அமெரிக்க அரசின் பல்வேறு நிறுவனங்களின் காப்பகங்களில் விரிவான தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதாக கூறி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான தகவல்களுக்கு வரலாற்றுப் பதிவுகளை ஆழமாக ஆராய அமெரிக்கா மறுத்துவிட்டது என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
நேற்று(பிப்பிரவரி 10), மாநிலங்களவையில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் முன்னாள் அரசு அதிகாரியுமான ஜவ்ஹர் சிர்கார், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான ஆவணங்களை இந்தியாவிற்கு அளிக்காததற்கு, அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் அளித்த காரணங்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
இக்கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.முரளீதரன், “அமெரிக்க அரசாங்கம் முப்பது ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றுப் பதிவுகளை வைத்திருக்கவில்லை என்று பதிலளித்தது. நாம் கோரும் காலகட்டத்திற்கான காப்பக பதிவுகள் டிஜிட்டல் மயமாக்கப்படவில்லை என்று அமெரிக்க தேசிய காப்பகங்கள் மற்றும் பதிவுகள் நிர்வாகம் தெரிவித்தது” என்று கூறியுள்ளார்.
“இன்று பட்டேலுக்கு நேர்ந்த கதிதான், நாளை நேதாஜிக்கும்” – பாஜக மீது சிவசேனா சாடல்
மேலும், “ஆகவே, அந்த ஆவணங்களைக் கண்டறிவதற்கு அமெரிக்க அரசின் பல்வேறு நிறுவனங்களின் ஆவணக் காப்பகங்களில் விரிவான தேடுதல் பணி தேவைப்படும். எனவே, அவர்களால் அதை செய்ய முடியாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
1945ஆம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலிருந்து தைவான் தலைநகர் தைபேக்கு சென்ற ஜப்பானிய போர் விமானம் விபத்துக்குள்ளானதில் நேதாஜி சுபாஷ் போஸ் உயிரிழந்ததாகக் கூறப்பட்டாலும், இன்னொருபுறம் அவர் அவ்விபத்தில் உயிர்ப்பிழைத்து இந்தியா திரும்பி, வாழ்ந்ததாகவும் மக்களிடையே நிலவும் சில கதைகள் கூறுகின்றன.
இதுவரை, நேதாஜியின் இறப்பு தொடர்பாக மூன்று விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டு, அவற்றுள் இரண்டு ஆணையங்கள், நேதாஜி விமான விபத்தில் இறந்துவிட்டார் என்றும், அவரது சாம்பல் டோக்கியோவில் உள்ள ரென்கோ-ஜி கோவிலில் பாதுகாக்கப்படுகிறது என்றும் கூறியது.
அனைத்து மதங்களும் அமைதியாக வாழும் இந்தியாவைத்தான் நேதாஜி கனவு கண்டார் – நேதாஜி மகள் கருத்து
அதேநேரம், நீதிபதி முகர்ஜி தலைமையிலான விசாரணை ஆணையம், 2005ஆம் ஆண்டு வெளியிட்ட தனது அறிக்கையில், “நேதாஜி அவ்விமான விபத்தில் இறக்கவில்லை” என்று தெரிவித்தது.
Source: The Wire
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.