அகில இந்திய காங்கிரஸ் தலைமையகத்திற்குள் நுழைந்து காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கை மூர்க்கத்தனமான அத்துமீறல் என்றும், ஜனநாயகத்தில் ஒவ்வொரு சட்டம் மற்றும் அரசியல் விதிமுறைகளும் மீறப்பட்டுள்ளது என்று ஒன்றிய அரசின் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை அமலாக்கத்துறை விசாரித்து வருவதற்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்திற்குள் நுழைந்து கட்சி தொண்டர்கள் மற்றும் தலைவர்களை டெல்லி காவல்துறை தாக்கியதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது.
டெல்லி காவல்துறையின் கிரிமினல் அத்துமீறலுக்கான, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். தவறு செய்த காவலர்களை சஸ்பெண்ட் செய்வதோடு, அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் தலைமையகத்தில் நடத்த நிகழ்வுகள் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ப. சிதம்பரம், “காவல்துறையிடம் தேடுதல் வாரண்ட் மற்றும் கைது வாரணட் இல்லை. ஆனால், அவர்கள் அலுவலகத்திற்குள் நுழைந்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை வெளியே இழுத்து சாலையில் வீசினர்” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
ஆதிர் ரஞ்சன் சௌத்ரி மற்றும் பிறரிடம் காவல்துறையினர் முரட்டுத்தனமாக நடந்து கொண்டது காணொளியில் படமாக்கப்பட்டுள்ளது என்று ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்தில் அனைத்து சட்ட விதிமுறைகளும், அரசியல் நெறிமுறைகளும் மீறப்பட்டுள்ளன. காவல்துறையின் நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம் என்று கூறியுள்ளார்.
முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், “மோடி ஆட்சியில் டெல்லி காவல்துறையால் கடைப்பிடிக்கப்பட்ட செயல்பாட்டில், இன்று காங்கிரஸ் தேசிய தலைமையகத்திற்குள் காவல்துறை வலுக்கட்டாயமாக நுழைந்து கட்சி தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் மீது தடியடி நடத்தினர். இது அப்பட்டமான கிரிமினல் அத்துமீறலாகும். டெல்லி காவல்துறை மற்றும் மோடி அரசின் குண்டர்வாதம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் இந்த குற்றசாட்டுகளை டெல்லி காவல்துறை ‘முற்றிலும் பொய்’ என்று மறுத்துள்ளது.
Source: NDTV
‘அதானிக்கே கொடுங்க’ – கட்டாயப்படுத்திய மோடி | இலங்கையில் நடந்த களேபரம் | Modi | Gotabaya Rajapaksa
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.