குடியரசு தின விழாவில் பங்கேற்ற அலங்கார வாகனங்களில், உத்தரபிரதேச மாநிலத்தின், ராமர் கோவில் வாகனம் முதல் இடத்தை பிடித்துள்ளது.
நாட்டின் 72வது குடியரசு தினம் செவ்வாய் (26.01.21) அன்று கொண்டாடப்பட்டது. அன்றை தினம், டெல்லி ராஜ பாதையில், நாட்டின் பெருமைகளை பறைசாற்றும் வகையில், அலங்கரிக்கப்பட்ட வாகனங்களின் அணிவகுப்பு நடைபெற்றது.
அதேபோல், இந்தியாவின் பலத்தை பறைசாற்றும் வகையில் ராணுவ தளவாடங்களின் அணிவகுப்பும் நடைபெற்றது. இதில், பிரான்சிடமிருந்து இந்தியா வாங்கியுள்ள ரஃபேல் விமானங்களும் இடம் பெற்றன.
இந்த அணிவகுப்பு நிகழ்வு தொடர்பாக, பாதுகாப்புத்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில், 32 அலங்கரிக்கப்பட்ட வாகனங்கள் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், 17 வாகனங்கள் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சார்பாக பங்கேற்றதாகவும், 9 வாகனங்கள் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துணை ராணுவப்படை சார்பாக பங்கேற்றதாகவும், 6 வாகனங்கள் பாதுகாப்புத்துறை சார்பாக பங்கேற்றதாகவும் கூறப்பட்டுள்ளது.
அணிவகுப்பில் பங்கேற்ற 32 வாகனங்களில், உத்தர பிரதேசத்தின் அலங்கார வாகனம் முதல் இடத்தை பிடித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தின் சார்பாக, ‘அயோத்தியா: உத்தர பிரதேசத்தின், பாரம்பரிய கலாச்சாரம்’ என்ற உள்ளடக்கத்தின் அடிப்படையில், அலங்கார வாகனம் கலந்துகொண்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த வாகனத்தில், அயோத்தியில் கட்டப்படவுள்ள ராமர் கோவிலின் மாதிரி வடிவம், தீபஉட்சவத்தின் மாதிரி மற்றும் ராமாயணத்தின் சில காட்சிகளும் இடம் பெற்றிருந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.