உத்தரபிரதேசத்தில் புல்டோசரால் வீடுகள் இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமனாவுக்கு ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர்.
பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் ஷர்மா, முகமது நபிகள் குறித்துத் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு உலக அளவில் கண்டனம் எழுந்தது. நுபுர் சர்மாவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி உத்தர பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த வெள்ளிக்கிழமை போராட்டம் நடைபெற்றது. அப்போது வன்முறை ஏற்பட்டது.
இதனையடுத்து, மாநிலத்தின் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து, பிரயாக்ராஜில் நடந்த வன்முறைக்குக் காரணமானவர் என்று கூறி ஜாவத் அகமது என்பவரைக் காவல்துறை கைது செய்தது. பின்னர், பிரயாக்ராஜில் உரிய அனுமதியின்றி கட்டப்பட்டதாகக் கூறி ஜாவத் அகமதுவின் வீட்டை மாவட்ட நிர்வாகம் காவல்துறையினரின் பாதுகாப்புடன் இடித்துத் தள்ளியது.
இச்சூழலில் உத்தரப்பிரதேசத்தில் சட்டவிரோத தடுப்புக்காவல், குடியிருப்புகளை புல்டோசர் கொண்டு இடித்தல், பாஜக செய்தித் தொடர்பாளர்களுக்கு ஆதரவாக காவல்துறையின் வன்முறை ஆகியவற்றை தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டுமென உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் அவசர கடிதம் எழுதியுள்ளனர்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணாவிற்கு உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் பி. சுதர்சன் ரெட்டி, வி. கோபால கவுடா, ஏ.கே. கங்குலி, டெல்லி உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி ஏ பி ஷா, முன்னாள் சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே சந்துரு, கர்நாடக உயர் நீதிமன்றம் ஓய்வுபெற்ற முகமது அன்வர், உச்ச நீதிமன்றம் மூத்த வழக்கறிஞர்கள் சாந்தி பூஷன், இந்திரா ஜெய்சிங், சந்தர் உதய் சிங், பிரசாந்த் பூஷன், ஆனந்த் குரோவர், சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர், ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இணைந்து கடிதம் எழுதியுள்ளனர்.
இஸ்லாமியர் போராட வேண்டுமா ஒதுங்கிச் செல்ல வேண்டுமா? – ஆர். அபிலாஷ்
அந்தக் கடிதத்தில், முகமது நபியைப் பற்றி உத்தரப் பிரதேசத்தில் பாஜக செய்தித் தொடர்பாளர்கள் சமீபத்தில் தெரிவித்த கருத்துகள் போராட்டங்களை விளைவித்துள்ளதாகவும், போராட்டக்காரர்கள் அமைதியான போராட்டங்களில் ஈடுபட வாய்ப்பளிப்பதற்கு பதிலாக, அவர்களுக்கு எதிராக மாநில அரசே வன்முறை நடவடிக்கை எடுக்க அனுமதித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்க வேண்டுமென்ற எண்ணம் யாருக்கும் வரகூடாது என முதல்வர் அதிகாரபூர்வமாக அறிவுறுத்தியதாக கூறப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளன.
மேலும் அவர் தேசிய பாதுகாப்பு சட்டம் மற்றும் உத்தரப் பிரதேச குண்டர்கள் மற்றும் சமூக விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் தண்டிக்கப்பட வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். அரசின் இந்த கருத்துகள்தான் போராட்டக்காரர்களை மிருகத்தனமாகவும் சட்டவிரோதமாகவும் சித்ரவதை செய்ய காவல்துறைக்கு தைரியத்தை அளித்துள்ளது என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, காவல்துறை காவலில் இருக்கும் இளைஞர்களை லத்தியால் தாக்குவது, போராட்டக்காரர்களின் வீடுகள் எந்தவித முன்னறிவிப்புமின்றி இடிக்கப்படுவது, சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த போராட்டக்காரர்களை காவல்துறை விரட்டி அடிப்பது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி மனசாட்சியை உலுக்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். ஆளும் நிர்வாகத்தின் இத்தகைய மிருகத்தனமான அடக்குமுறையானது குடிமக்களின் உரிமைகளை மீறுவதாகும் என்றும், அரசியலமைப்பு மற்றும் அடிப்படை உரிமைகளை கேலிக்கூத்தாக்குகிறது என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
இதுபோன்ற நெருக்கடியான காலங்களில் நீதித்துறையின் திறமை சோதிக்கப்படுவதாகவும், கொரோனா காலக்கட்டத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விவகாரம் மற்றும் பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் ஆகியவற்றில் தானாக முன்வந்து எடுத்த அதே உணர்விலும், அரசியலமைப்பின் பாதுகாவலர் என்ற பங்கிலும், உச்சநீதிமன்றம் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நபிகள் நாயகத்தை அவமதித்த விவகாரம்: மேற்கு வங்கம், உ.பியில் நடைபெற்ற போராட்டங்களும் வன்முறைகளும்
இதனிடையே உத்தரப் பிரதேசத்தில் மேற்கொண்டு கட்டடங்கள் எதுவும் இடிக்காமல் இருப்பதை உறுதி செய்யுமாறு மாநில அரசை அறிவுறுத்தக்கோரி ஜமியத் உலமா-இ-ஹிந்த் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.
Source: ndtv
Bulldozer- ஐ வெச்சே ஆட்சி நடத்தும் BJP | Yogi Adityanath | Nupur Sharma | Prophet Muhammad
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.