Aran Sei

ஈஎஸ்ஐ நிறுவனத்தின் வேலைவாய்ப்பு – பின்பற்றப்படாத இடஒதுக்கீடு; பிற்படுத்தப்பட்டோர் புறக்கணிப்பு

தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தில் (ESI) வேலை வாய்ப்பு தொடர்பாக ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இடஒதுக்கீடு முறையாக கடைபிடிக்கப்படாதது தெரியவந்துள்ளது.

ஒன்றிய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சகத்தின் சார்பாக, தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தின் பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு நேற்று (29.12.21) வெளியிடப்பட்டுள்ளது.

அதில், தமிழ்நாட்டிற்கு மட்டும், உயர்மட்ட குமாஸ்தா வேலைக்காக (Upper Division Clerk) 150 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பட்டியல் சாதியினருக்கு (SC) 29 இடங்களும், பழங்குடியினருக்கு (ST) 3 இடங்களும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு (OBC) 7 இடங்களும், முன்னேறிய சமூகத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு (EWS) 15 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் தற்போதைய நடைமுறைப்படி, கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் பட்டியல் சாதியினருக்கு 15 சதவீதமும், பழங்குடியினருக்கு 7.5 சதவீதமும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதமும், முன்னேறிய சமூகத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கி வருகிறது.

இந்த நடைமுறையின் அடிப்படையில், உயர்மட்ட குமாஸ்தா பிரிவில் நிரப்பப்படவுள்ள 150 பணியிடங்களில் பழங்குடியினருக்கு (ST) 11 இடங்களும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு (OBC) 41 இடங்களும் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பழங்குடியினர் பிரிவில் 8 இடங்கள் குறைவாகவும், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 34 இடங்கள் குறைவாகவும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதேபோல், பல்வகை வேலைப் பணியாளர் (Multitasking Staff) பணியிடங்களுக்கான அறிவிப்பில், பட்டியல் சாதி பிரிவினருக்கு 4 இடங்கள் குறைவாகவும், பழங்குடியினருக்கு 15 இடங்கள் குறைவாகவும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 4 இடங்கள் குறைவாகவும் ஒதுக்கப்பட்டுள்ளன.

தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தின் உயர்மட்ட குமாஸ்தா பிரிவு, ஸ்டொனோ, பல்வகை வேலைப் பணியாளர் ஆகிய மூன்று பிரிவுகளுக்கான வேலைவாய்ப்பிலும் முன்னேறிய சமூகத்தினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு (EWS) மட்டும் சரியாக 10 சதவீதம் இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டு அதற்கான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈஎஸ்ஐ நிறுவனத்தின் வேலைவாய்ப்பு – பின்பற்றப்படாத இடஒதுக்கீடு; பிற்படுத்தப்பட்டோர் புறக்கணிப்பு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்