Aran Sei

அம்பேத்கர் – மோடி ஒப்பீடு: விவாதத்திற்கு அழைத்த அண்ணாமலையை சந்தித்து அம்பேத்கர் நூலை வழங்கவுள்ள விசிக

ண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய சித்தாந்தத்தை முழுமையாக பின்பற்ற கூடிய தலைவர் பாரத பிரதமர் மோடி அவர்கள்தான்’ என்ற தலைப்பில் விவாதிக்க அழைப்பு விடுத்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை, நாளை (ஏப்ரல் 26) சந்தித்து அம்பேத்கரின் புத்தகம் ஒன்றை வழங்கவுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறையின் மாநிலச் செயலாளர் ம.சங்கத்தமிழன் அறிவித்துள்ளார்.

ஏப்ரல் 20ஆம் தேதி, பாஜக தலைமையகமான கமலாலயத்தில் பிரதமரின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்த நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, “இளையராஜா மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டதில் என்ன தவறு இருக்கிறது? ஆர்எஸ்எஸ் குறித்து அம்பேத்கர் கூறிய கருத்து தொடர்பாக என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க திருமாவளவன் தயாராக இருக்கிறாரா? நான் இதுவரை 2000 புத்தகங்கள் படித்துள்ளேன்” என்று சவால் விடுத்திருந்தார்.

இதற்கு பதிலளித்த திருமாவளவன், “பெரியார், அம்பேத்கர் விமர்சனத்துக்கு உட்பட்டவர்கள் தான் என்றபோது மோடி விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல. மோடியின் அக்கறை எல்லாம் அதானி, அம்பானி மீது மட்டுமே. அவர் வறுமை ஒழிப்புக்கு என்ன செய்திருக்கிறார். அதனால் அவரை விமர்சிப்பதில் என்ன தவறு. விளையாட்டில் பல்வேறு படிநிலை உண்டு. ஜூனியர், சப் ஜூனியர் என்று அழைப்பார்கள். அதுபோல் அரசியலில் அண்ணாமலை ஒரு சப் ஜூனியர். அவருடன் விவாதிக்க விடுதலை சிறுத்தை கட்சியிலிருந்து ஒரு சப்-ஜூனியரை வேண்டுமென்றால் அனுப்பி வைக்கிறோம்” என்று தெரிவித்திருந்தார்.

தி காஷ்மீர் ஃபைல்ஸ் விவகாரம்: ‘தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்டும் அண்ணாமலை’ –செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

அதைத் தொடர்ந்து, யூட்யூப் சானல் ஒன்றுக்கு நேர்காணல் கொடுத்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறையின் மாநிலச் செயலாளர் ம.சங்கத்தமிழன், அண்ணாமலையை தொலைபேசியில் அழைத்தார். அப்போது, “24ஆம் தேதி உங்களை நேரில் சந்திக்க முடியுமா? நேரில் விவாதம் செய்ய வேண்டும். அப்போது, அம்பேத்கரின் தொகுப்பு எண் 8 என்ற புத்தகத்தை படித்து வைத்திருங்கள்” என்று கூறியுள்ளார். அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, “24ஆம் தேதி வேலையாக இருப்பதால், 26ஆம் தேதி நேரில் சந்திக்கலாம்” என்று தெரிவிக்கிறார்.

இதனையடுத்து, நேற்று (ஏப்ரல் 24), தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்திருந்த அண்ணாமலை, “அண்ணன் தொல் திருமாவளவன் அவர்களுடைய இடதுகை வலதுகை அனைவரும் நம்முடைய அலுவலகத்துக்கு வந்து அவர்கள் விரும்பும் புத்தகங்களை 26ம் தேதி மதியம் 12 மணிக்கு கொடுக்கலாம். நம் அலுவலகத்தில் தயாராக இருக்கக்கூடிய புத்தகங்களையும் வாங்கி செல்லலாம். அதன் பின்பு அண்ணன் தொல் திருமாவளவனிடம்நேரத்தையும், தேதியும் அவர்கள் கூட்டாக அமர்ந்து முடிவு செய்து சொல்லட்டும், தயாராக சொல்லும் இடத்திற்கு வருகின்றேன்” என்று தெரிவித்திருந்தார்.

“அனைத்து விடுதலை சிறுத்தை கட்சியின் சகோதர சகோதரிகளை நமது தமிழ்நாடு பாஜக அலுவலகத்திற்கு 26 ஆம் தேதி வரவேற்கின்றேன், உங்களிடம் புத்தகம் இருந்தால் கொடுப்பதற்கு! தலைப்பு: அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய சித்தாந்தத்தை முழுமையாக பின்பற்ற கூடிய தலைவர் பாரத பிரதமர் மோடி அவர்கள்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆளுநரின் தேநீர் விருந்துக்கு வரவில்லை என்றால் செலவு மிச்சம் – அண்ணாமலை: பில் வரட்டும் பார்ப்போம் – பழனிவேல் தியாகராஜன் பதிலடி

இதனையடுத்து, அண்ணாமலையின் அழைப்பிற்கு இசைவு தெரிவித்துள்ள ம.சங்கத்தமிழன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அவ்வறிக்கையில்,

“எதிரிகளையும் ஜனநாயக படுத்த வேண்டும்!” என்ற தலைவரின் கொள்கை கோட்பாடுகளை உள்வாங்கி பிஜேபி மாநிலத் தலைவர் அண்ணாமலை IPS அவர்களை அரசியல் படுத்தப்பட வேண்டிய காலச் சூழ்நிலை இருப்பதால், எழுச்சித்தமிழர் வாழ்த்துக்களுடன் கையெழுத்திட்ட புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் வரலாற்று சிறப்புமிக்க 8வது தொகுப்பு “இந்து மதத்தில் புதிர்கள்” என்ற புத்தகத்தை நாளை 26-042022 முற்பகல் 11:45 மணி அளவில் அவர் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று அவர் கையில் ஒப்படைக்க இருக்கின்றோம் அந்த நேரத்தில் மற்ற தோழர்கள் யாரும் அங்கு வர வேண்டாம் (குறிப்பாக இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை பொறுப்பாளர்கள்) என்று பணிவுடன் கேட்டுக் கொள்கின்றேன். ஏனென்றால், அவர்கள் தேவையில்லாமல் நமது செயல்திட்டத்தை திசை திருப்ப வேண்டும் என்பதற்காக கடந்த ஏப்ரல் 14 அன்று கோயம்பேட்டில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் சிலை அருகில் திட்டமிட்டு கலவரத்தை தூண்டியதைப்போல் தூண்டுவதற்கு வாய்ப்பிருப்பதால் தயவுசெய்து பிஜேபி அலுவலகத்திற்கு யாரும் வர வேண்டாம் என்று பணிவுடன் மீண்டும் கேட்டுக் கொள்கின்றோம். அரசியல் படுத்துதல் நடந்தேற வேண்டும்! அது அடுத்தடுத்த தலைமுறைக்கும் தொடர்ந்திட வேண்டும்.!!

என்று கூறியுள்ளார்.

“இளையராஜா பேச்சை பொருட்படுத்தக்கூடாது”

அம்பேத்கர் – மோடி ஒப்பீடு: விவாதத்திற்கு அழைத்த அண்ணாமலையை சந்தித்து அம்பேத்கர் நூலை வழங்கவுள்ள விசிக

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்