள்முதல் செய்வதாக கூறுகின்றார்.
இதைத்தொடர்ந்து இந்திய மின்சார சந்தையின் (Indian Energy Exchange) இணையதளத்தை ஆராய்ந்தபோது, அதில் ஒவ்வொரு மாநிலத்திலும் (பகுதிவாரியாக) எந்த நாளில், எந்தெந்த நேரத்தில், என்ன விலையில் மின்சாரம் விற்கப்படுகிறது என்ற பட்டியல் தரப்பட்டுள்ளது.
அந்தப் பட்டியலில் ஒரு உதாரணத்திற்கு, பாஜக ஆட்சி செய்யும் மத்திய பிரதேச மாநிலத்திற்கு, அண்ணாமலை குறிப்பிட்ட அதே அக்டோபர் மாதம் 13 ஆம் தேதியன்று என்ன விலையில் மின்சாரம் விற்கப்பட்டது என்று ஆராய்ந்தோம். அதில், அக்டோபர் 13 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி தொடங்கி 12.45 வரை ஒரு யூனிட் மின்சாரம் 20 ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது தெரியவந்தது. அதேபோல் அன்றை தினமே மாலை 6.15 மணி தொடங்கி இரவு 11.30 மணிவரை மத்திய பிரதேச மாநிலத்திற்கு ஒரு யூனிட் மின்சாரம் 20 ரூபாய்க்கு விற்கப்பட்டது தெரியவந்தது.
இதன் மூலம், பாஜக ஆளும் மாநிலமான மத்திய பிரதேசத்திற்கு, அண்ணாமலை குறிப்பிட்ட அதே நாளில், தமிழ்நாட்டை விட கூடுதல் நேரத்திற்கு கூடுதல் விலையில் (ஒரு யூனிட் 20 ரூபாய்) விற்கப்பட்டது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து காந்தி அவர்களிடம் பேசியபோது, 2003ஆம் ஆண்டு அப்போதை பாஜக அரசு கொண்டு வந்த மின்சார சட்டமே இதற்கு காரணம் என்று கூறுகிறார். இந்த சட்டம் தனியாரிடம் மின்சாரம் வாங்குவதை ஊக்குவிப்பதாக கூறும் காந்தி, இந்த சட்டத்தின் விளைபயனாக 2008 ஆம் ஆண்டு இந்திய மின்சார சந்தை உருவாக்கப்பட்டதாக கூறுகின்றார்.
வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்க வேண்டும் என்று அனைத்து மாநில மின்சாரத்துறையும் ஒன்றி அரசினால் ஊக்குவிக்கப்பட்டதன் விலையே இன்று அதிகவிலை கொடுத்து மின்சாரம் வாங்க வேண்டிய தேவை உருவாகியுள்ளது என்று காந்தி கூறுகிறார்.
இந்திய மின்சார சந்தையில் ஒரு யூனிட் மின்சாரம் அதிகபட்சம் எவ்வளவு விலைக்கு விற்கப்பட வேண்டும் என்று எந்த வரையரையையும் ஒன்றிய அரசு நிர்ணயிக்காததால், சில மாநிலங்கள் ஒரு யூனிட் மின்சாரத்தை 24 ரூபாய் வரை கொடுத்து வாங்க வேண்டிய நிலையும் உள்ளதாக காந்தி கூறுகின்றார்.
தனியாரிடம் மின்சாரத்தை வாங்க வேண்டும் என்று மாநிலங்களை நிர்பந்தப்படுத்தியதுடன், அதிக பட்ச விலையையும் நிர்ணயிக்காத ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையை கண்டிக்காமல், தமிழ்நாடு அரசு அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுவது, அறிவுப்பூர்வமான வாதமாக இருக்காது என்றும் காந்தி கூறுகின்றார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.