வெல்ல முடியாதவர் அம்பேத்கர், சிங்கத்தை அதன் குகையில் சந்திப்பது வீரமடா என்கிற பாடல்களின் வழியே புரட்சிப்பாடகர் தலித் சுப்பையா தமிழ்ச் சமூகத்தில் நினைவுகூரப்படுகிறார். சர்க்கரை நோயின் தீவிரத் தாக்குதலால் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் தன்னுடைய 67 வது வயதில் இன்று (பிப்-16) இயற்கையடைந்துள்ளார்.
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், முனியாண்டிப்பட்டி எனும் ஊரைச் சேர்ந்த கருப்பன் என்னும் நாட்டு வைத்தியருக்கு மகனாகப் பிறந்தவர் பிச்சை. தமிழகத்தில் உள்ள சாதிய கொடுமைகள் நிறைந்த கிராமங்களில் முனியாண்டிப்பட்டி விதிவிலக்கா என்ன? சாதிக் கொடுமைகள் நிறைந்த கிராமத்தில் தொடக்க கல்வியைப் பயின்றார் அவர். பிச்சை என்கிற பெயரை அவரின் தொடக்க பள்ளி ஆசிரியர் இருதயம் என்பவர் கருப்பனின் மகனான பிச்சைக்கு சுப்பையா என்கிற புதிய பெயரை பதிவேட்டில் எழுதினார்.
அரசியல் கைதிகளை ஒடுக்குவதில் பாஜக, சிபிஎம், காங்கிரஸ் கட்சிகள் கைகோர்த்துள்ளன – ஆலன் ஷுஐப்
மதுரை தியாகராயர் கல்லூரியில் சேர்ந்து படித்து முடித்தார். அங்குதான் இடதுசாரிகளின் தொடர்பு கிடைத்தது. தமது பணி நிமித்தமாக 80களின் பிற்பகுதியில் புதுவைக்கு இடம் பெயர்ந்தார் சுப்பையா. 1980 களில் ‘யுத்தம் துவங்கட்டும்’ எனும் கவிதைத்தொகுப்பை வெளியிட்டுள்ளார். மதுரை தலித் ஆதாரமையத்தோடு இணைந்து பணியாற்றியவர். அம்பேத்கர், இடதுசாரி, பெரியார் அமைப்புகளின் மேடைகளில் தொடர்ந்து பாடியவர். புதுச்சேரி தலித் அமைப்புகளோடு தொடர்ந்து செயலாற்றியவர். சிதம்பரம் பத்மினி வழக்கில் ரவிக்குமார், அ.மார்க்ஸ் அவர்களோடு இணைந்து பணியாற்றியவர். பாடல் எழுதி இசையமைத்து வெளியிட்டுள்ளார்.
பாவம் இந்த பாரதப் பெண்கள், யுத்தம் தொடரட்டும், இசைப்போராளி (இரண்டு பாகம்), தீக்ஷா பூமி பயணம், கலைப் பயணத்தில் கரு.அழ.குணசேகரன், தீர்க்கப்படாத கணக்குகள், எளிய மாந்தர்கள் அறிய செய்திகள், களத்துப் பாடல்கள் உள்ளிட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். ‘கவலைக்கிடமாகவே உள்ளது’ எனும் அவருடைய நூல் வெளியிடப்படாமலே உள்ளது. அவர் தன்னுடைய மகனின் பெயரிலேயே ஸ்பார்ட்டகஸ் எனும் பதிப்பகத்தின் வழியாக தான் எழுதிய நூல்களை வெளியிட்டுள்ளார். மார்க்க்ஸிய தத்துவத்தின் மேல் உள்ள மரியாதையால் தன்னுடைய மகனுக்கு லெனின் என்று பெயர் சூட்டியவர்.
காந்தியைக் கொன்றவர்: இஸ்லாமிய வெறுப்பு அரசியலுக்கு கோட்சேவை சாவர்க்கர் பயன்படுத்தியது எப்படி?
90’களில் கிளர்ந்தெழுந்த அம்பேத்கர் நூற்றாண்டு எழுச்சியில் மேலெழுந்து வந்த தலித் கலைஞர்களில் சுப்பையா முக்கியமானவர். அண்ணல் அம்பேத்கர் பற்றிய எழுச்சிக் கருத்துகளையும் , சமூகக் கொடுமைகளையும், சமூக- அரசியல் விழிப்புணர்வைகளையும் மக்களின் பண்பாட்டு வடிவிலான பாடலாக உரக்க முழங்கினார் தலித் சுப்பையா. அப்போதுதான் சுப்பையா ‘தலித் சுப்பையா’வாகவும் ஆனார். பிறகு, ‘லெனின் சுப்பையா’ என்று தம்மை அவர் அறிவித்துக் கொண்டபிறகும்கூட, இன்று வரை தலித் சுப்பையா என்பதே அவரின் அடையாளமாக உள்ளது.
பணிந்து போகமாட்டோம்; எவனுக்கும் பயந்து வாழமாட்டோம்; தலித்து என்று சொல்வோம்; யாருக்கும் தலைவணங்க மாட்டோம்; அடங்கி வாழ்வதே அடிமைத்தனம்; அதை அடித்து நொறுக்குவது தலித்து குணம் என்கிற அவர் பாடலுக்கு ஏற்ப ஒடுக்கப்பட்ட மக்கள் பக்கம் நின்று அநீதிகளுக்கு எதிராக சமர் புரிந்தவர் தலித் சுப்பையா.
தகவல் உதவி: பேரா. பிலவேந்திரன், ஸ்டாலின் திருவள்ளுவன்
செய்தி: சந்துரு மாயவன்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.