Aran Sei

‘விவசாயிகள், தலித்துகளின் போராட்டங்களை ஆதரித்தால், தேசதுரோக வழக்கா?’ – வைகோ கண்டனம்

த்திய அரசின் செயற்பாடுகளை விமர்சனம் செய்தாலும், விவசாயிகள், சிறுபான்மையினர், தலித்துகள் உரிமைப் போராட்டங்களை ஆதரித்தாலும், ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் வகையில், தேசதுரோக வழக்குப் பதிவு செய்வது கடும் கண்டனத்துக்கு உரியது என்று வைகோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, இன்று (பிப்பிரவரி 17) மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வெளியிட்ட அறிக்கையில், “வேளாண் பகைச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி கடந்த மூன்று மாத காலமாக டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் அறவழிப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். ஆனால், மத்திய பாஜக அரசு விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதில் அக்கறை காட்டாமல் அலட்சியப் போக்குடன் செயல்படுகின்றது.” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

ராமர் கோவில் நன்கொடை : ‘ஹிட்லரின் நாஜிக்கள் செய்ததை ஆர்.எஸ்.எஸும் செய்தால் நாடு என்னாகும்?’ – எச்.டி.குமாரசாமி

“இந்நிலையில், விவசாயிகளின் போராட்டம் உலக அளவில் கவனம் பெற்று வருகின்றது. மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், சூழலியல் ஆர்வலர்கள், பத்திரிகை, ஊடகவியலாளர்கள், திரைக் கலைஞர்கள், வழக்கறிஞர்கள் எனச் சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் விவசாயிகளின் உரிமைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில்தான் சுவீடனைச் சேர்ந்த புகழ்பெற்ற இளம் சூழலியல் செயற்பாட்டாளரான கிரேட்டா துன்பர்க், பிப்ரவரி 4ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இருந்தார்.” என்று வைகோ அறிக்கையில் நினைவூட்டியுள்ளார்.

“வேளாண் பகைச் சட்டங்கள் குறித்தும், அதனை எதிர்த்துப் போராடும் விவசாயிகளின் கட்டுப்பாடான, திட்டமிடப்பட்ட அறவழிப் போராட்டம் குறித்தும் ஆவணமாக்கி உள்ள சூழலியலாளர் கிரேட்டா துன்பர்க், அதனை ‘டூல்கிட்’ எனப்படும் ‘தகவல் தொகுப்பாக’ தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். இதனால் உலக அளவில் இந்திய விவசாயிகள் போராட்டம் ட்ரெண்ட் ஆகிவிட்டது. உடனே இந்திய அரசு அவர் மீது டெல்லியில் வழக்குப் பதிவு செய்தது.” என்று வைகோ சுட்டிக்காட்டியுள்ளார்.

‘எமர்ஜென்சியை நோக்கி செல்கிறோம்’ – திஷா ரவிக்கு ஆதரவாக விவசாயிகள், அரசியல்வாதிகள், பொதுமக்கள்

“இச்சூழலில், பெங்களூருவைச் சேர்ந்த 22 வயது இளம் சூழலியலாளர் திஷா ரவி என்ற பெண், சுவீடன் சூழலியலாளர் கிரேட்டா துன்பர்க் ‘தகவல் தொகுப்பை’ ட்விட்டரில் பகிர்ந்து, விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். அதற்காக, திஷா ரவி மீது 124-ஏ தேசத்துரோகச் சட்டத்தை ஏவிய டெல்லி காவல்துறை அவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.” என்று வைகோ தெரிவித்துள்ளார்.

இந்த அடக்குமுறையைக் கண்டித்து மும்பை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி பிரதீப் நந்திரஜாக், மூத்த வழக்கறிஞரும் அரசியல் சட்ட நிபுணருமான ராகேஷ் திவேதி, மூத்த வழக்கறிஞர் காலின் கோன்சால்வேஸ், வரலாற்று ஆசிரியர் ராமச்சந்திர குகா உள்ளிட்டோர் கருத்துத் தெரிவித்துள்ளனர் என்றும் திஷா ரவி போன்று, விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தந்த மராட்டியத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் நிகிதா ஜேக்கப் மற்றும் விமானப் பொறியாளரும், சூழலியல் செயல்பாட்டாளருமான சாந்தனா முலக் ஆகியோரையும் தேசத்துரோக வழக்கில் கைது செய்ய மத்திய அரசு முனைந்துள்ளது என்றும் வைகோ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

‘தீஷாவை கொலை செய்ய அழைப்பு விடுக்கும் பாஜக அமைச்சர்’ – காஷ்மீர் எழுத்தாளர் அமான் குற்றச்சாட்டு

ஜனவரி 26, குடியரசு நாளன்று, டெல்லியில் விவசாயிகள் செங்கோட்டையை நோக்கி நடத்திய பேரணியில் வன்முறை திட்டமிட்டு ஏவப்பட்டதை ஆதாரங்களுடன் பத்திரிகை, ஊடகங்களில் செய்தி வெளியிட்டதற்காக, மிருணால் பாண்டே, ராஜ்தீப் சர்தேசாய், வினோத் ஜோஸ், ஜாபர் சூகா, பரேஷ் நாத் மற்றும் அனந்த நாத் ஆகிய ஆறு பத்திரிகையாளர்கள் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பது மக்களாட்சி கோட்பாடுகளுக்கும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கும் எதிரான நடவடிக்கை ஆகும் என்று வைகோ அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“மத்திய அரசின் செயற்பாடுகளை விமர்சனம் செய்தாலும், விவசாயிகள், சிறுபான்மையினர், தலித்துகள் உரிமைப் போராட்டங்களை ஆதரித்தாலும், ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் வகையில், தேசதுரோக வழக்குப் பதிவு செய்வது கடும் கண்டனத்துக்கு உரியதாகும். பெங்களூரு திஷா ரவி மீது ஏவப்பட்டுள்ள தேசத்துரோக வழக்கை ரத்து செய்து, அவரை விடுதலை செய்ய வேண்டும். இன்னும் சிலரையும் தேசத்துரோக வழக்கில் கைது செய்யும் முயற்சியைக் கைவிட வேண்டும்.” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

‘விவசாயிகள், தலித்துகளின் போராட்டங்களை ஆதரித்தால், தேசதுரோக வழக்கா?’ – வைகோ கண்டனம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்