Aran Sei

வாரணாசி : நரேந்திரமோடி வருகைக்காக அகற்றப்பட்ட சேரிக் குடியிருப்புகள்

தேவ் தீபாவளிக்கு நரேந்திர மோடி வாரணாசிக்கு வரவிருப்பதனால் அப்பகுதியை அழகாக்க  சேரிக் குடியிருப்புகள் அகற்றப்பட்டிருப்பதாக தி வயர் தெரிவிக்கிறது.

நவம்பர் 30 அன்று மோடியின் ஹெலிகாப்டர் தரையிறங்கும் பகுதியான வாரணாசியின் சுஜாபாத்தில் இருந்து 250 பேர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டிருக்கின்றனர்.

கங்கையின் மறுபுறம் இருக்கும் சுஜாபாத் பகுதி மக்கள் இப்படி அலைக்கழிக்கப்படுவது இது இரண்டாவது முறை. இதற்கு முன்னர், பாரதிய ஜன சங் எனும் அமைப்பைத் தொடங்கிய ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவை சங்கிற்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் முன்னோடியாக இருந்த தீன் தயால் உபத்யேயின் சிலையைத் திறந்துவைக்க பிப்ரவரி மாதம் மோடி வாரணாசிக்கு வந்த போது இதேபோல சுஜாபாத் மக்களை அதிகாரிகள் வெளியேற்றுவது நடந்தது.

Photo Credit : indianexpress

சுஜாபாத்தில் கடந்த ஐம்பது வருடங்களாக வாழ்ந்து வரும் இம்மக்களில் பெரும்பாலானோர் தர்கர் அல்லது பஸ்ன்ஃபார் எனும் தலித் சமுகத்தைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். வாழ்வாதாரத்திற்காக மூங்கில் தயாரிப்புகளைச் செய்து விற்கிறார்கள்.

சுஜாபாத்தின் சேரிக் குடியிருப்பைச் சேர்ந்த ராம்விலாஸ் என்பவர், “நான் பிறந்தது இங்கே தான். என்னுடைய வாக்காளர் அடையாள அட்டை, என்னுடைய ஆதார் அட்டை எல்லாம் இங்கே பதிவு செய்யப்பட்டதுதான். ஆனால், ஒவ்வொரு முறை ஒரு முக்கியஸ்தர் இங்கே வரும் போதெல்லாம், காவல்துறையினர் எந்த எச்சரிக்கையோ, கால அவகாசமோ கொடுக்காமல் எங்கள் குடியிருப்புகளை அகற்றுகின்றனர்” என்கிறார்.

இவர்களின் குடியிருப்புகள் அகற்றப்பட்ட பிறகு, மக்கள் திறந்தவெளியில் இருக்கிறார்கள். குளிர்காலமாக இருப்பதனால், அதைச் சமாளிக்கவும் அவர்கள் போராட வேண்டியதாக இருக்கிறது. சிலர் பக்கத்தில் இருக்கும் கிராமங்களுக்கும் கோவில்களுக்கும் சென்றிருக்கின்றனர். காய்கள் விற்பதை மட்டுமே வருவாய்க்கு வழியாக வைத்திருந்த அறுபது வயதுப் பெண் ஒருவரின் காய்வண்டியைக் காவல்துறையினர் சேதப்படுத்தியிருக்கின்றனர்.

இவர்கள் இருக்கும் சுஜாபாத், தும்ரி-படாவ் ஹெலிபேட் சாலையில் இருப்பதால், ஒவ்வொரு முறை முக்கியஸ்தர்கள் வரும் போதும் இவர்கள் வெளியேற்றப்படுகின்றனர். அப்படி சுஜாபாத்தில் குடியிருப்புகள் அமைக்கக் கூடாது என்றால், வேறு ஒரு இடத்தில் குடியிருப்பு வசதி செய்து தர வேண்டும் எனக் கேட்டதற்கு மேலிடங்கள் எவையும் பதில் சொல்வதாக இல்லை.

Photo Credit : thewire

இன்னர் வாய்ஸ் எனும் அறக்கட்டளையோடு இணைந்து இயங்கும் ஆதிரா முரளி எனும் புனேவைச் சேர்ந்த செயற்பாட்டாளர், இப்படியான கட்டாய வெளியேற்றங்கள் குறித்து உச்ச நீதிமன்றங்கள் கடுமையான விதிமுறைகள் விதித்திருக்கின்றன. குறிப்பாக கோவிட்-19 சமயத்தில் இந்த விதிமுறைகள் அவசியம் பின்பற்றப்பட வேண்டியவை. ஆனால் இவற்றை அதிகாரிகள் மீறியிருக்கிறார்கள் என்கிறார்.

இன்னர் வாய்ஸ் அறக்கட்டளையின் சௌரப் சிங், “இவர்களில் பெரும்பாலானோருக்குக் கழிவறை வசதிகள் கூட இல்லை. திறந்த வெளிகளைக் கழிவறையாக்கிக் கொள்கிறார்கள். ஒரு கை பம்பு இருந்தது, அதையும் மாவட்ட நிர்வாகம் பிடுங்கியிருக்கிறது” என்கிறார். திறந்த வெளிகளில் உறங்குவதாலும், மழையினாலும் குழந்தைகளுக்கு அடிக்கடி நோய்கள் வருவதுண்டு. இங்குள்ள சிறுமிகள் மற்றும் முதியவர்கள் மோசமான சூழலில் வாழ்கிறார்கள். ஆதார், வாக்காளர் அடையாள அட்டை என எல்லாம் இருந்தாலும், இவர்கள் எப்பகுதியின் பிரஜையும் கிடையாது என்கிறார்.

மோடி வருவதையொட்டி, வாரணாசியை அழகாக்க ஐந்தாயிரம் பேர் பணியமர்த்தப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

வாரணாசி : நரேந்திரமோடி வருகைக்காக அகற்றப்பட்ட சேரிக் குடியிருப்புகள்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்