இந்திய அரசியலமைப்பு சட்டம், தன் குடிமக்களுக்கு மத சுதந்திரத்தை மட்டும் தருவதில்லை. கூடவே, ஒவ்வொருவரும் தங்கள் மதத்தை சுதந்திரமாக வெளிப்படுத்தவும், நடைமுறைப்படுத்தவும், பிரச்சாரம் செய்யவும் உரிமை தருகிறது. அதேநேரம், எந்தவொரு மதத்தின் பெயரிலும் வரி வசூலிப்பதிலிருந்தும் அல்லது நிதி சேகரிப்பதிலிருந்தும், சட்டம் அரசைத் தடுக்கிறது.
இப்படி இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் இந்த விதிகள் எதுவும் உத்திர பிரதேசத்தில் மட்டும், பொருந்தாதோ என்றே இப்போது நாம் நினைக்க வேண்டியுள்ளது. காரணம், அங்குமட்டும், அதிகாரிகள் அரசியலமைப்பு விதிகளை தங்கள் கைகளில் எடுத்துவிட்டனர்.
உத்திர பிரதேசத்தின் வழியில் மத்திய பிரதேசம் : மத சுதந்திர சட்டம் நிறைவேற்றம்
அப்படி என்ன செய்தார்கள் தெரியுமா அவர்கள்? அம்மாநிலத்தின் பொதுப்பணித்துறை சார்பில், மதத்தின் பெயரில், நிதி திரட்டும் செயலை, அப்பட்டமாக பொதுவெளியில் செய்துவருகின்றனர். ஆம், அயோத்தியாவில் ராமர் கோவில் கட்ட வேண்டுமென கூறி, பொதுமக்களிடம் நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது உத்தர பிரதேச பொதுப்பணித்துறை.
இதுகுறித்து கடந்த ஜனவரி 19 ம் தேதி பொதுப்பணித்துறையின் தலைமை பொறியாளர் ராஜ் பௌல் சிங்க், எம்.ஜி.ரோடு கிளையை சார்ந்த, ஹெச்.டி.எஃப்.சி. வங்கிக்கு அதிகாரபூர்வமாக நிதி திரட்டுவதற்கென தனியாக ஒரு வங்கி கணக்கு தொடங்க வேண்டுமென ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அந்தக் கணக்குக்கு, “PWD Ram Mandir Welfare’ என பெயரிடும்படி அறிவுறுத்தியிருக்கிறார். கடிதம் கிடைக்கப்பெற்ற சில மணித்துளிகளில், பிரத்யேக ராமர் ஆலய நிதிக்கணக்கு (Account Numer – 50100365009830) தொடங்கப்பட்டுவிட்டது
வங்கிக்கணக்கு தொடர்பாக ராஜ் பௌல் எழுதியிருக்கும் கடிதத்தில், இந்த வங்கி கணக்கில், பொதுப்பணித்துறையை சேர்ந்த அனைத்து ஊழியர்களின் ஒருநாள் சம்பளத்தை, `ராமர் கோயில்’ கட்டும் பணிக்காக எடுத்துக்கொள்ளும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுய ஆர்வத்தின் பேரில் இதை பொதுப்பணித்துறை ஊழியர்கள் தருவதாக, அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
“அரசியல்வாதிகள்தான் மதத்தை முன்னிலைப்படுத்துகிறார்கள்” – அனுமன் கோயிலுக்கு இடம் வழங்கிய இஸ்லாமியர்
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 27, மதச் சார்பான நிறுவனங்களை நிறுவவும், நடத்தவும், வலுக்கட்டாயமாக வரி பெறக்கூடாது என்று தெளிவாக கூறுகிறது.
பொதுப்பணித்துறை ஊழியர்களின் இந்த ‘தன்னார்வ’ நன்கொடை சட்டபூர்வமாக வரி என்று கருதப்படாத காரணத்தால், இந்த பணத்தை வசூலிக்க உத்தியோகபூர்வ இயந்திரங்களைப் பயன்படுத்துவது ஒரு குறிப்பிட்ட மதத்தை மேம்படுத்துவதற்கான கட்டாய வரியாக பார்க்கப்படுகிறது.
இந்த மாதிரியான தனி நிதி கணக்கு, ஊழியர்களின் ஒரு நாள் ஊதியம் போன்றவற்றையெல்லாம், தலைமை பொறியாளர் ராஜ் பௌல், அரசு அறிவுறுத்தலின்பேரில் செய்கிறாரா அல்லது சுய விருப்பத்தில், அரசின் மீதான தன்னுடைய விஸ்வாசத்தை காட்ட தாமாகவே முன்னெடுத்திருக்கிறாரா என்பது தெரியவில்லை.
