நிசாம்தீன் மார்கஸ்ஸை (தப்லிக் ஜமாத்தின் தலைமை அலுவலகம்) ஹரித்வார் கும்பமேளாவோடு தொடர்புப்படுத்த முடியாது என்றும் கங்கை ஆற்றங்கரையில் நடக்கும் கும்பமேளாவிற்கு கங்கை மாதாவின் ஆசிர்வாதம் இருப்பதால் நமக்கு கொரோனா வராது என்றும் பாஜகவை சேர்ந்த உத்தரகாண்ட் முதலமைச்சர் தீரத் சிங் ராவத் தெரிவித்துள்ளார்.
நேற்று (ஏப்ரல் 13), உத்தரகாண்ட் மாநிலம் டெஹராடூனில் தீரத் சிங் ராவத் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது, “நிசாம்தீன் மார்கஸ்ஸை (தப்லிக் ஜமாத்தின் தலைமை அலுவலகம்) ஹரித்வார் கும்பமேளாவோடு தொடர்புப்படுத்த முடியாது. அங்கு ஒரு மூடிய மண்டபத்திற்குள் நடத்தினார்கள். ஆனால் கும்பமேளா திறந்த வெளியில் நடக்கிறது. நிசாம்தீன் மார்கஸ்ஸில் மக்கள் அனைவரும் ஒரே மண்டபத்தில் நெருங்கியே புழங்கவும் தூங்கவும் செய்தார்கள். தங்களின் போர்வைகளைப் பகிர்ந்து கொண்டனர்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
“மாறாக, ஹரித்வார் கும்பமேளாவில் 16 வழிகள் உள்ளன. இந்த கும்பமேளா விழாவானது ஹரித்வாரில் மட்டுமல்ல, ரிஷிகேஷிலிருந்து நீல்காந்த் வரை நடக்கிறது. பக்தர்கள் வெவ்வேறு கதவுகள் வழியாக வந்து வெவ்வேறு இடங்களில் குளிக்கிறார்கள்.” என்று திரத் சிங் ராவத் கூறியுள்ளார்.
மேலும், “முக்கியமாக கும்பமேளா கங்கை ஆற்றங்கரையில் நடக்கிறது. கங்கை மாதாவின் ஆசிர்வாதம் அங்கு உள்ளது. அதனால், நமக்கு கொரோனா வராது.” என்று ராவத் கூறியுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்வாரில் கும்பமேளா நடைபெறும் பகுதியில், ஏப்ரல் 10-ம் தேதி 115 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அடுத்த 3 நாட்களான, ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 13-ம் தேதி வரை 961 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக, ஹரித்வார் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் எஸ்.கே.ஜா தெரிவித்துள்ளார். அதாவது ஒரு நாளுக்கு சராசரியாக 300-ஐ விட அதிக தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.
ஒரே நாளில் 30 லட்சம் பேர் பங்கேற்ற ஹரித்வார் கும்பமேளா : நான்கு நாட்களில் 1086 கொரோனா தொற்றுகள்
மொத்தமாக, ஹரித்வாரில் கும்பமேளா நடைபெறும் பகுதியில் ஏப்ரல் 10-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 13-ம் தேதி மாலை 4 மணி வரை 1,086 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Source: ANI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.