பொருள் விற்பனைக்கு கடவுள் பெயரை பயன்படுத்துவது சட்டவிரோதம் – மும்பை உயர் நீதிமன்றம்
ஊடக நிறுவனமான `தி வயர்’, ராஜ் பௌலின் நோக்கத்தை அறிய அவரை தொடர்பு முயன்றும் முடியவில்லை.
பொதுப்பணித்துறை, அம்மாநில துணை முதல்வர் கேஷவ் பிரசாத் மௌரியாவின் பொறுப்பின் கீழ் உள்ள அமைச்கம். இவர், விஷ்வ இந்து பரிஷித் என்ற அமைப்போடு தொடர்புடையவர்.
இந்த அமைப்பின் முன்னாள் செயலாளர் அசோக் சிங்கால், துணை முதல்வர் கேஷவ் பிரசாத்தின் குரு என்பது குறிப்பிடத்தக்கது. அசோக் சிங்கால், பாபர் மசூதியை, ராமர் கோயிலாக மாற்ற எடுக்கப்பட்ட முன்னெடுப்பின் தலைமை ஒருங்கினைப்பாளர்களில் ஒருவராக, பல ஆண்டுகளாக இருந்துவந்தார் என்பது கூடுதல் தகவல்.
இவற்றையெல்லாம் கூட்டி கழித்து பார்த்தால், அரசாங்க இயந்திரத்தை உபயோகித்து, அயோத்தியில் ராமர் கோயில் கட்ட நிதி திரட்டப்பட்டிருப்பதில், அரசின் பங்கும் இருந்திருக்குமோ என்றே நினைக்கத் தோன்றுகிறது.
ராமர் கோயில் கட்டுவதற்கு, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், 2 லட்சம் நிதியாக அளித்திருந்து, இங்கே குறிப்பிடத்தக்கது. யோகி ஆதித்யநாத் தலைமையில் செயல்படும் கோரக்பூர் கோராக்நாத் கோயிலில், அதிகளவு நிதி கொட்டிக்கிடக்கிறது. அந்த தன்னார்வ நிதியை வைத்து, அயோத்தி ராமர் கோயிலுக்கு பெருமளவு நிதி வழங்கப்படலாம்.
ஹத்ராஸ் வழக்கு: `இது ஆதித்யநாத்தின் தோல்வியை மூடி மறைக்கும் செயல்’ – மின்னஞ்சல் பிரச்சாரம்
யோகி ஆதித்யநாத்தின் அடிப்படையே ஹிந்துத்துவாதான் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், தன்னுடைய தனிப்பிட்ட நிலைப்பாட்டின் அடிப்படையில், ஒரு முதல்வர், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மீறக்கூடாது என்ற அடிப்படையில், பொதுப்பணித்துறையின் இந்த நிதி திரட்டும் நடவடிக்கையை, யோகி ஆதித்யநாத் கேள்வி எழுப்புவார் என்று நம்புவோம்.
குறிப்பாக, ஊழியர்களிடமிருந்து ஒருநாள் ஊதியம் வசூலிக்கப்படுவதையும், அதிகாரத்தை பயன்படுத்தி வங்கி கணக்கை தொடங்கிய தலைமை பொறியாளரின் செயலையும் அவர் கேள்வி எழுப்ப வேண்டும். ஒருவேளை இந்தச் செயல்களின் பின்னணியில் துணை முதல்வர் மௌரியா இருந்தால், அவர்மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இந்த விவகாரத்தில், ஒருநாள் சம்பளத்தை நிதியாக அளித்த பணியாளர்கள் யாரேனும், தங்கள் சுய விருப்பத்துடன் அதை தாங்கள் செய்யவில்லை என முன்வந்து சொன்னால், பிரச்னையின் வீரியம் அதிகரிக்கும். இருப்பினும், இதுவரையில் அதிகாரிகள்தான் இதை தன்னார்வ நிதி எனக்குறிப்பிட்டுள்ளனர் என்பதால், வேலை மீதான அச்சம் காரணமாக, ஊழியர்கள் முன்வர தயக்கமும் காட்டக்கூடும். நடக்கப்போவதை, பொறுத்திருந்து பார்ப்போம்.
(www.thewire.in இணையதளத்தில் வெளியான சிறப்புச் செய்தியின் மொழியாக்கம்)
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.